articles

img

மகளிரைப் பாதுகாப்போம் - நாட்டைப் பாதுகாப்போம் - மரியம் தாவ்லே

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பதாகையின் கீழ் நாட்டின் 25 மாநிலங்களிலிருந்தும் பல்லா யிரக்கணக்கான பெண்கள் வரும் 2023 அக்டோ பர் 5 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளு மன்ற வீதியில் பேரணி/பொதுக்கூட்டம் நடத்த விருக்கின்றனர். நாடு முழுதும் இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. இதனையொட்டி அனைத்து மாநிலங்களி லும் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் நடைபெற்ற பேரணிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். இதேபோல் ஐந்தாண்டு களுக்கு முன்பு 2018 செப்டம்பர் 4 அன்று தில்லி யில் நடைபெற்ற பேரணி/பொதுக்கூட்டத்தில் விடாது பெய்துகொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றிருந்தனர். இதனையொட்டி மும்பையில் நடைபெற்ற மகளிர் பேரணியிலும், கொல்கத்தாவில் நடை பெற்ற மகளிர் பேரணியிலும் தலா பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டி ருப்பது தில்லியில் நடைபெறவுள்ள பேரணி யின் வெற்றிக்குக் கட்டியம் கூறியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் கருப்பு பேட்ஜ் தினம் (Black Badge Day) அனுசரித்துள்ளனர். மாவட்ட அளவிலும் பேரணிகள் நடத்தியுள்ளனர். கேரளாவில் 14 மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடை பெற்ற பேரணி/பொதுக்கூட்டங்களில் ஆயிரக் கணக்கான பெண்கள், பதாகைகளுடனும், மெகா மைக்குகளுடனும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மாநில அளவில் பல்லாயிரக் கணக்கான பெண்கள் துண்டுப்பிரசுரங்களு டனும், வீதி முனைக் கூட்டங்களுடனும் மிகப் பெரிய அளவில் பிரச்சாரத்தை நடத்தியுள்ள னர்.  

கர்நாடக மாநிலம் மாண்ட்யா மாவட்டத்தில் பெண்களின் பைக்குகள் மற்றும் டிராக்டர்கள் அணிவகுத்துவரும் பேரணி நடைபெற்றுள் ளது. புதுச்சேரியில் விலைவாசி உயர்வுக்கு எதி ராகவும், ரேஷன் கார்டுகள் கோரியும் கிளர்ச்சி  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. அந்த மானிலும் கூட்டம் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் நால்கொண்டா மாவட்டத்திலும் மற்றும் பல மாவட்டங்களிலும் ஜீப் அணிவகுப்பு நடைபெற்றுள்ளன. ஆந்தி ரப்பிரதேசத்தில் நடைபெற்ற ‘மோடியே வெளி யேறு’ கையெழுத்து இயக்கத்தில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டு வருகின்றன. இமாசலப் பிரதேசத்தில் பருவநிலை மிகவும் மோசமாக இருந்தபோதி லும் அதனைப் புறந்தள்ளிவிட்டு பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் உட்பட தில்லி, ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான், உத்தர்கண்ட், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. தில்லியில் அக்டோபர் 5 நடைபெறும் பேரணி/பொதுக்கூட்டம் இந்தியாவில் பெண்கள் எதிர்கொண்டுவரும் எரிகிற பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும்.

