articles

img

கத்தியின் மீது நடக்கும் தாராளவாத- முற்போக்கு முஸ்லிம்கள் - பேரா. இர்ஃபான் ஹபீப்

இந்துத்துவா வெறுப்பரசியலை எதிர்கொள்ளும் தாராளவாத முஸ்லிம்கள் ,இன்று இரண்டு தீவிரவாதக் குழுக்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். இதனால் தங்கள் சொந்த சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளை அவர்களால் பேச முடியவில்லை. மத நம்பிக்கையை கருத்தில்  கொள்ளாமல், ஒரு தாராளவாதி என்பவர் யார் என்பதை வரையறுப்ப திலிருந்து தொடங்குவோம். தாராளவாதி என்பவர் தனது மதக் கருத்துக்களில், நெகிழ்ச்சித் தன்மை, பிடிவாதமற்ற  பார்வை கொண்டவர். அரசியல்,சமூகம் பற்றிய பார்வைகளில் இறுகிய நிலைப்பாடு இல்லாத வர். மற்றவர்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளும் அதே சமயத்தில் அவர்களை மதிப்ப வராகவும் இருப்பார்.

நாம் தாராளவாத முஸ்லிம்களின் சிக்கலான நிலைமையை விவாதித்தாலும், இந்து தாராளவாதி களும் இதே விதமான சிக்கலில் உள்ளனர். இந்தியா வில் கல்வி கற்ற தாராளவாத முஸ்லிம்கள் இது வரையில் சந்தித்திராத சூழலை எதிர்கொண்டுள்ளனர். அவர்களால் பெரும்பான்மை வாத தேசியவாதிகள் முன்வைக்கும் புதிய வகையான தேசபக்தியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதிசேசன் பாம்பு போல பல்வேறு தலைகளைக் கொண்ட ஆர்எஸ்எஸ்  அமைப் புகளின் படைவீரர்கள் மற்றும் தனது சொந்த சமூகத்திட மிருந்தும்  தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். ஒரு தாராளவாத முஸ்லிமின் குழப்பங்களை நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே,கடந்த கால வரலாறுக்கு உங்களை அழைத்துச் செல்வது அவசியமாகிறது. சொந்த சமூகத்தின் தாக்குதலை எதிர்கொள்ளும் தாராளவாத முஸ்லிமின் இக்கட்டான நிலையை புரிந்து கொள்ள நாம் 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதி களின் வரலாற்றை பார்க்க வேண்டும். 1857 முதல் இந்திய விடுதலைப் போருக்கு பின்னர் எதிர்காலத்தை இழந்த முஸ்லிம் மக்களின்  வாழ்க்கை நிலையைக் கண்டு சையது அகமது கான் அதிர்ச்சி அடைந்தார். முஸ்லிம் மக்களின் நலன்க ளுக்காக பாடுபடுவதே தனது வாழ்க்கையின் லட்சியம் ஆக்கினார். அவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர் காலம் குறித்து தீவிரமாக சிந்தித்தார்.

மத நம்பிக்கை, நவீனத்துவம் குறிப்பாக அறிவியல் பற்றி மிகவும் தீவிரமாக மறு சிந்தனை செய்தார். அவர் சொன்னவை மிகவும் புகழ்பெற்ற வார்த்தைகள்: “மக்கள் கண்மூடித்தனமாக மத நம்பிக்கைகளை பின்பற்றுவதை விட்டொழிக்காவிட்டால், குரான்  மற்றும் மறுக்க முடியாத ஹடித் ஆகியவற்றிலிருந்து உண்மை யான வெளிச்சத்தை  தேடாமல் போனால், மதம் மற்றும் இன்றைய அறிவியலோடு ஒத்துப் போகா விட்டால், இந்தியாவில் இஸ்லாமியம் மறைந்து போகும்”. சையது அகமது கான் இஸ்லாமியம் பற்றிய நெகிழ்ச்சியான பார்வையை முன் வைத்தார். அன்று நிலவிய மத பழமைவாதத்தை எதிர்த்தார். சையது அகமது கானின்பகுத்தறிவு மற்றும் விமர்சனப்பூர்வ மான சிந்தனை  ஆகிய இரண்டு நவீனத்துவ சிந்தனை களும் இன்றும் பெரிதும் தேவைப்படுகின்றன. இவை இரண்டும் இன்றும் கூட புறக்கணிக்கப்படுகின்றன. சையது அகமதுவும் அவரது ஆதரவாளர்களும், மாறிவரும் உலக நிலைமைகளில் இருந்து விலகி  பழ மையான பழக்கவழக்கங்களை பின்பற்றிய மக்களி டம் நன்மை தீமைகளை அவர்கள் புரிந்து கொள்ளும்  வகையில் விளக்கினர். இதற்காக தாராளவாத முஸ்லிம் சையது அகமது கேலி செய்யப்பட்டார். அவர் மீது 500 பட்வாக்கள் பிறப்பிக்கப்பட்டன. இன்று தாராளவாத முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சையது அகமது கானின் வரலாற்றுப் பின்னணியில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று  தாராளவாத முஸ்லிம்கள் கடுமையான காவி அலை அரசியலை எதிர்கொள்கின்றனர்.

