இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் மே 1 -2022 வரை தமிழகத் தின் நான்கு முனைகளில் இருந்து வேலை யின்மைக்கு எதிரான மிதி வண்டி பயணம் நடத்தி திருச்சி யில் சங்கமம் ஆவது என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. இப் பயணம் மிக முக்கியமானது. அரசின் உலகமயப் பொருளாதாரப் பாதைக்கு எதிரான மக்கள் கருத்தை திரட்டக்கூடியது.
வரலாற்றுக் கடமை
வேலையின்மைக்கு எதிரான குரலை தொழிற் சங்கங்களும் இணைந்து எழுப்ப வேண்டும் என்பது சித்தாந்த ரீதியான கடப்பாடு. வரலாறு சுமத்தியுள்ள கடமை. காரணம், வேலை செய்யும் திறன் இருந்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவோரும் தொழிலாளர் படையின் அங்கமே ஆவர். வேலையில்லா பட்டாளம் என்பது அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேர சக்தியை குறைப்பதற்கு, சிதைப்பதற்கு அரசுகள் திட்ட மிட்டு உருவாக்கும் “காத்திருப்பு பட்டாளம்” (Reserve Army) என்பதே உண்மை. வீரம் செறிந்த பல போராட்டங் களை உடைப்பதற்கு வேலையில்லா இளைஞர்களை முன்னிறுத்துவதை தொழிலாளர் இயக்கம் காலம் முழுவதும் எதிர் கொண்டு வருகிறது. இத்தகைய புரித லோடு தொழிற்சங்க இயக்கம் வேலையின்மை பிரச்ச னைக்காக கை கோர்ப்பதும் களம் காண்பதும் அவசியம். 1989 இல் “வேலையின்மைக்கு எதிரான பிரச்சாரக் குழுவை” (Campaign Committee Against Unem ployment -CCAU) தமிழகத் தொழிற்சங்கங்கள் உரு வாக்கி மாநிலம் தழுவிய பிரச்சாரம், சென்னையில் பேரணி என நடத்தின. இருந்தாலும் அம்முயற்சி தொடர வில்லை. ஆனால் 1991 இல் கொண்டு வரப்பட்ட உலக மய பொருளாதாரப் பாதையோ இத்தகைய முயற்சிக ளுக்கான பெரும் தேவையை சமூகத்தில் உருவாக்கி யது. உலகமய கால வளர்ச்சி என்பதே “வேலை வாய்ப்பற்ற வளர்ச்சியாக” (Jobless Growth) இன்னும் ஒருபடி மேலாக வளர்முக, வளர்ச்சி குன்றிய நாடுக ளில் “வேலை பறிப்பு வளர்ச்சியாக” (Job Loss Growth) அமைந்தது.
கழன்று விழுந்த முகமூடி
இந்து நாளிதழில் ஜி.சம்பத் என்கிற கட்டுரையாளர் ஒரு முறை தந்த கணக்கு இது. உலக உற்பத்தியில் 33 சதவீதத்தை கட்டுப்படுத்துகிற பன்னாட்டு நிறுவனங் கள் 5 சதவீத வேலை வாய்ப்புகளையே உருவாக்கு கின்றன என்பதே. உலக பொருளாதார மன்றத்தில் (WEF) பேசிய பாரதி ஏர் டெல் தலைமை நிர்வாக அலு வலர் சுனில் பாரதி மிட்டல், ‘இந்தியாவின் டாப் 100 நிறு வனங்களின் வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன, இத்தகைய நிலை நீடித்தால் சமூகத்தை நம்மோடு அழைத்து செல்ல முடி யாது’ என்று எச்சரிக்கை செய்தார். ஆனால் அவருக்கு பின்னர் அதே கூட்டத்தில் பேசிய ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக (Job takers) இல்லை, வேலை தருபவர்களாக (Job givers) மாறி விட்டார்கள் என்றார். மூலதனத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு அரசி யல்வாதிகள் மென்மையான முகமூடியை தருவார் கள். ஆனால் இன்றோ ஆட்சியாளர்கள் மூலதனத்தின் மூர்க்கத்தனத்தை ஊக்குவிக்கிறார்கள். அவர்களுக் கான பாதுகாப்பை உறுதி செய்வதாக அப்பட்டமாக உறுதி அளிக்கிறார்கள். முகமூடி கழன்று விட்டது.
