கியூபா நாட்டின் மீது அமெரிக்க அரசு விதித்த பொருளாதாரத் தடையை நீக்கக் கோரி, கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா., சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை 184 நாடுகள் ஆதரித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே எதிர்த்தன. ஆனாலும், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தினால், (ரத்து அதிகாரம்) தீர்மானம் நடைமுறைக்கு வராதது மட்டுமல்ல, இதற்குபிறகும் அமெரிக்கா மேலும் புதிய தடைகளை விதிக்கிறது.இன்று, நேற்றல்ல; 1959 ஆம் ஆண்டில், இரண்டு இளம் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் தலைமையில், கியூபாவில் அப்போதிருந்த சர்வாதிகாரி பாடிஸ்ட்டாவின் ஆட்சியை விரட்டியடித்து புரட்சி அரசு உருவானது. அன்று முதலே அமெரிக்கா, கியூபாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது மட்டுமல்ல, சோசலிச அரசாங்கத்தைக் கவிழ்த்திடதொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கியூபாவின் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோவை படுகொலை செய்வதற்கு எண்ணிலடங்காத சதி முயற்சிகளை முயன்று தோற்றது அமெரிக்கா. இத்தகைய சோதனைகளுக்குப் பிறகும், சோசலிச கொள்கையைக் கடைப்பிடித்த கியூப அரசு, பல சாதனைகளைப் படைத்தும் காட்டியது.
வல்லரசு அல்ல; நல்லரசு!
வல்லரசாக அல்ல, நல்ல அரசாக கியூபா செயல்படுவதை கீழ்க்காணும் விபரங்களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்.பொருளாதார தடை இல்லாமல் இருந்தால், இதைவிடப் பெருமளவிற்கான வளர்ச்சியை கியூபா சாதித்துக்காட்டி யிருக்கும்.
கியூபாவின் குரல்வளையை நெறித்திட, அமெரிக்க அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்தபோதும், தடைகள் பல கடந்து சாதித்திருக்கிறது அந்த நாடு. அதுதான் அமெரிக்க அரசாங்கத்தை உறுத்துகிறது. தங்களுடைய மக்கள் நல்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தபடியே, கியூப அரசும் அதன் குடிமக்களும் பிற நாடுகளுக்கு சுகாதாரத்திலும், கல்வியிலும் உதவிக்கரம் நீட்டி, சர்வதேச மனித குல நலனில் தங்கள் கடமையையும் நிறைவேற்றுகின்றனர்.
ஏகாதிபத்தியத்தின் வேலை
அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவிற்கு எதிராக மட்டுமல்ல, சீனா உள்ளிட்ட சோசலிசநாடுகளுக்கு எதிராகவும், லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட இடதுசாரிகள் அதிகாரத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராகவும் சீர்குலைவு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. இரு துருவ உலகம் என்பதுமாறி, அமெரிக்கா தனது பொருளாதார அரசியல் மேலாதிக்கத்தை தக்கவைக்கவும் பலப்படுத்தவும் உலகளாவிய அளவில் ஆட்சிகளைக் கவிழ்ப்பது, யுத்தம் தொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.‘ஏகாதிபத்யம்’ என்ற சொல்லாடல் என்ன செய்தியைச் சொல்கிறது?
