articles

img

எதற்காக வேண்டும் அறநிலையத் துறை? - நெ.இல.சீதரன்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, சில தினங் களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத் திலே உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது தமிழ் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெ ழுத்து அறநிலையத்துறையை ஒழிப்பதே என்று பேசி னார். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவ தில்லை என்பது வேறு கதை. ஆனால் ஓர் உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லி ஆக வேண்டும்.  தமிழ்நாட்டில் அறநிலை யத்துறைக்கு இரண்டு நூற்றாண்டு வரலாறு உண்டு. அதாவது 1817 முதல் இன்று வரை, ஏன் எதிர்காலத்தி லும் இத்துறை கண்டிப்பாக தொடரும். அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு அதில் மாற்றம் வேண்டுமா னால் ஏற்படுமே தவிர, யாராலும் ஒழித்துவிடமுடியாது.

பொதுக் கோவில்கள்

தமிழகத்தில் இருக்கும் சமய நிறுவனங்களில் 99% பொதுத் தன்மை வாய்ந்ததாகும். பொது கோவில் கள் அனைத்தும் இந்து மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டவையாகும். இவ்வாலயங்களில் அனைத்து இந்து மக்களும் சாதி இன வேறுபாடின்றி உரிமையுடன் கோயிலில் நுழைந்து வழிபாடு செய்ய லாம். இத்தகைய உரிமைகளும் சலுகைகளும் ஏதோ உடனடியாக கிடைக்கவில்லை. நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு இவை பொதுமக்கள் மத்தியில் வந்தடைந்தன. தமிழ்நாட்டிலுள்ள சமய நிறுவனங்கள் அனைத்தும் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த அறநிலையச் சட்டத் தின்படி  நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய சுதந்திரத் துக்கு முன்னும் பின்னும் ஆலயங்கள் அரசின் மேற் பார்வையில் இருந்துள்ளன.1863 முதல் 1923 ஆம்  ஆண்டு வரையிலான சுமார் 60 ஆண்டுகாலம் மட்டும் அரசுகளின் மேற்பார்வையற்று தனி நபர்களாய் தன் விருப்பப்படி பெருந் தனக்காரர்கள் கோவிலை நிர் வகித்தனர்.  இக்காலத்தில் ஏன் தனி நபரிடம் கோவில் கள் சென்றன?

1857 விடுதலைப் போராட்டத்தின் விளைவாக விக்டோரியா அறிக்கை பிரகடனமாகியது. அதில் ‘மதங்கள் தொடர்பானதில் அரசு தலையிடுவதில்லை’ என்ற ஷரத்து சேர்க்கப்பட்டது. இந்த ஷரத்து காரண மாக கோவில்களில் எவர் எவர் நிர்வாகத்தில் இருந்தார்க ளோ அவர் அவர்களிடம் அப்படி அப்படியே கோவிலை நிர்வகிக்கவிடப்பட்டன. திரும்பவும் ஏன் அரசின் மேற் பார்வைக்கு கோவில்கள் உட்படுத்தப்பட்டன? அரசின் மேற்பார்வையில் இல்லாத போது இந்த இடைப்பட்ட காலத்தில் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையும் சொத்துகள் பலவும் சூறை யாடப்பட்டன. நிலங்களும் கட்டடங்களும் தனியாருக்கு கைமாறின. எண்ணற்ற புகார்கள் இதுகுறித்து  அரசுக்கு வந்ததால் மீண்டும் கோவில்களை நிர்வகிக்க அற நிலையச்சட்டம் கொண்டு வரப்பட்டது.  அந்த சட்டம் காலத் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றமடைந்து  1959 ஆம் ஆண்டு அறநிலையச் சட்டமாக அமலில் உள்ளது. இச்சட்டமும் இதுவரை 20 க்கும் மேலான திருத்தங்களைக் கொண்டுள்ளது.

கல்வெட்டு ஆதாரங்கள்

பண்டைய காலத்தில் அரசர்கள் இந்நாட்டை ஆண்ட காலத்தில் இக் கோவில்கள் நிர்வகிக்கப்பட்டதற்கு பல்வேறு கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. ராஜ ராஜ சோழன் காலத்திய கல்வெட்டுகளில் ஐவர் குழு கோவிலை நிர்வகித்ததாகவும்  அந்த குழுவே தளிச்சேரி பெண்களுக்காக தங்கள்நிர்வாகக் கோவிலிலிருந்து தேர்வு செய்து தஞ்சைக்கு அனுப்பியதாகவும் தெரி விக்கிறது. நிலவரி கட்டாத போது நிலத்தினை வேறு எவருக்கா வது விற்பனை செய்து , அதன் தொகையிலிருந்து நில வரியை செலுத்துமாறு ஊர் சபைக்கு உத்தரவிட்டது. ஊர்சபையிலிருந்து  தேர்வு செய்யப்பட்ட ஐவர்தான் கோவிலை நிர்வகித்தனர். ஊர்சபையில் உறுப் பினர்களாக நிலவரி செலுத்துபவரே இருந்தனர். நில வரி செலுத்தாதவர்களின் கோயில் நிலத்தை விற்பனை செய்து அத்தொகையை  அரசுக்கான நிலவரியாக ஈடுகட்டப்பட்டது.  பின்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு கோவி லுக்கான நிலங்களில் வரி இல்லாத நிலங்கள்  அளவீடு செய்யப்பட்டன.  சில வெள்ளான் வகை நிலங்களைக் கூட தேவதாயமாக்கியது சோழ அரசு. ஆக கல்வெட்டு கள் பலவற்றுள்ளும்  கோவில் நிர்வாகம்  அரசின் மேற்பார்வையிலேயே இருந்தது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

பின்னர் நாயக்கர்கள் அரசாண்ட காலத்தில் தெலுங்கு கீர்த்தனைகளையும், தெலுங்கு பிராம ணர்களின் ஆதிக்கத்தையும் கோவிலுக்குள் நுழைத்த னர். ஆனாலும் அந்த ஆட்சியிலும் சமய நிறுவனங்கள், கோவில்கள் அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. அடுத்து வந்த மராட்டியர்கள் ஆட்சியிலும்    கோவில் கள் அரசின் மேற்பார்வையிலிருந்தன. பாகவத மேளா எனும் மராட்டிய நாடக அமைப்பு கோவில்களில் புகுந்தன; சில மராட்டிய தெய்வங்களும் கோவிலில் புகுந்தன. நாயக்கர்கள் காலத்தில் தெலுங்குதேச கட வுள்கள் வந்தது போல் மராட்டிய ஆட்சியர்கள் காலத்தில்  அவர்களது கடவுள்களும் புகுந்தன. சோழர்கள் காலத்து ஏகௌரியும் நிதம்ப சூதனி யும் ஓரங்கட்டப்பட்டன. அந்தந்த காலத்து மன்னர்கள்  அரசாண்ட போதும்  எப்போதுமே கோவில்களை மன்னர்களின் ஆட்சியே  நிர்வகித்து வந்துள்ளன. சோழ, பாண்டிய மன்னர்கள் வழங்கிய இனாம் நிலங்கள், பின்னர் வந்த முகலாய அரசர்கள்,  நாயக்க மன்னர்களும் பின்பற்றி திருக்கோயில்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அனுபவித்து வர அனுமதித்தனர். ஆங்கிலேயர் காலத்திலும் இந்த நடைமுறையில் தலையீடு ஏதுமில்லை. ஆனால் எந்த நோக்கத்திற்காக இனாம் நிலங்கள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் நிறைவேறாமல் அவை விற்கப்பட்டதை ஆங்கிலேயர் ஆட்சி உணர்ந்தது.

ஆக 1817ஆம் ஆண்டு சட்டத்தின்படி சமய நிறுவனங் கள் மீதான மேற்பார்வை 1839 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வந்தது. இருப்பினும் இந்து கோயில்கள் மற்றும் முஸ்லீம் மசூதிகளின்  மீதான மேற்பார் வையை ஒரு கிறிஸ்தவ அரசாங்கம் தொடர்வதை கிறித்துவ மிஷினரிகள்  ஆட்சேபணை செய்தனர். ஏற்கனவே இந்துக் கோயில்களின் நிர்வாகத்தைக் கவ னித்து வந்தவர்களும் ஆங்கிலேய அரசின் தலை யீட்டை ஆட்சேபித்தனர். இதனால் அரசின் மேற் பார்வையிடும் பணியில் தளர்வு ஏற்பட்டது. எனவே நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைத்தது. அரசு மேற்பார்வை செய்வதைக் கைவிட்டதாலும் பொறுப்புள்ளவர்களால் திருக்கோயில்கள் நிர்வ கிக்கப்படாததாலும் அறநிலையங்கள்  சரியாக பரா மரிக்கப்படவில்லை. திருக்கோயில் நிதி ஆதாரங்கள், அசையும்- அசையாச் சொத்துக்கள் தாறுமாறாக கையாளப்பட்டன.  இந்தநிலை தமிழ்நாட்டில் மீண்டும் வர வேண்டும் என்றுதான் பாஜக அண்ணாமலை தவமாய் தவமிருந்து உண்ணா நோன்பு இருக்கிறார். 

