articles

img

காப் - 28 : துபாயில் திரைச்சீலை உயரும்போது... - சிதம்பரம் இரவிச்சந்திரன்

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் காலநிலை யால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கியக்காரணமாக இருக்கும் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த துபாய் நகரில் நவம்பர் 30இல் காலநிலை உச்சிமாநாடு (COP) 28 தொடங்கியது.  இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இங்கிலாந்து மன்னர் சார்லஸ், பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், சிரிய ஜனாதிபதி உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள காப் -28 மாநாட்டின் துவக்க நிகழ்வு வியாழனன்று துபாயில் நடைபெற்றது. அபதாபி தேசிய எண்ணெய் நிறுவன தலைவர் சுல்தான் அல் ஜாபர் இந்த மாநாட்டின் தலைவராக உள்ளார்.

உணவும் ஆரோக்கியமும்

புவி வெப்ப உயர்வு 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் உலக உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பசுமைக்குடில் வாயுக்களான மீத்தேன் கால்நடைகள் மூலமும், நைட்ரஸ் ஆக்சைடு செயற்கை உரங்கள் மூலமும் அதிகம் உமிழப்படுகின்றன. வயல்களாக மாற்றப்படுவதால் காடுகள், ஈர நிலங்கள், புல்வெளிப்பகுதிகள் கார்பன் உறிஞ்சி சேமிக்கும் திறனை இழக்கின்றன. என்றாலும் முந்தைய மாநாடுகளில் உணவிற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த மாநாட்டின்  தொடக்கத்தில் நாடுகளின் தலைவர்கள் இது பற்றிய ஒரு சிறப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட வலியுறுத்தப்படுவர். அடுத்த சில நாட்களில் ஐநாவின் உணவுக்கழகம் 1.5 டிகிரி எல்லைக்குள் பெருகும் மக்கள் தொகையை சமாளித்து உணவு உற்பத்தியை உயர்த்த உதவும் வழிகாட்டுதலை முதல்முறையாக வெளியிடுகிறது. இந்த மாநாட்டில் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது இதற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைத் தாக்குதல்கள் இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இதனால் ஏழைகள் குறிப்பாக தொழிலாளர்களே அதிகம்  பாதிக்கப்படுகின்றனர். வெப்ப அலைவீச்சுகள், வெள்ளப்பெருக்குகள், வறட்சி, நீர்த் தட்டுப்பாடு போன்றவற்றால் உலக மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட மலேரியா, டெங்கு, ஜிகா வைரஸ் போன்ற நோய்களை ஓர் உயிரினத்திடம் இருந்து மற்றொரு உயிரினத்திற்கு கடத்தும் விருந்தோம்பிகள் மூலம் பரவும் நோய்கள் இன்று உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல பில்லியன் உலக மக்கள் பாதிக்கப்படு வர் என்று சமீபத்தில் லான்செட் என்ற பிரபல மருத்துவ இதழில் வெளியான ஓர் ஆய்வு கூறுகிறது.

மீத்தேன்

கார்பன் டை ஆக்சைடை விட 80% அதிக ஆபத்தான மீத்தேன் வளி மண்டலத்தில் மற்ற பசுமைக்குடில் வாயுக்களை விட வேகமாகப் பகுப்படைகிறது. வரும் ஒரு சில பத்தாண்டுகளில் இது புவி வெப்ப உயர்வை 0.3 டிகிரி குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த வெப்பநிலையை அடைய உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதன் உமிழ்வும் நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாடே இதற்குக் காரணம். இதை சமாளிக்க உதவும் வழிமுறைகளைக் கூறும்படி மீத்தேன் பற்றி பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மாநாட்டில் காப்-28ல்  கலந்துகொள்ளும் எண்ணெய் நிறுவனங்கள், உலக நாடுகளிடம் கோரும்.

