articles

img

சமத்துவத்தை வலியுறுத்தும் இடதுசாரிகளால் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்

சமத்துவத்தை வலியுறுத்தும் இடதுசாரிகளால் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்

திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் பேச்சு

சீத்தாராம் யெச்சூரி நகர்- மதுரை, ஏப். 3- எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவத்தை வலி யுறுத்தும் இடதுசாரிகளால் தான் நாட்டைப் பாதுகாக்க முடியும் என்றார் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன். மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி நடைபெற்ற கலை நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

நாட்டின் திசைவழியைத் தீர்மானிக்கும் மாநாடு

அடுத்த சில ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பை யும், மக்களின் ஜனநாயகத்தையும்  தீர்மானிக்கப்போவது இந்த மாநாடு தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மாநாடு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் என்னைப் போன்ற வர்களையும் பேச வாய்ப்பளித்த தோழர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எளிய மனிதர்களுக்கு பேச வாய்ப்பளிப்பது  இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே.

மனித குலத்திற்கான தத்துவம் கம்யூனிசம்

மேடைக்கு வந்தவுடன் திரைப்பட நடிகர் சசிக்குமார், என்னைப் பார்த்து, நீங்கள் கம்யூனிஸ்ட் தானே எனக்கேட்டார். அதற்கு நான், நீங்களும் கம்யூனிஸ்ட் தான் உங்களைப் பற்றி எனக்குத் தெரியுமென்றேன். தமிழ்ச் சினிமாவில் சிறந்த மனிதர்களில் ஒருவர் சசிக்குமார். சிறந்த மனிதர்கள் தான் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும். கம்யூனிஸ்ட் என்பது கட்சி அல்ல. எல்லோருக்குமான  (மனித குலத்திற்கான) ஒரு தத்துவம்.  சமத்துவத்தை ஆதரிக்கும் சிறந்த மனிதர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்டுகள் தான்.

என்னை கம்யூனிஸ்ட்டாக  நான் உணர்ந்த தருணம்

நான் என்னை எப்போது கம்யூனிஸ்ட்டாக உணர்ந்தேன் என யோசித்தேன். எனது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் விதைப்பு முதல் அறுவடை வரை பணிகளை மேற் கொள்ளும் விவசாயக்கூலித் தொழிலாளி ஒரு ஆதிக்க சாதி யினரின் வீட்டில் நெல் மூடைகளை அடுக்கும் இடம்வரை தான் வருவார். அவர்களால் ஏன் வீட்டின் கூடத்திற்குள் வரமுடிய வில்லை. அல்லது ஏன் வரவிடவில்லை என உணர்ந்த போதா? தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கத்திலிருந்து எனது அண்ணன் ஒரு தகரப் பெட்டியில் கொண்டு வந்த செம்மலர் இதழ்களில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ‘நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன்’ என்ற தொடரைப் படித்ததாலா? துப்பாக்கி கையிலிருந்தும் சொந்தமக்களுக்காகப் போ ராடிய தமிழரசன், பொன்பரப்பியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் துடிதுடிக்கச் செத்தான்   என்ற கவிதையைப் படித்த தாலா? சார்லி சாப்ளின் நடித்த ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில் ஒரு பக்கம் மக்கள் ஆலைக்கு கூட்டம் கூட்டமாகச் செல்வார் கள். மறு பக்கம் ஆடுகள் மந்தை மந்தையாக செல்வதை காட்சிப் படுத்தியிருப்பார்கள். ஏன் இந்த நிலை என யோசித்ததாலா?

தாய்மை தான் கம்யூனிசம்

இவற்றையெல்லாம் தாண்டி, எனது தாய் என்னுடன் பிறந்த நான்கு பேருக்கும் தாய்ப்பாலை சமமாகப் பிரித்துக் கொடுத்தாரல்லவா, அப்படி எனது தாயிடம் இருந்த சமத்து வத்தை உணர்ந்த போது தான் கம்யூனிஸ்ட் ஆனேன். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்ற எனது தாயின் சிந்தனை தான் கம்யூனிசம். தாய்மை தான் கம்யூனிசம். நான் பத்திரிகையாளர்,  எழுத்தாளர், திரைப்படக் கலைஞர் என இருபதுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்திருக்கிறேன். அப்போது என்னை எழுத்தாளர், திரைப்படக்கலைஞர் என அழைப்பார்கள். அப்போது நான் பெருமையடைவில்லை. என்னை தோழர், தோழர் ராஜூமுருகன் என்று அழைத்த தைத்தான் பெருமையாகக் கருதினேன். என்றைக்கும் நான் தோழனாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறேன்.

கம்யூனிஸ்ட் என்பதையே  அடையாளமாக விரும்புகிறேன்

தமிழ்ச் சினிமா பரப்பில் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்து கொண்டு இயங்குவது சாத்தியமா? தொடர்ந்து படங்கள் செய்ய முடியுமா என்ற சிக்கல்களும் எல்லோரைப்போல் எனக்கும் உள்ளது. சினிமாவா? வியாபாரமா? என்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே இருக்க விரும்புகிறேன். இன்றைக்கு நாடு இக்கட்டான சூழலில் உள்ளது. இதில்  மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்கான மாற்றுத் தத்துவத்தை முன்வைக்கக்கூடியது மார்க்சிய தத்துவம் மட்டுமே. இதுவே மாற்று அரசியலுக்கான வழிகாட்டி. பெரியாரும், அம்பேத்கரும்  கம்யூனிஸ்டுகள் தான் வர்ணாசிரமத் தத்துவத்திற்கு எதிராகவும், வர்க்கப் பிளவுகளுக்கு எதிராகவும் போராடக்கூடிய ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை கம்யூனிஸ்ட்டாகவே பார்க்கிறேன். இரு வரும் மார்க்சிய தத்துவத்தையும், இடதுசாரி தத்துவத்தையும் முழுமையாக உள்வாங்கியவர்கள். இன்றைக்கு நம் கண் முன்னால் உள்ள பிரதான எதிரியை வீழ்த்த இடதுசாரிகள் ஒற்றுமை அவசியம். சமாதிகளைத் தோண்டும்  பாஜக அரசியல் மறைந்து போன ஔரங்கசீப் உள்ளிட்ட பலரின் வரலாற்றைத் தோண்டி எடுத்து நம்மை சவக்குழிக்குள் தள்ளும் வேலையை பாஜக செய்துவருகிறது. வேலை வாய்ப்புத் திட்டம் என்னவானது எனக் கேட்டால் ஜெயிலில் இருந்த பகத்சிங்கை காங்கிரஸ்காரர்கள் பார்க்கவில்லை என பொருத்தமற்ற பதில்களைக் கூறி நம்மை மடை மாற்றம் செய்கின்றது. தேர்தல் என்று வந்துவிட்டால் சில கட்சிகள் மக்களைச் சந்தித்து தங்களது கொள்கைகளைச் சொல்லி வாக்குகள் கேட்பதில்லை. மாறாக வியூக வகுப்பாளர்களைச் சந்தித்து பல கோடிகளை கொடுக்கின்றனர். பாஜக அமைச்சர்கள்  ஊழலே செய்யவில்லை என்கின்ற னர். ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளைப் பெற்றுள்ளனர். 25 ஆயிரம் கோடி ரூபாயை தேர்தலுக்காக செலவிடும் கட்சி வெற்றி பெற்று மக்களுக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறது. கலை வடிவங்களை அதிகம்  பயன்படுத்த வேண்டும் பணத்தை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மத்தியில் உண்டியல் மூலம் நிதி திரட்டி, மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி, போராட்டம் நடத்தி அதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே. ஏழை-எளிய மக்களின் மனங்களை இடதுசாரிகள் பக்கம் திருப்பவேண்டும். அதற்காக கலை வடிவங்களை அதிக மாகப் பயன்படுத்த வேண்டும். தமுஎகச போன்ற அமைப்பு கள் ஏராளமான கலைஞர்களை உருவாக்க வேண்டும். தமுஎகச வீரியமாக செயல்படுகிறது. அது தன் வீரியத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். மக்களின் உரிமைகளும், மதச்சார்பற்ற தன்மையும் பாதுகாக்கப்படுவது நம்மால் தான். அது கம்யூனிஸ்ட்டுகளால் தான் முடியும். நான் எப்போதும் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் பக்கமே நிற்பேன். இவ்வாறு ராஜூ முருகன் பேசினார்.