articles

img

வைக்கம் போராட்ட வெளிச்சத்தில் சனாதன சக்திகளை முறியடிப்போம்! - கே.பாலகிருஷ்ணன்

தீண்டாமை, நெருங்காமை, பாராமை என்பன போன்ற  சாதிக் கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தைக் கேரள அரசாங்கம் பெருமிதத்துடன் தொடங்கவுள்ளது.  இவ்விழாவில் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி  விஜயன் அவர்களும், தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களும் கலந்துகொள்வது இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு திருப்புமுனை ஆகும்.  

பிறப்பால் மேல்சாதி, கீழ்சாதி என பாகுபடுத்தும் மனுஸ்மிருதியின் கொடுமையான தீண்டாமை வடிவத்தை எதிர்த்து நூறாண்டுகளுக்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டக் களத்தை நினைவுபடுத்துவது மட்டு மின்றி 603 நாட்களுக்கு கேரள அரசு இவ்விழாவினை நடத்துவதன் மூலம் இந்திய நாடு முழுவதும் சாதிய, சனாதனக் கொடுமைகளுக்கு எதிரான போர் முரசு கொட்டும் விழாவாகவும் இது அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டிலும் கொண்டாட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வைக்கம்  போராட்டத்தின் சிறப்புகளை பேரவை விதி 110ன் கீழ் பட்டியலிட்ட தோடு, ஓராண்டு முழுவதும் இவ்விழா கொண்டாடப்படும் என்றும்,  மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும் என்றும் 64 பக்க நூல் ஒன்று வெளியிடப்படும் என்றும், சமூக நீதிக்கு பாடுபடுவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தலைமையை சிறப்பிக்கும் வகையில் முதல்வரின் அறிவிப்புகள் அமைந்துள்ளன. சமூக நீதிக்கான பயணத்தில் கேரள அரசும், தமிழ்நாடு அரசும்  இணைந்து நடைபோடும் தருணம் இது. ஒருபுறம், உத்தரப்பிரதேச பாஜக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் ராம நவமி விழா கொண்டாட வேண்டு மென உத்தரவிட்டு அதற்கான சிறப்பு நிதியையும் ஒதுக்கியுள்ள சூழலில் இரண்டு மாநில அரசுகளும் இணைந்து சனாதனக் கொடுமைக்கு முடிவு கட்டும் விழாவாக நடத்துவது ‘சனாதன அடிப்படையில்தான் இந்தியா பயணிக்க வேண்டும்’ என சங்பரிவாரங்கள் மேற்கொண்டு வரும் பிற்போக்குத் தத்துவங்களுக்கு முடிவுகட்ட  முழக்கமிடுவதாக அமைந்துள்ளது.

சாதிய அடிப்படையிலான சீர்திருத்த இயக்கங்களும், கிளர்ச்சிகளும் 19ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிப் போக்காக அமைந்தது வரலாறு. ஏகாதி பத்தியத்திற்கு எதிராக விவசாயப் பெருங்குடி மக்கள் மத்தியில் தோன்றிய எழுச்சியின் முதல் வடிவம் தான் சாதி அடிப்படையிலான அமைப்புகளும், இயக்கங்களும் என தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட்டின் பல பகுதிகளில் சாதிய, சமூக  ஒடுக்குமுறைகளை எதிர்த்த எண்ணற்ற போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. சமூகத்தில் திணிக்கப்பட்ட பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தும், ஒடுக்கப்பட்ட - இடைநிலை சாதி மக்களின் எண்ணற்ற போராட்டங்கள் நடந்துள்ளதை வரலாறு நெடுகிலும் பார்க்கமுடிகிறது.

