articles

img

ஜனநாயகம் தழைத்தோங்க பத்திரிகையாளர் நலன் காத்திடுக! - பி.எஸ்.டி.புருஷோத்தமன்

பத்திரிகையாளர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான நாடுகளில் ஒன்று என்ற அவப் பெயரை இந்திய தேசத்திற்கு தமது ஒன்ப தாண்டு கால ஆட்சியில் தேடித் தந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பது என்ற முழக்கத்தோடு பத்திரிகையாளர்களையும் பாதுகாத்திடுங்கள் என்ற முழக்கத்தை வலுவாக எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். 

மோடியின் ஆட்சியில்...

மொத்தமுள்ள 150 நாடுகளில் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 142ஆவது இடத்திற்கு வீழ்ந்து விட்டது என ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்’ எனும் உலகளாவிய அமைப்பின் சர்வதேச பத்திரிகை சுதந்திர குறியீடு தொடர்பான அறிக்கை விமர் சிக்கிறது. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகை சுதந்தி ரத்தின் மீதும் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. படுகொலைகள், கொலை மிரட்டல்கள், செய்திகள் வெளியிட தடை, அதீத தணிக்கை, பத்திரி கைகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்து தல், அரசியல் நிர்பந்தங்களை உருவாக்குதல், அநீதிகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களை பணியிலிருந்து வெளியேற்றச் செய்தல், கைது செய்தல், வழக்குப் பதிவு செய்து இழுத்தடித்தல், சிறைக் கொட்டடியில் அடைத்தல், சில பத்திரிகை யாளர்கள் மீது உபா உள்ளிட்ட கொடிய ஆள்தூக்கி சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தல் என இந்த காலகட்டம் முழுவதிலும் பத்திரி கையாளர்களும், பத்திரிகை நிறுவனங்களும் அனு பவித்துக் கொண்டிருக்கும் தாக்குதல்கள், இந்திய ஜனநாயகத்தை மோடி அரசு குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதையே அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது. உலகளவில் இந்தியாவில் மட்டும்தான் அதிக மான பத்திரிகையாளர்கள் தங்களது பணிகளுக்காக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2010 முதல் 2022 வரை இந்தியாவில் 45 பத்திரிகை யாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என யுனெஸ்கோ வின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த படுகொலைகளில் சம்பந்தப்பட்ட ஆளும் வர்க்க அரசியல் வாதிகளோ, கூலிப்படை கும்பல்களோ கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் எனவும் யுனெஸ்கோ வின் ஆய்வு வேதனை தெரிவிக்கிறது. 

குறி வைத்து தாக்குதல்

கடந்தாண்டு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், இந்து குழுமத்தின் இயக்குநருமான என்.ராம்  அளித்த ஒரு பேட்டியில், “இந்தியாவில் பத்திரிகையா ளர் மீதான தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் கடு மையான அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இருந்து வரும் பத்திரிகையா ளர்கள் அல்லது சிறுபான்மை மக்களின் உரிமை களுக்காக ஆதரவு குரல் கொடுக்கும் பத்திரிகை யாளர்கள் குறி வைத்து தாக்கப்படுவது அதிகரித் துள்ளது” என்று குறிப்பிட்டார். பிரபல பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உத்தரப்பிரதேச பாஜக அரசால் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொடு மையை நாம் அறிவோம். இன்றைக்கும்கூட  ஜம்மு- காஷ்மீரில் ஊடக சுதந்திரம் முற்றாக நசுக்கப் பட்டிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் மிக அதிகமான பத்திரிகையாளர்கள் மீது  வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பெண் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்க ளும் இந்த காலத்தில் அதிகரித்துள்ளது. ஊடகங்க ளில் உண்மைகளை அம்பலப்படுத்தும் பெண் பத்திரிகையாளர்களை பாலியல் வன்கொடுமைக்குள் ளாக்குவது, பாலியல் மிரட்டல்களுக்கு உள்ளாக்கு வது உள்ளிட்ட கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறு கின்றன. பிரபல ஊடக ஆசிரியர் கௌரி லங்கேசின் கொடூர படுகொலை இதற்கு உச்சகட்ட உதாரணமாகும். 

