ரத்தன் டாடா, மூத்த குடிமக்கள் இல்லங்களில் முதலீடு செய்வது பற்றி சுற்றுக்கு வரும் காணொளிகள் அவரின் கருணையை ‘உணர்ச்சிப் பூர்வமாக’ பாராட்டுகின்றன. சமூக வலைத் தளங்களில் இப்படிப்பட்ட காணொளிகள் அடிக்கடி சுற்றுக்கு வருகின்றன. இதுபோன்ற மனித நேய நடவடிக்கைகளை யார் செய்தாலும் வரவேற்கலாம். எளிய மக்களின் வாழ்க்கை இது போன்ற நல்ல முன் முயற்சிகளால் தற்காலிக நிவாரணங்களை பெறுகிறது என்பதால் அவை பாராட்டப்படுவதும் இயல்பு. தனி நபர்களை பாராட்டும் போது இச் சமூக அமைப்பில் எப்படி செல்வம் குவிகிறது என்ற உண்மையை மறந்து விடக் கூடாது. ஆனால் உண்மையில் எளிய மக்களுக்கு தேவைப்படுவது நீதி. கருணை அல்ல.
மென்மையான முகம்
இந்திய நாட்டின் மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செல்வத்தை பெருமளவு குவித்து வருகின்றன. வருமான மறு பங்கீட்டில் எளிய மக்களுக்கு இழைக்கப்படும் வஞ்சனையே இந்த குவிப்பிற்கான ஆதாரம். பெரும் தொழிலதிபர்கள் வழங்கும் மனித நேய உதவிகளும், கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டங்களும் அவர்களின் செல்வக் குவிப்பின் மீது போடப்படும் அழகான திரை ஆகும். ஒரு மென்மையான முகத்தை சமூக அமைப்புக்கு தந்து சுரண்டலுக்கான சமூக ஒப்புதலையும் பெற்றுத் தருகிற வழி முறையுமாகும். இப்படி நடந்தேறும் சமத்துவமற்ற வருமான பங்கீட்டின் பயனாளிகள் இந்த பெரும் தொழிலதிபர்களே. இப்படி இவர்கள் கருணை பொழிவதை விட கார்ப்பரேட் வரிகளை உயர்த்துவதற்கு சம்மதித்து அரசின் வருவாய் திரட்டலுக்கு உதவலாம். அதன் மூலம் கிடைக்கிற வருவாயை அரசாங்கம் எளிய குழந்தைகளின் கல்விக்கு, சத்துணவுக் குறைபாட்டைத் தீர்க்க, சுகாதாரம் உறுதி செய்யப்பட, மூத்த குடி மக்கள் நலன் காக்க பயன்படுத்த வழி செய்யலாம். தற்போது இந்திய கார்ப்பரேட் வரிகளின் சதவீதம் மொத்த வரி வருவாயில் 15 சதவீதத்துக்கு சரிந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது 22 சதவீதமாக இருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி யின் பங்கு மொத்த வரி வரு வாயில் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சாமானிய, நடுத்தர மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பெரிதும் பறிக்கப்படுவது ஆகும்.
எளிய மக்கள் ரத்தம்
“பெரும் பணக்காரர்களே வாழ்கிறார்கள்” (Survival of the richest) ஆக்ஸ்பாம் அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் பாருங்கள். (எகானாமிக் டைம்ஸ் - 16.01.2023).
* இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் மீது 5 சதவீத கூடுதல் வரி போட்டால் அத்தனை குழந்தைகளும் இடை நிற்றல் இன்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்யலாம்.
* ஒரே ஒரு பில்லியனர் அதானி மீது 2017 - 21 ஐந்தாண்டு காலத்தில் ஈட்டிய லாபங்கள் மீது ஒரு முறை வரி போட்டால் 1.74 லட்சம் கோடி பெறலாம். இது இந்தியாவின் 50 லட்சம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓராண்டு சம்பளம் தர உதவும்.
* இந்திய பில்லியனர்களின் செல்வம் மீது 2 சதவீத வரி போட்டால் அது குழந்தைகளின் சத்துணவுக் குறைபாட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஈடு செய்ய உதவும்.
* இந்திய பில்லியனர்களின் மொத்த செல்வத்தின் மீது 5 சதவீத வரியை ஒரு முறை போட்டால் 1.37 லட்சம் கோடி கிடைக்கும். இது குடும்ப நலம் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் 2022- 23 இல் பெற்ற பட்ஜெட் தொகையான 90000 கோடியை விட ஒன்றரை மடங்கு அதிகம்.
சமூக ஒப்புதலே சூட்சுமம்
ஆனால் இதைச் செய்யாத அரசாங்கம் மூத்த குடி மக்களுக்கான ரயில் கட்டண சலுகையை பறிக்கிறது. பயன் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை மறுக்கிறது. முறை சாரா தொழில்களில் உள்ள மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பே இல்லை. 10 கோடி மூத்த குடிமக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். மொத்த பட்ஜெட்டில் மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படுவது. 0.04 சதவீதமே. எளிய மக்கள் ரத்தமும் வியர்வையுமே பெரும் தொழிலதிபர்களின் செல்வம். பில்லியனர்களின் எண்ணிக்கை உயர்கிறதென்றால் சாமானிய மக்களின் வாழ்க்கை சரிகிறதென்றே பொருளாதார உண்மைகள் பகிர்கின்றன. இந்தியப் பிரதமர் கொண்டாடுவது போல “செல்வத்தை உருவாக்குபவர்கள்” இந்தியப் பெரும் தொழிலதிபர்கள் அல்ல”. எளிய மக்களே. எளிய மக்களுக்கு தேவை நீதியே தவிர கருணை அல்ல. பறித்துத் தருவது கருணையும் அல்ல. இந்த கருணை யை “பொழிந்து” அநீதிக்கான “சமூக ஒப்புதலை” ஈட்டுவது மூலதனத்தின் சூட்சுமம்.