articles

img

நான் தவறு செய்வேன் - அதை தெரிந்து செய்வேன் மீண்டும் செய்யவும் தயங்க மாட்டேன்....

மித்ரோன்! ஜெய்ஸ்ரீராம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். 2014-ஆம் ஆண்டு எங்கள் தேர்தல் அறிக்கையில் வெளிப்படைத் தன்மை குறித்து விரிவாக பேசியிருக்கிறோம். அந்த தேர்தல் அறிக்கையில் மட்டும் வெளிப்படைத் தன்மை இருக்கிறது. மீண்டும் 2019 தேர்தல் அறிக்கையில் 10 இடங்களில் வெளிப்படைத் தன்மை இருக்கிறது. இதை விட வேறு எந்த கட்சியாவது வெளிப்படைத் தன்மை குறித்து பேசியிருக்கிறதா?. அப்படி பேசிவிட்டதாலேயே வெளிப்படைத்தன்மை எல்லா விசயத்திலும் இருக்க வேண்டுமென்று என்னிடம் எதிர்பார்ப்பது எங்கள் இயல்பை புரிந்து கொள்ளாதவர்களின் தவறு. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?. தேர்தல் பத்திரம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; வெளிப்படைத் தன்மையற்றது; தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது என்றெல்லாம் நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது; எல்லோரும் அதையே பெரிய விசயமாக பேசுகிறார்கள். உண்மையில் இப்படி நாங்கள் நிதி பெறும் விசயத்தை மறைத்து வைப்பது இது முதல் முறையா?. இதோடு முடிந்து போகப்போகிறதா.

சட்டவிரோதத்தையே சட்டமாக்கி,ஏற்கெனவே புனிதராகி விட்டோம்..

இந்தியாவில் பெருநிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நிதி பெறக் கூடாது என்று ஒரு சட்டமே இருந்தது. அதன் பிறகு அந்த சட்டம் கைவிடப்பட்டது. இதேபோன்று அரசியல் கட்சிகள் அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவதற்கு தடை இருந்தது. இதையொட்டி பாஜக உட்பட சில கட்சிகள் அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றது குறித்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அப்போது அரசியல் கட்சி அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவது சட்டவிரோதம். அதற்காக அந்தக் கட்சியை தண்டிக்க முடியும். ஆனால், நாங்கள் என்ன செய்தோம். அந்த சட்டத்தை மாற்றினோம். முதலில் 2010-ஆம் ஆண்டு ஒரு திருத்தத்தை கொண்டு வந்தோம். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தோம். அந்த சட்டத்தின்படி 1976ஆம் ஆண்டிலிருந்து அந்நிய நிறுவனங்களிடமிருந்து ஒரு கட்சி நிதி பெற்றிருந்தாலும் அது சட்டவிரோதமில்லை என்று மாற்றிவிட்டோம். அதாவது, அதுவரை சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை இனிமேல் அது சட்டப்படியானது என மாற்றி விட்டோம். எனவே, நாங்கள் புனிதராகிவிட்டோம். அத்தோடு முடிந்து போனது. 

படித்தவர்களையும் நம்ப வைத்தோம்;உத்தரவு போட்டு நன்கொடை பெற்றோம்!

அடுத்து, பிரதமர் நிவாரண நிதி வெளிப்படைத் தன்மை உள்ளதாக இல்லை என்று நாடாளுமன்றத்திலும் பொதுக்கூட்டங்களிலும் பேசினோம். அதன்பிறகு அதை வெளிப்படைத் தன்மை உள்ளதாக மாற்றப்போகிறோம் என்று சொன்னோம். அதற்காக பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் என்று ஒரு நிதியத்தை உருவாக்கினோம்.  2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் தேதி ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூலம் இதை பிரச்சாரம் செய்தோம். எனவே, இது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் என்று பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்களையும், உயர் பதவியில் உள்ளவர்களையும் நம்ப வைத்தோம். ஒன்றிய அரசு ஊழியர்கள், மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் ஒரு நாள் சம்பளம் பிடிக்கப்பட்டது. அதற்காக ஒவ்வொரு துறையும் தனியான ஆணைகளை அனுப்பியிருந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டன. தனியார் நிறுவனங்களும் நிர்ப்பந்திக்கப்பட்டன. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்) நிதியிலிருந்து பணம் கொடுக்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டது. அப்படி பணம் கொடுத்தால் அதற்கு வரி விலக்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்தால் வரி விலக்கு கிடையாது என்பது அமலில் இருந்தது. இத்தனையும் சேர்த்தால் இது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் என்று தான் எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால், ஒரு நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பலர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். உடனடியாக நாங்கள் அது தனியார் அமைப்பு. உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டோம். பிரதமர் அலுவலகம் தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொண்டது. நீதிமன்றங்கள் தலையிடவில்லை. இப்போது அந்த நிதியத்தின் கணக்கை நாங்கள் யாருக்கும் காட்டமாட்டோம் என்று சொல்லிவிட்டோம். எங்கள் வெளிப்படைத் தன்மை இப்படிப்பட்டது தான். எனவே, வெளிப்படைத் தன்மை என்பது பேச்சிலும், மூடு மந்திரம் செயலிலும் இருப்பது தான் எங்கள் இயல்பு.

