articles

img

வீதி தோறும் தீக்கதிர் சேரட்டும்! வீடு தோறும் ஒளி பரவட்டும்!! - கே.பாலகிருஷ்ணன்

ஊடக உலகில் உண்மைச் செய்திகளை தாங்கி வருவதுடன், உழைப்பாளி வர்க்கக் குர லாகவும் திகழ்ந்து வரும் தீக்கதிர் தற்போது மதுரை, சென்னை, கோவை, திருச்சி என நான்கு பதிப்புகளாக வெளியிடப்பட்டு வருகிறது. கூடுதலாக எண்ம பதிப்பாகவும் வெளியிடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் ஐந்தாவது அச்சுப் பதிப்பாக செப்டம்பர் 22 அன்று கால்பதிக்கவுள்ளது. அச்சு செய்தி ஊடகம் நவீன ஊடகங்களோடு போட்டி போட வேண்டிய கட்டா யத்தில் உள்ளது. ஒரே பதிப்பாக வெளியிட்டு தமிழகம் முழுவது முள்ள கடைக்கோடி வாசகருக்கும் பத்திரிகையை எட்டச் செய்வது இயலாத ஒன்றாகிவிட்ட சூழ்நிலையில் அதிக பதிப்பு களை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கூடு தலான நிதிச் செலவு என்ற  சூழ்நிலையிலும் இத்தேவையை ஈடுசெய்யும் வகையில் ஐந்தாவது பதிப்பினை தீக்கதிர் தற்போது துவக்குகிறது. இம்மகத்தான வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் துணையாக உள்ள தீக்கதிர் வாசகர்களுக்கும், ஆசிரியர் குழு, நிர்வாகப் பிரிவு, ஊழியர்கள், தொழிலாளர்கள், செய்தி யாளர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் என அனைவருடன் இந்த இனிய நாளின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.

உந்துசக்தி

தீக்கதிரின் வளர்ச்சி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து ஜன நாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி சக்திகளுக்கும் வலுச் சேர்ப்ப தாகும். தமிழக உழைப்பாளி மக்களும், ஏழை, எளிய நடுத்தர மக்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும் தீக்கதிரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்வது பெருமைக்குரியதாகும். பண பலம் படைத்த அரசியல் கட்சிகள் கூட அச்சு ஊடகத்தைக் கைவிட்டுள்ள நிலையில் தொழிலாளி வர்க்க இயக்க இதழான தீக்கதிர் ஐந்தாவது பதிப்பினை வெளியிடுவது இமாலய சாதனையாகும். அனுதினமும் சந்திக்கும் எண்ணற்ற சவால்களை உழைப்பாளி வர்க்க இயக்கங்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டு தீக்கதிர் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஜூலை 1 முதல் 10 தேதி வரை நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை கட்சியின் அனைத்து மாவட்டக் குழுக்களும் பெருமளவு வெற்றிபெறச் செய்தன. இதன் காரணமாக  விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கட்சியின்  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டக்குழுக்கள் காட்டிய அக்கறையே நெல்லை பதிப் பினை சாத்தியமாக்கியுள்ளது. அதற்காக இந்த நேரத்தில் நான்கு மாவட்டக் குழுக்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நெல்லை பதிப்பினை தனது தோள்களில் சுமந்து செயல்படும் நெல்லை மாவட்டக்குழுவுக்கும், தீக்கதிர் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழு தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

பொய் பரப்பும் தொழிற்சாலையாக பாஜக பரிவாரம்

பாஜக ஆட்சியில் ஊடகங்களின் மீதான பிடி இறுகி வரு கிறது. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமக்கேற்ற சிந்தனையைக் கட்டமைக்கும் திசையில் ஆளும் வர்க்கங்கள் இயங்கு கின்றன. ஆனால், தீக்கதிர் தனது நிலைப்பாட்டில் எந்த ஊசலாட்டமும் இல்லாமல் உழைக்கும் வர்க்கங்களின் நலனை மட்டுமே மனதில் நிறுத்தி உண்மையின் பேரொளி யாக பிரகாசித்துக் கொண்டுள்ளது. இன்றைய ஒன்றிய அரசை வழி நடத்தும் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் பொய்களை உருவாக்கிப் பரப்பும் ஒரு தொழிற்சாலையாகவே   செயல்பட்டு வருகிறது.  அன்றாட வாழ்க்கையோடு மல்லுக்கட்ட முடியாமல் அல்லலுறும் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். இந்துத்துவ சக்திகள், வெறுப்பையும் வன்முறையையும் விதைப்பதற்கு இந்தச் சூழலை பயன்படுத்துகின்றன. ஹிட்லரின் அமைச்சரான கோயபல்சே வெட்கப்படும் அளவுக்கு பொய்யை மெய்போல திரித்துப் பரப்புகிறது, பாஜக பரிவாரம். மதவெறி, சாதிவெறி யைத் தூண்டி வெறுப்பு அரசியலை சூழ்ச்சிகரமாக விதைத்து  வருகின்றனர். பாசிச குணம் கொண்ட மதவெறி பாஜக -  ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் வன்முறை வெறியாட்டங்க ளையும், தத்துவப் பிரச்சாரத்தையும் முறியடித்து மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத் தன்மையை பாது காக்கப் போர் முரசு கொட்டும் இதழாக தீக்கதிர் திகழ்ந்து வருகிறது.