கி.பி.1700 வாக்கில், உலகமொத்த உற்பத்தியில்இந்தியாவின்பங்கு 25 சதவீதமாகஇருந்தது. அப்போதைய பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்சின்ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு 11 சதவீதமாக இருந்தது. இந்தியாவை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியாக்கி, இந்திய வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டிய காரணத்தினால் கி.பி.1913 வாக்கில், உலகம் மொத்த உற்பத்தியில்இந்தியாவின்பங்கு 9சதவீதமாகியது, ஐரோப்பிய நாடுகளின் பங்கு 22.5 சதவீதமாகஉயர்ந்தது. 2 வது உலகப்போருக்குபின், பிரிட்டிஷ்சாம்ராஜ்ஜியத்தின்கட்டுப்பாட்டில்இருந்தபலகாலனிநாடுகள்விடுதலையடைந்தபிறகு, உலகமொத்த உற்பத்தியில்இங்கிலாந்தின் பங்கு வெகுவாககுறைந்துவிட்டது. 2014 ஆம் ஆண்டில் பிரிட்டனின் உலகஉற்பத்தி பங்கு 2.4% ஆகும்.ஏகாதி பத்தியம் என்றால், பின்தங்கிய மற்றும் பிற நாடுகளின் வளத்தையும், உழைப்பையும் சுரண்டுவதே. இதற்காகத்தான் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் மேலாதிக்க நடவடிக்கைகளை தொடர்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கை ஆய்வு
செய்த தோழர் லெனின் இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளாக உருவாகியுள்ளன என்றார். பின் தங்கிய நாடுகளை/சந்தைகளைக் கைப்பற்றி அந்நாட்டு வளங்களை ஏகாதிபத்திய நாடுகளுக்கு மடைமாற்றம் செய்திட நடந்ததே முதல் உலக யுத்தம். இம்முறையில் நாடுகளையும், சந்தையையும் மறுபங்கீடு செய்து கொள்ள நடந்ததுதான் இரண்டாவது உலக யுத்தம். இரண்டாவது உலக யுத்தத்தின் இறுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னுக்கு வந்தது.
இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு புரட்சி நடைபெற்று கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாடுகள் மீது அமெரிக்கா யுத்தம் தொடுத்தது. சோவியத் யூனியன், மக்கள் சீனம், இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது, சோஷலிச நாடுகள் உருவாகிவிடக் கூடாது, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கம் குறைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் அமெரிக்கா யுத்தம் தொடுத்தது.
வியட்நாமில்...
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது. வியட்நாமில் 1950ல் ஹோசிமின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி சுதந்திரம் பெற்றது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அமெரிக்க அரசு, வியட்நாமை ஆக்கிரமிக்கப் போர் தொடுத்தது. அமெரிக்காவினுடைய ஆக்கிரமிப்பால் வியட்நாமில் 3 லட்சம் வீரர்களும் 11 லட்சம் மக்களும் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவம் 3,50,000 டன் குண்டுகளை வியட்நாம் மீது வீசியது. வியட்நாம் மக்களின் வீரம்செறிந்த போராட்டத்தினால் இறுதியாக அமெரிக்கா தோற்று, வியட்நாமைவிட்டு வெளியேறியது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பால் பேரழிவைச் சந்தித்தாலும் வியட்நாம் தற்போது சோஷலிச நாடாக நடைபோட்டு வருகிறது.இப்படித்தான் கொரியா மீது யுத்தம் தொடுத்து, அந்நாட்டு மக்கள் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். வியட்நாமை, வடக்கு வியட்நாம் தெற்கு, வியட்நாம் எனப் பிரிக்க முயற்சித்த அமெரிக்க அரசு, கொரியாவை வடகொரியா, தென்கொரியா எனப் பிரித்தது.
இராக்கில்...
பேரழிவுப்பூர்வமான ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம்சாட்டி சதாம் உசேன் தலைமையிலான இராக் மீது 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா யுத்தத்தைத் தொடுத்தது. இதில் பல்லாயிரம் ராணுவ வீரர்களும், 2 லட்சத்து 50 ஆயிரம் மக்களும் கொல்லப்பட்டனர். இராக் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்த போது 10 லட்சம் குழந்தைகள் இறந்ததாக ஓர் ஆய்வு கூறுகிறது. இன்னும்கூட அமெரிக்க ராணுவம் முழுவதுமாக இராக்கைவிட்டு வெளியேறவில்லை. இக்காலத்தில் அமெரிக்கா வினுடைய பன்னாட்டு முதலாளிகள் இராக்கினுடைய இயற்கை வளமான எண்ணெய், எரிவாயுவை உறிஞ்சிவிட்டார்கள்.
