வேலைவாய்ப்பு குறித்த முழுமையான புள்ளி விவரங்களை ஒன்றிய அரசு முறையாக வெளியிடுவதில்லை. கடுமையான நிர்பந்தங்களுக்குப் பிறகு சமீபத்திய ஆண்டு NSSO- வின் காலமுறை தொழிலாளர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள புள்ளி விவரங்கள், பெண்கள் நிலைமை மற்றும் தொழிலாளர் சந்தை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
வேலைவாய்ப்பின் போக்கு
கடந்த 12 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சரிவு அல்லது தேக்க நிலையில் இருந்து வந்துள்ளது. தொழிலாளர் படையில் பெண்களின் எண்ணிக்கை 1990 முதல் 2017-18 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. 2023-24 ஆம் ஆண்டு அறிக்கையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது. எனினும், வரு மானம், கூலி, சம்பளம் ஆகியவை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2017-18 ஆம் ஆண்டில் ஆண்களின் வேலைவாய்ப்பு சந்தையில் பங்கேற்பு விகிதம் 71.2 சதவீதமாக இருந்தது, அது 2023-24இல் 76.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெண்களின் பங்கேற்பு 22 சதவீதத்திலிருந்து 40.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு களாக பெண்களை வேலைவாய்ப்பு சந்தைக்கு கூடுதலாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வேலையின் தன்மை
பெருநிறுவனங்கள் துவங்கி கிக் வேலைவாய்ப்பு வரை பெண்கள் அணிதிரட்டப்படாத உழைப்பாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பு சந்தையில் உள்ள தொழிலாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வில்லை. இத்துடன் வேலைவாய்ப்பு சந்தைக்கு தேடி வரக்கூடிய கோடிக்கணக்கான இளம் தலைமுறை யினருக்கு போதுமான வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதற்கான எவ்விதமான திட்டமும் அரசிடம் இல்லை.
ஊதியம் இல்லாத உதவியாளர்கள்
குடும்ப நிறுவனத்தில் செய்யக்கூடிய வீட்டு வேலை, பராமரிப்பு, சமையல், தண்ணீர், கால்நடை பராமரிப்பு உள்ளிட்டவை வருமானம் தராத வேலை களாகும். இவை மறு உற்பத்திக்கான அடிப்படையாக உள்ளன. உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 92-93 பிரிவுகளில் இவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஊதியம் பெறாத உதவியாக செய்யப்படும் வேலைகள் வேலைவாய்ப்பு தொழிலாளர் சந்தையில் வகைப்படுத்த இயலாது. ஆனால் இந்த கணக்கெடுப்பில் 6 சதவீதம் பேர் ஊதியம் இல்லாத உதவியாளர்களாக பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை பின்பற்றி வந்த அடிப்படைக் கொள்கைக்கு முரணானதாகும்.
வருமான ஏற்றத்தாழ்வுகள்
கார்ப்பரேட்டுகளின் லாப விகிதம் காரணமாக கடந்த ஆண்டு முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் தொழிலாளர்களின் சம்பளம், கூலி, வருமானம் ஆகியவற்றில் விலைவாசி உயர்வுக்கு தகுந்தபடி கூட உயர்வு ஏற்படவில்லை. 2017-18 ஆம் ஆண்டில் ஆண் தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளம் 13,931 ரூபாய் என்பது 2023-24 ஆம் ஆண்டில் 18,029 ரூபாயாக 4.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலத்தில் பெண்களின் மாதாந்திர வருமானம் 12,109 ரூபாயிலிருந்து 11,914 ரூபாயாக 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் மாத சம்பளம் வருமான விகிதம் என்பது ஆண்களுக்கு 0.5 சதவீதம் உயர்வாகவும், பெண்களுக்கு மைனஸ் 0.3 சதவீதமாகவும் உள்ளது. முறைசாரா தொழிலாளர்களுக்கான தினசரி ஊதி யம் ஆண்களுக்கு 445 ரூபாயிலிருந்து 529 ரூபாயாக உயர்ந்துள்ள போதிலும், பெண்களுக்கு 264 ரூபாயி லிருந்து 354 ரூபாயாகவே உள்ளது. சுயதொழில் புரிவோரின் வருமானத்தில் ஆண்களுக்கு 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, பெண்களுக்கான வருமானத்தில் 2.1 சதவீதம் குறைந்துள்ளது.
கிக் தொழிலாளர்களாக...
தற்போது அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு சந்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐ எல்ஓ (ILO)-வின் 2023 அறிக்கையின்படி கிக் பொருளாதாரம் ஆண்டுக்கு 17 சதவீதம் உயர்வடைகிறது. உலகளாவிய கிக் பணியாளர்களில் பெண்கள் 35 சதவீதமாக உள்ளனர். இல்லத்தரசிகள் மற்றும் ஒற்றை தாய்மார்கள் கிடைக்கும் வேலை வாய்ப்பின் மூலம் பணம் ஈட்டுவதற்கு சில வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவின் தேசிய திறன்வளர்ச்சிக் கழகத்தில் (NSDC) பெண்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர். கிக் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன.
பாஜகவின் இயல்பு
பெண்கள் மீதான வன்முறையும் தாக்குதலும் அதிகரித்துள்ள சூழலில் சுரண்டலும் பாலின இடைவெளியும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பெண்கள் வேலைவாய்ப்புக்கான குறிப்பிடத்தக்க முயற்சி எதையும் மோடி அரசு 11 ஆண்டு கால கட்டத்தில் மேற்கொள்ளவில்லை. ஏனெனில், ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் பாஜக அரசின் அடிப்படையே பெண்களை இரண்டாம் பட்சமாக கருதுவதாகும். இதனால் நாடு முழுவதும் உள்ள பெண்கள் உடல் ரீதியாக வன்முறையும், உழைப்பு ரீதியாக சுரண்டலையும் சந்தித்து வருகின்றனர்.
கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர்