மக்களின் வாழ்வு மேம்பட பொதுவுடமை இயக்கம் எழுச்சி பெற வேண்டும்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேச்சு
சீத்தாராம் யெச்சூரி நகர் - மதுரை, ஏப். 3 - ஏழை மக்களின் வாழ்வு மேம்பட பொதுவுடமை இயக்கம் எழுச்சிபெற வேண்டும் என்று தமிழறிஞர் சாலமன் பாப்பையா கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாட்டின் ஒருபகுதியாக, புதன்கிழமை மாலை தோழர் கே.பி. ஜானகியம்மாள் நினைவு மேடையில் கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில், கலந்து கொண்டு, தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசியதாவது:
என் தந்தை கோட்ஸ் ஆலை கூலித் தொழிலாளி
“பொதுவுடமை இயக்கம் 1945-களில் இருந்து எனக்கு பழக்கமான இயக்கம் தான். நான் தொழிலாளி வீட்டுப் பிள்ளை. இப்போது மதுரா கோட்ஸ் எனப்படும் ஹார்வி மில்லில் தான் எனது தகப்பனார் பஞ்சுப் பொதி தூக்கும் கூலியாக வேலை பார்த்தார். அங்கு 15 ஆயிரம் பேர் வேலை பார்த்தனர். அந்த தொழிலா ளர்களின் மரியாதைக்காகவும், உரிமைக்காகவும் போராடிய இயக்கம் கம்யூனிச இயக்கம். அவர்கள் ஏழைத் தொழிலாளர்களை எழுச்சி பெறச் செய்தனர்.
கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சு கேட்டு வளர்ந்தேன்
திரையரங்குகளில் 2 அணா, இரண்டரை அணா டிக்கெட். அதை வாங்குவது ஏழைகளுக்குப் பெரிய காரியம். அப்போது பொழுதுபோக்க வேறு வழியே கிடையாது. எங்கள் பகுதி முழுவதும் மார்க்சிய பொது வுடமை இயக்கம் தான் இருக்கும். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று சிறையில் இருந்து பி. ராம மூர்த்தி, என். சங்கரய்யா விடுதலையாகி, திலகர் திடலில் பேசுகின்றனர். அவர்கள் பேசியது என்ன வென்று அந்த சிறிய வயதில் எனக்குப் புரியாவிட்டா லும், நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச்சைக் கேட்டேன். அதுபோல் இடைவிடாமல் பொதுவுடமை இயக்கக் கூட்டங்களைக் கேட்போம்.
கம்யூனிஸ்டுகள் உணர்ச்சி ததும்ப பேசுவார்கள்
மகாகவி பாரதி குறித்து 1962-இல் ஜீவா பேசிய பேச்சைக் கேட்டிருக்கிறேன். கே.பி. ஜானகியம்மாள் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அதன்பிறகு கலை இலக்கிய பெருமன்ற மேடையில் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து பேசுவதற்காக எட்டயபுரம், புதுக்கோட்டை என பல ஊர்களுக்கும் போய் இருக்கிறோம். ஆவேசமாக, உணர்ச்சி வேகமாக, எழுச்சி ஏற் படுத்தும்படி கம்யூனிஸ்டுகளின் பேச்சு இருந்தது. கஞ்சிக்கு இல்லாததால், அதை எதிர்பார்த்து காத்தி ருந்த காலம் அது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், “கையில வாங்கினேன், பையில போடல, காசு போன இடம் தெரியல..”என்று எளிய மக்களுக்குப் புரியும் வகையில் பாட்டெழுதினார்.
பண்டைக் காலத்திலும் கஞ்சிக்கு இல்லாத நிலை
புறநானூற்றுப் புலவர் மோசிகீரனார் குறுநில மன்னனைப் பார்த்து இரண்டு கூட்டம் இருக்கிறது. ஒன்று கைதானவர்களுக்காக- திரை (வரி) கொண்டு வந்து கொடுத்து மீட்க வந்த கூட்டம். மற்றொன்று புலவனுக்குக் கடன் கொடுத்தவனெல்லாம் வந்து நிற்கும் கூட்டம். எனவே குறுநில மன்னன் புலவர்க ளுக்கு அதற்கேற்ப பரிசு கொடுக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார். கீழடி பெருமை தான் நமக்கு. செழிப்பான நகரில் வணிகப் பெருமக்கள் வியாபாரம் செய்து வாழ்ந்த இடத்தில் தான், ஏழை குடிமக்களும் வாழ்ந்திருப்பார் கள். இப்போது கஞ்சி குடிப்பதற்கில்லாத, காரணம் இது என்ற அறிவுமில்லாத அந்த மக்களின் வாழ்வு மேம்பட, மார்க்சிய இயக்கம், பொதுவுடமை இயக்கம் மலர வேண்டும்.
சோவியத் புரட்சி மூலம் எழுச்சி பெற்ற நாடுகள்
சோவியத் யூனியன், செஞ்சீனம் எழுச்சி பெற்று உருவானது. ஹங்கேரி, போலந்து, செக்கோஸ்லோ வாக்கியா, பல்கேரியா, யுகோஸ்லாவியா என சோசலிச நாடுகள் இருந்த நிலையைத் திரும்பிப் பார்க்கிறேன். இல்லாத மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, உழைத்துக் கொடுக்கும் ஏழைகளுக்கு பாடுபடும் இயக்கங்கள் மலர்ச்சி பெற வேண்டும். இனி இந்த மண்ணில் கம்யூனிச இயக்கங்கள் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல, மார்க்சிய இயக்கம், பெரியாரிய இயக்கம், அம்பேத்கரிய இயக்கம் மூன்று பதாகைகளின் கீழ்தான் எழ வேண்டும். அப்போது தான் இந்த மண் செழிக்கும். தனித்துப் போராடிப் பய னில்லை. காலம் மிகக் கடுமையான காலமாக இருக்கி றது. கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எனவே, அதற்கேற்ப உற்சாகப்படுத்தவும் வேண்டும் என்பதற்காகத் தான் கனிவாக, துணிவாக என் சிந்தனையைப் பகிர்ந்து கொள்கிறேன்.” இவ்வாறு சாலமன் பாப்பையா கூறினார்.