காவி அரசியல் தாக்குதலினால், தாராளவாத முஸ்லிம்கள் தங்களது முற்போக்கான அரசியல், சமூகம் மற்றும் மதம் குறித்த நிலைப்பாடுகளை முன் னெடுத்து செயல்பட முடியவில்லை. இந்துத்துவாவாதி கள் முஸ்லிம்களை பூதாகரமாக சித்தரிக்கின்றனர். இது தாராளவாத முஸ்லிம்களின் முதுகெலும்பை முறித்துள் ளது. கெடு வாய்ப்பாக, தங்களை முஸ்லிம்களுக்காக பேசுபவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாராள வாத முஸ்லிம்களை வெறுக்கின்றனர். தாராளவாத முஸ்லிம்கள் ஆத்மநிர்பார் முஸ்லிமாக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இஸ்லாமியத்தில் சொல்லப்படாத/கைவிட வேண்டிய வழக்கங்கள்

சையது அகமதுவும் மற்றும் பின்னர் வந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களும் வெகுமக்கள் முஸ்லிம்களிடையே, அவர்கள் கல்வி யில் பின்தங்கி இருந்ததையும் ,மத நம்பிக்கை குறித்து  விமர்சனப் பூர்வமாக சிந்திக்க வேண்டிய அவசியம் குறித்தும் மக்களிடையே விவாதித்தனர். ஆனால் இன்றைய தாராளவாத முஸ்லிம்களின்  உலகம் மிகவும் சுருங்கிப்போய் விட்டது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த துருக்கிய அறிஞர் முஸ்தபா தான் 17 ஆவது வயதி லேயே குரான் முழுவதையும் முழுவதுமாக படித்து முடித்து விட்டதாகவும்,  மதப்பழமைவாதிகளும்,அவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு இஸ்லாமிய புத்தகங்க ளிலும் சொல்லி இருப்பது போன்று இவைகளையெல் லாம் “செய் அல்லது செய்யக்கூடாது” போன்ற கட்டளை கள் எதுவும் குரானில் இல்லை என்றார்.

பாலியல் குற்றவாளிகளை கல்லால் எறிந்து கொல் லுதல், குடிகாரர்களைத் தண்டித்தல், இஸ்லாமியத்தை அவமதித்தவர்கள் அல்லது கைவிட்டவர்களைக் கொல்லு தல், அதேபோன்று இஸ்லாமிய அரசு, சர்வதேச காலிஃபத், இஸ்லாமிய மத போலீஸ்காரர்கள் பற்றி  எல்லாம் குரானில் சொல்லப்படவில்லை என்கிறார். இதே போன்ற கருத்துக்களை கூறும் பலரும் பழமைவா தத்தின் சீற்றத்தை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற பழக்க வழக்கங்கள் இஸ்லாமியத்தில் அறவே இல்லை என்பதை பழமைவாதிகள் உணர்ந்தாக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள் உடனான உறவுகள், முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மதநிந்தனைச் சட்டங்கள் போன்ற கொடூரமான சட்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசும் தாராளவாத முஸ்லிம்கள்  மத பழமைவாதி களால் கண்டிக்கப்படுகின்றனர். சென்னையில் வசிக்கும் ஃபெய்சுர் ரகுமான் என்பவர் முஸ்லிம் இறை யியல் பற்றி தீவிரமாக சிந்திப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என்கிறார். இவை யாவும் இஸ்லா மிய சமூகத்தின் மீது தொடுக்கப்படும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை எதிர்கொள்வதையும், சமூகவெளி எங்கும் வியாபித்துள்ள வெறுப்புச் சூழலை, நம்பிக்கை யின்மையை அறிவு ஜீவிகள் எதிர்கொள்வதிலும் சிர மத்தை ஏற்படுத்துகின்றன. தாராளவாத முஸ்லிம்க ளின் மீது பழிசுமத்துவதும், அவர்களின் வாழ்க்கையை துன்பகரமாக மாற்றுவதும் சுலபமானது.

ஆனால்  முத்தலாக் பற்றிய சமீபத்திய உதார ணத்தை பாருங்கள். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்த பிரச்சனையில் எளிதாக தீர்வு  கண்டிருக்க முடியும். அதற்குப் பதிலாக முத்தலாக் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரியத்தை அணுகிய போது அவர்களைக் கேலி செய்தனர். பின்னர் இதுவே இந்துத்துவாவாதிகளால் வகுப்பு வாத பிரச்சனையாக்கப் பட்டதையும், இஸ்லாமி யர்கள்  குற்றவாளி ஆக்கப்பட்டதையும் பார்த்தோம். தாராளவாத முஸ்லிம்களும், இது குறித்து கவலை கொண்ட இந்தியர்களும் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதாகி விட்டது. மௌ லானா அர்ஷத் மதானி தேவையற்ற சர்ச்சையை கிளப்பினார். மதானியின் பேச்சு ஜமாத் இ உலமா மாநாட்டில் கருத்து வேற்றுமைக்கு வழி வகுத்தது. இத்த னைக்கும் அந்த மாநாடு அனைவரும் மகிழ்ச்சிகரமான சகவாழ்வு வாழ்வதற்கான வழி வகுக்கக் கூடிய அனை த்து மதங்கள் அமைப்புக்களின் கூட்டமாகும்.

இந்துத்துவாவாதிகளின் இரக்கமற்ற தாக்குதல்கள்

இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக உழைப்ப வர்கள், தமது சமூகத்தை விமர்சனப்பூர்வமாக விமர்சிக்கும் தாராளவாத முஸ்லிம்கள் இஸ்லாமிய விரோதி என பழிசாட்டப்படுகின்றனர். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விளிம்பு நிலையில் உள்ள முஸ்லிம் மக்கள் எந்நேரமும் மதசகிப்பின்மை பற்றிய அச்சத்தில் வாழ்கின்றனர். இது கொடுமையா னது. இந்துத்துவவாதிகளின் தொடர்ச்சியான வெறுப்பு பேச்சுகள், வன்முறைகள் முஸ்லிம்களை பூதாகரமாக சித்தரித்தல் இவை எல்லாம் அரசியல் ரீதியாக பலனளிக்கும் ஒரு பொழுதுபோக்காக இந்துத் துவாவாதிகளுக்கு மாறிவிட்டது. ஒரு தாராளவாத இந்து கூட இக்கட்டான நிலையில் சிக்கி உள்ளார். இன்று எத்தனை பொய்களை சந்திக்கிறோம்! கடந்த கால வரலாறு பற்றி இடைவிடாத பொய் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம், மதமாற்றம் மூலமாக இந்திய மக்கள் தொகையில் சம நிலையின்மை ஏற்படுத்தப்படுகிறது என்ற அச்சத்தை பரப்புதல், முஸ்லிம்கள் மேலாதிக்க கருத்துடன் இருப்பதாக பிரச்சாரம் ஆகிய பொய்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. இந்துத்துவா படை யினரின் ஆயுதங்களில் முக்கியமான ஆயுதம் கடந்த கால வரலாறு பற்றி, குறிப்பாக இடைக்கால இந்திய வரலாறு பற்றி பரவலாக பொய் பிரச்சாரம் செய்வதாகும்.

