articles

img

அநீதியின் அடையாளம் - ஹாத்ரஸ் தீர்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண்ணுக்கு எதிராக நடந்த கொடூர கும்பல் பாலியல் வன்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 2023 மார்ச் 18 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மன்றம் மற்றும் சோக்கோ அறக்கட்டளை இணைந்து ‘‘அநீதியின் அடையாளம்- ஹாத்ரஸ் தீர்ப்பு’’ என்ற நிகழ்வில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து இந்த அமைப்புகள் சார்பாக, மேற்கண்ட தீர்ப்பின் பாதகங்கள் குறித்தும், அதில் உடனடியாக தலையிட்டு நீதியை நிலை நிறுத்துமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு விரிவான கடிதம் அனுப்பப்பட்டது. அக்கடிதம், பாலியல் வல்லுறவு வழக்குகளில் நிலைநாட்டப்பட வேண்டிய அம்சங்களை விரிவாக விவாதிக்கிறது. 

ஹாத்ரஸ் கும்பல் பாலியல் வன்கொலை வழக்கின் தீர்ப்பு, மதுரா மற்றும் பன்வாரி தேவி பாலியல் வன்கொடுமை வழக்குத் தீர்ப்புகளை நினைவுபடுத்துகிறது. பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பொருளாதார ரீதியாக பிற் படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவர்கள். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அவர்கள் நடத்திய சட்டப் போராட்டத்தில், அவர்களுக்கு உதவ வேண்டிய குற்ற வியல் நீதி அமைப்பின் நிறுவனங்களான காவல் துறை, மருத்துவத் துறை  மற்றும் நீதித் துறையால் இரண்டாம் முறையாக  தாக்குதலுக்கு (Secondary Victimisation) உட்படுத்தப்பட்டவர்கள். பாலியல் வன்முறை பற்றிய தவறான புரிதலாலும்  (Misconceptions) இந்த ஆணாதிக்க, சாதீய சமுதாயத்தில் கட்ட விழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகளின் (Myths) தாக்கத்திலும் அனுமானங்க ளின் (assumptions) அடிப்படையிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகளால் நீதி மறுக்கப்பட்டவர்கள். 

உ.பி.யில் நடக்கும் பயங்கரங்கள்

இந்தியா முழுவதும் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களில் 25.8 சதவீதம் உத்தரப்பிரதேசத்திலேயே நடக்கிறது. இதில் 95 சதவீதம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலித் பெண்கள் பாலியல் வல்லு றவுக்கு உள்ளாக்கப்படும் குற்றங்களில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது.  ஹாத்ரஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் (வயது 19) சமூக ரீதியாக தாழ்த்தப்பட்ட, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட, எழுத்தறிவு இல்லாத  குடும்ப பின்னணியைச் சார்ந்தவர்.  செப்டம்பர் 14, 2020 அன்று, அதே கிராமத்தை சேர்ந்த 4 ஆதிக்க சாதி இளைஞர்களால் கடத்தப்பட்டு, கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு  வெட்டப்பட்டு, சம்பவம் நடந்த இரண்டு வாரங்களில் தில்லி மருத்துவமனை யில் இறந்து போகிறாள். 

திறந்த வெளியில் காயங்களுடன், நிர்வாணமாக கிடந்த பெண்ணை பெற் றோர்கள் கண்டுபிடித்து சம்பவம் நடந்த அன்றே மருத்துவமனைக்கு கூட முதலில் செல்லாமல் காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்று புகார் கொடுக்கி றார்கள். காவல் நிலையத்திற்கு வெளியில் உள்ள ஒரு கல் மேடையில் வலி யுடன் துடித்து முனகிக் கொண்டிருந்த பெண்ணை சில பத்திரிகைகள் வீடியோவும்  எடுக்கிறார்கள். அதன்பிறகு அந்த குடும்பம் பாதிக்கப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கிறது. காவல் நிலையத்தி லிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்குக் கூட காவல்துறை உதவவில்லை, உடன் செல்லவில்லை. மருத்துவமனையில், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்ணுக்கு செய்யப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் எதுவும் அப்பெண்ணுக்கு செய்யப்படவில்லை. சம்பவத்தின் போது அப்பெண் அணிந்தி ருந்த உடைகளைக் கைப்பற்றி உடனடியாக தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. அடுத்த இரு தினங்களில் இயல்பாகவே அப்பெண்ணின் உடை கள் தாயாரால் துவைக்கப்பட்டு அந்த பெண்ணின் உடலும் சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது. சம்பவம் நடந்து 8 தினங்களுக்குப் பிறகு தான் தடயங்கள் அழிந்து போன அவளது உடலும், 11 தினங்களுக்குப் பின் உடையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில ஏடிஜிபி அடுத்த சில தினங்களில், புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, பாலியல்  வன்புணர்வு நடக்கவில்லை என்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கிறார். செப்டம்பர் 29 அன்று, தாக்குதலால் ஏற்பட்ட காயத்தின் விளைவாக அப்பெண் மருத்துவமனையிலேயே இறந்து போகிறார். அவரது உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படாமல் குடும்பத்தினர் இல்லாமலேயே காவல்துறையினரால், நடு இரவில் எரிக்கப்படுகிறது.

