articles

img

இன்றைக்கும் தேவைப்படும் முன்னுதாரண மனிதர்! - களப்பிரன்

“ஜவஹர்லால் நேரு, ஒற்றை மனிதராக இருக்கவில்லை. மாறாக, மனிதர்களின் ஒரு தொகுப்பாக இருந்தார். அவருள், ஒரு தேசிய மாமனிதன், இராஜதந்திரி, தத்துவவாதி, வரலாற்றாசிரியர், நூலாசிரி யர், கல்வியாளர் ஆகிய தொகுப்பை ஒருவர் காணலாம். மேலும் அவர் முரண்களின் ஒரு வெற்றிகரமான கலவையும் ஆவார். அவர், உலகில் மிகமிகப் பரவலான மற்றும் சிக்கலான மத அமைப்பைக் கொண்ட ஒரு தேசத்தை தலைமை தாங்கும் ஓர் உச்சபட்ச  பகுத்தறிவுவாதி”

-நார்மன் கசின்ஸ்

இந்தியா போன்ற மிகவும் சிக்கலான, பல பண்பாடு கொண்ட நாட்டில், பிற்போக்கான தலைவர்கள் பலர் அரசியல் களத்தில் நிறைந்திருந்த நாட்டில், முதல் பிரதமராக ஒருவர் வருவது எவ்வளவு சவால்மிகுந்தது என்பதை மேற்கண்ட நார்மன் கசின்ஸ் அவர்களின் வரிகள் ஓரளவு நமக்கு உணர்த்தும்.  நேருவால் ஒட்டுமொத்த இந்தியாவாலும் நேசிக்கப் பட்ட ஒரு வெற்றிகரமான தலைவராக இருக்க முடிந்தது. காரணம், இந்தியாவை வடக்கு தெற்கு என்று விருப்பு வெறுப்பில்லாமல் மொத்த இந்தியாவையும் ஒரே தட்டில் வைத்து புரிந்துகொள்ள அவர் எண்ணியது தான். அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

சிந்துச் சமவெளி நாகரிகம்

1931இல் சிறையில் இருந்து கொண்டு தன் மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதத்தில், “ஆரியர்கள் ‌இந்தியாவுக்கு வந்தபொழுது அது ஏற்‌கனவே நாகரிகம் ‌வாய்ந்த நாடாக இருந்தது. மொஹஞ்சதாரோவில்‌ நமக்குக்‌ கிடைத்திருப்பனவற்றிலிருந்து ஆரியர்க ளின் ‌வருகைக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இந்தி யாவின்‌ வடமேற்குப் ‌பாகத்தில் ‌ஒரு பெரிய நாகரிகம் இருந்திருக்க வேண்டும் ‌என்பது தெளிவாகத்‌ தெரி கிறது” என்று கூறியிருக்கிறார். அதோடு, “இந்த நாகரி கம் ‌மொஹஜ்சதாரோவிலும் ‌ஹரப்பாவிலும் ‌மட்டும் ‌தான் ‌இருந்ததென்று சொல்வதற்கில்லை. அது அநேக மாக இந்தியா எங்கணும் ‌பரந்ததாகவே இருந்திருக்க வேண்டும்‌. இந்த இரண்டு இடங்கள்‌கூட ஒன்றுக்‌ கொன்று வெகு தூரத்தில் ‌உள்ளவையே” என்று சிந்து வெளி நாகரிகம் வேத காலத்தைவிட பழமையானது, அது இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்று தான் அறிந்த உண்மைகளை மனதார ஏற்றுக்கொண்டு சொல்கிறார்.  அதோடு “அதுமட்டுமின்றி, தென்‌இந்தியாவில்‌ மட்டுமல்ல வட இந்தியாவில் ‌கூட - திராவிடர்களின் ‌நாகரிகம் ‌மிகவும் சிறப்புற்றிருந்தது என்பது தெளி வாகத்‌ தெரிகிறது. அவர்களுடைய பாஷைகள் ‌ஆரி யர்களின் ‌சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல. மிகவும் ‌பழமையான அப்பாஷைகளில் ‌சிறந்த இலக்கி யங்கள் ‌காணப்படுகின்றன. இம்மொழிகள் ‌தமிழ்‌, தெலுங்கு, கன்னடம்‌, மலையாளம் ‌ஆகும்‌. இவை தென்‌ இந்தியாவில் ‌இன்றைக்கு வழங்‌கி வருகின்றன” என்று சொல்கிறார். அது நாள் வரை இந்தியாவின் நாகரிகம் வேதகால நாகரிகம் என்ற பல நூறாண்டு கால நம்பிக்கையை அவ்வளவு எளிதில், அதுவும் வேத காலத்தை நம்பிய ஒரு அரசியல் தலைவரால், சமஸ் கிருத மொழிமீது பற்றுக் கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவரால், அதுவரை நம்பியவை தவறானவை என்று தெரிந்த பின் எந்தச் சலனமுமின்றி அதை மறுத்து, உண்மைக் கருத்தை வெளிப்படுத்த இயலுமா என்றால் நேருவைத் தவிர வேறு யாருக்கும் அந்தத் தெளிவு அன்றைய அரசியல் களத்தில் இல்லை என்பதே யதார்த்தம்.