2001 ஆம்ஆண்டு, ஆப்கானிஸ் தானை ஆக்கிரமித்தது அமெரிக்கா,அல்கொய்தா, தாலிபான் ஆகியவைகளுக்கு எதிராகதான்போராடுவதாகக்கூறி 20 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் அங்கேயே முகாமிட்டது.30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள்கொல்லப்பட்டனர், 60 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் காயமுற்றார்கள். 20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கானிஸ்தானைஅப்படியே கைவிட்டு வெளியேறிவிட்டது. அமெரிக்கா தன் ஆக்கிரமிப்பால் என்ன சாதித்தது?2017ஆம் ஆண்டு சிரியா மீது அமெரிக்கா யுத்தம் தொடுத்து அந்நாட்டிலும்உயிர்ச் சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது.
லத்தீன் அமெரிக்காவில்...
1972 ஆம் ஆண்டு மக்களால் சிலி நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலண்டே தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து அவரையும், நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடாவையும் கொன்றுவிட்டு அங்கு ராணுவத் தளபதி பினொசெட் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை உருவாக்கியது.
லத்தீன் அமெரிக்காவில், வெனிசுலாவில், பொலிவியாவில், பிரேசிலில், பெரு நாட்டில் இப்படியெல்லாம் அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டில் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுத்த ஆட்சிகளை கவிழ்ப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சி எடுத்ததை உலகறியும்.வங்க தேச விடுதலைப் போராட்டம் (1971) நடைபெற்ற போது அப்போராட்டத்துக்கு எதிராக அமெரிக்கா தனது 7ஆவது கப்பற்படையை அனுப்பியது. அமெரிக்கா தலையிட்டால் நாங்களும் தலையிடுவோம் என சோவியத் யூனியன் அறிவித்த பிறகே அமெரிக்கா பின்வாங்கியது.மற்ற நாடுகள் மீது, தான் தொடுக்கும் யுத்தத்தை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத்தான் என அமெரிக்கா நியாயப்படுத்தி வருகிறது. ‘அமெரிக்காவே முதன்மை’ என்ற கொள்கையை நிலைநாட்டிட எல்லா வகையான நடவடிக்கை களையும் தனது அரசு மேற்கொள்ளும் என சமீபத்தில் அதிகாரத்துக்கு வந்த ஜோ பைடன் கூறினார். இத்தகைய பிரச்சனைகளில் டிரம்புக்கும் ஜோ பைடனுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே அமெரிக்காவினுடைய பன்னாட்டு பகாசுரக் கம்பெனி களின் நலனைப் பாதுகாக்கக்கூடியக் கட்சிகள் தான்.
லெனின் சொன்னது...
இதனால்தான் ‘ஏகாதிபத்தியம் என்றால் யுத்தம்’ என்று லெனின் கூறினார். சுதந்திர நாடான கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்திட, அவ்வாட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட முயற்சிக்கும் அமெரிக்க, ஏகாதிபத்திய அரசு அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிட மறுத்து வருகின்றது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுமே அமெரிக்கா விதித்துள்ள தடையை நீக்கிடவேண்டும் என வாக்களித்தாலும் அதை அமெரிக்கா ஏற்க மறுப்பது ஜனநாயகமல்ல.கியூபா மீது விதித்துள்ள தடையை அமெரிக்கா நீக்கவேண்டும் என்று உலகம் முழுவதும் வலுவான கண்டனக் குரல் எழுந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நாமும் கியூபாவுக்கு ஆதரவாக, அமெரிக்க ஏகாதிபத்தி யத்துக்கு எதிராகக் குரல் கொடுப்போம். கியூப மக்கள் பக்கம் நிற்போம்.
கியூபா அமெரிக்கா இந்தியா
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சதவீதம் 0 15.1 21.2
எழுத்தறிவு விகிதம் 99 99.0 74.0
மருத்துவர் எண்ணிக்கை 842/10000 25/10000 8.3/10000
மாணவர் ஆசிரியர் விகிதம் 1/9 1/16 1/33
நாடாளுமன்றத்தில் பெண்கள் விகிதம் 53.2 27.4 14
மொத்த உள்நாட்டு தலா வருமானம் 8621 62530 6681
சராசரி ஆயுள் 78.8 78.5 69
மனித வள தரவரிசை 70 17 131
கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன்
படக்குறிப்பு : ஹவானாவில் மூத்த தலைவர் ரால் காஸ்ட்ரோ, ஜனாதிபதி தியாஸ் கேனல் உள்ளிட்டோர் எழுச்சி முழக்கம்.