முக்கியமான சட்டங்கள்

இவ்வாறாக, சீரழிந்த ஆலய நிர்வாகத்தை நேர்  செய்திட வேண்டிய கட்டாயமும் அதன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயச் சூழலும் அரசுக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் ஆலய நிர்வாகத்தை மேம் படுத்த  1863 இல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் பல சட்ட திருத்தங்கள் ஏற்பட்டன. அதில் சில சட்டங்கள் அறநிலையத்துறையில் புரட்சிகரச் சட்டங்களாக மாறின. 1929 ஆம் ஆண்டின் ஐந்தாவது சட்டம் தேவதாசி பணிக்காக கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண் களை கட்டாயமாக சேர்த்துக்கொள்ளும் முறை இச் சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்டது. சமய நிறுவனங்க ளின் வரலாற்றில் இச் சட்டம் புரட்சிகரமான சட்ட மாகக் கருதப்பட்டது.

அதேபோன்று 1939 ஆம் ஆண்டின் இருபத்தி இரண்டாவது சட்டம் சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து இந்து மக்களும் நுழைந்து வழிபாடு நடத்திடும் வகையில் ஆலய நுழைவு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு மூல காரணம் 1939ஆம் ஆண்டு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடை பெற்ற நுழைவுப்  போராட்டமே. பின்னர் 1951 மற்றும் 1959இல் கொண்டுவரப்பட்ட  சட்டமே இதை மேலும் வலுப்படுத்தியது. அன்று அரசர்கள் இருந்த இடத்தில் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. இத்த கைய அரசு, அறநிலையத்துறை மூலம் கோவில்க ளை நிர்வகிக்கிறது.

இந்து மதத்தை சார்ந்த எந்த சாதியினரும் கோவி லில் நிர்வகிக்கும் குழுவில் இடம் பெற முடியும். அதற்கான சட்ட விதிகள் உள்ளன.  பெண்களும் கோவில் நிர்வாகத்தில் பங்கு பெற முடியும் என்ற விதிகளும் உள்ளன.ஐந்து பேர் கொண்ட அறங் காவலர் குழுவில் தலித் ஒருவரும் மகளிர் ஒருவரும் நிச்சயமாக இடம்பெற்றிருக்க வேண்டும்  இத்தனையை யும் கண்காணிக்க அறநிலையத்துறை உள்ளது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக ஆக்கிய பெருமை அறநிலையத்துறைக்கும் இன்றைய அரசுக்கும் உண்டு. தொடர்ந்து மன்னர் காலத்தில் இருந்து இன்றைய ஆட்சி வரை - இடையில் சில காலம் தவிர, சமய நிறுவனங்கள் அனைத்தும் அரசின் பொறுப்பில் தான்  இருந்தன. அவ்வப்போது அதில் ஏற்பட்ட பிழை களை நீக்கி அறநிலையத்துறை முன்னேறி வருகிறது. தற்போதும் அதில் சிற்சில திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது. நீதிக் கட்சியில் இருந்து இன்றுவரை அறநிலையத்துறை பல சாதனைகளை செய்திருக்கி றது. எனவே  கோவில்களைப் பாதுகாக்கவும் வழி பாட்டில் எல்லோரும் சமம் என்பதை வலுப்படுத்தவும் அறநிலையத்துறை அவசியம். அதனை நெறிப்படுத்தி வலுப்படுத்துவதே நல்லவழி. இதுவே பகல் கனவு காணும் பாஜக அண்ணா மலைக்கு நமது பதிலாகும். 

கட்டுரையாளர்: அறநிலையத் துறை முன்னாள் உதவி ஆணையர்  


 

;