முரண்பாடு

புதைபடிவ எரிபொருட்களுக்கு மூல வளமாக இருக்கும் பெட்ரோலை அதிகம் உற்பத்தி செய்யும் துபாய் இம்மாநாட்டை நடத்துகிறது. அரபு எமிரேட்டின் அட்நாக் (Adnoc) என்ற மிகப்பெரிய தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் சுல்தான் அல் ஜேபர் (Sultan Al Jaber) ) காப்-28ன் தலை வராகவும் செயல்படுகிறார். எண்ணெய் துரப்பணப் பணிகளின்போது வெளியேற்றப்படும் கார்பன் உமிழ்வை வெகுவாகக் குறைக்க உதவும் புதிய திட்டங்களைத் தருமாறு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அரசுகள் கேட்டுக்கொள்ளப்படும்.

இழப்பும் சேத நிவாரணமும்

காலநிலை மாற்றத்திற்கு பணக்கார நாடுகளே காரணம். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஏழை நாடுகளே அனுபவிக்கின்றன. இதை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு இழப்பு மற்றும் சேத நிவாரணம் வழங்குவதற்கான நிதியுதவி ஏற்கனவே ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 2024-ல் பணக்கார நாடுகள் மீட்பு மற்றும் மறுவாழ்விற்கான உதவியை வழங்குவது பற்றி இந்த மாநாட்டில் பேசப்படும். இந்த விஷயம் குறித்து பல மாதம் நீண்டு நின்ற விவாதங்களுக்கு முடிவில், சில மாதங்களுக்கு முன்பு இதற்கான ஒரு அடிப்படை வரைவுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதியுதவித்தொகையின் மதிப்பு பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எண்ணெய் வளம் அதிகமுடைய அரசுகள் இதை செயல்படுத்த முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் வாயு வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான லாபம், கப்பல் போக்குவரத்து, அடிக்கடி சொகுசு விமானப்பயணம் செய்யும் பெரும் பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரிகள் மூலம் இதற்கான புதிய நிதி ஆதாரங்களைத் தேடமுடியும்.

இதுவரை நடந்தது என்ன?

2015 பாரிஸ் கூட்டத்திற்குப் பிறகு இந்த மாநாட்டில் முதல்முறையாக உலக நாடுகள் வாக்குறுதி அளித்த காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் பேசப்படும். குறிப்பாக உமிழ்வைக் குறைக்க ஒப்புக்கொண்டதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அல்லது பின்னடைவுகள் பற்றி இதில் விவாதிக்கப்படும். 1.5 டிகிரிக்குள் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்றாலும் இதுவரை நடந்ததைப் பற்றி பேசுவதன் மூலம் வருங்கால செயல்பாடுகளை செம்மையாகத் திட்டமிடமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க கடந்த 30 ஆண்டுகளாக முயற்சிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை உருப்படியாக எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை. 2021 கிளாஸ்கோ மாநாட்டில்தான் முதல்முறையாக இதுபற்றிய ஒரு தீர்மானம் இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டது. 2022-இல் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் முயன்றன என்றாலும் இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 2023ஆம் ஆண்டிலேனும் இது பற்றி ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

மூடி மறைப்பும்... தவிப்பும்...

புதைபடிவ எரிபொருட்கள் எரிந்த பின் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுத்து பூமியில் சேகரித்துவைக்கும் (CCS) தொழில்நுட்பம் பற்றி பல எண்ணெய் நிறுவனங்களும் பணக்கார நாடுகளும் பேசுகின்றன. என்றாலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படமுடியாத அளவு பெரும் செலவு பிடிக்கக்கூடியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பக்கம் சூழலைக் கெடுக்கும் தங்கள் செயல்களை மூடிமறைக்க கார்பன் சேமிப்பு போன்ற சாத்தியமற்ற திட்டங்களை முன்வைக்கும் பணக்கார நாடுகள். இன்னொருபக்கம் வெப்ப  உயர்வால் அன்றாடவாழ்வே கேள்விக்குறியாகித் தவிக்கும் ஏழை நாடுகள். இதற்கிடையில் சூழலுக்காக போராடும் போராளி கள். காப்28 மாநாட்டில் ஏழைகளின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். இயக்கவாதிகளின் போராட்டங்கள் வெற்றிபெறட்டும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.