5 சட்டங்களை மாற்றினோமே..நாடு கொதித்தெழுந்து விட்டதா?
திடீரென்று நீதிமன்றம் தேர்தல் பத்திரம் செல்லாது; அதற்காக 5 சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் செல்லாது என்று சொல்லியிருக்கிறது. உடனே, எல்லோரும் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் இத்தனை சட்டங்களை மாற்றியது எல்லாவற்றையும் மறைப்பதற்காகத் தான். அப்போது பொதுமக்களோ, நடுநிலையாளர்களோ இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட பல கட்சிகள் இதை எதிர்த்தார்கள் என்பது உண்மை தான். ஆனால், தேர்தல் அறிக்கையில் மட்டுமே 22 முறை வெளிப்படைத் தன்மை என்று எழுதி வைத்திருக்கிற, போகிற இடத்தில் எல்லாம் நான் மட்டும் தான் உலகிலேயே வெளிப்படைத் தன்மையானவன் என்று பேசிய எங்களை யார் சந்தேகிக்க முடியும்?; அரசியல் கட்சிகள் தாங்கள் வாங்கும் நன்கொடை 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் பான் கார்டு வேண்டும்; ஆதார் கார்டு வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், கோடிகளில் வாங்கினால் கார்ப்பரேட்டுகளிடமிருந்து தேர்தல் பத்திரமாக வாங்கினால் பான் கார்டும், ஆதார் கார்டும் கொடுக்க வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல; கொடுக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தோம். ரிசர்வ் வங்கி எதிர்த்தது. தேர்தல் ஆணையம் எதிர்த்தது. ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பை புறந்தள்ளினோம். தேர்தல் ஆணையம் கருத்தே சொல்லவில்லை என்று நிதித்துறை இணை அமைச்சராக இருந்த திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மூலமாக நாடாளுமன்றத்திலேயே சொல்லச் சொன்னோம். அப்போதும் இந்திய மக்கள் யாரும் கொதித்து எழவில்லை. இந்த திட்டத்திற்காக பல சட்டங்களை திருத்தினோம். ஆனால், அதை நிதி மசோதாவாக்கி அப்போது மாநிலங்களவையில் எங்களுக்கு போதிய பலம் இல்லாத நிலையில் அந்த மசோதா அங்கு செல்லாமலேயே பார்த்துக் கொண்டோம். அப்போதும் இந்தியா ஒன்றும் கொதித்து எழவில்லை. அதற்கு முன்பு கம்பெனிகள் சட்டத்தின் படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒரு நிறுவனம் தன்னுடைய கடந்த மூன்றாண்டுகால சராசரி லாபத்தில் 7.5 சதவிகிதத்திற்கும் மேல் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்க முடியாது என தடை இருந்தது. அதை முழுவதுமாக நீக்கி விட்டோம்.
 

எனவே, எந்த கம்பெனியும் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி கொடுக்க முடியும் என்று மாற்றினோம். அப்போதே போலிக் கம்பெனிகளின் கணக்கிலிருந்து கருப்பு பணம் ஆறாக பாயும் என்று பலருக்கும் தெரியும். அது சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் என்றும் தெரியும். இந்தியா என்ன கொதித்தா விட்டது. இப்படி பணம் கொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கைமாறு கருதாமல் பணம் கொடுக்க மாட்டார்கள். அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் சலுகைகளை வாரி வழங்கப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாத விசயமா?. அல்லது ஒருவர் அதிகமாக நிதி கொடுத்தால் அவருக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமென்று நாங்களே நினைக்க மாட்டோமா, அதுவும் மக்கள் வரிப்பணத்தில். இதெல்லாம் தெரிந்த பிறகும் மக்கள் கொந்தளித்தார்களா என்ன?.