உயர்நீதிமன்ற - உச்ச நீதிமன்ற தலையீடுகள்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை காவல்துறை நடு இரவில் எரித்ததை மனித உரிமை மீறல் என்று கண்டனம் தெரிவித்தது. விசாரணை நிலுவையில் இருக்கும் போதே பாலியல் வன்புணர்வு நடக்கவில்லை என்று பேட்டி அளித்த ஏடிஜிபியை நேரில் அழைத்து கண்டித்தது. உச்சநீதிமன்றத்திலும், பல அமைப்புகளாலும், சமூக செயற் பாட்டாளர்களாலும் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன. உத்தரப்பிரதேச அரசு வழக்குரைஞர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்திவிட்டதாக தெரி வித்தார். ஆதிக்க சாதியினரை எதிர்த்து புகார் கொடுத்துவிட்டு அதே கிராமத்தில் உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது. அந்த மனுக்களில் கேட்கப்பட்ட மற்ற கோரிக்கை களை அலகாபாத் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த மனுதாரர்களை அறிவுறுத்தியது. 

ஹாத்ரஸ் மாவட்ட எஸ்சி - எஸ்டி  சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு

இரண்டு வருடங்கள் கழித்து சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை என்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் நால்வ ரில் ஒருவருக்கு மட்டும், அப்பெண்ணுக்கு கொடுங்காயங்கள் ஏற்படுத்தி இறப்புக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றத்திற்காக தண்டனை வழங்கியுள்ளது. ஒரு நீதிபதிக்கு, தான் விசாரிக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆதாரங்கள் அடிப்படையில் தண்டிக்கவோ விடுவிக்கவோ அதிகாரம் உள்ளது. அவரது முடிவு யாருக்கு பாதகமாக இருக்கிறதோ அவர்கள் மேல் முறையீடு செய்வதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் நீதிபதி தனது முடிவை சட்டத் திற்கு உட்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, அரசியல் சட்டம் காட்டும் சமூகப் பார்வையோடு எடுக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு மேற்சொன்ன அத்தனை நெறிகளையும் காற்றில் பறக்க  விட்டு, பாலியல் வன்புணர்வு குறித்து ஆண்டாண்டு காலமாக நிலவும் ஆணாதிக்க, சாதீய சமூகத்தில் ஊறிப்போன பொய்யான புனைவுகள் மற்றும் மாறாதப் பழமையான  பார்வை அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது

சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பின் அடிப்படையாக  கீழ்க்கண்ட காரணங்களை கூறுகிறது:

l மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகள் பாலியல் வன்முறை நடந்தி ருப்பதாக நிரூபிக்கவில்லை; '

lபாதிக்கப்பட்ட பெண்ணோ அவரது குடும்பத்தினரோ பாலியல் வன்முறை நடந்ததாக உடனடியாக சொல்லவில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு தான் இந்த சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசப்பட்டு, பலரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய நிலையில், பாலியல் வன்புணர்வு என்ற குற்றச்சாட்டையும், கூடுதலாக மூன்று பேரையும் சேர்க்கிறார்கள். எனவே பிறரால் சொல்லிக் கொடுக்கப்பட்டு பொய்யான குற்றச்சாட்டை அளித்தி ருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் கருத்து சரியா?

