அக்டோபர் 5, 1997 தேதியை மறக்க முடியாது. காலமெல்லாம் மகாகவி பாரதி பாடல்களை உள்ளத்தைத் தொடும் தனது தேனிசைக் குரலில் பரவசம் பொங்கப் பாடிக் கொண்டிருந்த பத்ம பூஷன் டி. கே. பட்டம்மாள் (1998இல் பத்ம விபூஷண் விருதும் பெற்றவர்), அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பாப்பா உமாநாத் உள்ளிட்ட அன்பு மனிதர்கள் எண்ணற்றோர் மத்தியில் ‘50 பாரதியார்கள்’ பாடிக் கொண்டிருந்த தருணம் அது. ஆம், திருவல்லிக்கேணி மகாகவி பாரதி இல்லத்தில் இந்திய சுதந்திரத்தின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் 50 சிறார்கள் மகாகவி வேடம் தரித்து அவரது அருமையான கீதங்களை சேர்ந்திசையாக இசைத்துக் கொண்டிருந்தனர். இசை மேதை எம்.பி. சீனிவாசன் மாணவி ராஜராஜேஸ்வரியின் வழிகாட்டுதலில் வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) சார்பில் வசந்தவல்லி பயிற்றுவித்த அந்தக் குழந்தைகள், ‘சொல் புதிது சுவை புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை’ என்று தானே அழுத்தமாக நிறுவிச் சொல்லிச் சென்ற மகாகவியின் அருமையான இசைப்பாடல்களை அற்புதமாகப் பாடினர்.
இசை நிகழ்ச்சியின் நிறைவில் தன்னிடம் ஆசி பெறச் சூழ்ந்து நின்ற மாணவச் செல்வங்களை உச்சிமோந்து நெகிழ்ந்தார் இசை வாணி டி.கே. பட்டம்மாள். காலங்களைக் கடந்து நிற்கும் கவிதைகள் எனும் கம்பீரம் அது. இன்றும் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று டி.கே. பட்டம்மாள் அவர்களது இசைக்குரல் எங்கும் ஒலிப்பதைக் கேட்க முடியும்.
அந்தப் பாடலின் வரிகளில் மகாகவி, சுதந்திர இந்தியாவில் உறுதி செய்ய நினைத்த விஷயங்களின் பட்டியலைப் பார்ப்போம். ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு. நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’. அடுத்தது, ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்’. அதனையடுத்து வருவது இன்னும் முக்கியமானது: ‘நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம்....பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்’ 1882 டிசம்பர் 11இல் பிறந்து 39 ஆண்டுகளே வாழ்ந்து 1921 செப்டம்பர் 11இல் மறைந்த மகாகவியின் இந்த பிரகடனத்தைக் கிஞ்சிற்றும் மதியாத ஒருவர்தான், அண்மையில் நாடாளுமன்றத்தில் அவரது கவிதை வரிகளைக் குறிப்பிட்டுள்ளார். ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று மகாகவியின் புகழ்வாய்ந்த வரியைப் பாடினார் என்று தமிழ் ஏடுகள் சில ‘சிலிர்ப்போடு’ தலைப்புச் செய்தி போட்டு இருந்தன. எழுத்து ரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை மறுக்கும் ‘பொற்கால’ ஆட்சியின் பிரதமர் மோடியின் வாய் ஜாலத்திற்கு வண்ணமடிக்கும் வேலை அது. சாதி, இன, மத வேற்றுமைகளை முதலீடு ஆக்கி மக்களிடையே கலகங்களை ஓயாது மூட்டிக் கொண்டிருக்கும் சங் பரிவாரத்தின் அட்டகாசங்கள் தேசத்திற்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சேதங்கள் வேதனைக்குரி யவை. சமத்துவத்திற்கு எதிரான கோட்பாடு அவர்களுடையது.
வேளாண் துறை முன்னெப்போதையும் விடப் பெருந்துயரில் தத்தளித்துக் கொண்டி ருக்கும் காலமிது. எண்ணூறுக்கும் அதிகமானோர் உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்த 370 நாள் தொடர் போராட்டத்தைத் தலைநகரில் நடத்திய விவசாயிகளின் பேரெழுச்சியில் மிரண்டு போன ஒன்றிய ஆட்சியாளர்கள் அதை ஒடுக்க என்னவெல்லாம் செய்தனர்? மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகக் கூறிக் கொண்டாலும், அப்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கமே இல்லை. கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். தனக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் தந்தை தானாபாய் ஜாதவ் (60) தற்கொலை செய்து கொண்டதை அறிந்து துடித்துப் போன 28 வயது பரத் ஜாதவின் கண்ணீரை இரட்டை எஞ்சின் ஆட்சியாளர்கள் ஒருபோதும் துடைக்கப் போவதில்லை. ஒன்றிய ஆட்சியாளர்கள் பருத்தி இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாட்டை முற்றிலுமாக நீக்கிய காரணத்தால் தங்களது பயிருக்கும், உயிருக்கும் மரியாதை இல்லை என்று நொந்து கொண்டு தங்களது இன்னுயிரை நீத்துக் கொண்ட பருத்தி விவசாயிகள் அவர்கள். ஆலை முதலாளிகள் கொள்ளை லாபம் அடிக்க அவர்களுக்கான கச்சாப் பொருளை மலிவாக அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்து உள்நாட்டு விவசாயிகள் பாடுகளைப் பதம் பார்க்கிறது பாஜக அரசு.
