articles

img

நம்பிக்கை அளிக்கும் தமிழ்நாடு, புரட்சிகர இலக்கில் முன்னேறட்டும்

சிபிஎம் மாநில மாநாட்டை துவக்கி வைத்து எம்.ஏ.பேபி உரை

விழுப்புரம், ஜன. 3 - ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் பாஜக வுக்கு எதிராக உண்மையான மாற்றை உருவாக்க முடியும் என்றும் பாஜக தோற்கடிக்கக் கூடிய சக்தி தான் என்பதை கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி கூறினார். கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாட்டை  விழுப்புரத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கில் வெள்ளியன்று (ஜன. 3) துவக்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் செங்கொடி இயக்கத்திற்கு செழுமையான வரலாறு உண்டு. இந்தியாவில் 1923-ம் ஆண்டு மே 1 அன்று அன்றைய மதராஸ் மாநகரில், செங்கொடி ஏற்றப்பட்டு முதல் முறையாக மே தினம்  கொண்டாடப்பட்டது. அன்றைக்கு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மறைந்த தோழர் சிங்காரவேலர் முக்கியப் பங்காற்றினார். 

அய்யா வைகுண்டரின்  சமத்துவப் பார்வை

சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு சமு தாயத்தை உருவாக்கும் சிந்தனைக்கு உலகின் பல  பகுதிகளில், குறிப்பாக இந்தப் பகுதியிலும் குறிப்பிடத் தக்க பங்களிப்புகள் இருந்திருக்கின்றன என்பதை  வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் உழைப்பாளி மக்களுக்கான அமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தை வரையறுத்த அதே காலகட்டத்தில், நாகர்கோவில் அருகில் இருக்கக் கூடிய சாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டர் சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதற்கான ஒரு  இயக்கத்தை ஏற்படுத்தினார். அங்கு செல்லக்கூடி யவர்களுக்கு, அது புரட்சிகர ஸ்தலம் ஆகும். நான் உண்மையாகவே அப்படி உணர்கிறேன். அங்கு தான்,  அய்யா வைகுண்டர், சமத்துவ சங்கத்தை துவங்கினார்.

விஞ்ஞான சோசலிசம்

கம்யூனிஸ்ட் இயக்கத்தை காரல் மார்க்சும் ஏங்கெல்சும் தோற்றுவித்ததற்கு முன்பாகவே அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், அய்யா வைகுண்டர் காரல் மார்க்ஸைவிட 9 ஆண்டுகள் மூத்தவர். காரல் மார்க்ஸ் பிறந்த ஆண்டு 1818. உலகம் முழுவதும் தீவிரமான சமத்துவவாதச் சிந்தனை கள் உருவாகின. கற்பனாவாத சோசலிஸ்டுகள் அன்றைய தினம் சோசலிச சமுதாயத்தை உருவாக்கு வதற்கான பல்வேறு கருத்துக்களை முன்மொழிந்த காலத்தில், கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும்  விஞ்ஞான சோசலிசம் என்ற மிக அற்புதமான சித்தாந்தத்தை, அதற்கு அறிவியல் அடிப்படையிலான, தீர்வை வழங்கினார்கள்.

உண்மையான ஜனநாயக இயக்கம்

சிபிஎம் கட்சி மாநாடுகளில் நாம் கடந்த காலங்களில் நடத்திய இயக்கங்களை பரிசீலிக்கிறோம். கட்சி எந்தளவுக்கு விரிவடைந்திருக்கிறது, மக்களிடம் நாம் எந்தளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கிறோம், நமது கட்சியின் கொள்கைகள் சமூக மாற்றத்திற்கான ஜனநாயக இயக்கங்களை வலுப்படுத்துவதில் எந்த ளவுக்கு உதவியிருக்கிறது என்பதை மாநாட்டில் பரிசீலிக்கிறோம். போராட்டங்களில் கட்சி மற்றும் கட்சி ஊழியர்களின் பங்களிப்பு குறித்தும் மாநாடு விவாதிக்க உள்ளது. நமது கட்சியினுடைய அமைப்புச் சட்டத்தின்படி கட்சியின் மாநாடுகள் மூன்றாண்டு களுக்கு ஒரு முறை கிளை மட்டத்தில் இருந்து  துவங்கி அகில இந்திய மாநாடு வரையிலும் நடை பெறும். இந்த மாநாடுகளில் மேற்கொள்ளப்படும்  விவா தங்களின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் நமது கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அர சியல் நடைமுறை உத்தியைத் தீர்மானிக்கிறோம். அந்த உத்தியை தீர்மானிக்கக்கூடிய பங்களிப்பை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் அளித்திருக்கிற ஒரே கட்சி இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான்.  அதுமட்டுமல்ல, நாம் நமது கட்சியின் தலைவர்களையும், அரசியல் தலைமைக் குழுவையும் ஜனநாயக முறைப்படி மாநாட்டில் தேர்ந்தெடுக் கிறோம். இந்தப் பின்னணியில் தான் நமது கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டை நடத்திக் கொண்டி ருக்கிறோம். கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெறவுள்ளது.

உற்சாகம் தரும் நிலைமைகள்

நாம் நம்முடைய நாட்டிலும் உலகிலும் நம் நிலைமையை மதிப்பீடு செய்யும் போது, ஒரு கலவை யான நிலைமையைக் காண்கிறோம். உற்சாகம் தரும் நிலைமைகளும் உள்ளன, சில எதிர்மறை அம்சங் களும் உள்ளன.  சிபிஎம் 23-ஆவது அகில இந்திய மாநாட்டில் ஒரு அரசியல் தந்திர உத்தி முன்வைக்கப் பட்டது. மக்கள் ஒற்றுமையை ஏற்படுத்த, நாட்டின் அரசியல் சக்திகளை ஒன்று திரட்டி ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் இயங்கும் பாஜகவையும் அதன் கூட்டாளி களையும் வீழ்த்த வேண்டும் என்பது 23-ஆவது கட்சி மாநாட்டில் வகுக்கப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியாகும். மூன்று எதிரிகளை வரையறுத்த ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் என்பது பாசிசக் கூறுகளைக் கொண்ட  ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அந்த விபரங்களை நான் மேலும் கூடுதலாக விவரிக்கவில்லை. ஆனால் அந்த  அமைப்பின் செயல்திட்டம் என்ன என்பதை அந்த  அமைப்பின் முக்கியமான கோட்பாட்டாளர் கோல்வால்கர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். இது குறித்து பெரிதும் விவாதிக்கப்படும் தமிழ்நாடு போன்ற  ஒரு மாநிலத்தில், அந்த விவரங்களுக்குள் நான் செல்ல  விரும்பவில்லை. ஆனால், பெரும்பான்மை மக்கள்  அடிப்படையிலான - அதாவது இந்து மத அடிப்படை யிலான சமூகத்தை நிறுவ அந்த அமைப்பு திட்ட மிட்டுள்ளது. எனவே, அவர்கள் மிகத் தெளிவாகவே மூன்று எதிரிகளை உள்நாட்டில் வரையறுத்திருக் கிறார்கள். அதில் முதல் இரண்டு எதிரிகள், நம் நாட்டின் சிறுபான்மை மக்களான முஸ்லீம்களும், கிறிஸ்த வர்களும் என்று கூறியுள்ளனர். மூன்றாவது எதிரி கம்யூ னிஸ்ட்டுகள் என்பதையும் அறிவித்துள்ளனர். அவர்கள் வெளிப்படையாகவே இந்த முறையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக அறிவிக்கின்றனர். இந்து மதத்தின் மீது பற்றுக்கொண்ட மதச்சார்பற்ற தன்மை கொண்ட - ஜனநாயகத் தன்மை கொண்ட மக்களை அவர்கள் சேர்த்துக் கொள்வார்களா என்ற  சந்தேகம் எங்களுக்கில்லை. நுட்பமாகப் பார்த்தால்,  இந்து மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் உண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள். மகாத்மா காந்தியை அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்) படுகொலை செய்தார்கள். கல்புர்கி, கவுரி லங்கேஷ், தபோல்கர் என பலரையும் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) கொன்றார்கள். மதவெறியூட்டப்பட்ட சில நபர்கள் அந்த படுகொலைகளை செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பாசிச அமைப்பு, மோடி அரசை அது கட்டுப்படுத்துகிறது.