கொடுமைகளின் உச்சம்

சாதியக் கொடுமைகளின் உச்சமாக அன்றைய கேரள மண் திகழ்ந்தது. “ஒரு நம்பூதிரி இருக்கும் இடத்திலிருந்து நாடார்கள் மற்றும் ஈழ வர்கள் 36 அடி தொலைவிலும், புலையர்கள் 96 அடி தூரத்திலும், நாயரிட மிருந்து நாடார்கள் மற்றும் ஈழவர்கள் 12 அடி தூரத்திலும், புலையர்கள்  60 அடி தூரத்திலும் நிற்க வேண்டும்” எனும் அளவுக்குச் சாதிவெறி மேலோங்கி இருந்தது. அரசர் - நம்பூதிரிப் பார்ப்பனர் - நாயர் - வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் தீண்டப்படாதோர் என்றே கருதப்பட்டனர். அதனால் உயர்சாதி நம்பூதிரி - நாயர் - வேளாளர் தவிர பிற சாதியினர் குடை பிடிக்கக் கூடாது; செருப்பு அணியக் கூடாது; கிணறு, குளம், சாலை, சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆண்கள் யாரும் மீசை/ தாடி வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் அதற்குத்  தனி வரி கட்ட வேண்டும் என்ற கொடிய நிலை நிலவியது.  பிராமணர் அல்லாத இதர சாதி பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க ஆடை எதுவும் அணியக் கூடாது எனவும், அப்படி அணிந்தால் அதற்கு மார்பக வரிகட்ட வேண்டுமென்ற கொடுமைகள் கோலோச்சிய காலமாகும். இக்கொடுமைகளை எதிர்த்து அய்யா வைகுண்ட சாமி அவர்கள் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தோள் சீலைப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தின் 200வது ஆண்டு விழாவில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி நாகர்கோவிலில் கேரள மாநில முதலமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்து கொண்டனர்.

வைக்கம் போராட்டத்திற்கான காரணம்

ஈழவ சமூகத்தைச் சேர்ந்த டி.கே.மாதவன் என்ற பி.ஏ.பி.எல் படித்த  வழக்கறிஞர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் செல்ல  வேண்டி இருந்தது. திருவனந்தபுரத்தில் ராஜாவுடைய அரண்மனை யில் இருந்த ஓர் இடம்தான் நீதிமன்றம். ராஜாவின் பிறந்தநாள் விழாவிற்காக அரண்மனையின் எல்லாப் பக்கத்தையும் அடைத்துப் பந்தல் போட்டதில், நீதிமன்றம் இருந்த இடமும் மூடப்பட்டது. ராஜாவின் பிறந்தநாள் பூஜைகள் தொடங்கிய நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன், நீதிமன்றப் பகுதிக்குள் நுழையக்கூடாது எனத் தடுக்கப்பட்டார். “மாதவன் சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் சத்தியாகிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு  செய்தார்கள். வக்கீல் மாதவன், டி. கே. மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. பி. கேசவமேனன் இவர்களோடு இன்னும் சேர்த்து சிலரும் முடிவு செய்தார்கள்” என வைக்கம் போராட்டத்தின் தொடக்கத்தைப் பற்றிப் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை வைக்கத்தில் தொடங்குவது என வழக்கறிஞர் மாதவன், டி. கே. மாதவன், கே. பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்டோர் முடிவெடுத்தார்கள். வைக்கத்தில் ஊர் நடுவில் கோவிலும், அதன் நான்கு வாசல்களுக்கு எதிரில் நான்கு வீதிகளும் இருக்கும். அந்த வீதிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்கிற கொடுமையான கட்டுப்பாடு இருந்தது. மக்களில் ஒரு பிரிவினரைத் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று பாகுபடுத்தி  ஒதுக்கிவைப்பதைக் காட்டிலும் மிக மோசமாக, ‘அண்டக்கூடாத வர்கள்’ (unapproachables) என்று வகைப்படுத்தி கொடூரமான ஒடுக்குமுறையை கையாண்டனர். 

வைக்கத்தில் கோவிலுக்குப் பக்கமாக அமைந்த இந்தத் தெருக்களில்தான் நீதிமன்றம், காவல்நிலையம் உள்ளிட்ட எல்லா  அரசாங்க அலுவலகங்களும் இருந்தன. ‘அண்டக்கூடாத கீழ்சாதியைச் சேர்ந்த’ அலுவலர்கள் இந்த அலுவலகங்களுக்கு பணிநியமனம் செய்யப்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.  அந்தளவுக்கு சாதிக் கொடுமைகள் வேரூன்றி இருந்த வைக்கத்தில் தீண்டாமைக்கெதிரான சத்தியாகிரகப் போரட்டத்தைத் தொடங்குவது என அந்தத் தலைவர்கள் முடிவெடுத்தார்கள். அந்த வகையில் இது கோவில் நுழைவுப் போராட்டம் மட்டுமல்ல, முதலில் தெரு நுழையும் போராட்டம் ஆகும். அந்த உரிமைக்காகக் கூட இவ்வளவு பெரிய கிளர்ச்சியை நடத்த வேண்டி இருந்தது என்றால் அன்றைய நிலைமையை புரிந்து கொள்ள முடியும்.

தந்தை பெரியாரின் பங்கு

‘மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட  வேண்டும். வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் விடுதலைப் போராட்ட உணர்வில் பிளவை ஏற்படுத்தும்’ எனத் தொடக்கத்தில் காந்தியார் தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் தலைமை கருதியது. காந்தியடிகள் இந்தப் போராட்டத்தை இந்திய அளவில் விரிவுபடுத்துவதை விரும்பவில்லை. உள்ளூர் அளவிலான பிரச்சனை என்றே கருதினார். மேலும், இது இந்து மதத்தினருக்கிடையேயான பிரச்சனை; எனவே, வெளி மதத்தவர் தலையிட வேண்டாம் என்பதும் அவரது நிலைப்பாடாக இருந்தது. இந்நிலையில், மேலிடத்தில் இருந்து  ஆதரவு வராத நிலையில், வைக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பித்த சில தினங்களிலேயே வலுவிழந்தது. தலைவர்கள் ஒவ்வொரு வராக ஒவ்வொரு நாளும் கைதுசெய்யப்பட்ட நிலையில், இனி போராட்டம் நடத்த ஆளே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது. ஜார்ஜ்  ஜோசப், கே. பி. கேசவமேனன் ஆகியோர் தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதினார்கள். “நீங்கள் வந்துதான் இதற்கு (இந்தப் போராட்டத்திற்கு) உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என வைக்கம் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தித் தருமாறு தந்தைப் பெரியாருக்கு வேண்டுகோள் வைத்தனர். ‘எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் போராட்டம், நான் ஏன் போக வேண்டும்’ எனக் கருதாமல் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக பெரியார் வைக்கத்துக்கு உடனே கிளம்பிச்சென்றார். கோவை சி. அய்யாசாமி மற்றும் இரு காங்கிரஸ்காரர்கள் அவருடன் சென்றார்கள்.

யாரை எதிர்த்து போராடப் பெரியார் சென்றாரோ, அந்த திருவனந்தபுரம் மகாராஜாவே பெரியாரை வரவேற்று உபசரிக்கஏற்பாடு செய்திருந்தார். மிகப்பெரும் செல்வந்தராக ஈரோட்டில் வாழ்ந்து வந்த பெரியாரின் பங்களாவில் திருவனந்தபுரம் மகாராஜா தங்கிச் செல்வது வழக்க மாக இருந்ததால், மரியாதை நிமித்தமான ஏற்பாடு களை மகாராஜா செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நீங்கள் வைத்திருக்கிற தவறான கட்டுப்பா டுகளை எதிர்த்துப் போராடவே நான் வந்திருக்கிறேன் எனப் பெரியார் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டு போராட்டத்தை நடத்தினார். சுமார் பத்து நாட்கள் தொடர் போராட்டத்தை மிக வீரியமாக நடத்திய நிலையில் பெரியார் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப் பட்டார். அவர் விடுவிக்கப்படுவதற்குள் போராட்டத் திற்கு மிகப் பெரும் ஆதரவு குவிந்தது. எல்லா பகுதிகளில் இருந்து மக்கள் குவியத் தொடங்கினார் கள். நிதி வந்து குவிந்தது. பெரிய பந்தல் போட்டு வீரர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் தினமும் 200-300 பேர் சாப்பிடும் அளவுக்கு வைக்கம் போராட்டத்தை மாபெரும் போராட்டமாக பெரியார் மாற்றி இருந்தார்.

