articles

img

வெளிச்சத்திற்கு வந்துவிட்ட விஷம் தோய்ந்த அடையாள அரசியல் - நிலோத்பல் பாசு

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை, குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது, பொது மக்களின் மத்தியில் ஒருவிதமான கோபத்தை உருவாக்கி இருக்கிறது.  குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்ற சம யத்தில், மோடி துதிபாடும் கார்ப்பரேட் ஊடகங்க ளில் பல என்னவெல்லாம் கூறின! குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பழங்குடியினர் நிறுத்தப்பட்டிருக்கி றாராம், அதுவும் அவர் ஒரு பெண்ணாம். இது எதிர்க் கட்சிகளை முறியடித்திடும் விதிவிலக்கான நட வடிக்கை என்று அவை கூறின. இதனால் முர்மு விற்கு ஆதரவு முன்னெப்போதையும்விட அதிகமான அளவில் இருந்திடும் என்றும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு பலத்த அடி விழும் என்றும்  பிரச்சா ரம் செய்யப்பட்டது. எனினும், தேர்தல் முடிவுகள் இவர்கள் சித்தரித்ததுபோல் இல்லை. உண்மையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் முன்பு நடந்த தேர்தல்களைவிட அதிக அளவிலேயே வாக்குகளைப் பெற்றார்.  இருப்பினும் இதனாலெல்லாம் ‘மோடி முகத்துதி ஊடகங்கள்’ கவலைப்படவில்லை. இப்போது புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஒருவார்த்தைகூட இவை உதிர்த்திடவில்லை.  மோடி, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு கோட்டையாக இதனைக் கருதுவதைவிட, தனக்கு ஒரு கோப்பை கிடைத்ததைப்போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறித்து இவை எதுவும் கூறவில்லை.

இப்போது குடியரசுத் தலைவர் அழைக்கப் படாதது குறித்து விவாதம் உரத்தகுரலில் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இதேபோல் புதிய  நாடாளு மன்றக் கட்டடத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்ட சமயத்திலும், அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ராம் நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. எனவே, ஆர்எஸ்எஸ்-இன் அடையாள அரசியல் எந்த அளவிற்கு விஷம் தோய்ந்த ஒன்று என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்துமே, அரச மைப்புச்சட்ட அமைப்புகளை படிப்படியாகச் சீர் குலைத்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தின் தலைமையிலான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வரை யறுக்கப்பட்ட அம்சங்களில் ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசமைப்புச்சட்டமானது, நாட்டின் குடியரசுத் தலைவர்தான் இந்திய அரசின் மூன்று அங்கங்களுக்கும் தலைவர் என்று திட்ட வட்டமாகச் சித்தரித்திருக்கிறது.   மோடி அரசாங் கத்தின் பாசிசப் போக்கு, இத்தகைய குடியரசுத் தலைவரின் அதிகாரங்களையும் விட்டுவைக்க வில்லை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான அணுகு முறை

சமீபத்தில், மோடியின் வலதுகரமாக விளங்கும், அமித் ஷா, வரும் 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமரின் பிற்படுத்தப்பட்ட சமூக அந்தஸ்தை தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக்கொள் வோம் என்று கூறியிருக்கிறார். இதே பேர்வழிகள்தான் மண்டல் கமிஷன் பரிந்துரை களையும், அதன் அமலாக்கத்தையும் எதிர்த்தார் கள் என்பதை நாம் நினைவு கூர்ந்திட வேண்டியி ருக்கிறது. அப்போது அவர்கள், சாதி அடிப்படை யிலான பாகுபாட்டையும், சமத்துவமின்மையையும் ஏற்க முடியாது என்றார்கள். இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் உண்மையான புரிந்து ணர்வு என்பதும் இதுதான். இவர்களின் அதிகாரப்பூர்வ வார இதழான ஆர்கனைசர் தலையங்கம் ஒன்று, அரசமைப்புச்சட்டத்தைக் கடுமையாகத் தாக்கி இருப்ப தையும், அதற்குப் பதிலாக மனு (அ)தர்மத்தை உயர்த்திப்பிடித்திருப்பதையும் நினைவுகூர்ந்திட வேண்டும்.