முதலாவது காரணத்தை பொறுத்தவரையில்; நீதிபதி தனது தீர்ப்பில் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் பாலியல் வன்புணர்வு நடந்ததாக நிரூபிக்க வில்லை என்று கூறுகிறார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  சம்பவம் நடந்து 8 தினங்களுக்குப் பிறகு தான் அலிகார் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப் பட்டன. பரிசோதனை அறிக்கையில் ‘‘Complete Penetration of vagina and use of force’‘ (பலவந்தமான பாலியல் வன்புணர்வு) என்று குறிப்பிடப்பட்டுள் ளதாக அறிகிறோம். இதை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் சிபிஐயால் பல்வேறு மருத்துவ நிறுவனங்களை உள்ளடக்கிய மெடிக்கல் போர்டு அமைக்கப்படுகிறது. இந்த மெடிக்கல் போர்டு பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாக பரிசோதனை செய்யவில்லை. அந்த சமயத்தில் அந்த பெண் உயிருடனும் இல்லை. ஏற்கனவே செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையிலும் சிலரை நேரில் சந்தித்து பேசியதன் அடிப்படையிலும் அந்த போர்டு, அப்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்க வாய்ப்பு உள்ள தாக அறிக்கையில் குறிப்பிடுகிறது. ஆனாலும் கூட, இந்த அறிக்கைகளில் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறாள் என்று நிரூ பிக்கப்படவில்லை என நீதிபதி கருதுகிறார். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது குறித்தும் அதன் அடிப்படையில் மருத்துவ அறிக்கைகள் எழுதுவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. (Guidelines and protocols: medical care for survivors victims of sexual violence). பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த வழிகாட்டுதல்க ளின்படி தான் மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்ய வேண்டும். மருத்துவ அறிக்கையும் எழுத வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசோதனை செய்யும் மருத்துவர், பாலியல் வன்முறை நடந்ததாகவோ நடக்கவில்லை என்றோ திட்டவட்டமாக கருத்து கூற முடியாது. ஆனால் இந்த வழக்கின் நீதிபதி, அதற்கு நேர் மாறாக, அவ்வாறு குறிப்பிட்டிருந்தால்தான் பாலியல் வன்பு ணர்வு நடந்ததாக கூற முடியும் என்ற முடிவுக்கு வந்து தீர்ப்பு எழுதுகிறார்.

சட்டத்திற்கு அப்பாற்பட்ட புனைவு

அடுத்தபடியாக, பாதிக்கப்பட்ட பெண் உண்மையிலேயே பாலியல் வன்பு ணர்வுக்கு ஆளாகி இருந்தால் அவள் பிறப்பு உறுப்பில் காயங்கள் மற்றும் ஆணின் விந்துக்கள் இருந்திருக்கும் என்று நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிடு கிறார். இது அறிவியலுக்கும் சட்டத்துக்கும் அப்பாற்பட்ட பொய்யாக புனை யப்பட்ட கருத்தாக்கங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு சிந்தனை. விந்துக்கள் இருந்தால் கூட, 78 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்தி ருந்தால் மட்டுமே அதை கண்டறிய முடியும். இந்த வழக்கில் 8 நாட்களுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனையும் 11 நாட்களுக்குப் பிறகு தான் தடயவியல் ஆய்வும் நடந்தது. 2013ல் அமலுக்கு வந்த குற்றவியல் சட்டத் திருத்தங்கள் ‘பாலியல் வன்பு ணர்வு’ என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. பிறப்புறுப்பில் காயங்களோ அல்லது ஆணின் விந்துக்களோ இல்லாமல் பாலியல் வன்புணர்வு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதே அந்த விளக்கம். இதை நீதிபதி எப்படி அறியாமல் போனார்? உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தங்களின் பல தீர்ப்புகளில் ‘‘Rape is a crime not a medical condition’’ என்று விளம்புகின்றன. அதாவது, ‘‘பாலியல் வல்லுறவு என்பது ஒரு குற்றம்; அது ஒரு மருத்துவ நிலை அல்ல’’ என்பதே. பாலியல் வன்புணர்வு நடந்ததா, நடக்கவில்லையா என்று நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மருத்துவர்கள் அல்ல. இந்த அடிப்படை யில் வழக்கை அணுகாமல், மருத்துவ அறிக்கைகள் கூறியதையும் கூட சரி யாக புரிந்து கொள்ளாமல் பாலியல் வன்புணர்வு நடக்கவில்லை என்ற முடிவுக்கு நீதிபதி வந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இரண்டாவது காரணத்தை பொறுத்தவரையில்

சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்ட பெண்ணும் குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோதும் அதன் பின்னர் கொடுத்த வாக்குமூலங்க ளிலும் ‘ched Kahani’ (பேச்சு வழக்கில் ‘மானபங்கம்’ என்று பொருள்) என்றும் ‘zabardasti’ (பேச்சு வழக்கில் ‘பாலியல் வல்லுறவு’ என்று பொருள்) என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மற்றொரு இடத்தில் தன்னை பலவந்தப்படுத்திய போது அதற்கு இணங்காததால் தன் கழுத்தை நெரித்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டு இருக்கிறார். சாட்சியமும் இருக்கிறது.  தனக்கு நடந்த பாலியல் வன்முறையை விவரிக்கும் போது,  ‘பாலியல் வன்முறை’ என்ற குறிப்பிட்ட வார்த்தையைத்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் உபயோகப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு தவறு. ஒவ்வொரு பெண்ணும்  அவர் வளர்ந்து, வாழ்ந்த சமூக சூழ்நிலைக்கேற்ற வகையில் பல வார்த்தை களை குறிப்பிட வாய்ப்புண்டு. உதாரணமாக, தமிழ்நாட்டில் ‘என்னை கெடுத்து  விட்டான்’ ‘கெட்ட விஷயம் செய்தான்’, ‘தப்பு செய்தான்’ என்று பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பிடுவார்கள்.  அதே போல் தான் இந்த வழக்கில் பாதிக்கப் பட்ட பெண் தனக்கு தெரிந்த சில வார்த்தைகளை பயன்படுத்தி தனக்கு நடந்த கொடுமையை கூறி இருக்கிறார். இதைக் கருத்தில் கொள்ளாமல் ‘பாலியல் வல்லுறவு (Rape)’ என்று குறிப்பிட்டால் தான் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்று நீதிபதி நினைக்கிறாரா?

அப்படியே அப்பெண் கூறவில்லை என்று எடுத்துக்கொண்டால் கூட, உடல் முழுக்க காயங்களுடன் பொதுவெளியில் நிர்வாணமாக அந்தப் பெண் கிடந்தார்  என்பதை வைத்து, ஒரு சாதாரண சட்ட அறிவு இல்லாத மனிதர் கூட அந்த பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருப்பாள் என்று யோசிப்பார். ஆனால் காவல்துறை இந்த பொது அறிவு கூட இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண் அதைப்பற்றி சொல்லவில்லை என்று அப்பெண் மீதே போடும் பழியை நீதிமன்ற மும் ஒப்புக் கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.   உயிர் போகும் அளவுக்கு கொடூரமான உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளான பெண்ணின் உடல் நிலையும், மனநிலை யும் எப்படி இருக்கும் என்பதை சிறிதும் புரிந்து கொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண் திட்டவட்டமாக, தெளிவாக தன்னை நான்கு பேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள் என்று சம்பவம் நடந்த உடனே சொல்ல வேண்டும் என்ற நீதிபதியின் எதிர்பார்ப்பு சட்டத்திற்கும், நடைமுறைக்கும் ஒவ்வாதது.   உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் (Delhi Domestic working women’s forum VS Union of India) பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணு க்கு காவல் நிலையத்தில் கவுன்சிலிங் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் சட்ட உதவி ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.  இந்த வழக்கில் அவ்வாறு அந்த பெண்ணையும்  குடும்பத்தினரையும் ஆற்றுப்படுத்தி, நம்பிக்கை அளித்து அவர்களை விசாரிக்கவோ அல்லது ஒரு பெண் வழக்குரைஞர் மூல மாக சட்ட உதவி அளிக்கவோ காவல்துறை தவறியுள்ளது.  இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அறியாததால் நடந்த கோளாறாக நாங்கள் நினைக்கவில்லை. ஆதிக்க சாதி இளைஞர்களால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு இளம் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என்று உலகுக்கு அறிவிக்க, உத்தரப்பிரதேச அரசின் காவல்துறை உயர் அதிகாரி, புலன் விசாரணை  நிலுவையில் இருக்கும்போதே எவ்வளவு அவசரப்பட்டு பத்திரிகையாளர்க ளுக்கு பேட்டி அளித்தாரோ அதே அரசியல் அழுத்தமும் சாதிய மற்றும் பாலினப் பாகுபாட்டு மனப்போக்கும் உள்ளூர் காவல்துறையினருக்கு அதிகமாகவே இருந்திருக்கும் என்றே நாங்கள் கருதுகிறோம். 

பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் அனைவரும் புகார் கொடுக்க முன் வருவதில்லை என்பதை உலக அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளே தெரி விக்கின்றன. பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவா ளியாக பார்க்கும் போக்கு - அதாவது சம்பவத்திற்கு அவர்கள் தான் காரணம் என்று குறை கூறும் போக்கும்; மற்றும் அந்தப் பெண்களை சமூக அவமா னத்திற்கு உட்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில், இந்த வழக்கில், அதிக அளவு எண்ணிக்கையில் ஆதிக்க சாதியினர் வாழும் கிராமத்தில், அவர்களை எதிர்த்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அந்தப் பெண்ணும்  குடும்பத்தினரும், பொய்ப்புகார் கொடுக்க முன் வந்தார்கள் என்ற நீதி பதியின் புரிதலை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.  இறுதியாக செப்டம்பர் 22 ஆம் தேதி துணை தாசில்தார் முன்னிலையில் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக நீதிமன்றம் எடுத்துக்  கொண்டது.  அதாவது இறப்பதற்கு 5 நாட்கள் முன்பாக பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம்.  அதற்கு முன்னரே, தான் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டதாக அப்பெண் கூறி விடுகிறார்.  ஆனால் மரண வாக்குமூலத்தில் இந்த தகவல் இல்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. மரண வாக்குமூலம் பதிவு செய்வதை உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பின் மூலமாக எளிமைப்படுத்தி யுள்ளது.  அந்த அடிப்படையில் கேள்வி கேட்டு பெண்ணின் பதிலை பதிவு செய்தால் கூட அது மரண வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளப்படும்.  கழுத்து நெரிக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் தனக்கு நடந்ததை தானாக சொல்லுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?  சம்பவத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பாதிக்கப் பட்ட பெண்ணிடம் கேள்விகள் கேட்டு பதில் வாங்கி இருக்க வேண்டியது அதை பதிவு செய்த அதிகாரியின் கடமையாகத்தானே பார்க்க முடியும். 

பன்வாரி தேவி வழக்கு

இந்த விஷயங்களை விவரித்து முடிக்கையில் பன்வாரி தேவி (1993) வழக்கின் தீர்ப்பு நினைவுக்கு வருகிறது.  ராஜஸ்தான் மாநில அரசால் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அவர், அந்த வேலையை செய்ததால், ஆதிக்க சாதியினரால் பட்டப் பகலில், வெட்ட வெளி யில் தன் கணவர் முன்னிலையில் கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டார். செசன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. கீழ்க்கண்ட காரணங்களுக்காக: ‘‘உயர் சாதியைச் சார்ந்த ஆண்கள் பட்டிய லின பிரிவைச் சார்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியி ருக்க மாட்டார்கள்; குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் 60-70 வயதுக்கு உட்பட்ட வர்கள். அவர்கள் இந்த காரியத்தை செய்ய மாட்டார்கள்; குற்றம் சாட்டப்பட்ட வர்களில் இருவர் உறவினர்கள். ஒரு உறவினர் முன்பு இன்னொரு உறவினர்

இது போன்ற காரியத்தை செய்ய மாட்டார்; உண்மையிலேயே பாலியல் வன்புணர்வு நிகழ்ந்திருந்தால், கணவர் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார். எனவே பாலியல் வன்புணர்வு நடக்கவில்லை’’. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கண்டனக் குரல்கள் ஒலித்தன. இந்த சம்ப வத்தின் அடிப்படையில்தான் ‘விஷாகா’ என்ற அமைப்பு பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வழிகாட்டு தல்களை வழங்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தது.  உச்சநீதிமன்றமும் அதை வழங்கியது.  அதுதான் பின்னர் விஷாகா தீர்ப்பு என்றும் விஷாகா கமிட்டி என்றும் பேசப்பட்டது.  அதைத் தொடர்ந்து 2013-ல் இதற்கான தனிச்சட்டமும் இயற்றப்பட்டது.   ஆனால் பன்வாரி தேவி பாலியல் வன்முறை வழக்கில், தனது அனு மானங்கள் மற்றும் ஆணாதிக்க கருத்துக்களின் தாக்கங்கள் அடிப்படையிலும் நீதிபதி கொடுத்த தீர்ப்பின் மீது தொடுக்கப்பட்ட மேல் முறையீடு இன்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் நிலு வையில் இருக்கிறது.  அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்தும் போய் விட்டார்கள். இதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  அது உண்மை யாக இருக்கும் பட்சத்தில் அதில் நடவடிக்கை எடுக்க கோருகிறோம். 