பட்டினிக் கொடுமையில் இந்தியாவுக்கு 107ஆவது இடம்

உலகில் பட்டினிக் கிடக்கும் மக்களில் இந்தியா அதிக எண்ணிக்கையில் மக்களைப் பெற்றுள்ளது. 2023இல் வெளியிடப்பட்ட உலக  பட்டினி அட்டவணையில் மொத்தம் உள்ள  121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்தைப்  பெற்றிருக்கிறது. எனினும் பொது விநியோக  முறைக்கான ஆதரவை ஒன்றிய அரசாங்கம் அளித்து வருவது என்பது கடந்த ஐந்தாண்டு களில் 40 விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைந் திருக்கிறது. உணவுச் சந்தைகள் திறக்கப்பட்டிருப்பதும், டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் கடுமை யாக உயர்த்தப்பட்டிருப்பதும் உணவுப் பொருள் களின் விலைகளை மிகவும் உயர்த்தி இருக்கின்றன, உணவுப் பணவீக்கம் 7 விழுக் காடு அளவிற்கு இருக்கிறது. 2014க்குப்பின் சமையல் எரிவாயுவின் விலைகள் 140 விழுக்காட்டுக்கும் அதிகமாக சென்றிருக்கிறது. கொரோனா காலத்தில் அரசாங்கம் 5 கிலோ உணவு தானியங்களை பொது விநியோக முறையில் இலவசமாகக் கொடுத்தது. பின்னர் அதனை நிறுத்தி விட்டது. 2013க்கும் 2021க்கும் இடையே 4 கோடி ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.  இது, மக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின்மை மற்றும் பட்டினிக் கொடுமைகள் அதிகரிக்கும் அவலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. மோடி  அரசாங்கம் இந்த உண்மையை மறைப் பதற்காக, தேசிய குடும்ப சுகாதார சர்வே யில் ரத்த சோகை (anaemia)யைக் காட்டு வதையே நிறுத்திவிட்டது.  மாறாக, பொது விநியோக முறை மூலமாக விட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்துடன் கூடிய  அரிசி ஏழைக் குடும்பத்தினருக்கு வழங்கப்படு வதாகவும், மதிய உணவுத் திட்டம் கொண்டு  வரப்பட்டிருப்பதாகவும், இவை ஊட்டச்சத்தை யும் ரத்தசோகையையும் குறைத்திடும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இதற்கான சான்று  எதுவும் இல்லை என்றே இது தொடர்பான புலனாய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.  இந்தத் திட்டத்தில் நாட்டில் ஆறு கம்பெனி கள் அரசாங்கத்திடமிருந்து 1,800 கோடி ரூபாயை வெகுமதியாகப் பெற்றிருக்கின்றன என்பதைத் தவிர மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்க வில்லை.

மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்

மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகையில் கடும் வெட்டினை ஏற்படுத்தி இருக்கின்றனர்.  இதுவரையிலும் இத்திட்டத்தின்கீழ் வேலை செய்தவர்களுக்காக ஒன்றிய அரசாங்கம், 18 மாநிலங்களில் உள்ள வர்களுக்கு 6,000 கோடி ரூபாய் ஊதியமாகத் தர வேண்டியிருக்கிறது. மேலும் பொருட்களை வாங்கிய வகையில் மேலும் 6,000 கோடி ரூபாய் 30 மாநிலங்களுக்கு அளிக்க வேண்டியிருக் கிறது. இவை அனைத்தும் இந்தத் திட்டம்  செயல்படுவதைக் கடுமையாகப் பாதித்திருக் கின்றன. இத்திட்டத்தின்கீழ் வேலை செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆன்- லைன் மூலம் வருகை முறை கொண்டு வந்திருப்பது இவர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் குறைந்த  ஊதியமே வழங்கப்படுகிறது,

வேலைநாட் களும் போதுமான அளவிற்கு இல்லை என்ற போதிலும், இது கோடானுகோடி மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. நாட்டில் வேறு எந்த வேலைவாய்ப்பும் இல்லாத நிலை யில் இதில் கிடைக்கும் அற்ப ஊதியமே அவர் களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாகும். வாழ்வத ற்கான வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் மிகவும் சுரண்டப்படும் வேலை களுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்ற னர். கட்டாயமாக வேலை செய்ய வைப்பது மற்றும் பரத்தமைத் தொழிலில் ஈடுபடுத்து வதும்கூட அதிகரித்திருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கான வழிவகைகள் குறைந்துகொண்டிருப்பதும், வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் பெண்களை அதிக வட்டிக்கு நுண்ணிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கு வதற்குத் தள்ளி வருகின்றன. இவர்கள் பெண்களிடம் காட்டும் அடாவடித்தனமான நடவடிக்கைகள் எதுவும் தண்டிக்கப்படா மலேயே சென்றுகொண்டி ருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் திட்டங்களில் பலவற்றிற்கு சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. இவற்றில் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்ணிய நிதிநிறுவனங்கள் எளிதாக ஊடுருவி விடு கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்பட்டுள்ள கொள்கை மாற்றங்கள்  இவற்றுக்கு எளிதாக வழி செய்து தந்திருக் கின்றன. வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை பலரைத் தற்கொலை புரிய வைத்திருக்கிறது. 

