மக்கள் தொகை நெருக்கடி, வெப்பம், புகை, நச்சு காற்றிலிருந்து சற்று விடுபட்டு புத்துணர்ச்சி பெற சுற்றுலா செல்வது ஒரு சிறந்த தேர்வாகும். பலரும் அப்படியே சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருக்கக் கூடும். காரணம், உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற் றால் கடந்த சில ஆண்டு வீட்டோடு காலம் கழிந்து விட்டது. அதனாலேயே, வெளியில் சென்று இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து விளையாட வேண்டும் என்று பலரும் எண்ணுவார்கள். அப்படி, செல்லக் கூடிய இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும், அமைதியானதாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். அந்த வரிசையில் சுற்றுலா பாரம்பரியம், கலாச்சாரம், அழகிய சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள், நீண்ட அமைதி யான கடற்கரைகள், மலையடிவாரங்களைக் கொண்ட தமிழ்நாடு சுற்றுலா மனதை புத்துயிர் பெற செய்யும். அத்தகைய சுற்றுலா தளங்கள் குறித்து பார்ப்போம்.
மலையரசியும்-ரோஜாக்களின் பன்னீர் மழையும்!
மலை வாழிடங்களின் மகுடம், மிகப் பிரபலமான சுற்றுலா தலங்களில் முதன்மையானது. உயரமான மலை கள், அடர்ந்த காடுகள், பரந்த புல்வெளிகள், அழகான பள்ளத் தாக்குகள் என ஒவ்வொரு இடமும் ஒரு தனித்துவமானது. உயிரோட்டமானது. பசுமை நிறைந்த ரம்மியமான சூழல், வசீகரிக்கும் குளிர்ந்த வானிலை நிலவும் ‘மலைகளின் ராணி’என்று அழைக்கப்படுவது ஊட்டி எனப்படும் உதகமண்டலம். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சந்திப் பில், ஊட்டியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது தொட்டபெட்டா. இது மலையேற்றப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானது. 2,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த சிகரம் மிக உயரமானது. அதேபோல், மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கோத்தகிரியில் மணம் வீசும் தேயிலை தோட்டங்களும், தைலம் மரங்களும் கூடுதல் அழகு சேர்க்கின்றன. நீலகிரி மலைத் தொடரின், கடல் மட்டத்திலிருந்து 5,800 அடி உயரத்திலுள்ள மற்றொரு தேயிலைத் தோட்ட மலை நகரான ‘கொடநாடு’ இதன் அருகே தான் உள்ளது. தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையால் பராமரிக்கப்படும் 55 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் தாவரவியல் பூங்காவில் ரோஜாக் களின் இணையற்ற அழகுக் காட்சிகள், ஊட்டி ஏரி, பைகாரா நீர்வீழ்ச்சி, முதுமலை தேசியப் பூங்கா ஆகியவை பார்க்கப் பார்க்க பரவசமாக்கும் இடங்களாகும்.
மலைகளின் இளவரசி...
நீல நிறத்தில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களால் உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பியது ‘மலை களின் இளவரசி’ கொடைக்கானல் மலை. கடல் மட்டத்தி லிருந்து 7,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் அற்புத மான கால நிலை, இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. இதுமட்டுமல்ல கொடைக்கானல் ஏரி, பூங்கா, தூண் பாறைகள், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி என்று சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 5,200 அடி உயரத்தில் இருக்கும் சிறு மலையின் உச்சியை அடைய 18 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இங்கு வீசும் குளிர் காற்றும், காற்றுடன் கூடிய மூலிகை நறுமணமும் மனதுக்கு இதமாக இருக்கும். அங்குள்ள உயர் கோபுரத்திற்கு சென் றால் வாழை, நெல்லி போன்ற கனிகள் நிறைந்த மலையின், பிரமிக்க வைக்கும் அழகிய காட்சிகளை ரசிக்கலாம்.
பசுமை அழகு!