பெரியார் வந்துதான் இந்தப் போராட்டத்துக்குப் புத்துயிர் ஊட்டினார் என்பதை  சி.டபிள்யூ.சி காட்டன் என்கிற இந்தியக் குடிமைப் பணி அலுவலர் சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அறிய முடிகிறது. விடுதலை ஆனதும் மீண்டும் போராட்டத்தைத் திட்டமிட்டார் பெரியார். இரண்டாவது முறை ஆறுமாத சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. பெரியார் சிறை யில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவருடைய மனைவி நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மா ளும் வைக்கத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்து போராட்டத்தை நடத்தினார்கள். தமிழகம் அல்லாத ஒரு பகுதியில் ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்தப் போராட்டத்தைப் பெரியார் நடத்தினார்.

வைக்கம் போராட்டத்தைத் தொடங்கிய கேரளத்  தலைவரான கே. பி. கேசவ மேனன் பிற்காலத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட வர். மாத்ருபூமி பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி யவர். அவர் தனது சுயசரிதையில் வைக்கம் போராட் டத்தில் பெரியாரின் பங்கைப் பற்றி இப்படிப் பதிவு செய்கிறார்: “கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக்கா ரர்களோடும் சிறையில் வேலை செய்து கொண்டிருக்கி றார். தண்டனை பெற்ற ஒரு சாதாரண கைதி செய்த தைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேலையை செய்தார். ஓர் அரசியல் கைதியாக பெரியாரை நடத்த வேண்டு மென்றும், அதற்குரிய குறைந்தபட்ச சலுகைகளை தர வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். ஆனால், அன்றைய அரசு அதற்கு இணங்காமல் அவரை கொடுமைப்படுத்தியது.

ஆனால், பெரியார் விடுதலையான பின்பு நாகர் கோவிலில் பேசும்போது, “நான் சிறையில் பட்ட கஷ்டத்திற்காக யாரும் வருந்த வேண்டாம். விடுதலை தான் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது” என்று வேதனையைக் கூட வேடிக்கையாக கூறினார். ஒரு “சாதி இந்து” என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர், கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது”.  இவ்வாறு கேசவமேனன் பதிவு செய்திருக்கிறார்.

போராட்டம் நடைபெற்ற காலத்தில் மகாராஜா மரணமடைந்ததை ஒட்டி மகாராணி  சேது லட்சுமி பாய் சிறைக்கைதிகளை விடுவித்தார்; பெரியாரும் விடு தலையானார். ஒரு கட்டத்தில் கோவில் குளம் இருந்த வீதியைத் தவிர மற்ற வீதிகளில் அனைத்துச் சாதியி னரும் செல்லலாம் என்கிற உத்தரவைப் பிறப்பித்து விடலாம் என்கிற முடிவுக்கு மகாராணி வந்தார். ‘அடுத்த தாக ஆலயப் பிரவேசம் எனக் கொடி பிடிக்கக்கூடாது’ என்கிற முன்நிபந்தனையோடு ராணி நடத்திய பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக காந்தியார் வைக்கத்து க்கு வருகை தந்தார்.

அம்பேத்கருக்கு  வழிகாட்டிய போராட்டம்

இப்படித்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலைச் சுற்றியுள்ள பகுதி களில் நடமாடுவதற்கான உரிமையை வென்றெடுத் தார்கள். பிற்காலத்தில் அண்ணல் அம்பேத்கர் தலித் மக்களை அழைத்துக்கொண்டு மகத் குளத்தில் நீரெடுக்கும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்திய தற்குத் தனக்கு நம்பிக்கை அளித்த போராட்டமாக வைக்கம் போராட்டம் இருந்தது எனக் குறிப்பிட் டார். தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்பிரதேசங்க ளில் நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டங்களுக் கெல்லாம் வழிகாட்டியாக அமைந்த வெற்றிப் போராட்ட மாக வைக்கம் போராட்டமே திகழ்ந்துள்ளது. அதன் பிறகு ஏ.கே.கோபாலன் தலைமையில் குருவாயூர் ஆலய நுழைவுப் போராட்டம் நடந்தது. வீதிகளில் நடமாடும் உரிமைக்கு வித்திட்ட வைக்கம் போராட்டம் அடுத்து ஆலய நுழைவுப் போராட்டத்திற்கும் வழி திறந்துவிட்டது. இதனால் கேரளத்தில் அனைத்து கோவில்களுக்குள்ளும் அனைத்து சாதியினரும் செல்வதற்கான உரிமையை மன்னராட்சிக் காலத்தி லேயே தர வேண்டி வந்தது. இன்றைக்கு அனைத்து சாதியினரும் அச்சகராகலாம் என்கிற நிலையை எட்ட தமிழகமும், கேரளாவும் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் போராடி வருகின்றன.

