articles

img

மக்கள் ஒற்றுமை போற்றிட... இன்சூரன்ஸ் தனியார்மயம் தடுத்து நிறுத்திட... - ஜி.ஆனந்த்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துவங்கப்பட்டது 1951 ஆம் வருடம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சங்கம் துவங்க வேண்டும் என்கிற சிந்தனையும் அதற்கான விதையும் சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே உருவானது தான் சிறப்பு. சுதந்திர இந்தியாவில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துவங்கப்பட்ட பின், இந்தியாவின் இறையாண்மைக்கு, சுதந்திர செயல்பாட்டிற்கு, மிகவும் அடித்தளமானது பொருளாதார சுதந்திரம் என்கிற சிந்தனையோடு இன்சூரன்ஸ் தேசவுடைமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட நெடிய பல போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பின்னர் தான் எல்.ஐ.சி. 1956 ஆம் வருடம் தேசியமயமாக்கப்பட்டது.

அதன் பின்னர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மிகப் பெரிய போராட்டங்கள் மற்றும்  இயக்கங்கள் மூலமாகத்தான் பொது இன்சூரன்ஸ் துறை 1971 இல் தேசியமயமாக்கப்பட்டது. ஒரு புறம் இன்சூரன்ஸ் ஊழியர்களின் வலிமையான போராட்டம், மறுபுறம் அன்றைய அரசியல் சூழலில், தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொண்டு, இன்சூரன்ஸ் ஊழியர்களால் தரப்பட்ட அரசியல் ரீதியான அழுத்தம் - இரண்டும் இணைந்து தான் பொது இன்சூரன்ஸ் தேசியமயம் என்பது சாத்தியமாயிற்று. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தோன்றியதிலிருந்தே, இன்சூரன்ஸ் தேசியமயம் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நலன் என்று தனது எல்லைகளை சுருக்கிக் கொள்ளாமல், இந்திய நாட்டின் அடித்தட்டு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், இந்தியா முழுமையும் உள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புகளோடு இணைந்து போராடி வருகின்றது. இந்தியாவில் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் சேவைகள் இந்திய மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும் கொண்டு செல்வதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. மற்றும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஸுரன்ஸ் - இவற்றோடு இணைந்து நேர்மையான, ஒளிவுமறைவு இல்லாத, திறன்மிக்க சேவையினை செய்து வருகிறது.

கொரோனா காலத்தில்

நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், எப்போதெல்லாம் இந்திய நாட்டு மக்கள் அதிதீவிர புயல், நிலநடுக்கம், மேகவெடிப்பு, பெரு வெள்ளம்,சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு உள்ளாகிறார்களோ, அப்பொழுதெல்லாம், உடுக்கை இழந்தவன் கை போல, ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டிய வரலாறை இந்திய மக்கள் அறிவர். கொரோனா பெரும் தொற்று காலத்தில், சாதாரண மெடிக்கிளைம் பாலிசிகளை, கொரோனா சிகிச்சைக்கு நீட்டித்து கிளைம் கொடுத்ததோடு நிற்காத இந்த நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கொரோனா கவுச் என்கிற பாலிசியையும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் பிரீமியத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், தங்களது பொது மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வு ஊதியம் பெறுவோர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு இணைந்து தான் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆண்டொன்றுக்கு ரூபாய் 12/- பெற்றுக் கொண்டு இரண்டு லட்சம் வரையிலான தனிநபர் விபத்து பாலிசியான “பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா” என்கிற பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு பொதுத்துறை நிறுவனங்கள்தான். இந்திய நாட்டில் 92 சதவீதம் பாலிசிகள் இந்த நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களால் தான் சாதாரண மக்களுக்கு அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1991 முதல் இந்திய நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தத் துவங்கியவுடன், ரிசர்வ் வங்கியின்  முன்னாள் தலைவர்  மல்ஹோத்ரா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளாக, ஆயுள் மற்றும் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தனியார்மயத்தை உடனடியாக செய்திட அன்றைய நரசிம்மராவ் அரசு முயற்சி செய்தது. இந்திய நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கீழ் நின்று பல்வேறு போராட்டங்களையும், இன்சூரன்ஸ் வணிகம் அரசுத்துறையிலேயே இருக்க வேண்டியதன் நோக்கங்களையும் வலியுறுத்தி பொது மக்களிடையே பிரச்சார இயக்கங்களையும் நடத்தியதன் விளைவாக இன்று வரை நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களாகவே தொடர்கின்றன.

ஒன்றரைக் கோடி கையெழுத்து

1994  இல் நரசிம்மராவ் ஆட்சியின் பொது, இந்தியா முழுவதும் பொது மக்களிடம் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயத்தை பரிந்துரை செய்த மல்ஹோத்ரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, 65 லட்சம் கையழுத்து பெற்று, பிரதமரிடம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சமர்ப்பித்தது. பின்னர் வாஜ்பாய் அரசின் போது, மீண்டும் இந்தியா முழுமையும் பொது மக்களை சந்தித்து ஒன்றரைக் கோடி கையெழுத்து பெற்று அரசிடம் கொடுக்கப்பட்டது.  இந்திய தொழிற்சங்க வரலாற்றில், ஒன்றரைக் கோடி கையெழுத்து என்பது முதன்முறையாக, இன்சூரன்ஸ் துறை தனியார்மயமாக்கலுக்கு எதிராக பெறப்பட்டது. உலகளவிலும் கூட இவ்வளவு எண்ணிக்கையிலான கையெழுத்து இயக்கம் என்பது இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் செய்தது தான்.1991 முதல் 2022 வரை, புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற அனைத்து தேசிய அளவிலான (21 வேலை நிறுத்தங்கள்) பொது வேலைநிறுத்தங்களிலும் எல்.ஐ.சி. மற்றும் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் முழுமையாக கலந்து கொண்டனர். இவ்வாறு தொடர்ச்சியாக, 30 ஆண்டுகாலமாக அயர்வின்றி, அதே உத்வேகத்துடன் இன்சூரன்ஸ் தனியார்மயமாக்கலை  எதிர்த்த போராட்டத்தில், கருத்துப் பிரச்சாரத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்களை ஒன்று திரட்டி சமரசமற்ற முன் வரிசையில் நிற்கிறது ஏஐஐஇஏ.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம்

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் பொது இன்சூரன்ஸ் வணிக தேசவுடைமை சட்டம்  (GIBNA) சட்ட திருத்த மசோதாவினை மோடி அரசு கொண்டு வந்த பொது, தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முயற்சியில், 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான பிரச்சாரத்தை கொண்டு சென்றதோடல்லாமல், நாடாளுமன்றத்தில் இந்த மக்கள் விரோத, தேச விரோத மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும்  என்கிற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவிற்கு எதிராக  ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் கூட பொது இன்சூரன்ஸ் வணிக தேசவுடைமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக பேசியதை பார்க்க முடிந்தது. ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் வருடம், இந்த மசோதா, மாநிலங்களவையில் ஜனநாயகப் பூர்வமற்ற அடக்குமுறையை பயன்படுத்தி தான் நிறைவேற்ற முடிந்தது. பின்னர்,  இதன் காரணமாக,  12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதை நாடே பார்த்தது. நாடாளுமன்ற இருஅவைகளிலும் ஜிஐபிஎன்ஏ  சட்டத்திருத்தத்திற்கு எதிரான இந்த விவாதமானது, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நாடு முழுமையிலான கருத்துப்பிரச்சாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களை கவ்விப்பிடித்தது முக்கியக் காரணம் ஆகும். இன்றைக்கு ஒன்றிய அரசு,  மக்களுக்கிடையே ஒற்றுமையை சீரழிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை, நாடாளுமன்றம், நீதித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளின் மூலம் செய்து வருகிறது. இவ்வாறு மக்களை பிரித்து, கருத்து மோதல்களை உருவாக்கி விட்டு, அந்தக் குழப்பத்திற்கு நடுவில் பல்வேறு மக்கள் நலனுக்கு எதிரான பொருளாதார மசோதாவை “நிதி மசோதாவாக” நிறைவேற்றி வருகிறது. எல்.ஐ.சி. மற்றும் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தனியார்மயம் என்பது மோடி அரசின் முக்கிய அஜெண்டாவாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாகத் தான், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பலவீனப்படுத்திடும் வண்ணம், நாடு முழுவதும், அலுவலக குறைப்பு, ஆட்குறைப்பு, புதிய ஊழியர் பணிநியமனத்தடை, அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் போன்ற நடவடிக்கைகளில் ஐ.ஆர்.டி.ஏ. செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் 25-26 தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ள தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 18 ஆவது மாநாடு, ஒன்றிய அரசின் நாசகர, மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை விவாதித்து அதற்கெதிரான தீர்மானங்களை நிறைவேற்றி, அடுத்தகட்ட போராட்ட வியூகங்களை வகுக்கப் போகிறது. ஐந்து தென் மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிலிருந்து மதுரையில் கூடவுள்ள பிரதிநிதிகள் இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை போற்றி பாதுகாக்கும் இயக்கங்களை, பிரச்சாரங்களை முன்னெடுக்கும் விதமாக பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளனர்.

இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை போற்றி பாதுகாக்கும் அனைத்து போராட்டங்களிலும், கருத்துப் பிரச்சாரங்களிலும், இன்சூரன்ஸ் ஊழியர்கள் கலந்து கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாகவே பாதுகாப்பது என்பது இன்றைய இந்திய மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். அவ்வாறு வலுவான அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவதற்கு, புதிய ஊழியர் பணிநியமனம் என்பது உடனடியாக தேவையான ஒன்று. இத்தகைய மக்கள் நலன் சார்ந்த, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் பணிகளை முன்னெடுக்க, இந்திய மக்களிடையே பிரிவினை வாத கருத்துக்களை திட்டமிட்டு பரப்பிவிட்டு, அதற்கிடையில் கார்ப்பரேட் நலன் சார்ந்த சட்டங்களை இயற்றிக் கொண்டே போகும் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து - பல்வேறு விவாதங்களை நடத்தி, சிறந்த முடிவுகளை எடுத்திட தென்மண்டல பொது இன்சூரன்ஸ் சங்கத்தின் 18ஆவது மாநாடு மதுரையில் கூடுகிறது. எல்.ஐ.சி.யை பாதுகாப்போம்!  அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப்போம்!! மக்கள் ஒற்றுமையைப் பேணிக்காப்போம்!!!

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.


 

;