9 ஆண்டுகளில் 300 தாக்குதல்கள்

மோடி அரசு பதவியேற்றதற்கு பிறகு நாடு முழுவதும் கடந்த 9 ஆண்டு காலத்தில் பத்திரிகை யாளர்கள் மீது 300க்கும் மேற்பட்ட கடும் தாக்கு தல்கள் நடந்திருப்பதாக ஆய்வு விபரங்கள் தெரி விக்கின்றன.  அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மட்டு மல்ல; சமூக ஊடகங்களில் ஆட்சியாளர்களின் அட்டூழி யங்களை, ஆளும் வர்க்கங்களின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொருவரும் குறிவைக்கப் படுகிறார்கள். ஏராளமான யூடியூப் சேனல்கள் மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிக அதிகமான நேரம் இணையதள முடக்கமும், நெட்வொர்க் தடையும் ஏற்படுத்தப்பட்டது இந்தியாவில்தான்.  இந்திய ஊடகங்கள் மட்டுமல்ல, உலக அளவிலும் மோடி அரசின் அராஜக தாண்டவம் நீண்டுள்ளது என்பதற்கான உதாரணம் தான், குஜராத் இன படுகொலையில் மோடி மற்றும் அமித்ஷாவின் பங்கினை அம்பலப்படுத்திய ஆவணப்படத்தை வெளியிட்ட உலகின் புகழ்பெற்ற ஊடக நிறுவனமாம் பிபிசியையே தாக்குதலுக்கு உள்ளாக்கிய சம்பவம்.

தொழிலாளர் சட்டங்கள் ரத்து

இவை ஒருபுறமிருக்க, தேசிய ஊடகங்களில் கணிச மானவற்றை தங்கள் கைவசப்படுத்தும் நடவடிக்கை களில் மோடியின் நண்பர்களான அம்பானி உள்ளிட்ட பெரும் முதலாளிகள் இறங்கியுள்ளனர். அவர்கள் பிரபலமான, விமர்சனப்பூர்வமான ஊடகங்களை  விழுங்குகின்றனர். அத்துடன், ஊடகத் தொழிலா ளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் நலன் களை காவு கேட்கும் விதமாக - 44 தொழிலாளர் நலச்சட்டங்களை வெறும் 4 தொகுப்புச் சட்டங்களாக, நாடாளுமன்றத்தில் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றி யது மோடி அரசு. அதன் விளைவு, பத்திரிகையாளர் ஊதி யம் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்கும் குழுவை மாற்றிய மைப்பது உள்பட அனைத்தும் ஸ்தம்பித்துள்ளன. இத்தகைய பின்னணியில் நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறு வனங்களில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது, நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களின் கடமை யாக, ஓங்கி ஒலிக்க வேண்டிய குரலாக உள்ளது. 

தமிழ்நாட்டில்...

இதை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஊடகவி யலாளர்கள் ஒன்றுபட்டு தங்களது உரிமைகளை வென்றெடுப்பதோடு, பத்திரிகை சுதந்திரத்தை பாது காக்கவும், பத்திரிகையாளர்களின் நலன்களை பாது காப்பதும் பத்திரிகை நிறுவனங்களின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிப்படுத்தவும், குரல் கொடுக்கும் விதமாக சென்னையில் மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கத்தை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜெ) ஒருங்கிணைக்கிறது. இக்கருத்தரங்கம் மார்ச் 22 (இன்று) நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் படாதபாடுபட்டது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் பல அரங்கேறின. அதற்கு எதிரா கவும், மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வும், ஒன்றிய பாஜக அரசுக்கு அடிபணிந்து அதிமுக ஆட்சி நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராகவும் அரசியல் களத்தில் ஒன்றுபட்ட போராட்டம் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 