தொழிலாளிக்கும் இந்த ஆட்சியின் பரிசு என்ன? இந்திய பெருமுதலாளிகளின் மூன்று முக்கிய சங்கங்கள் (CII,ASSOCHAM,FICCI) 2002 ஆகஸ்ட் மாதம் ‘பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்று நாளேடுகளில் ஒரு முழு பக்க விளம்பரம் கொடுத்திருந்தன. ‘வேலைவாய்ப்புக்கு விரோதமான அத்தனை சட்டங்களையும் உடனே நீக்குக’ என்ற வாசகங்களோடு தொடங்கி இருந்தது அந்த விளம்பரம், தாங்கள் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கத் துடித்துக் கொண்டிருப்பதாகவும், தொழிற்சங்க சட்டம் (1926) , தொழில் தகராறு சட்டம் (1947) போன்றவை அந்தத் “தூய்மை யான நல்லெண்ணத்திற்கு” இடையூறாக இருப்பதாகவும் அவர்கள் அளந்திருந்தார்கள். ‘தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப யாரையும் வேலைக்கு வைக்கவும், யாரையும் வேலையை விட்டுத் தூக்கவும் தங்களுக்கு அதிகாரம் இல்லையே’ என்று ஓசைப்படாமல் தங்களது ஏக்கத்தை அதில் நுட்பமாக வடித்திருந்தனர். 1991இல் புதிய தாராளமயக் கொள்கைகளை உற்சாகமாக வரவேற்ற முதலாளிகள் உலகம், தொழிலாளர் சட்டங்களை ஏன் இன்னும் அப்படியே வைத்திருக்கிறீர்கள், சந்தைமயத்திற்கு ஏற்ப அவற்றைத் திருத்தி எழுதுங்கள் என்று தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்துக் கொண்டே தான் இருந்தனர்.
இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்கள், ஒன்றுபட்ட பிரம்மாண்டமான வேலை நிறுத்தங்கள் காரணமாக அவர்கள் தற்காத்து வைத்துக் கொண்டுவந்த உரிமைகளின் மீது எப்போது தாக்குதலைத் தொடுப்பது என்று கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசும் காத்திருந்தது. 2019/2020 ஆண்டுகளில் எந்த விவாதங்களும் இன்றி 29 சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக நிறைவேற்றி வைத்திருந்தவர்கள், அண்மை யில் பீகார் தேர்தல் வெற்றியின் எக்களிப்பில் நடைமுறைப்படுத்தத் துணிந்து விட்டனர். உழவுக்கும், தொழிலுக்கும் அல்ல வந்தனை, வேளாண் துறையையும் தொழில் துறையையும் கார்ப்பரேட் உலகின் காலடியில் வைத்து அவர்களுக்கே வந்தனை என்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. நாமிருக்கும் நாடு நமது, பூமியில் யாருக்கும் இனி அடிமை செய்யோம் என்ற பாரதியின் உயிர்ப்பு மிக்க முழக்கங்கள் எங்கே? அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் ‘தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று வீழ்ந்து கிடக்கும் இன்றைய அரசின் வெளியுறவுக் கொள்கை எங்கே!
‘தாயின் மணிக்கொடி பாரீர்’ எனும் கவிதையை மேலாகப் பாடி நிறுத்தினால் எப்படி.... ‘இந்திரன் வச்சிரம் ஓர் பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர் பால்...’ என்று எல்லா சமயத்தாரையும் உட்கொள்ளும் சமூக அமைப்புக்கு பாரதி குரல் கொடுப்பதும், வாக்கு கணக்கு எடுப்பு எனும் பெயரில் ‘வேண்டாதார்’ வாக்குகளை எல்லாம் எடுத்துவிடும் உத்தியைத் தேர்தல் ஆணையத்தின் மூலம் எஸ் ஐ ஆர் என்று இவர்கள் முன்னெடுப்பதும் எந்தப் புள்ளியில் சந்திக்க? ‘சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பதுபோல் வந்தே மாதரம் என்பார், கிளியே, மனத்தில் அதனைக் கொள்ளார்’ என்று ‘நடிப்புச் சுதேசிகளான’ இவர்களை தீர்க்க தரிசனமாகத் தனது காலத்திலேயே கண்டுணர்ந்து எழுதிய மகாகவியின் மற்றுமொரு முக்கியமான கவிதை வரிகள் ஏனோ இப்போது கண்ணில் பட்டன.
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை
பிணிகள் பலவுண்டு பொய்யைத்
தொழுது அடிமை செய்வாருக்குச் செல்வங்கள் உண்டு
உண்மை சொல்வோர்க்கு எல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,
தூக்குண்டே இறப்ப துண்டு.....
.........
இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால்
வனவாசம்.....
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்....
என்றெல்லாம் போகிற இந்தக் கவிதை வரிகள், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் காட்டாட்சியை நினைவூட்டு கின்றன அல்லவா.... உள்ளபடியே மகாகவி பாரதி, ‘இரணியன் போல் அரசாண்டான் ஜார் எனும் பேர் இசைந்த பாவி....’ என்று குறிப்பிட்டு அப்போது ருஷ்ய நாட்டு மக்கள் பட்ட அவதியை விவரித்து அதற்கு எதிராக மக்கள் கனன்று எழுந்த புரட்சியைக் கொண்டாடி எழுதிய கவிதைத் தெறிப்புகள் இவை... மகாகவி பிறந்த நாள் அறச் சீற்றத்தின் புதுப்பித்தலுக்கான நாள். ‘பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது’ என்று பாப்பாவுக்கே கற்பித்தவன் பாரதி. அநீதியை எதிர்த்து நின்று போராடவும், அராஜகங்களை மோதி மிதித்து நிமிர்ந்து எழவும் நம்மை உரம் கொள்ளவைக்கும் நாள் அது. எட்டயபுரத்தானைக் கொண்டாடுவோம் எட்டு திக்குகளிலும்!