தென்னிந்தியா

தென்னிந்தியாவைப் பற்றி அன்றைய காங்கிரசில் இருந்த வட இந்தியத் தலைவர்களுக்கு இருந்த பார்வை யிலிருந்து நேருவின் பார்வை முற்றிலும் வேறானது. அவர் தென்னிந்தியாவை மிக உயர்வாக எண்ணி மதித்தார். 1932இல் அவர் எழுதிய குறிப்புகளில் “பழைய இந்தியக் ‌கலையின் ‌மாதிரியைக் ‌காண வேண்டுமா னால் ‌நாம்‌ தென்‌ இந்தியாவுக்குத்தான்‌ செல்ல வேண்டும்‌. அரசியல் ‌துறையில் ‌தென்னாட்டு ஜனப் பிரதிநிதி சபைகள்,‌ அரசர்களின்‌ அதிகாரத்தை ஒரு கட்டுக்குள் உட்படுத்தி வைத்திருந்தன என்று கிரேக்க  யாத்ரீகராகிய மெகஸ்தனிஸ்‌ கூறுகிறார்” என்று சொல்கிறார்.  “தென் ‌இந்தியாவுக்கும் ‌ஐரோப்பாவுக்கும் ‌இடையே நல்ல வியாபாரம் ‌நடந்து கொண்டிருந்தது. முத்து, பொன்‌, தந்தம்‌, அரிசி, மிளகு முதலியவைக ளும்‌, மயில்களும்‌, குரங்குகளுங்கூட‌ பாபிலோன்‌, எகிப்து, கிரீஸ் ‌ஆகிய நாடுகளுக்கும்‌, பிறகு ரோமா புரிக்கும் ‌அனுப்பப்பட்டன” என்று சொல்லிவிட்டு “திரா விடர்களால்‌ ஓட்டப்பட்ட இந்தியக் ‌கப்பல்களிலே இப் பொருட்கள் ‌பெரும்பாலும் ‌கொண்டு செல்லப்பட்டன.  புராதன உலகத்தில் ‌தென்னிந்தியா எத்தகைய உன்னத ஸ்தானம்‌ வகித்துள்ளது. தென்‌ இந்தியா வில் ‌பல ரோமாபுரி நாணயங்கள் ‌கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன” என்கிறார்.  அதோடு “வட இந்தியாவை விடத்‌ தென்னிந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம்‌ பெரும்பாலும்‌ தென்னிந்தியாவுடன் ‌தான் ‌நடைபெற்று வந்தது. பழந்தமிழ்ப் ‌பாடல்களிலே ‘யவனர்’களைப்‌ பற்றிய குறிப்புகள் ‌மிகுந்து காணப் படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள்‌, பூந்தாழி கள்‌, அணிவிளக்குகள் ‌முதலியவற்றைப் பற்றித் ‌தமிழ்‌ நூல்கள் ‌கூறுகின்றன. ‘யவனர்’ என்ற சொல்‌ முதலில் ‌முக்கியமாக‌ கிரேக்கர்களை ‌குறித்து நின்றது. பிறகு அந்நிய நாட்டவர் ‌அனைவருக்கும் ‌அப்பெயர் ‌பொது வாக வழங்கலாயிற்று” என்கிறார் நேரு. இன்றைக்கு உள்ள வட இந்திய ஆய்வாளர்களே கண்டுகொள்ளாத தென்னிந்தியா குறித்த பல பார்வை கள் 1930களில் நேருவிற்கு இருந்தது தான் அவர் நேர்மையின் அடையாளம்.