நமது கடமை என்ன?

மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களில் ஒருவரான சாவர்க்கரை, நரேந்திர மோடியுடன் எளிதில் தொடர்புபடுத்தலாம்.  ஏனென் றால் பிரதமரான பின் மோடி வெட்கமில்லாமல் சாவர்க்கரைத் தான் தனது அரசியல் ஆசான் என்று அறிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை.  எனவே, நாட்டில் உள்ள இடதுசாரிகள், முற்போக்காளர்களை மட்டுமல்லாமல் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தையும் திரட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக நிறுத்த வேண்டிய கடமை  நமக்கு உள்ளது. அத்தகைய அணிச் சேர்க்கை  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பி னர் நீதித்துறை, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் என அனைத்து அரசு அமைப்புகளையும் கட்டுப் படுத்தும் இடத்தில் இருக்கிறார்கள். எனவே அவர் களை வீழ்த்த வேண்டும் என்பது சிபிஎம் 23-ஆவது அகில இந்திய  மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தியாகும்.

நாசகர சக்திகளை வெல்லமுடியும்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை நாம் கருத்தில்  கொண்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1.62 விழுக்காடு  அல்லது 2 விழுக்காட்டிற்கு குறைவாகவே இருந்தது. எனவே, பாஜகவும் அதன் கூட்டாளிகளும் தோற்கடிக்க முடிந்த சக்திகளே என்பதை கடந்த தேர்த லில் நிரூபித்துவிட்டோம். மக்களவையில் அவர்கள் நினைத்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியவில்லை. 2014-ஆம் ஆண்டிலும் 2019-ஆம் ஆண்டிலும் நடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. இதனால், கடந்த தேர்தலில் அவர்கள் 400 எண்ணிக்கையில் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தார்கள். ஆனால் அதை எட்ட முடியாமல் தடுத்து நிறுத்தினோம்.

முன்னேற்றத்தைக் கொடுத்த அரசியல் உத்தி

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. ராமர் கோவி லை கட்டிமுடிக்காத நிலையில் பிரதமர் தலைமையில் கோவிலைத் திறந்தார்கள். தேர்தலுக்கு முன்பு இப்படி திறப்பு விழாவை ஏற்பாடு செய்து, சமூகத்தை பிளவு படுத்தலாம் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார்கள். இந்திய மக்கள் ஸ்ரீராமர் மீது கொண்டுள்ள மரியாதை யை வாக்குகளாக மாற்ற முடியும் என்று கருதினார் கள். அரசியல் நெறிமுறைகளை பொருட்படுத்தாமல், பிரதமர் கண்மூடியபடி சென்று ராமர் கோவிலை திறந்து வைத்தார். ஆனால், அது பாஜகவிற்கு உதவி செய்யவில்லை. ராமர் கோவிலுக்கு உட்பட்ட மக்க ளவைத் தொகுதியில் பாஜக படுதோல்வியை சந்தித் தது. சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அந்தத் தொகுதி யில் வெற்றி பெற்றார். எனவே, நாம் கூட்டாக எடுத்த அரசியல் உத்தி முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது. வெற்றிக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் சென்றுள்ளது. ஆனாலும் நாம் இப்போது அந்த உத்தி யைப் பரிசீலனை செய்யும் இடத்தில் இருக்கிறோம். நம்மால் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்ட முடிந்தது எப்படி? நாம் ஒரு பரந்த மேடையை அமைத்து அந்த இலக்கை நோக்கி நகர்ந்தோம். பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, அதிகாரத்தில் இருந்து நாம் அவர்களை அகற்ற முயற்சித்தோம்.  மக்களவைத் தேர்தல் தீர்ப்பின் மூலம் இந்திய மக்கள், ‘இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நாங்கள் விரும்ப வில்லை’ என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் தேர்த லின் போது பாஜகவினர் வெட்கமின்றி பிளவுவாதத்தைப்  பயன்படுத்தினர். அவர்கள் குறிப்பிட்ட சமுதாயத் தினரை இழிவாகப் பேசினர்.  பிரதமர் பேசிய நூற்றுக் கணக்கான உரைகளில் வெட்கமே இல்லாத வகையில் பிளவுவாதக் கருத்துக்கள் அதிகமாக இடம் பெற்றி ருந்தன. உண்மையான ஊடக சுதந்திரத்திற்கு தம்மை  அர்ப்பணித்துக் கொண்ட சில ஊடகவியலாளர்கள் அந்தப் பேச்சுக்களை அடையாளம் காட்டினார்கள். ஆனால் சில ஊடகங்களோ அந்த நிகழ்ச்சி நிரலில் கரைந்து போனார்கள். மேலும் பாஜக சாதியவாதத்தை பயன்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி உணர்வை பயன்படுத்த திட்டமிட்டுச்செயல்பட்டது.