அதானிக்கு 6 விமான நிலையங்களை கொடுத்ததெல்லாம் ஒரு விஷயமா?
இதில் சிலர் கேள்வி கேட்டால் அப்படி என்ன கைமாறு செய்துவிட்டோம் என்று நாங்கள் திருப்பி கேட்போம். சிலபேர் சில விஷயங்களை சொல்வார்கள். உதாரணமாக, அதானிக்கு விமான நிலையங்களை பராமரித்த அனுபவமே இல்லாத போதும், சர்வதேச டெண்டரில் அவர்களை கலந்து கொள்ள வைப்பதற்காக முன் அனுபவமே தேவையில்லை என்று விதியை மாற்றினோம். இதனால் அவர்களுக்கு 6 விமான நிலைய பராமரிப்பும் ஒருசேர கிடைத்தது. ஒரு சின்ன மாற்றம் தான் நாங்கள் செய்தோம். ஆனால், 6 விமான நிலையங்களையும் அவருடைய திறமையால் அவர் பெற்றுக் கொண்டார். நிதியமைச்சகம் ஆறையும் ஒருவரிடமே கொடுக்கக் கூடாது, அதற்கான நிதிகள் எல்லாம் வங்கிகளிடமிருந்து தான் பெறுவார்கள். எனவே, அனைத்தையும் ஒருவருக்கே கொடுப்பது கூடாது என்று சொன்னார்கள். அதுவொரு பெரிய பிரச்சனை என்று சொன்னோம். அதேபோன்று, நிதி ஆயோக் இப்படி 6 விமான நிலையங்களையும் அதானிக்கே கொடுப்பது ஏகபோகமாக மாற்றி விடும் என்று எதிர்த்தார்கள். அந்த ஆட்சேபனையையும் நாங்கள் நிராகரித்து விட்டோம். இதனால் 6 விமான நிலைய பராமரிப்பும் அதானிக்கே சென்று சேர்ந்தது. இதெல்லாம் ஒரு பெரிய விசயம் என்று பேசிக் கொண்டிருக்கலாமா? நாங்கள் எவ்வளவு வெளிப்படையானவர்கள். தேர்தல் அறிக்கையிலேயே 22 முறை வெளிப்படை என்பதை சொல்லியிருக்கிறோம். எனவே, எங்கள் மீது குறை சொல்பவர்களை நம்பாதீர்கள் என்று சொல்லிவிட்டு கடந்து போய் விட்டோம். அவ்வளவு தான்.

நீதிமன்றத் தீர்ப்பையும்  நாங்கள் சமாளித்து விடுவோம்..

இந்த தீர்ப்பில் ஒரு சங்கடம் தான். ஆனால் இதையெல்லாம் நாங்கள் சமாளித்து விடுவோம். வங்கிகள் யாருக்கு கடன் கொடுத்தார்கள், யாரெல்லாம் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு இதுவரை நீதிமன்றத்திற்கு கூட போய்விட்டு வந்துவிட்டார்கள். விபரத்தை தர முடியாது, அதுதான் சட்டம் என்று சொல்ல வைத்தோம். நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டன. என்றைக்காவது நீதிமன்றங்கள் கார்ப்பரேட்டிடம் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்க 5 சட்டங்களை திருத்தினீர்களே இதற்கு ஒரு திருத்தம் கூடாதா என்று ஒருபோதும் கேட்கவில்லை. எனவே, சட்டத்தில் இடமில்லை என்று வங்கிகளை சொல்ல வைப்போம். தேர்தலுக்கு முன்பு இவையெல்லாம் வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையத்தை சொல்ல வைப்போம்.

நாட்டின் தலைமை நீதிபதியே  வெளிப்படையாகத்தான் நீக்கினோம்!

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கூட நாங்கள் அப்படித்தான் நடந்து கொண்டோம். இதுவரை தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு பிரதமர், எதிர்கட்சித்தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேரும் இருந்தோம். இப்போது அதை பிரதமர், எதிர்கட்சித் தலைவர், பிரதமர் நியமிக்கும் ஒரு அமைச்சர் என்று மாற்றி இந்திய தலைமை நீதிபதிக்கே இந்த குழுவிலிருந்து கல்தா கொடுத்து விட்டோம். இந்த வழக்கு கூட நீதிமன்றத்திற்குத் தான் போனது. நீதிமன்றம் அதில் தலையிட்டு விட்டதா, என்ன? எனவே, இதிலும் வெளிப்படையாகத்தான் நடந்து கொண்டோம். நீதிமன்றங்களும் அதை ஏற்றுக் கொண்டன. ஆணையர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள் தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் இல்லையென்று. அப்படியே தேர்தலை தாண்டி தான் இதுபோகும். 

அயோத்தி ராமர் கைவிட்டாலும், புல்வாமா போல நடக்காதா என்ன?

அதையும்மீறி ஒருவேளை இவையெல்லாம் நடந்து விட்டால் ராமர் எங்களை கைவிடவே மாட்டார். ராமர் பிறந்த இடத்தையே நாங்கள்தான் மீட்டோம் என்று உணர்ச்சிவயப்பட வைப்போம். அதுமட்டும் தான் தேர்தல் பேசுபொருளாக இருக்கும். மற்றதெல்லாம் மறைந்து போகும். இல்லையேல் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் 40 பேருக்கு மேல் கொல்லப்பட்டதைப் போன்ற ஏதாவது ஒரு சம்பவம் நிகழலாம். அது மடைமாற்றம் செய்யப்படும். இதுதான் வெளிப்படைத்தன்மை குறித்த எங்கள் கொள்கை.

எனவே, நான் தவறு செய்தேன். அதை தெரிந்து செய்தேன். அதைத் திரும்பத் திரும்ப செய்வேன்.

க.கனகராஜ்

மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)





 

;