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறை வெறியாட்டங்கள்

ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்தின் கூரு ணர்வற்ற அரக்கத்தனமான நடவடிக்கை கள் நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மிக வும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றன. இவர்களுடைய வெறுப்பைக் கக்கும் அரசியல், சிறுபான்மையினர், தலித்து கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதி ராக வன்முறை வெறியாட்டங்களை அதிகப் படுத்திக்கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. அவை, 2016இலிருந்து 2021 வரை 26.35 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. நாட்டிலுள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தங்கள் வாழ்நா ளில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக் கின்றனர். தேசியக் குற்றப் புலனாய்வு நிலை யத்தின் அறிக்கையின்படி, ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு எதி ரான குற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கும் ஒருமுறை பாலி யல் வன்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு 77 நிமிடங்களுக்கு ஒருமுறை  வரதட்சணை மரணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பத்து பெண்களில் ஆறு பேர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். இவற்றைச் செய்திடும் கயவர்கள் தண்டிக்கப் படுவதே இல்லை. மணிப்பூர் அட்டூழியங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எதுவும் கூறாது மவுனமாயிருப்பது, மற்றும் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கண்டும் காணாதிருப்பது இச்செயல்களில் ஈடு படும் கிரிமினல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்ப தற்காக கொண்டுவரப்பட்ட நிர்பயா திட்டம் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானவர் களுக்காக கொண்டுவரப்பட்ட மையங்களின் (One stop crisis centres) செயல்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தை களுக்குக் கற்பிப்போம்’ என்னும் முழக்கம் ‘வெற்று’ (‘jumla’) முழக்கமாகவேநீடிக்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவைப் பாதுகாத்திட ஒன்றிணைவோம்

நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய விடு தலைப் போராளிகள், நாட்டை ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் சோசலிச நாடாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவுடனேயே போரா ட்டங்களில் ஈடுபட்டார்கள். இப்போராட்டத்தில் பெண்களும் வீரஞ்செறிந்த பங்களிப்புகளைப் புரிந்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தின்போது இதர கோரிக்கைகளுடன் பெண்களுக்கு சம  உரிமைக்கான கோரிக்கையையும் முன்வைத்தே பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். எனினும், இந்தக் கோரிக்கை நசுக்கப்பட்டுவிட்டது. இப்போதுள்ள நம்முடைய மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசை ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்ற மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஓர் ஆபத்தான அறிகுறியாகும்.  இந்து ராஷ்ட்ரம் என்பது இயற்கையாகவே படிநிலைகள் (hidrarchids) மற்றும் விலக்கு களை (exclusion) அடிப்படையாகக் கொண்ட தாகும். இது உயர்ஜாதி மேலாதிக்கத்தையும், ஆணாதிக்க சமூகத்தையும் உயர்த்திப்பிடித்து வலுப்படுத்திடும். ‘பாரத ரத்னா’ பி.ஆர். அம்பேத்கர் கூறியதுபோன்று, இந்த நாடு,  “இந்து ராஜ்ஜியம் உண்மையாக மாறுமானால், அது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவு என்பதில் ஐயமில்லை.” எனவே “இது ஜனநாயகத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று” என்றும் எச்சரித்தார். எனவே, 2023 அக்டோபர் 5 அன்று ‘தில்லி செல்வோம்’ என்ற அறைகூவலுடன் நடை பெறும் பேரணி/பொதுக்கூட்டத்தில் நாடு முழு தும் உள்ள பெண்கள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் பங்கேற்று, நம்முடைய உரிமைகளையும், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்திடுவதற்கான நம் போராட்டத்தை வலுப்படுத்திட, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவி அழைக்கிறது.

தமிழில்:ச.வீரமணி