தொடரும் போராட்டங்கள்

வைக்கம் போராட்டத்தைப் போன்ற சமூக சீர் திருத்தப் போராட்டங்களால் ஒரு புறம் மாற்றங்கள் நடந்திருந்தாலும், இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுப்பாதையைப் பயன்படுத்தக்கூடாது, பொது சுடுகாட்டைப் பயன்படுத்தக்கூடாது, கோவிலில் நுழையக்கூடாது என்கிற கொடுமைகள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தாழ்த்தப் பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதற்கு நாம் இன்னமும் வெகுதொலைவு பயணிக்க வேண்டியுள்ளது என்பதற்கு தமிழ்நாட்டில் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த வன்கொடுமையே சாட்சியாக உள்ளது. 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை சீர்குலைக்க சனாதன சக்திகள் முயல் கின்றன. இதை முறியடிக்க வேண்டும். தமிழ் வழி பாட்டு உரிமையை நிலைநிறுத்த வேண்டும். குட முழுக்கு உள்ளிட்ட கோவில் நிகழ்வுகளை தமிழில் நடத்திட வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் தொடரும் அவலம் உள்ளது. சாதி ஆண வப் படுகொலை தடுத்திட தனிச் சட்டம் இயற்ற வேண்டும். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு என்பது அனைத்து நிலைகளிலும் சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்ட உத்வேகம் அளிக்கும் ஆண்டாக அமைந்திடல் வேண்டும்.

சனாதன சங் பரிவாரம்

ஆனால், இந்தியச் சமூகத்தை மென்மேலும் பின்னோக்கி இழுத்துச் செல்கிற வேலையை பாஜக சங்பரிவாரங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. ‘பிறப்பின் அடிப்படையிலேயே வேற்றுமைகளைக் கற்பிக்கிற சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியச் சமூகம் இயங்க வேண்டும்’ என்பதை பாஜக வெகு தீவிரமாக முன்வைத்துப் பிரச்சாரம் செய்து வரு கிறது. ஒன்றிய பாஜக அரசு நியமித்த ஆளுனர்கள் சனா தனத்தின் தீவிரப் பிரச்சாரகர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி உதார ணமாக உள்ளார். சங்பரிவாரங்கள் முன்வைக்கிற இந்துத்துவம் என்பது சனாதன பிற்போக்கு கொள்கையே என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். உத்த ரப்பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இளம் பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்ற வாளிகள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்கள். இதற்கு உத்தரப் பிரதேச பாஜக யோகி ஆதித்யநாத் அரசின் சனாதன ஆதரவு மனநிலையே காரணம் ஆகும்.

இத்தகைய சூழலில், சனாதனக் கொடுமைகளை எதிர்த்து நூறாண்டுகளுக்கு முன்னர் பெரியாரால் வலுவாக நடத்தப்பட்ட வைக்கம் போராட்டம் நமக்கெல்லாம் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. வைக்கம் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த ஆண்டு முழுவதும் சனாதன இந்துத்து வத்தை வீழ்த்துவதற்கும், மனுஸ்மிருதி அடிப்படை யிலான மனித நாகரீகமற்ற அனைத்து அநீதிகளை யும் எதிர்த்து பிரச்சாரங்களையும், போராட்டங்க ளையும் முன்னெடுப்பதற்கும் உறுதி ஏற்போம்.





 

;