நீதிபதிகளின் பழமையான மனநிலை

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் (Aparna Bhat & Ors Vs State of Mathya Pradesh &Ors) பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு நீதி கிடைப்ப தில் உள்ள மிகப்பெரிய தடை, ‘‘பாலியல் வன்முறை குறித்த பொய் புனைவுக ளையும் (Rape Myths) தவறான கருத்தாக்கங்களையும் (Misconceptions), அதே பழைய மனநிலையின் அடிப்படையையும் நீதிபதிகள் தங்களை அறியா மலேயே பின்பற்றுவதுதான் (judicial stereotypes)’’ என்று குறிப்பிடுகிறது.  இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நியாயமான விசாரணை உரிமையை (Right  to Fair Trial) மறுக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது. ஹாத்ரஸ் பாலியல் வன்கொலை வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இது மறுக்கப்பட்டி ருக்கிறது என்பது நீதமன்ற தீர்ப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.  பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மற்றும் குற்றவி யல் அமைப்பின் அங்கங்களான காவலர்கள், மருத்துவர்கள், அரசு வழக்குரைஞர்களுக்கு பாலின நிகர் நிலைப் பார்வை; நாட்டில் நிலவும் சாதீயப் பாகுபாடுகள் பற்றிய அரசியல் சட்ட கண்ணோட்டம்; பாலியல் குற்றங்கள் தொடர்பாக சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்; அதன் பின்னணி மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் குறித்து தொடர்ச்சியான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நீதி பதிகளின் பணிகளை பரிசீலனை (performance appraisal) செய்யும்போது, அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் எழுதப்படுகிறதா அல்லது ஆணாதிக்க சாதிய சமூக கருத்தாக்கங்களை பிரதிபலிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மதுரா, பன்வாரி தேவி, நிர்பயா நிகழ்வுகளைத் தொடர்ந்து, சமூகத்தில் ஏற்பட்ட எழுச்சி, மாதர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளால் மக்கள் இயக்கமாக உருமாறியதால்தான் சட்ட மாற்றங்கள் சாத்தியமாகின என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். நீதிமன்ற தீர்ப்புகளில் பயன்படுத்தப்படும் சட்டத்திற்கு மாறான, பொருத்த மற்ற, பாலின ரீதியான, தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளைப்பற்றி ஒரு தொகுப்பை உருவாக்க தாங்கள் தற்போது எடுத்திருக்கும் புதிய முயற்சி நம்பிக்கையை அளிக்கிறது. நீதித்துறையில் பாலின சமத்துவ கருத்துக்கள் பரவ உங்கள் முயற்சியும் தொடர வேண்டும்.

வழக்குரைஞர். உ.நிர்மலாராணி (தலைவர் - மகளிர் சட்ட உதவி மன்றம் (இணைப்பு : ஜனநாயக மாதர் சங்கம்); வழக்குரைஞர்.எஸ்.செல்வகோமதி (இணை இயக்குநர் - சோக்கோ அறக்கட்டளை); உ.வாசுகி, (அகில இந்திய துணை தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்) ; கே.சுவாமிநாதன், (மாநிலச் செயலாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு); ஜெ.விஜயா, (அகில இந்திய ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்); பேரா.ஆர்.முரளி, (மக்கள்  சிவில் உரிமைக் கழகம்); கேப்ரியல், (மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு); வழக்குரைஞர்.அ.மகபூப் பாட்சா, (மேலாண்மை அறங்காவலர்) நீதிபதி பகவதி பவுண்டேசன்); ஷஃபினா, (நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன்); வழக்குரைஞர்.ஹென்றி டிபேன், (மக்கள் கண்காணிப்பகம்); பேரா.ஆர்.விஜயகுமார், (இந்திய சமூக விஞ்ஞான கழகம்); மனோகிரி தாஸ், (பெண்கள் முன்னேற்ற ஆதார மையம்); வழக்குரைஞர்.டி.வெண்மணி, (அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்); ஆட்லின், (பெண்ணுரிமை இயக்கம்); காமேஸ்வரி, (பெண்கள் இணைப்புக் குழு); வழக்குரைஞர்.சி.சே.ராஜன், (சமம் குடிமக்கள் இயக்கம்)

 




 

 

 

 


 

;