கோவை சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். கண் களுக்கு இயற்கை விருந்து படைக்கும் பசுமை நிரம்பி வழியும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது வால்பாறை. சுற்றிலும் பசுமையான தேயிலை, காப்பி தோட்டங்கள், வானுயர மரங்கள், சோலைகள், அருவி கள், நீரோடைகள், ஆழியாறு, சோலையார் அணைகள், ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் என இயற்கை பல வடிவங்களில் இங்கே தன்னை அலங்கரித்து நிற்கிறது. நாட்டிலேயே இரண்டாவது அதிகமான மழைப்பொழிவை கொண்ட தென்னிந்தியாவின் ‘சிரபுஞ்சி’ என்று அழைக்கப் படும் சின்னக்கல்லார், பொள்ளாச்சி என்று ஏராளமான இடங்கள் உள்ளன.
சிலிர்க்க வைக்கும் அருவிகள்!
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பச்சைப் பசேலென்று சுற்றிலும் மரம், கொடிகளும், குளுகுளுவென மலையிலிருந்து வீசும் காற்று, சங்கீதம் பாடும் மலை அருவிகள், சிலிர்க்க வைக்கும் நீர் வீழ்ச்சியின் சாரல் என்று அனைத்தும் அனுபவிக்க குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலகட்டமாகும்.
வசீகரிக்கும் ஏலகிரி!
திருப்பத்தூர் மாவட்டத்தில் வளைந்து வளைந்து செல்லும் மழைச்சாலைகளில் கடல் மட்டத்திலிருந்து 4,600 அடி உயரத்தில் நான்கு மலைகளுக்கு நடுவில் வீற்றிருக் கும் ஏலகிரி, ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பம் நிலவும் மலைப்பகுதியாகும். இங்கு பறந்து விரிந்த புங்கனூர் அருவியில் படகு சவாரி. கண்ணுக்கு விருந்தாக ஜலங்கம் பாறை அருவி, சாகச விளையாட்டுகளுக்கு பாரா கிளைடிங் என்று குதூகலமாகும். அதேபோன்று, கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவே அமைந்திருக்கும் ஏற்காடு மலையில் நிலவும் குளிர், மூடுபனி, வானிலை, பசுமையான பள்ளத்தாக்குகள், தொங்கு பாறை, பகோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.
மேகங்கள் தவழும் மேகமலை !
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேக மலை, வன உயிரின சரணாலயமாகும். பல அரிய வகை பறவைகள், விலங்குகளின் வாழிடமாகவும் திகழ்கிறது. தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த மலைப்பகுதி. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ளது இந்த மலை. இவைகளுடன் கும்பக்கரை, சுருளி அருவிகளின் சில்லுன்னு காற்று, இதமான சூழல், முத்தமிடும் சாரல், மேகங்கள் தவழ்ந்து செல்லும் ரம்மியமான ஓர் அழகிய இடம். குரங்கினி மலையேற்றமும் இங்குதான் உள்ளது. இதுமட்டுமல்ல தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றா கும். தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரமாகவும் திகழ்கி றது. இங்குள்ள திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட நேர்த்தியான பழங்கால கட்டிடக்கலை மற்றும் கலை படைப்புகளையும் பார்க்கலாம். அதேபோல் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வளமான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டுள்ள தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்கள், அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம். திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆறு கல்லணை. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னங் களில் ஒன்றான மாமல்லபுரம் சிற்பங்கள், கட்டிடக்கலை கள், கடற்கரை கோவில்கள். இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சி களில் ஒன்றும் இந்தியாவின் ‘நயாகரா’ என்று அழைக்கப் படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. வங்கக் கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடல் என மூன்று பெருங்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம், பத்மநாதபுரம் அரண்மனை, பேச்சிப் பாறை நீர்த்தேக்கம், தேங்காய்ப்பட்டினம் கடற்கரை. இவைகளுடன் நீண்ட மணற்பரப்புகளைக் கொண்ட சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, பாம்பன் தீவு பாலம், தனுஷ்கோடி கடற்கரை, பூம்புகார், தரங்கம்பாடி, பாபநாசம், திற்பரப்பு, திருமூர்த்தி, சாத்தனூர் அணைகள், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களி லுள்ள ஜவ்வாது மலைகள் என்று குழந்தைகளை மகிழ் விக்க குடும்பத்தோடு சென்று இந்த இடங்களை கண்டு ரசிப்போம்!