இந்துக்கள் அடிபணிய வைக்கப்பட்டார்கள்; துன்புறுத்தப்பட்டார்கள்; முஸ்லிம்கள் கொடூரமா னவர்கள்; இவையெல்லாம் இந்துத்துவவாதிகளின் கதையாடலாகும். இந்த அற்பத் தனமான, நச்சுக் கருத்துக்கள் வரலாறாக சொல்லப்படுகிறது. இவர்க ளுக்கு உண்மையான வரலாறு பற்றி துளியும் அக்கறை யில்லை. தங்களின் நிகழ் கால அரசியலுக்காக அவர்களா கவே வரலாறை வகுப்புவாத வரலாறாக உருவாக்கிக் கொள்கின்றனர். இந்துத்துவா சக்திகள் சொல்வது  போல, முஸ்லிம்களின் ஆட்சியில் 800 ஆண்டுகளுக்கும் மேலாக மதமாற்றத்தை அரசுக் கொள்கையாக கடைப்பிடித்தார்கள் என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொண்டால்- அது திறமையற்ற அரசு கொள்கை அல்லவா!? எட்டு நூற்றாண்டுகளில் முஸ்லிம் மக்கள்  தொகையை வெறும் 14 சதவீதத்திற்கு உள்ளாக மட்டுமே மதமாற்றம் செய்ய முடிந்துள்ளது என்று அர்த்தமாகாதா!? இந்தியாவில் உள்ள முஸ்லிம்க ளில் ஏராளமானவர்கள் மதம் மாறியவர்கள் தான். ஆனால் அதற்கான காரணங்கள் பலவாகும். பலவந்தமான மதமாற்றம் சில மட்டுமே. ஆனால், இஸ்லாமியத்தின் சமத்துவம் மற்றும் சமூக ரீதியாக குறைந்த அளவிலான ஒடுக்குமுறை மதமாக இருந்த காரணத்தினால் பலரும் இஸ்லாமி யத்தின் பால் ஈர்க்கப்பட்டனர் என்பதே உண்மை.  இஸ்லாமியத்தின் சமத்துவம்,  அதன் ஒடுக்குமுறை யற்ற தன்மை போன்ற செய்திகளை சூஃபிகள் பரப்பி னர். இப்போது, தில்லியின் இதயம் போன்ற ஜந்தர் மந்தரிலேயே இஸ்லாமியர்களைக் கொலை செய்ய வேண்டுமென காவல்துறையின் முன்னிலையிலேயே அறைகூவல் விடுப்பதை பார்க்க முடிகிறது.

பகவத்தின் கபட நாடகம்

இது போன்ற கொடூரமான அறைகூவல்கள் தண்டிக்கப்படாமல் அனுமதிக்கப்படும் போது, இந்து- முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே மத நல்லி ணக்கம் நிலவ வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்  பேசுவதில் உண்மை இல்லை. வகுப்புவாதச் சண்டையை தூண்டிக் கொண்டே இருப்பது இந்துத்துவா ஆயுதக் கிடங்கில் உள்ள வலிமை வாய்ந்த ஆயுதமாக உள்ளது. அப்பட்ட மான வகுப்புவாதத்தின் மத்தியில்  எல்லா மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் மோகன் பகவத் பேசு கிறார். ஆனால்,இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் தான்; இந்து மதம் என்பது வாழ்வியல் நடைமுறை; சனாதன தர்மமே இந்தியாவின் மதம் என்றும் சொன்னவர் தான் மோகன் பகவத். என்னைப் பொறுத்தவரையில், ஒரு தாராள வாதி என்ற முறை யில், இந்தியாவில் பிறந்த எவர் ஒருவரும் இந்தியரே. அதற்குப் பின்னர் தான் அவர் /அவள் இந்து, முஸ்லிம் அல்லது ஒரு நாத்திகராக கூட இருக்கலாம்.

சக மக்களை விலக்கி வைக்கும், தோற்றுப் போன இந்துத்துவா தேசியம்

இந்திய மக்களில் ஒரு பகுதியினரை விலக்கி வைத்து தேசியத்தை மறுநிர்ணயம் செய்வதே இந்துத்துவவாதிகளின் கட்டுக்கதை வரலாறுக்கான நோக்கமாகும். தேச விடுதலைப் போராட்டப் பாரம் பரியத்தின் ஒரு பகுதியாக “அனைவரையும் உள்ள டக்கிய தேசியம்”உருவானது. ஆனால்  பித்ருபூமி அல்லது புண்ணிய பூமி என்று முஸ்லிம்களை விலக்கி  வைக்கும் சாவர்க்கரின் “இந்து தேசியம்” 1947 இல் தோல்வியுற்றது. காந்தி, நேரு, பட்டேல் ,ஆசாத் போன்றவர்களின் மிகவும் விரிவான, அனைத்து மக்க ளையும் உள்ளடக்கிய தேசியமே வென்றது. மதச்சார் பற்ற இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய பாகிஸ்தான் நாடு பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு ஈடாக இந்து ராஷ்டிராவை விரும்பியவர்கள் தோற்றுப் போய் பல பத்தாண்டுகளாக காத்திருந்தனர். கெடுவாய்ப்பாக அந்த பிளவுவாத தேசியத்தை மறுபடியும்ஆரம்பித்து வைப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு  கிடைத்துள்ளது. சக குடிமக்களுக்கு எதிராக “நாம் -அவர்கள்” எனும் வஞ்சகமான வகுப்புவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டே பகத்சிங் போன்ற விடுதலைப் போராட்ட புரட்சியாளர்களையும் கொண்டாடுகின்றனர் இந்துத்துவ படையினர். ஆனால்  புரட்சியாளர்களின் தியாகம் மற்றும் தேசியத்தை மட்டும் கொண்டாடு வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். புரட்சியாளர்களின் அறிவுப் பாரம்பரியத்தை அலட்சியம் செய்கின்றனர். பகத்சிங் உருவாக்க எண்ணிய தொலைநோக்கு இந்தியாவில், வெறுப்பரசியல் பரப்பி வெறியாட்டம் போடும் இந்துத்துவாவாதிகளுக்கு இடமில்லை.

 பகத்சிங் என்ற தேசியவாதி தனிச் சிறப்பு மிக்கவர். அவர் விட்டுச் சென்றுள்ள அவரது ஏராளமான படைப்பு களில் இருந்து, அவர் என்ன மாதிரியான தேசியத்தை ஏற்றுக் கொண்டார் என்பதை அறிந்து கொள்ள முடியும். நெஞ்சமெல்லாம் மதவெறுப்பு மண்டிய வகுப்புவா திகள் பகத்சிங்கை தேசியவாதியாக வணங்குகின்ற னர். ஆனால் பகத்சிங்கிற்கு மதம் என்பது ஒரு பொருட்டே அல்ல. பகத்சிங்கின் தொலைநோக்கு இந்தியா பற்றிய கருத்துக்களையே அம்பேத்கரும் கொண்டிருந்தார். அம்பேத்கர் ஒரு முறை சொன்னார்: “நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற முறையில், இந்தியாவின் மீதான விசுவாசம் என்பது தனிப்பட்ட போட்டி விசுவாசம், நம்பிக்கை, பற்று ஆகியவற்றால் சிறிதளவு கூட பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. அந்த விசுவாசம் மதத்தினால், நமது பண்பாட்டினால், மொழியினால் தீர்மானிக்கப்படுவதை நாம் விரும்ப வில்லை. முதலும் முடிவுமாக எல்லா மக்களும் இந்தி யர்களாக இருப்பதையே விரும்புகிறோம்”. 

பகத்சிங் அனைவரையும் உள்ளடக்கிய  தேசி யத்திற்காக போராடினார். அவரது தேசியம் அரசியலை மட்டும் உள்ளடக்கியது அல்ல. அது சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, மத ரீதியாக அனைவரையும் உள்ளடக்கிய தேசியமாகும். பெரும்பான்மை மதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்பாடற்ற தேசியத்திற்கு எதிராக , பகத்சிங்கின் தேசியம் பற்றிய கருத்தியலை முன்னிறுத்துவது முக்கியமானதாகும். நாம் இந்த விவாதத்தில், கடந்த கால வரலாற்றைப் பேசியது எதற்காக எனில், நமது தற்கால அரசியல் போக்குகளுக்கான காரணங்கள் கடந்த காலத்தில் வேரூன்றி உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கா கத்தான். நம்மைச் சுற்றி வெறுப்பும் பொய்களுமே சூழ்ந்திருக்கும் சூழலில், ஒரு தாராளவாத முஸ்லி மின் நிலை மிகவும் சிரமமானதாகும். இன்றைய தனிமைப்படுத்துதல்சூழலில் உறுதி யான தாராளவாதியாக செயல்படுவது மிகவும் கடின மானது. அவர் சொந்த சமூகத்திற்குள்ளேயே எதிர்ப்பா ளராக கண்காணிக்கப்படுகிறார். வெறுப்பை பரப்பும் இந்துத்துவா படையினரால் இழிவுபடுத்தப்படுகிறார். அவர் ஒரு இடதுசாரியாக, கம்யூனிஸ்டாக செக்யூலரிசம் (secularism) பேசுவதால் அவர் ஒரு சிக்குலர் (Sickular) என்று பெயர் சூட்டப்படுகிறார். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கும் தங்கள் திட்டத்திற்கு தாராளவாத முஸ்லிம்கள் இடையூறாக  இருப்பதாக பார்க்கின்றனர்  இந்துத்துவாவாதிகள். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் , சுதந்திர போராட்ட பாரம்பரிய விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தாராள வாத முஸ்லிம்கள் அல்லது யாராக இருந்தாலும் சரி,  மத நம்பிக்கையில்லாதவர் என அனைவருக்கும்உண்டு.

நன்றி: ஃப்ரண்ட்லைன், மார்ச்,10,2023, 
தமிழில்: ம.கதிரேசன்


 

 

;