articles

img

அகில இந்திய மாநாடு 2

பொன்மலை தியாகிகள் உயிர்த் துடிப்புள்ள முழக்கம்

1945ஆம் ஆண்டில் இரண்டாவது உலக யுத்தம் முடிவுற்றது. இந்த பின்னணியில் 2 லட்சம் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்ட ரயில்வே நிறுவனங்கள் முடிவு செய்தன. தென்னிந்திய ரயில்வேயின் 10 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யவும் நிர்வாகம் திட்டமிட்டது.

போராட்ட எரிமலை

பழிவாங்கும் படலத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்க தொழிலாளர்கள் தயாரானார் கள். போராட்ட எரிமலையை சமாளிக்க சதிவலை களை நிர்வாகம் பின்னியது. விசாரணையின்றி வேலைநீக்கம் செய்யும் புதிய பிரிவை விசாரணை சட்டத்தில் சேர்த்தது. இந்த பிரிவின் கீழ் பொன்மலை பணிமனையின் பெயிண்டிங் பிரிவில் பணியாற்றிய 7 தொழிலாளர்களை 1946 ஜூலை 22ஆம் தேதி வேலைநீக்கம் செய்தது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பணி மனைக்குள் பரவியது. நொடிப் பொழுதில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் வெடித்தது. மறுநாள் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கியது. சங்கத்தின் தலைவர் எம்.கல்யாணசுந்தரம், பொதுச் செயலாளர் கே.அனந்தநம்பியார் தென்னிந்திய ரயில்வே பொது மேலாளரை சந்தித்தனர். கோரிக்கை எதையும் ஏற்கமுடியாது என்று நிர்வாகம் மிரட்டியது. வலுமிக்க தொழிற்சங்கம்  நிர்வாகத்தின் சவாலை ஏற்றது. பொன்மலை பணிமனை வேலைநிறுத்தம் தென்னகம் முழுவதும் (தமிழகம், கேரளம், ஆந்திரா) வேலைநிறுத்தமாக மாறியது. ரயில்நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. ரயில் ஓட்டம் நின்றதால் தண்டவாளங்களில் புல் முளைத்தது. வேலை நீக்கம், அச்சுறுத்தல் எதுவும் பலிக்காத நிலையில் கொலைவெறியாட்டத்தில் இறங்க நிர்வாகம் முடிவு செய்தது.  1946-செப்டம்பர் 5ஆம் நாள்-காலைநேரம் பொன்மலை சங்கத் திடலில் தொழிலாளர்கள் பெரும் திரளாக குழுமியிருந்தனர். போலீஸ் அதிகாரி ஹாரிசன் என்பவன் தலைமையில் மலபார் ஸ்பெஷல் போலீஸ் படை (MSP) சங்கத் திடலை சுற்றி வளைத்தது. முன்னறிவிப்பு எதுவுமின்றி போலீஸ் படை கண்மூடித்தனமாகச் சுட்டது. கீழே விழுந்தவர்களை துப்பாக்கி முனை கத்திகளால் குத்தியது. பின்னால் குண்டாந்தடி, கேடயத்துடன் மற்றொரு படை தொழிலாளர்கள் மீது வெறியாட்டம் நடத்தியது.  

குண்டு பாய்ந்தது

சங்கத் தலைவர் கே.அனந்தநம்பியாரின் கை, கால்களை கட்டி அவரை தடிகளால் அடித்தனர். அவர் இறந்துவிட்டதாக கருதி அடிப்பதை நிறுத்தி விட்டனர். அனந்த நம்பியார் வசித்த ஓட்டுவீடு சங்கத்திடல் ஓரத்தில் இருந்தது. அங்கு போலீசார் நுழைந்து நம்பியாரின் தாயாரை தாக்கி அவரது கை எலும்பை முறித்தனர். சங்கத் திடலின் நடுவில் 60 அடி உயர இரும்புக்கம்பத்தில் RLU(ரயில்வே லேபர் யூனியன்) என்று பொறிக்கப்பட்ட செங்கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருந் தது. கொடியை கீழே இறக்க போலீஸ் படை முயன்றபோது கிருஷ்ணமூர்த்தி என்ற இளம் தொழிலாளி பாய்ந்து சென்று அதைத் தடுத்தார். அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கொடி மரத்தின் பீடத்திலேயே தோழர் கிருஷ்ணமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். துப்பாக்கிச் சூட்டில் கிருஷ்ணமூர்த்தி, ராஜூ, ராமசந்திரன், தியாகராஜன், தங்கவேலு ஆகிய 5 தோழர்கள் பலியானார்கள். உயிர் நீத்த தியாகி கிருஷ்ண மூர்த்தியின் தாயார் அத்தை என்று அழைக்கப்பட்ட பங்காரு அம்மாள் மறையும் வரை சங்கத்திடலிலேயே தங்கி தொழிற்சங்கப் பணிகளுக்கும் தோழர்களுக்கும் உதவி புரிந்து வந்தார்.

 273 பேர் மீது சதி வழக்கு

படுகாயமடைந்த தோழர் அனந்த நம்பியாரையும், தொழிலாளிகளையும் ஓரிடத்தில் குவியலாக கிடத்தினர். பிறகு காயமடைந்த தொழிலாளர்கள் போலீஸ் லாரிகளில் தூக்கிவீசப்பட்டனர். தோழர் அனந்த நம்பியாரை முதல் குற்றவாளியாக சேர்த்து 273 பேர்மீது சதிவழக்கு ஜோடிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு தர்பாருக்கு பிறகு பொன்மலை பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகத்தையும் நிறுத்தி நிர்வாகம் கோரநர்த்தனமாடியது. இதைக் கண்டு பெண்கள் துவளவில்லை. அவர்களும் களத்தில் இறங்கினர். இடுப்பில் குடத்துடனும் கையில் செங்கொடியுடனும் மழலைச் செல்வங்களோடு ஊர்வலமாகப் புறப்பட்டனர். குடியிருப்புப் பகுதியை தாண்டி மலைக்கோவில் கிணற்றுக்குச் சென்று தண்ணீர் இறைத்து வீடு களுக்கு கொண்டு வந்து நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசினர்.  

கலவர பூமியானது திண்டுக்கல்

பொன்மலை அடக்கு முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் வெடித்தன. திண்டுக்கல் நகரில் இளம் இயேசு என்று தொழிலாளிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ஏ.பாலசுப்ரமண்யம், என்.வரதராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த போலீஸ் வெறியாட்டத்தில் திண்டுக்கல் கலவர பூமியாக மாறியது.  தொழிலாளர்களின் எரிமலை போன்ற எழுச்சிக்கு முன்னே நிர்வாகம் பணிய நேரிட்டது. அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலையீட்டின் பேரில் 1946 செப்டம்பர் 24ஆம் தேதி வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எட்டுமணி நேர வேலை, ஊதிய விகிதமாற்றம், விசாரணை உரிமை, வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. தியாகிகள் சிந்திய இரத்தம் ஒட்டுமொத்த ரயில்வே தொழிலாளர்களின் நன்மதிப்பையும் கவுரவத்தையும் உயர்த்தியது. தொழிற்சங்க போராட்ட வரலாற்றில் பொன்மலை எழுச்சி சுடர்விட்டு பிரகாசித்தது.  

கம்பீரமான ரயில்வே தொழிற்சங்கம்

தங்களது கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி தேச விடுதலைக்காகவும் குரல் கொடுத்த தீரர்கள்  ரயில்வே தொழிலாளர்கள். புகழ்மிக்க பல தேச பக்தர்களை நாட்டுக்கு வழங்கிய பெருமை ரயில்வே தொழிற்சங்கத்திற்கு உண்டு. பொன்மலையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய தொழிற்சங்கம் ஆரம்பத்தில் நாகப்பட்டினம் ரயில்வே பணிமனையில் செயல்பட்டது. அந்த சங்கத்திற்கு காந்தியடிகள் அடிக்கல் நாட்டி பெருமை சேர்த்தார். அந்த கல்வெட்டு இன்றும் பொன்மலை சங்க கட்டிடத்தில் உள்ளது. பொன்மலைக்கு தொழிற்சங்கம் மாறிய பிறகு 1940 காலங்களில் தேசபக்தர் பரமசிவம் தொழி லாளர்களை திரட்டுவதில் பெரும் பங்கு வகித்தார். சங்கத்தின் வளர்ச்சியை தடுக்க பிரிட்டிஷ் நிர்வாகம் பரமசிவம் அவர்களை தடுப்புக் காவலில் கைது செய்து வேலூர் சிறையில் பூட்டியது. நோய் வாய்ப்பட்ட தேசபக்தர் பரமசிவம் 1941ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி இறந்தார்.  1947இல் நாடு விடுதலை பெற்றது. வடமாநிலங்களில் மதக் கலவரம் மூண்டது. கலவரம் காரணமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும், இந்தியா விலிருந்து பாகிஸ்தானுக்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறினர். பல பகுதிகளில் ரத்தக்களரி ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே இயக்கப்பட்ட ரயில்கள் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டன. ரயில் என்ஜின் டிரைவர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர். ரயில் ஓட்டம் நின்று போனது. நடுவழியில் மக்கள் சிக்கித் தவித்தனர். பலர் பட்டினியால் மாண்டனர். பிரதமர் பண்டித நேரு ரயிலை இயக்க டிரைவர்கள் முன்வருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். பொன்மலை தொழிற்சங்க இயக்கம் சிங்கமென சிலிர்த்து எழுந்தது. எல்லைப்பகுதியில் ரயிலை இயக்க நாங்கள் தயார் என்று அறிவித்தது. புருஷோத்தமன், என்.கிருஷ்ணசாமி (ஒட்டன்சத்திரம்) உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் தலைமையில் என்ஜின் டிரைவர்கள் எல்லைப்பகுதி பணிக்கு சென்றனர். தொழிலாளி வர்க்கத்தின் இந்த மகத்தான தேச பக்தி குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசித்தது.  கால வெள்ளத்தில் ரயில்வே அரங்கில் பிரிவுவாரியாக பல தொழிற்சங்கங்கள் தோன்றின. ஆனாலும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வு மங்கி விடவில்லை. 1974ஆம் ஆண்டு மேமாதம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட தலைமையின் கீழ் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஆள் தூக்கிச் சட்டம் `மிசா’ (MISA) முதன் முறையாக ரயில்வே தொழிலாளர்களின் மீது பாய்ந்தது. மூன்று வார காலம் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடை பெற்றது. 1977இல் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. பழிவாங்கப்பட்டவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். பல சலுகைகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்ல, பொன்மலையில் 1946 காலங்களில் பழிவாங்கப்பட்ட பழைய தொழிலாளர்களுக்கு பணிக்காலம் முழுவதற்கு மான ஊதியம் மொத்தமாக வழங்கப்பட்டது. இதற்கான முயற்சியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கல்யாணசுந்தரம் மேற்கொண்டார்.

வீண் போகாது

பொன்மலை உள்ளிட்ட செங்கொடி இயக்கப்புதல்வர்களின் தியாகம் வீண் போகவில்லை. எட்டு மணி நேர வேலை, விசாரணை உரிமை, பணிப் பாதுகாப்பு, பணிக்கொடை, ஓய்வுக்கால ஊதியப் பலன்கள் என எண்ணற்ற சலுகைகள் ரத்தம் சிந்தி தியாகம் புரிந்து பெறப்பட்டவை. தியாகிகள் ஏற்றி வைத்த விளக்குகள் தான் இன்றும் கருத்தாலும் கரத்தாலும் பாடுபடும் கோடிக்கணக்கான மக்களின் இல்லங்களில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.  தோற்றதில்லை, தோற்றதில்லை - தொழிலாளி வர்க்கம் தோற்றதில்லை என்ற இடி முழக்கம் ஊர் வலங்களில் கேட்பதுண்டு. அது வெற்று முழக்கம் அல்ல. கார் உள்ளளவும் கடல்நீர் உள்ளளவும் எக்காலத்துக்கும் பொருந்தும் உயிர்த்துடிப்புள்ள முழக்கம் அது.