articles

img

“வந்தே பாரத்” ரயில்களை மோடி தொடங்கி வைக்க செலவழித்த பணத்தை ரயில்வே பாதுகாப்புக்காக செலவிட்டிருந்தால்...

புதுதில்லி, ஜுன், 5- “வந்தே பாரத்” ரயில்களை மோடி தொடங்கி வைக்க செலவழித்த பணத்தை ரயில்வே பாது காப்புக்காக செலவிட்டிருந்தால், பல உயிர்கள் காப்  பாற்றப்பட்டிருக்கும் என கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறி யுள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே யின் ஆரம்ப கட்ட விசாரணையில் சிக்னல் அமைப்பின் செயலிழப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கணினி யில் குறைபாடுகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணை யை ரயில்வே வாரிய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 

கடந்த பிப்ரவரியிலேயே எச்சரிக்கை

2023 பிப்ரவரி மாதம் 8 அன்று சிக்னல் பிரச்சனையால் “சம்பர்க் கிரந்தி  எக்ஸ்பிரஸ்” ரயில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதும்  ஆபத்து, பெரும் முயற்சியுடன் தவிர்க்கப்பட்டது. அதாவது லோகோ பைலட்டின்  (ரயில் ஓட்டுனர்) எச்சரிக்கை காரணமாக, தவறான பாதையில் (டவுன் லைன்) நுழைவதற்கு முன்பு ரயில் நிறுத்தப்பட்டு பேரழிவு தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த அடுத்தநாள் (2023 பிப்ரவரி 9 அன்று) தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமை இயக்க மேலாளர் மதிப்பாய்வு  செய்த கடிதத்தில்,”எஸ்எம்எஸ் பேனலில் உள்ள பாதையில் ரயில் கிளம்பும்  பொழுது, அனுப்பப்படும் பாதையில் மாற்றம் ஏற்படும் அமைப்பில் கடுமை யான குறைபாடுகள் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கூறப்பட்ட விவகாரம் இன்டர்லாக்கிங்கின் சாராம்சம் மற்றும் அடிப்படைக்  கொள்கைகளுக்கு முரணானது என்பதால் சிக்னல் பராமரிப்பு முறையை உடனடியாக கண்காணித்து சரி செய்ய வேண்டும். அவ்வாறு சரி செய்யா விட்டால் மீண்டும் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும்” என்று தனது  கடிதத்தில் எச்சரித்தார். ஆனால் ஒன்றிய பாஜக அரசு மதிப்பாய்வு கடிதத்தை  கண்டுகொள்ளவில்லை.

ஆள் பற்றாக்குறையால் திணறும் ரயில்வே

ரயில்வேயில் முக்கிய அமைப்பு ஸ்டேஷன் மாஸ்டர்கள் பிரிவு ஆகும். ரயிலின்  பாதுகாப்பான நகர்விற்கு ஸ்டேஷன் மாஸ்டர்களின் உத்தரவு மிக முக்கியம்.  ஸ்டேஷன் மாஸ்டர்கள் சக்கரங்கள் முதல் ரயில் கடந்து செல்லும் ஒலி வரை  அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் தவறுகள் இருந்தால் கண்டறிய வேண்டும் என அனைத்து வேலைகளிலும் ஸ்டேஷன் மாஸ்டர்கள்  பதவி முக்கியமானது என்ற நிலையில், ஆள் பற்றாக்குறை மிக அதிகமாக  இருப்பதால் ஸ்டேஷன் மாஸ்டர்கள்  ஓவர் டைம் வேலை செய்து வருகின்ற னர். கிட்டத்தட்ட 12 மணிநேரம் ஓய்வின்றி பார்ப்பதால் கவனச்சிதறல் ஏற்படு கிறது. மேலும், தினமும் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் இந்திய ரயில்வே யின் கடைநிலை ஊழியர்களான கேங்மேன்களின் பிரிவிலும் பற்றாக்குறை உள்ளது. போதுமான அளவு ஓய்வு கொடுத்தால் மட்டுமே எந்த வேலையாக இருந்தாலும் கவனமாக பார்க்கமுடியும் என்பதால், ஸ்டேஷன் மாஸ்டர், கேங்மேன்களின் 12 மணிநேர வேலை அழுத்தமும் ரயில் விபத்துகளுக்கு காரணமாக அமையலாம் என ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். 

14 லட்சம் காலிப்பணியிடங்கள் 

ஸ்டேஷன் மாஸ்டர், கேங்மேன்களின் பற்றாக்குறையே விபத்துக்கு காரணம் என்ற கருத்து பலமாக எழுந்துள்ள நிலையில், இந்தியன் ரயில்வே துறையில் போக்குவரத்து உதவியாளர், காவலர், இளநிலை மற்றும் மூத்த நேரக்காப்பாளர், இளநிலை மற்றும் மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் என 14,75,623 (குரூப் சி பணியிடங்களில்) காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.மேலும்  3.11 லட்சத்திற்கும் அதிகமான  பணியிடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட 18,881 அரசிதழ் கேடர் பதவிகளும், 3,018 அதிகாரி பணியிடங்களும் இந்திய ரயில்வே யில் காலியாக உள்ளன. இதற்கு ஆதாரமாக கடந்த ஏப்ரல் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டைம்ஸ் ஆப் இந்தியா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம்,”39 ரயில்வே மண்டலங்களில் பெரும்பாலானவற்றிலும் உற்பத்தி அலகுகளுக்கும் தேவையான மனித வளம் இல்லை” எனக் கூறியது.

சீத்தாராம் யெச்சூரி சாடல்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,”ஸ்டேஷன் மாஸ்டர்கள் கூடுதல் நேரம் பணிபுரிகிறார்கள், ஒவ்வொரு நாளும் தண்ட வாளங்களை ஆய்வு செய்யும் கேங்மேன்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை உள்ளது. முக்கியமாக “வந்தே பாரத்” ரயில்களை மோடி தொடங்கி வைக்க செலவழித்த பணத்தை ரயில்வே பாதுகாப்புக்காக செலவிட்டிருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.



 

;