மணலூர் மணியம்மாள் பிரிட்டிஷ் போலீசின் சிம்ம சொப்பனம் கே.வைத்தியநாதன்
தஞ்சை மாவட்ட விவசாயிகள் இயக்கத்தில், நினைவு கூரத் தக்கவர்களில் ஒருவர் மணலூர் தோழர் மணியம்மாள் அவர்கள். வசதிமிக்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த தோழர் மணியம்மாள், காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார். அவருடைய கணவர் காலஞ்சென்ற வெங்கட் ராம அய்யரும், காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1940ஆம் ஆண்டுகளில் தஞ்சை மாவட்டம் நாகை, மன்னார்குடி தாலுகாக்களில் விவசாய இயக்கங்களை உருவாக்குவதிலும், கூலிப் போராட்டங்களை நடத்துவதிலும், தோழர் மணியம்மாள் முன்னின்று போராடியவர்.
போலீஸ்காரர்களுக்கு இந்த அம்மையாரைக் கண்டாலே சிம்ம சொப்பனம். அவர் பெண்களைப் போல் உடையணியாமல் கதரில் நாலு முழம் வேட்டியும், ஜிப்பாவும் துண்டும் அணிந்திருப்பார். தலைமுடியும் வெட்டப்பட்டி ருக்கும். எத்தனை முறை சிறைக்குச் சென்றிருப்பார் என்று சொல்வது கூடக் கடினம். 1948-51ஆம் ஆண்டுகளில் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்புக் கைதியாக சிறையில் இருந்தார். போலீஸ்காரர்கள் அவரைப் பெண்ணென்றும் பாராமல் கை விலங்கிட்டுச் சாலைகளிலும், வயல் வரப்புகளிலும் கட்டி இழுத்துச் சென்று சித்ரவதை செய்தனர்.
எதற்கும் சளைக்காத அவர் நாகைப் பகுதியில் விவசாயப் பிரச்சனைகளில் பல ஒப்பந்தங்கள் ஏற்படக் காரணமாயிருந்தார். பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றத்திற்கு அவர் கொண்டு வரப்பட்ட போதெல்லாம் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், நகர மக்களும் பெருந்திரளாகக் கூடி நிற்பர். அவர் பேசும் கூட்டங்களிலும் மக்கள் பெருமளவில் திரண்டிருப்பார்கள். தோழர் மணி யம்மாளுடன் சேர்ந்து தீவிரமாகப் பாடுபட்டவர்களில் திருவாரூர் டாக்டர் தியாகராஜனும் ஒருவர்.
வீரம் நிறைந்த தோழர் மணியம்மாள், 1958ஆம்ஆண்டு தன்னுடைய உறவினரான பிரபல காங்கிரஸ்காரர் மூலங்குடி கோபால கிருஷ்ணய்யர் வீட்டிற்குச் சென்றிருந்த போது அங்கு வளர்க்கப்பட்ட மான் முட்டியதால் மரணமடைந்தார். அவரது மறைவு திருவாரூர் நகரையும், அதன் சுற்றுப்புறத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. ஏழை மக்கள் மிகுந்த துயரமடைந்தனர். அந்த வீராங்கனையின் இறுதிச் சடங்கில், மிகப்பெரும் அளவில் கிராமப்புற, உழைக்கும் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.