வேலைக் கலவரம்
படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை 13 சத வீதமாக உள்ளது. இது ஆழ்மன கோபமாக இளைஞர் மனங்களில் கனன்று கொண்டு இருக்கிறது. ஜனநாயக ரீதியான எதிர்வினைகளுக்கான அமைப்பு ரீதியான திரட்டலும், சூழலும் இல்லாவிடில் அபாயகரமான நிகழ்வுகள் அரங்கேறும் என்பதே பீகார் கயாவில் அரங்கேறிய வன்முறையின் பின்புலம். ரயில்கள் எரிக் கப்பட்டன. உத்தரப்பிரதேசம் பிரக்யாராஜ் வரை வன்முறை பரவியது. “வேலைக் கலவரம்” (Job riot) என்று அதற்கு பெயரிடப்பட்டது. 35000 ரயில்வே காலியிடங்களு க்கு 1.20 கோடி பேர் விண்ணப்பித்த பின்னணியில்தான் அவ் வன்முறை நிகழ்ந்தது. அது ஒரு எச்சரிக்கை மணி. அதற்கு பிறகாவது அரசு விழிக்க வேண்டாமா? இந்தியாவில் 5.3 கோடி பேர் வேலையின்றி உள்ள னர். அதில் 1.7 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்தி விட்டார்கள். “வளாகத் தேர்வுகளில்” (Campus Sele ction) வீழ்ச்சி உள்ளது. “வளாகத் தேர்வு” நியமனங்கள் கிடைக்காமல் போகிறவர்கள் உயர் கல்வி முடித்தாலும் அத்தக் கூலிகள் போல ஆக்கப்படுகின்றனர். பணிப் பாது காப்பு, சமூகப் பாதுகாப்பு இல்லாத வேலைகள் நோக்கித் தள்ளப்படுகிறார்கள். “தரமற்ற வேலை வாய்ப்புகள்” (Low Quality Jobs) வேலையின்மையைத் திரை போட்டு மறைக்கின்றன. வீதிகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் “கிக்” தொழிலாளர்களாக சுவிக்கி, சொமாட்டோ மற்றும் அமேசான் வியாபார தூதர்களாக அலைவதைப் பார்க்கி றோம். அவர்களில் பலர் பட்டதாரிகள். கோவிட் பெருந்து யர், புலம் பெயர் தொழிலாளர்களின் அவலங்களை வெளிக் கொணர்ந்தது. பல்லாயிரம் கிலோ மீட்டர் கால்களில் கொப்புளம் வெடிக்க, கைக் குழந்தைகள், முதியோரை சுமந்து நடந்து சென்ற காட்சி கண்டு தேசமே திடுக்கிட்டுப் போனது.
நிரந்தர வேலைகளுக்கு சமாதி
தொழிலகங்கள் பெரும்பாலும் நிரந்தர வேலை வாய்ப்புகள் என்பதற்கே சமாதியைக் கட்டி விட்டன. காண்ட்ராக்ட், கேசுவல் தொழிலாளர்கள் எண்ணிக்கை நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை விஞ்சு வதை காண முடிகிறது. சட்டங்கள் மீறப்படுகின்றன. வளைக்கப்படுகின்றன. உச்சகட்டமாக தொழிலாளர் சட்ட திருத்தங்கள் என்ற பெயரால் சட்ட பாதுகாப்புகள் எல்லாம் உடைக்கப்படுகின்றன. சிறு தொழில், விவசாயம், சுய தொழில் ஆகியனவே அதிகமான வேலை வாய்ப்புகளை தருபவை. ஆனால் சிறு தொழில்கள் பெரும் தொழிலகங்களின் லாப வேட்டையில் பலியாக்கப்படுகின்றன. கோவிட் காலத்தில் ஒன்றிய நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்திற்கு (Interest Subvention Scheme) பணம் ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே பண மதிப்பு நீக்கத்தால் முதுகெலும்பு ஒடிந்து கிடந்த சிறு தொழில்கள் கோவிட் வந்த பின்னர் நிமிரவே முடிய வில்லை. தமிழகத்தில் மட்டும் 50000 சிறு தொழில கங்கள் மூடப்பட்டதாக தமிழ்நாடு சட்ட மன்றத்தி லேயே தெரிவிக்கப்பட்டது. விவசாயமும் கடுமையாக தாக்குலுக்கு ஆளாகியுள்ளது. அரசு கொள்முதல், கிராமப் புற கட்டமைப்பு முதலீடு, அமைப்பு சார் கடன் ஆகிய பிரச்சனைகள் உரிய தீர்வுகளை எட்டவில்லை. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத் திற்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டுள்ளது. சுய தொழில் என்பது செயலி சார் நிறுவனங்களால் விழுங்கப்பட்டு வருகிறது. ஓலா, ஹவுஸ் ஜாய் போன்ற இணைய தள சேவைகள் சுய தொழில் புரிவோரை கூலித் தொழிலாளி களாக மாற்றிவிட்டது. பிக் டேட்டா, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) ஆகிய புதிய தொழில் நுட்பங்கள் மேலும் வேலையின்மையை உருவாக்கக் கூடும்.
துணை நிற்போம்!
எல்லாவற்றிற்கும் மேலாக பொதுத் துறை மீதான தாக்குதல். ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பெரும் வேலை வாய்ப்பு வழங்குநர்கள் எல்லாம் பங்கு விற்பனை, தனியார்மய வலைக்குள் இழுக்கப்படுகிறார் கள். தனியார்கள் என்றால் லாபம் மட்டுமே குறிக் கோளாக இருக்கும். வேலை வாய்ப்பு, ஊதியச் செல வினம், பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு என்ற வார்த்தைகள் எல்லாம் அவர்களுக்கு எப்படி பிடிக்கும்? இத்தகைய சூழலில்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் “வேலை எங்கள் உரிமை” என்கிற கோரிக்கையை முன் வைத்து மிதி வண்டி பிரச்சார இயக்கத்தை முன்னெ டுக்கிறது. இதற்கு தொழிற்சங்கங்கள் துணை நிற்போம்!
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு