articles

இன்று 15 நிமிடங்கள் வாகனம் நிறுத்தும் போராட்டம்! - எம்.சிவாஜி

பிப்ரவரி 28 (இன்று) சிஐடியு தொழிற்சங்  கம், 15 நிமிடம் அனைவரும் தங்களது  வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது. ஒரு நாளில் 15 நிமிடம் என்பது குறைவான நேரம்  தான். எது எதற்கோ பல மணி நேரங்களை செல விட பழகி விட்ட நாம், நமக்காக, மக்களுக்காக  பதினைந்து நிமிடத்தை செலவிட வேண்டும் என்று முதலில் பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறோம். இன்று உலகம் முழுவதும் பேசி வருகிற மிக  முக்கிய நிகழ்வுகளில் ஒன்று புவி வெப்பமய மாதல்ஆகும். இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்க ளின் லாபவெறி, பெரிய பெரிய தொழிற்சாலை கள் வெளியிடுகின்ற புகைதான் மிக முக்கிய காரணமாகும். ஆளும் வர்க்கம் இதை மறைத்து அதிகமான வாகன பெருக்கத்தின் காரணமாக வாகனங்கள் வெளியிடுகிற புகை தான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் என்று,  ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸின் பிரச்  சாரத்தை திட்டமிட்டு நடத்தி, வாகன ஓட்டிகளின் மீது தவறான கருத்தை பதிவு செய்கிறது.

வாகன பெருக்கம்

இந்தியாவில் வாகன பெருக்கம் ஏன் ஏற்படு கிறது? பொது போக்குவரத்தை அரசு ஏற்படுத்தி  மக்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்ய  வேண்டும் என்ற சமூக நோக்கில் இருந்து அரசு கள் விலகிச் செல்வதால், தங்களது போக்கு வரத்து சேவையை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள மக்கள் யோசிக்கிற போது தான்  வாகன பெருக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாய்  மாறுகிறது. வாகனங்களின் பெருக்கத்தை கட்டுப் படுத்த பொது போக்குவரத்தை, அரசு பேருந்து கள், ரயில்கள் போன்றவற்றின் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான் வாகன பெருக்கம் தானாகவே குறையும்.

15 வருட வாகனம் அப்புறப்படுத்தலில் அடங்கியிருக்கும் அரசியல்

வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபடக்கூடிய நிறுவனங்கள் உற்பத்தி செய்த வாகனங்களை  அவர்கள் தீர்மானித்த இலக்கின்படி விற்பனை  செய்ய முடியவில்லை. இதனால் முதலாளி களின் லாபபெருக்கம் தடைபடுகிறது. லாப பெருக்கத்தை தடுக்கும் தடைக்கல்லாக பழைய வாகனங்கள் இருக்கின்றன. பழைய வாகனங்களை அப்புறப்படுத்தாமல் தாங்கள் புதிதாக உற்பத்தி செய்து வைத்திருக்கிற வாக னங்களை விற்க முடியாது என்ற கார்ப்பரேட்டு களின்  எண்ணத்தில் எழுந்தது தான் பழைய வாக னங்களை அப்புறப்படுத்த வேண்டும் என் பது. இந்தக் கருத்தை அரசாங்கம் நேரடியாக மக்களிடம் சொன்னால் அது பொது மக்களிட மும், வாகன ஓட்டிகளிடமும் கடும் எதிர்ப்பை  சந்திக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட தால் தான், பழைய வாகனங்களால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகிறது என்கிற பொய் திட்ட மிட்டு பரப்பப்படுகிறது. பழைய வாகனங்க ளால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகிறது என்ற  சிறு உண்மையை ஊதிப் பெரிதாக்கி, தங்க ளின் புதிய வாகனங்களை விற்பதற்கான உத்தி யில் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்ட தாக நினைக்கிறது. அரசு எந்திரம் முழு வதும், உழைப்பவருக்கு எதிராக, கார்ப்பரேட்டு களுக்கு துணை போகிறது.

உழைப்பாளிகள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்காதவர்கள் அல்ல. சுற்றுப் புற சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற அக்  கறை இல்லாதவர்கள் அல்ல. நவீன தொழில் நுட்பம் கண்டுபிடித்து இருக்கிற பேட்டரி வாக னங்களை, எலக்ட்ரிக்கல்  சார்ஜ் வாகனங்களை  பயன்படுத்த வேண்டும் என்று எப்போதும் வர வேற்பவர்கள் தான். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனம், பேட்டரி வாகனங் களை வாங்குவதற்குரிய பொருளாதாரக் கட்ட மைப்பை அரசாங்கம்  ஏற்படுத்திக் கொடுப்ப தோடு பயிற்சியையும் வழங்க வேண்டி இருக்கி றது. இந்த நடவடிக்கைகளை அரசாங்கம்  தொடங்கும் வரை பழைய வாகனங்களை இயக்குவதால் மட்டும் தான் வாகன ஓட்டி களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடி யும்.

டீசல்-பெட்ரோல் விலை ஏற்றம்

எரிபொருள் விலை உயர்வால் ஆட்டோ உள்ளிட்ட இதர வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் வரை சக லரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். தங்கள் வருமானத்தில் பெரும் பகுதி யை எரிபொருளுக்காகவே செலவிட வேண்  டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. “கால் காசு குதிரை முக்கா காசு புல் தின்ற” கதையாக எரி பொருளுடைய அடக்க விலையை விட வரி கள் கூடுதலாக இந்தியாவில் விதிக்கப்படு கிறது.

ஆட்டோ கட்டணம்

ஆட்டோவிற்கான மீட்டர் கட்டணம் 2013 இல்  தீர்மானிக்கப்பட்டது. இதர வாகனங்களுக்கு கட்டணத்தை அரசு எப்போதும் தீர்மானிப்ப தில்லை.     இதன் விளைவாக பன்னாட்டு நிறுவ னங்கள் சாலை போக்குவரத்து துறையில் நுழைந்து வாகனத்திற்கு முதலீடு போடா மல், வாகன எரிபொருளுக்கு முதலீடு போடா மல், ஒரு செயலியை மட்டும் உருவாக்கி, தாங் களே கட்டணத்தை தீர்மானித்து அதன் மூலம் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை லாப மாக சந்திக்கிறது சம்பாதிக்கிறது. இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடுமை யாக பாதிக்கப்படுகிறார்கள். வருமானம் பர வலாக்கப்பட்டு வந்த இந்த தொழிலில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த வரு மானமும் சென்று சேரக்கூடிய நிலைமை ஏற்  பட்டுள்ளது.

ஆன்லைன் அபராதம் என்ற வழிப்பறி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வசூல் செய்ய வேண்டிய அபராதத்தை யும், நீதிமன்றம் விதிக்க வேண்டிய அப ராதத்தையும் காவல்துறையே கையில் எடுத்து வசூலிக்கிறது. இந்த அபராத முறை முற்றாக  ஒழிக்கப்பட வேண்டும்.ஆன்லைன் அபராத மென்பது, அபராதம் அல்ல, வழிப்பறியாகும். எனவேதான், பதினைந்து நிமிடம் வாக னத்தை நிறுத்தும் இயக்கம் என்பது வாகன  ஓட்டிகளுக்கான போராட்டம் மட்டுமல்ல; ஒட்டு மொத்த சமூகத்திற்குமான போராட்டமாகும். அனைவரும் பங்கேற்போம்!