articles

img

ஜம்மு-காஷ்மீரில் மதரீதியான கொடூரமான இழிவான நடவடிக்கைகள்

ஜம்மு-காஷ்மீர் ஆட்சி நிர்வாகம், காஷ்மீருக்கும் ஜம்முவிற்கும் இடையே மக்கள் மத்தியில் மதவெறி அடிப்படையில் பிளவினை ஏற்படுத்தவும், காஷ்மீர் மக்களின் அடையாளத்தையும், வரலாற்றுப் பாரம்பரியத்தையும் ஒழித்துக்கட்டவும், மிகவும் இழிவான முறையில் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.

ஜூலை.13  தியாகிகள் தினம் ஒழிப்பு

ஜூலை 13 காஷ்மீரில் 1931 முதல் காலங்காலமாக தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஆட்சிபுரிந்த மகாராஜாவின் போலீசார், அன்றைய நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக் கிச் சூடு நடத்தியதில் 22 பேர் கொல்லப் பட்டார்கள். அதனை நினைவுகூர்ந்து இந்த ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்பட்டு வந்தது. தியாகிகள் தினத்தன்று அரசின் சார்பில் மாநில அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குபவரால் தியாகிகளின் கல்லறைகளில் மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். இதனை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் 2020இலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டது.  தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அரசுத்தரப்பில் இந்த முறையும் நிறைவேற்றவில்லை. அதேபோல் அன்றையதினம் அனுசரிக்கப்பட்டுவந்த அரசு விடுமுறை தினமும் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. தியாகிகளின் கல்லறைகளின் வாயில்கள் எவரும் நுழையாதவாறு  பூட்டப்பட்டுவிட்டன. காஷ்மீர் மக்கள் தங்களின் தியாக வரலாற்றைக் கொண்டாட மறுக்கப்பட்டிருப்ப தன் மூலமாக அவர்களை மேலும் வலு விழக்கச் செய்வதற்காக, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மற்றுமொரு முயற்சியே இதுவாகும்.

மன்னர் பிறந்தநாள்  பொது விடுமுறை

இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம், முன்னாள் மகாராஜா ஹரிசிங் பிறந்ததினமான செப்டம்பர் 23 தினத்தைக் கொண்டாடுவதற்காக பொது விடுமுறை தினமாக அறிவித்திருக்கிறது. ஜம்மு பகுதியில் இயங்கும் பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோள்களுக்குச் செவிமடுத்து நிர்வாகம் இவ்வாறு செய்திருக்கிறது. இந்த மகாராஜா, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அரவணைப்புடன் நடைபெற்ற மன்னர் சமஸ்தானங்களின் கீழ் எதேச்சதிகார நிலப்பிரபுத்துவ ஆட்சி புரிந்தமைக்கு அடையாளமாகக் கருதப்பட்டவர். 1931இல் தேசிய மாநாட்டுக் கட்சியினர் அதன் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையின்கிழ் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கெதிராகவும், பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு எதிராகவும் மாபெரும் மக்கள் இயக்கத்தை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தின்போதுதான் 22 பேர் கொல்லப்பட்டார்கள்.

ஷேக் அப்துல்லா  பிறந்தநாள் கைவிடல்

மகாராஜாவின் பிறந்த தினத்தை ஒரு பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ள அதே சமயத்தில், காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வந்த ஷேக் அப்துல்லாவின் பிறந்ததினம் 2019 டிசம்பரிலிருந்து கைவிடப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மகாராஜாவின் பங்கு என்பது இரண்டகமாக இருந்தது. அப்போது மவுண்ட் பேட்டன் அறிவித்திருந்த கட்டளையின்படி, மன்னர் சமஸ்தானங்கள் இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஏதேனும் ஒன்றுடன் சேர்ந்த கொள்ள இசைவு தெரிவிக்க முடியும். மன்னராட்சிக்கு எதிராகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் வீரச்சமர் புரிந்துவந்த தேசிய மாநாட்டுக் கட்சியால் நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு எதிராகக் கடும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த மகாராஜா, அந்த சமயத்தில், ஜம்மு-காஷ்மீர், இந்த இரண்டு நாடுகளுடனும் சேராமல் தனித்து இருப்பதையே விரும்பினார். மகாராஜா, 1947 அக்டோபர் 26 அன்று மவுண்ட்பேட்டனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தான், காஷ்மீரைத் தங்கள் பக்கம் இணைத்துக்கொள்வதற்காக, “பழங்குடியினர் படையெடுப்பாளர்களை” (“tribal invaders”) அனுப்பியதைத் தொடர்ந்து, தாங்கள் இந்தியாவுடன் சேர்ந்துகொள்வதாகக் கடிதம் (‘instrument of accession’) எழுதினார்.

ஓடி ஒளிந்த மன்னர்

படையெடுப்பாளர்களுக்குப் பயந்து, மகாராஜா ஜம்முவுக்கு ஓடிவந்துவிட்ட அதேசமயத்தில்,  தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையின்கீழ் மக்கள் படையெடுப்பாளர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் வந்த இந்திய ராணுவம் படையெடுப்பாளர்களை விரட்டி அடித்தது. 

பிரிட்டிஷாரையும் மன்னரையும் ஆதரித்த ஆர்எஸ்எஸ்

இவ்வாறாக அந்த சமயத்தில் தான் எந்த நாட்டுடனும் சேராமல் தனித்தே சுதந்திரமாகச் செயல்படுவேன் என்று மகாராஜா கூறியபோது அவருக்கு ஆர்எஸ்எஸ் இயக்கமும், பின்னர் ஆர்எஸ்எஸ் ஊழியர்களால் நடத்தப்படும் பிரஜா பரிஷத் இயக்கமும் முழுமையாக ஆதரவு அளித்தது. மகாராஜா சுதந்திரமாகச் செயல்படுவதற்கான நிலைப்பாட்டை எடுத்தபோது அதனைச் சரி என்றும், பின்னர் இந்தியாவுடன் இணைந்தபோது ஜம்மு-காஷ்மீர் தனியாக இருப்பதையும் சரி என்றும் ஏற்றுக்கொண்டது. இவ்வாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசிவந்த மகாராஜாவைத்தான் இப்போது யூனியன் பிரதேச நிர்வாகம் கௌரவித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் மன்னராட்சிக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடிய தியாகிகள் தினம் கொண்டாடப்படாமல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு பெரும்பான்மை முஸ்லீம் மக்களை ஆட்சி செய்து வந்த மகாராஜா கொண்டாடப்படுவதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு அவர் ஓர் இந்து என்பதே ஒரு முக்கிய காரணியாகும்.

காஷ்மீர், ஹைதராபாத்; இருவேறு அணுகுமுறை

பிரிட்டிஷாருக்கு வெண்சாமரம் வீசிவந்தவரும், ஜம்மு-காஷ்மீர் சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பியவருமான ஹரி சிங் மகாராஜாவைக் கொண்டாடும் பாஜக ஆட்சியாளர்கள், இதேபோன்றே பிரிட்டிஷாருக்கு வெண்சாமரம் வீசிய  ஹைதரபாத் நிஜாம் குறித்துக் காட்டும் அணுகுமுறை இதற்கு  முற்றிலும் எதிரானதா கும். நிஜாமிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவ தற்காக ராணுவத் தலையீடு நடைபெற்ற செப்டம்பர் 17 தினத்தை ‘விடுதலைபெற்ற தினமாக’ (‘liberation day’) அனுசரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஹைதரா பாத் நிஜாமும் இந்தியாவுடன் சேர மறுத்தது டன், ஹரிசிங் மகாராஜா போன்றே தனியே சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்தான். இவ்வாறு பாஜகவின் அணுகுமுறையில் இருவரையும் அணுகும் விதத்தில் வித்தியாசம் இருப்பதற்கு ஒரே கார ணம் ஆட்சியாளர்களின் மதம்தான். ஹரிசிங் ஓர் இந்து. ஹைதராபாத் நிஜாம் ஒரு முஸ்லீம்.

திருவாங்கூர் ராஜாவுக்கு சாவர்க்கர் எழுதிய கடிதம்

சுதந்திரப் போராட்டக் காலத்தில், மன்னர் சமஸ்தானங்கள் குறித்து,  ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபா ஆகியவற்றின் அணுகுமுறையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அவர்கள் மன்னர்களில் இந்துக்களாக இருந்தவர்களுக்கு முழுமையாக ஆதரவாளர்களாக இருந்தார்கள். மன்னர் சமஸ்தானங்களில் எதேச்சதிகார மன்னராட்சிக்கு எதிராகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும் போராடிவந்த மக்கள் இயக்கங்களுக்கு எதிராகவே ஆர்எஸ்எஸ்-உம், இந்து மகா சபாவும் இருந்தன. சுதந்திர இந்தியாவின் நலன்களைக் காட்டிலும், நிலப்பிரபுத்துவ இந்து மன்னர் சமஸ்தானங்களின் நலன்களுக்கே அவை முன்னுரிமை கொடுத்தன. உண்மையில், வி.டி. சாவர்க்கர், திருவாங்கூர் மகாராஜாவின் சுதந்திரப் பிரகடனத்தை ஆதரித்து தந்தி அனுப்பியிருந்தார். அந்தத் தந்தியில், சாவர்க்கர், முஸ்லீம் ஆட்சியாளர் ஹைதராபாத் நிஜாமின் சுதந்திரப் பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி, அதேபோன்றே திருவாங்கூர் ‘இந்து நாட்டின் சுதந்திரத்தை’ பிரகடனம் செய்திடும் தைரியமான முடிவையும் ஆதரித்தார். இத்தகைய இவர்களின் நிலப்பிரபுத்துவத்திற்கு ஆதரவான, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான கண்ணோட்டம் இன்றைக்கும் பாஜக ஆட்சியாளர்களின் மத்தியில் தொடர்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தினங்களையும் எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாய கத்திற்காகவும் காஷ்மீர் மக்கள் நடத்திய போராட்டங்களின் அடையாளங்களையும் நசுக்குவது, காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைகளை மறுப்பதற்கான, ஓரங்கட்டப்படுவ தற்கான ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்தத் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இந்த அடிப்படையில்தான் சட்டமன்றத் தொகுதிகளும் மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றுபட்ட ஜம்மு-காஷ்மீர் பகுதியை மூன்றாகப் பிரித்திடும் பழைய ஆர்எஸ்எஸ்-இன் திட்டம், இப்போது மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் செயல்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் வரவிருக்கும் நாட்களில் மிகவும் விரிவான அளவில் மோதலையும், ஆழமான விதத்தில் சச்சரவுகளையும் உருவாக்குவதற்கான விதைகளை விதைத்துக்கொண்டிருக்கின்றன.  

செப்டம்பர் 21, 2022, தமிழில்: ச.வீரமணி
 

;