தொழிற்சங்க  பிரதிநிதித்துவம் வேண்டும்

திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த வகையில் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அரசு கவனித்து நிறைவேற்ற வேண்டிய பல முக்கிய கோரிக்கைகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி அரசின் கவனத்தை ஈர்ப்பதே சென்னையில் நடை பெறும் கருத்தரங்கின் நோக்கமாகும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 செப்டம்பர் 6 அன்று பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி 2021 டிசம்பர் 1 அன்று பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைத்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஏற்கெ னவே கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் உள்பட தொழிலாளர்களுக்கான பல நலவாரியங்கள் உள்ளன. அந்த நலவாரியங்களில் அலுவல்சாரா உறுப்பினர்களாக தொழிற்சங்க தலைவர்கள் நிய மிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பத்திரிகையாளர் கள் நலவாரியத்தில் பத்திரிகை துறை சார்ந்த தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.  எந்த ஒரு நலவாரியமாக இருந்தாலும் அதில் அரசு தரப்பு, பணிவழங்கும் தரப்பு மற்றும் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவ்வாறு மூன்று தரப்பும் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களின் நிலையை முழுமை யாக அறிந்து அதற்கேற்ப திட்டங்களை செயல் படுத்த முடியும். ஆனால், பத்திரிகையாளர் நலவாரி யத்தில் தற்போது சங்கங்களின் பிரதிநிதிகள் இணைக்கப்படாதது ஒரு குறைபாடே. ஆகவே, வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக பத்திரி கையாளர் சங்கங்களையும் இணைக்க வேண்டும். இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய அம்சம் ஆகும். 

90 சதவீதத்தினர் நலவாரியத்தில் சேர முடியாத நிலை

அரசு வழங்கிய அங்கீகார அட்டை உள்ள வர்கள் மட்டுமே பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரமுடியும் என்று வகுக்கப் பட்டுள்ள விதியால், ஏறக்குறைய 90 சதவீத பத்திரிகை யாளர்கள் உறுப்பினராக சேரமுடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், வாரியம் உருவாக் கப்பட்ட நோக்கமே நிறைவேறாத சூழல் ஏற்பட்டுள் ளது. ஆகவே, அலுவலகங்களில் பல்வேறு பிரிவு களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் தொடங்கி, மாவட்டங்கள் மற்றும் தாலுகா அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் வரை அனைவரையும் வாரியத்தில் இணைக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் சமூக, பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு, ஏற்கனவே பத்திரிகையாளர்க ளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மருத்துவ உதவி உட்பட பல்வேறு நலத்திட்டங்களுடன், தற்போது நல வாரியம் வழங்கும் நலத்திட்டங்களையும் பெறு வதற்கு, ஆண்டு ஊதியம் ரூ.5 லட்சம் என்பதை தகுதியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.

பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்புச் சட்டம்

காட்சி ஊடகங்கள் தொடங்கப்பட்டு கால் நூற்றாண்டை கடந்துள்ள நிலையில், தற்போது டிஜிட்டல் ஊடகங்களும் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்துள்ளன. ஆனால், இந்த இரண்டு ஊட கங்களிலும் பணியாற்றுபவர்கள் அரசு செயல் படுத்தும் ஓய்வூதிய திட்டம் உட்பட சில முக்கியமான திட்டங்களில் பயன்பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணி யாற்றுபவர்களும் “பத்திரிகையாளர்களே” என்பதை உறுதிசெய்யும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் பணியாற்றும் பத்திரிகையா ளர்களில் ஒரு நிறுவனத்திற்கு 2 பேருக்கு மட்டுமே  இலவசப் பயண அட்டை (Bus pass) வழங்கப்படு கிறது. தற்போது மாறியுள்ள ஊடக சூழ்நிலையை கருத்தில்கொண்டு, இந்த வரம்பை தளர்த்துவதுடன் தாலுகாக்களில் பணியாற்றும் அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் இலவசப் பயண அட்டை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தாலுகா செய்தியாளர்களாக பணியாற்றும் பத்திரி கையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை பெரும் பாலான நிறுவனங்கள் வழங்குவதில்லை. அத்துடன், சட்டப்படியான சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் அவர்கள் இணைக்கப்படுவதில்லை. ஆகவே, இந்த பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்த, தொழிலா ளர் நலத்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும். பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துக ளுக்கு மத்தியில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்க ளைப் போல் ‘‘பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை’’ தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.

சிறிய பத்திரிகைகளை பாதுகாப்பீர்!