  இதனால்தான் இப்போதைய மோடி அரசாங்கம், இந்திய சமூகத்தில் சமூக நீதி வழங்குவதை அர்த்த முடையதாக மாற்றுவதற்கு வகை செய்திடும், சாதிஅடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெ டுப்பை ஏற்பதற்கு மறுத்துக்கொண்டிருக்கிறது. சமூக நீதியிலான சமூகம் அமைவதையோ, சமூக சமத்து வம் ஏற்படுவதையோ ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகள் விரும்பவில்லை. நாட்டில் மக்கள் மத்தி யில் மிகவும் மோசமாகவுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வும், சமூக ஏற்றத்தாழ்வும் கூட, ஆட்சியாளர்க ளின் அடிப்படை தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து அவர்களை அகற்றிடவில்லை. அனைவருக்கும் அனைத்தும் சமமாகக் கிடைத்திட வேண்டும் என்கிற நம் அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளத்துடன் ஆர்எஸ்எஸ் - இந்துத்துவா பரிகாரங்கள் ஒத்துப் போகத் தயாராயில்லை.  தேர்தல் சமயத்தில், பல்வேறு அடையாளங்க ளுடன் உள்ள மக்கள் மத்தியில் அவர்களுக்கு  சமூக நீதியை உத்தரவாதப்படுத்துவதற்காக ஒற்றுமையைக் கட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. ஆனாலும் அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே அடையாள அரசியல் களுக்கு இடையிலும் வெறித்தன்மையை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். தங்களுக்குத் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய விதத்தில் சாதகமான அடையாள அரசியலை சந்தைப்படுத்த வேண்டும் என்றே அவர்க ளுடைய அறிவுஜீவிகளும், பிரதான கார்ப்பரேட் ஊட கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தேசிய கலாச்சாரத்தின்  அடிப்படை பிராமணியமே 

இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்க திரௌபதி முர்முவை அனுமதிக்க மறுத்தனர். அதே போன்று சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக் கெடுப்பு எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கர், இந்துத் துவா என்பது இந்து மதத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றும், அது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஓர் அரசியல் திட்டமே என்றும் கூறியதை நினைவுகூர்ந்திட மறக்கக் கூடாது. எனினும், அவருடைய சித்தாந்தத்தைக் கூர்ந்து ஆய்வு செய்வோமானால், அவர் இந்துத்துவா என்பதை ஒரு கலாச்சார தேசியவாதம் என்று சித்தரித்திருப்ப தையும், பிராமணியத்தையும், வர்ணாஸ்ரம (அ)தர்மத் தையும் கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைத்தி டும் தந்திரம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். தேசியக் கலாச்சாரத்தின் அடித்தளம் பிராமணியமே என்று சாவர்க்கர் வலுவாக வாதிடுகிறார். கோல்வால்க ரும் கிட்டத்தட்ட இதே பாணியைத்தான் பின்பற்றியி ருக்கிறார். எனவேதான் ஆர்எஸ்எஸ் இயக்கமானது, சுதந்திரப் போராட்டத்திலிருந்து தந்திரமாக ஒதுங்கியி ருந்த அதே சமயத்தில் இந்துக்களை ஒன்றுபடுத்தி, ராணுவமயமாக்கும் வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தது. இப்போது இந்துத்துவா அரசியலின் நேரடி வெளிப் பாடு பெரும்பான்மைவாதம், பழைய பழக்க வழக்கங்களை மீண்டும் கொண்டுவருதல், பழம் பஞ்சாங்க முறைகளை உயர்த்திப்பிடித்தல் முதலான வற்றிற்கு முட்டுக்கொடுத்துத் தூக்கிப்பிடித்து, நம்முடைய வளமான பன்முகத்தன்மையுடனான வர லாற்றையும், அறிவியல் மனப்பான்மையையும் தாக்கு வதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதனை உலகம் கூர்மையாகக் கவனித்து வருகிறது.