மொழிக்கொள்கை

இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு நேரு உறுதியளித்த “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அலுவல் மொழியாக, தொடர்பு மொழியாக தொடரும்” என்கிற வாக்குறுதியே கிட்டத்தட்ட அவரது மொழிக் கொள்கை ஆகும். இன்றைய ஆட்சியாளர்கள் ஐபிசி  என்கிற இந்திய தண்டனை சட்டம் தொடங்கி பல  சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருத பதம் கொண்ட இந்திக்கு பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள். ஆனால் 1948இல் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழி பெயர்ப்பு வரைவு வந்த பொழுது அதை கடுமை யாக கண்டித்தார் நேரு.  அதற்கு நேரு சொன்ன காரணம்: “அதில் ஒரு சொல்லைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை. புரியாததற்குக் காரணம் அந்த இந்தி முழுக்க முழுக்க சமஸ்கிருதமயப்படுத்தப்பட்டது என்பதே” என்று சொல்லியதோடு, இராஜேந்திர பிரசாத் அவர்களி டம், “அயர்லாந்தில் அவர்கள் மொழியான காலிக் மொழியில் அவர்கள் அரசியல் சட்டத்தை மொழிபெயர் க்க முயற்சித்துவிட்டு அதில் ஏற்பட்ட குழப்பத்தால் மீண்டும் ஆங்கிலத்திற்கே மாறிவிட்டனர். ஆகவே வளர்ச்சியடையாத இந்தி மொழிக்கு அரசியல் சட்டத்தை மொழி மாற்றி குழப்ப வேண்டாம்” என்று வலி யுறுத்தினார்.  அதோடு இந்தி மொழி கூட எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து “அனைத்து மாநிலத்து க்குமான இந்தி மொழி எப்படி இருக்க வேண்டும் என்றால், சமஸ்கிருதம் உள்ளிட்ட பண்டிதர்களின் மொழியாக அது இருக்கக்கூடாது. எளிய மக்கள் பேசும் இந்தி மொழியாக, அதோடு இந்துஸ்தானி மற்றும் உருது கலந்த இந்தி மொழியாக அது இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.  மதச்சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறு பான்மையினர் தங்கள் தாய் மொழியில் ஆரம்பக் கல்வி யை கற்கும் விதத்தில் சட்ட உருவாக்கத்தை வலி யுறுத்தியதோடு, அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழி யை கட்டாய மொழிப்பாடமாகவும் சேர்த்துக்கொள்ளச் சொன்னார். 

மதவாதம்

நேரு பிரதமராக இருந்த 17ஆண்டுகளில் எந்த மத வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்றதில்லை. அதே போல் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று வந்த மூத்த  தலைவர்களையும் அவர் கண்டிக்க மறந்ததில்லை.  இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மதவாதம் தேச விரோதமாகவும், பெரும்பான்மை மதவாதம் தேசபக்தி யாகவும் பார்க்கப்படுகிற சோகம் குறித்து பல இடங்க ளில் பதிவு செய்கிறார். “வகுப்புவாதத்தை கொஞ்சமும் விரும்பாத நான், வெறும் அடக்குமுறையால் அதை நீக்க முடியும் என்று நம்பவில்லை. சிறுபான்மையினர் மனங்களில் தோன்றும் அச்சத்தை போக்குவதன் மூலம் தான் வகுப்புவாதத்தை பலவீனமடையச் செய்ய முடியும்” என்று நம்புகிறேன் என்று சொன்னார். இவ்வாறு நேருவிற்கு இருந்த மதம், மொழி, இனம், பண்பாடு குறித்த தெளிந்த மற்றும் பரந்த சிந்த னையே அவரை ஒட்டுமொத்த தேசத்தின் தலைவ ராக இன்றும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. அவர் மறைந்து 60 ஆண்டுகள் கழித்தும் அவரது சிந்தனை கள் மற்றும் எழுத்துக்கள் வழியாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.