பி.நாகம்மாள் மதுரையின் வீராங்கனை ஆர்.சசிகலா
1926-இல் பிறந்த குருவம்மாளை, நாகம்மாள் என்று அழைத்த பெரியப்பா நாராயணன் அவரது வாழ்க்கைக்கு புதிய திசையையும் கொடுத்தார். வெறும் 10 வயதிலேயே ஜனசக்தி பத்திரிகையை வினியோகிக்கும் பொறுப்பை ஏற்ற சிறுமி, தான் இறுதி மூச்சு விடும் வரை (2014) அந்த செம்கொடியின் சாயலை மறக்கவில்லை. 87 ஆண்டுகால அவரது வாழ்க்கை மதுரை மாநகரின் மண்ணில் புரட்சியின் விதைகளை விதைத்தது.
தலைவர்களின் நிழலில் வளர்ந்த போராளி
கே.பி. ஜானகியம்மாள், மீனா கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் நாகம்மாளை தங்கள் குழந்தையாக எண்ணி அரசியல் உணர்வை ஊட்டினர். இவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்த போராட்ட உணர்வும், செங்கொடி மீதான பற்றும் நாகம்மாளின் உயிர்மூச்சாக மாறியது.
அரிசிப் போராட்டம் - துணிவின் முதல் அக்னிப்பரீட்சை
மதுரையில் கடும் அரிசிப்பஞ்சத்தின் போது நடைபெற்ற போராட்டத்தில் கே.பி. ஜானகியம்மாள் தலைமையில் களமிறங்கினார். பதுக்கி வைத்த அரிசியை கைப்பற்றி மக்களுக்கு விநியோகித்த போது, பதுக்கல்காரர்களின் ஆபாசத் திட்டுகளையும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த சம்பவங்களையும் எதிர்கொண்டு அஞ்சாத நெஞ்சுரம் காட்டினார். மிளகாய்ப் பொடி: பெண்ணின் ஆயுதம் காவல்துறையினர் சிவப்புச் சட்டை அணிந்த தோழர் மீனா கிருஷ்ணசாமியை லத்தியால் தாக்கிய போது, நாகம்மாள் உள்ளிட்ட பெண்கள் தங்கள் கவசமான மிளகாய்ப் பொடியை காவலர்கள் முகத்தில் வீசி தப்பித்தனர். அன்றைக்கு பெண்களின் துணிவுக்கு அது ஒரு அடையாளமாக மாறியது.
சாதி மறுப்புத் திருமணம், புரட்சிகர வாழ்க்கை
தோழர் ஏ.கே. கோபாலன் தலைமையில் நடைபெற்ற நாகம்மாள்-பாலு திருமணம் சாதி, சடங்கு மறுப்பு திருமணமாக நடைபெற்றது. திருமணத்தின் 17ஆம் நாளே கணவர் பாலு கைது செய்யப்பட்டாலும், அஞ்சாமல் தனது அரசியல் பணிகளைத் தொடர்ந்தார். கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் நான்கு மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், மதுரை மாநகராட்சியின் நியமன உறுப்பினராகவும் பணியாற்றினார்.
ஜனநாயக மாதர் சங்கத்தின் தூண்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றிய நாகம்மாள், பூந்தோட்டம், சிம்மக்கல், தைக்கால் பகுதிகளில் களமிறங்கி மக்கள் சேவை செய்தார். 86 வயதிலும் கூட மாதர் சங்க உறுப்பினர் பதிவில் ஈடுபட்டவர், பல பெண்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தந்தார்.
செங்கொடிக் குடும்பம்
13 குழந்தைகளின் தாயான நாகம்மாள், தனது பிள்ளைகள், மருமகள்கள் என அனைவரையும் கட்சியின் உறுப்பினர்களாக்கினார். மகள் விஜயலெட்சுமி சென்னையில் கட்சியின் உறுப்பினராகவும், மாமன்ற உறுப்பினராகவும், மகள் ப்ரீதி மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும், மருமகள் விஜயா மாதர் சங்கத்தின் பகுதிக்குழுத் தலைவராகவும் பணியாற்றி, நாகம்மாளின் பாரம்பரியத்தை தொடர்ந்து வருகின்றனர்.
செங்கொடியின் செம்மலராய்...
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான கட்சி, அது என்றைக்குமே மக்களுக்கு பாதுகாப்பான கட்சி” என்று உறுதியாக நம்பிய நாகம்மாள், செங்கொடியைத் தாங்கிய செம்மலராக இன்றும் பல தலைமுறை பெண் போராளிகளுக்கு வழிகாட்டியாக நிற்கிறார். மதுரையின் ஒவ்வொரு தெருவிலும், நாகம்மாளின் பாதச்சுவடுகள் இன்றும் ஒலிக்கின்றன - “வீராங்கனைகளால் தாங்கப்படும் செங்கொடி என்றும் அசையாது!”