வர்ணாஸ்ரமம் தான் ஜனநாயகத்தின் இல்லமாம்

இப்போது இவர்கள் மணிப்பூரில் தேசிய இன சிறு பான்மையினருக்கு எதிராகவும், மதச் சிறுபான்மை யினருக்கு எதிராகவும் வன்முறையில் மிகவும் மூர்க்கத் தனமான முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மணிப் பூரில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் இந்தியா வைப் பற்றியும், ஜனநாயகத்தைப்பற்றியும் மிகவும் மோசமான சித்திரத்தை ஏற்படுத்திக்கொண்டி ருக்கின்றன. இத்தகைய சங்கடத்தை ஏற்படுத்தும் நிலையைச் சரிசெய்திடுவதற்காகத்தான், மோடி சென்ற ஆண்டு செங்கோட்டையில் நிகழ்த்திய சுதந்திர தின உரையின்போது இந்தியா கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான தங்குதடையுமின்றி ‘ஜன நாயகத்தின் தாயாக’ இருந்து வந்திருக்கிறது என்று பேசினார். எனினும், பல்கலைக் கழக மானியக்குழு தலைவர், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் உள்ள இந்துத்துவா கூட்டாளிகளால் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்திடும் மாணவர்களிடம் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து இந்த போலித்தனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியா ஐயாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த ஜனநாயகத்தின் இல்லமாக இருந்திருக்கிறது என்று இவர்கள் கூறுவதன் உட் பொருள், வர்ணாஸ்ரமம்தான் இயல்பாகவே ஜனநாயகப்பூர்வமாக, பாகுபாடற்றதாக, தண்டனை கள் மற்றும் வன்முறைகள் அற்றதாக இருந்து  வந்திருக்கிறது என்று நிலைநிறுத்த முயல்வதே யாகும். எனினும் உண்மைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வாறு இவர்கள் தங்கள் மனு (அ)தர்மத்தை உயர்த்திக் கூறிவந்தபோதிலும், நடைமுறையில் திரௌபதி முர்முவையோ அல்லது ராம் நாத் கோவிந்தையோ அரசமைப்புச்சட்டம் அவர்களுக்கு அளித்துள்ள பதவியின் அடிப்படை யில்கூட அவர்களை புதிய நாடாளுமன்ற கட்டடத்திற் கான திறப்புவிழாவிற்கு அழைத்திட அனுமதித்திட வில்லை. இத்தகைய இவர்களின் அணுகுமுறை நம் அரச மைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை முழு மையாக அரித்துவீழ்த்துபவை என்பது வெளிப் படையானதாகும். முர்மு, கோவிந்த் அல்லது மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவர்களின் அடையாளங்களை சந்தைப்படுத்துவ தெல்லாம், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத்தானே யொழிய, மற்றபடி அவர்களுக்கு உண்மையில் அதிகாரத்தை அளிப்பதற்கோ அல்லது சமூக அந்தஸ்தை அளிப்பதற்கோ அல்ல. எனவே, இவர்களின் ‘புதிய இந்தியா’ என்பது, இந்துத்துவா அடையாளத்தை, வர்ணாஸ்ரம (அ)தர் மத்தை உயர்த்திப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தான். இது, இவர்களின் மதவெறி நடவடிக்கைக ளுக்கும் மேல் மோசமானதாகும்.

எடுபடாத சரடுகள்

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 2019 மக்கள வைத் தேர்தலுக்குப் பின்னால், நம் மக்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட கேள்வி முன்னுக்கு வந்திருக்கிறது. அதாவது, நாட்டில் மக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமாக மாறியுள்ள சூழ்நிலையிலும், குறிப்பாக அதீத பணவீக்கம் மற்றும் வேலையின்மை கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையிலும், எப்படி மோடி-அமித்ஷா- ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்பதாகும். பிரதான ஊடகங்கள் மக்க ளுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கும் அடித்தட்டு மக்களுக் கும் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டபோதும், பாஜக தேர்த லில் வெற்றி பெறுவதற்கு எவ்விதமாக சரடுகளை அவிழ்த்துவிட வேண்டுமோ அப்படி அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும், இப்போது கர்நாடகத் தேர்தல் முடிவு க்குப்பின்னர், இவர்கள் கட்டவிழ்த்துவிடும் சமூக அடையாளங்கள் மற்றும் இந்துத்துவா சிந்தனைகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையும், மக்கள் அவற்றை உதறித்தள்ளத் தயாராகிவிட்டனர் என்பதை யும் ஆய்வுகள் காட்டுகின்றன. இல்லையெனில், எப்படி இவர்கள் முஸ்லீம்களுக்கு இருந்துவந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்த பின்னரும் அந்த முடிவானது அவர்களுக்கு ஆதரவாக வாக்குகளை அள்ளித்தர வில்லை என்பதைப் பார்க்க முடியும்? பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் இவர்கள் கையாண்ட உத்தி கள் கர்நாடகாவில் வெற்றி பெறவில்லை. மாறாக சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பாஜக-விற்கு எதிராக மிகப்பெரிய அளவில் அணிதிரண்டிருக் கிறார்கள் என்பது தெளிவாகி இருக்கிறது. இப்போது மோடி அரசாங்கத்தால் தலைமை தாங்கப்படும் ஆர்எஸ்எஸ்-பாஜக-விற்கும் கார்ப்ப ரேட்டுகளுக்கும் இடையேயுள்ள கள்ளப்பிணைப்பை முறியடித்திடுவதற்கான வழிவகைகளை உத்தி களை மாற்றுவது தொடர்பாக யோசிக்க வேண்டியி ருக்கிறது. மக்களின் வாழ்வாதாரங்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பது மட்டுமல்ல, அவர்கள் ஜீவித்தி ருப்பதற்கான போராட்டத்தையும் 2024 தேர்தலுக்கு முன் தொடங்கிட வேண்டும். அந்த அடிப்படையில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக பின்பற்றிடும் விஷம் தோய்ந்த அடையாள அரசியலை முறியடித்திட வேண்டும்.   

தமிழில்: ச.வீரமணி
 

;