மேலும், தமிழ்நாட்டில் பெரிய பத்திரிகை நிறு வனங்களும் ஏராளமான சிறிய பத்திரிகைகளும் உள்ளன. சிறிய பத்திரிகைகளை ஒழித்துக் கட்டும் விதமாக அதிகாரிகள் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். ஊடக உரிமம் புதுப்பிப்பது உட்பட சிறிய பத்திரிகைகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் பெரிய பத்திரிகை நிறுவனங்கள் தமிழக அரசு மற்றும் இந்திய அரசிட மிருந்து பல கோடி மதிப்பிலான விளம்பரங்களை தாராளமாக பெற முடிகிறது. ஆனால் அத்தகைய நிறுவனங்கள் ஊதியக்குழு பரிந்துரைகளையோ, தொழிலாளர் நலச் சட்டங்களையோ அமல்படுத்துவது இல்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்களிடம் பல்லாண்டுகாலமாக விசுவாசமாக உழைத்த பத்திரிகையாளர்களை பல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்தன; ஊதியத்தை வெட்டின என்ற கொடுமைகளை மறக்க முடியாது. இதை அரசு கவனிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும்.

ஓய்வூதியத்துக்கான நிபந்தனைகளைத் தளர்த்துக!

அதேபோல பத்திரிகையாளர் ஓய்வூதியம் என்பது மிக முக்கிய பிரச்சனையாகும். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1997-98ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. புதிய சட்டத்திருத்தம் வந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆன போதிலும் இதனால் பயன்பெற்றவர்கள் எண் ணிக்கை வெறும் 242 பேர்தான். இதற்கு தடையாக இருப்பது அரசு விதித்துள்ள நிபந்தனைகள் தான்.நிபந்தனை களைத் தளர்த்தி, தகுதியுள்ள அனைத்து ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களும் பலன் கிடைக்கச் செய்ய  வேண்டும். இதுமட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் மர ணத்திற்கு பிறகுஅவர்களது இணையருக்கு ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பது அரிதாக உள்ளது. இதுவரை அப்படி கிடைக்கப் பெற்றவர்கள் தமிழகத்திலேயே வெறும் 45 பேர் மட்டுமே. ஓய்வூதியம் கோரி 2020 முதல் விண்ணப்பித்தவர்களில் சிலர் இறந்து விட்ட நிலையில், நூற்றுக்கணக்கான விண்ணப் பங்கள் நிலுவையில் உள்ளன.  இதுமட்டுமல்ல, பத்திரிகை நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் பெறாத, பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்படாத - பல ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறும் வயதை நெருங்கும் 80 சதவீத ஊரகப் பத்திரிகை யாளர்களின் கதி என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இவர்களில் ஏராளமானோர் பெரிய பத்திரிகை நிறு வனங்களில் பணியாற்றியவர்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது.

போலிகளை ஒழிக்க...

பொது வெளியில் இருப்பதை போலவே பத்திரிகை உலகிலும் போலிகளின் நடமாட்டம் இருக்கவே செய்கிறது. போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதில் தமிழக பத்திரிகையாளர் அமைப்புகளுக்கு ஆட்சே பணைகள் ஏதும் இல்லை. போலி பத்திரிகையாளர்கள் யார் என்ற வரையறைகளை அரசு உருவாக்க வேண்டும். மாறாக, போலிகள் என்று கூறி ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களின் உரிமைகளையும், கருத்துச் சுதந்திரத்தையும் முடக்க அதிகார வர்க்கம் முயற்சிப் பது அனுமதிக்க முடியாதது.  எனவே சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசு, ஊடகவியலாளர்களின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறை வேற்ற வேண்டுமென சென்னை கருத்தரங்கம் வலி யுறுத்துகிறது. பத்திரிகைச் சுதந்திரம் எந்த அளவிற்கு உறுதி செய்யப்படுகிறதோ, அந்த அளவிற்கு ஜனநாயகம் தழைத்தோங்கும்!  ஊடகங்களைக் காப்போம்! ஊடக சுதந்திரம் காப்போம்! ஊடகவியலாளர்களைக் காப்போம்!

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், டியூஜெ





 

;