உரிமைப் போராட்டங்களை  ஓங்கி ஒலிப்பதில்... 

தீக்கதிர், பன்முக இந்தியாவிற்கான முழக்கத்தை உறுதியோடு முன்னெடுக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்று, பெருமுதலாளித்துவச் சுரண்டலை அம்பலப்படுத்து கிறது. சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நின்று மக்கள் ஒற்று மையை வலுப்படுத்துகிறது. ஜனநாயகத்தின் குரலாக உரத்து ஒலிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலையும், பட்டியலின - பழங்குடியின மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாலியல் வன்முறைகளையும் எதிர்த்தும்;  தொழிலாளர்கள், மாணவர், இளைஞர், மாதர், உழைக்கும் மக்கள், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினர்களின் உரிமைகளைப் பறைசாற்றும் வகையிலும் தினந்தினம் களப்போராளியாக தீக்கதிர் திகழ்ந்து வருகிறது. உழைப்பாளி கள் மற்றும் அனைத்துப் பகுதி மக்கள் நடத்தும் உரிமைப் போராட்டங்களின் நியாயங்களை முன்னுரிமையோடு ஓங்கி ஒலிப்பதில் தீக்கதிருக்கு நிகர் தீக்கதிரே. ஒவ்வொரு நாளும் வெளியாகும் தீக்கதிரின் உள்ள டக்கம் அறிவியலைக் கொண்டாடி, பகுத்தறிவு பரப்பிடும் வகையில் உள்ளது. சர்வதேச செய்திகளையும், புவி அரசியலையும் மிகச் சரியான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது. ஏகாதிபத்திய அவதூறுப் பிரச்சாரத்திற்கு உரிய பதிலளிப்பதுடன், உலகப் பாட்டாளி வர்க்கத்தையும், இந்திய மக்களின் நலனையும் காத்து நிற்கும் போர்வாளாக தீக்கதிர் விளங்குகிறது. முடைநாற்றம் வீசும் முதலாளித்துவ சமூக அமைப்புக்கு மாற்றாக பொதுவுடமை பொன்னுலகத் தத்துவத்தை உத்வேகத்துடன் பறைசாற்றி வருகிறது.

தத்துவ ஆசானாக...

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் வழிக் கல்வி, எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என உரக்க முழங்கி வருகிறது. பத்திரிகை சுதந்திரம், பறிக்கப்படும் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்திட சண்டமாருதம் செய்து வருவது தீக்கதிரே. மனித சிந்தனைகளை மடைமாற்றம் செய்திட நடந்து வரும் முதலாளித்துவ, பிற்போக்கு, பழமைவாத அரசியல் கருத்தியல்களை வேரறுத்திட மகத்தான மார்க்சிய கருத்தியல் போராட்டத்தை முன்னெடுக்கும் தத்துவ ஆசா னாக தீக்கதிர் விளங்குகிறது. ஞாயிறன்று வெளிவரும் வண்ணக்கதிர் கலை, இலக்கி யம், அறிவியல், மருத்துவம், சிறுவர்களுக்கான கட்டுரைகள், ஓவியங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும்படியாக வந்து கொண்டிருக்கிறது. 60 ஆண்டுகளை நிறைவு செய்து 61வது ஆண்டில் நடைபோடும் தீக்கதிரின் தனிச் சிறப்பான வெளிப்பாட்டிற்கு காரணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்துக் கொடுத்துள்ள தெளிவான அரசியல் சித்தாந்தப் பாதையே ஆகும். கட்சியின் ஏடு கட்சியின் அமைப்பாளர் என்பார் மாமேதை லெனின். மகத்தான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை -  கோட்பாடுகளை மக்களிடம் அன்றாடம் கொண்டு செல்லும் பணியை தீக்கதிர் ஏடு செவ்வனே செய்து வருகிறது.

பெரும் முதலீடு இல்லாமல், பெருமுதலாளிகளின் ஆதர வை எதிர்பார்க்காமல், தொடர்ந்து சிறப்பாக இயங்கிவரும் தீக்கதிருக்கு, தமிழ்நாட்டின் உழைப்பாளி மக்களின் பேராதரவே பாதுகாப்பு அரண். கடுமையான பொருளாதார இடர்பாடுகளுக்கு இடையில் தீக்கதிர் தனது 5ஆவது பதிப்பை துவக்கியுள்ளது. இந்தத் தத்துவத் தேரோட்டம் தடைபடாமல் தொடர்ந்திட உங்கள் ஆதரவு நீடித்து நிலைக்கவேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். “வீதி தோறும் தீக்கதிர் சேரட்டும், வீடு தோறும் தீக்க திரின் ஒளி பரவட்டும்”  என்ற நிலையை எய்திடப் பணி யாற்றுவோம்.