பணபலத்தால் கட்சிகளை பிளவுபடுத்திய பாஜக

பணத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தவும், தலைவர்கள் சிலரை நேரடியாக குறி வைத்திடவும், தலைவர்களை விலைக்கு வாங்கவும் செய்தார்கள். அதற்கு முன்பு, சிபிஐ, அமலாக்க இயக்கு நரகம், வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்பு கள், ‘நீங்கள் சிறைக்குப் போக விரும்புகிறீர்களா அல்லது, பாஜகவில் சேருகிறீர்களா’ என்று கேட்டா கள்.  ‘பாஜகவில் சேர்ந்தால், சிறைக்குச் செல்ல வேண்டிய தில்லை, முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும், மேலும் பெரிய தொகையும் வழங்கப்படும்’ என்று  சொன்னார்கள். மகாராஷ்டிராவில் முக்கியமான அரசியல் கட்சிகளில் பிளவை ஏற்படுத்தினார்கள்.

தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு அமைப்புகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமை யிலான அணி எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை நாம் அறிவோம். வெட்கமே இல்லாத வகையில் அரசு இயந்திரம் குறுகிய நோக்கத்திற்காக பயன்படுத்தப் பட்டது. முன்பு பெரிதும் மதிக்கப்பட்ட அமலாக்கத் துறை இப்போது தேர்தல் பணியை பார்க்கத் தொடங்கியது. இ.டி. (Enforcement Department) என்று சொன்னால் அதன் பொருள் தேர்தல் பணி என்றானது. அதாவது எலக்சன் டியூட்டி (Election Duty)  என பாஜக-வால் மாற்றப்பட்டது. இவ்வாறு தான் அவர்கள் மாநில சுயாட்சியை சீர்குலைத்து வருகின்றனர். நீதித்துறையும் பாதிப்புக்கு  உள்ளாகிறது. சமீபத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மோசமாக பேசியதைக் கேள்விப்பட் டோம். பிறகு, உச்சநீதிமன்றம், தாங்கள் பார்வை யாளர்கள் அல்ல என்பதை மக்களுக்கு நம்ப வைக்க முயற்சி செய்தது. ஆனால், அதில் முன்னேற்றம் இல்லை. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் 60 சதவிகிதம் வரை பலமாக உள்ள சில தொகுதிகளில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக வெற்றிபெற்றுள்ளது.  அதற்காக என்ன வெல்லாம் செய்தார்கள் தெரியுமா? பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று நினைக்கப்பட்ட வர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்ல விடாமல் தடுத்தார்கள். இது தேர்தல் செயல்முறை மற்றும் ஜனநாயக செயல்முறை மீதான வெளிப்படை யான அழிப்பு நடவடிக்கையாகும். எனவே, இதைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு பாராட்டு

ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியதற்காக தமிழ்நாட்டு மக்களும், நண்பர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர். மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்காற்றியதுடன், இடதுசாரி அல்லாத ஜனநாயகக் கட்சிகளும் அந்தக்  கூட்டணியில் சேர்க்கப்பட்டன. இத்தகைய அரசியல் அணி சேர்க்கை  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும்  பாஜக அரசியல் செல்வாக்கு பெற முடியாமல் தடுத்து நிறுத்த உதவியுள்ளது.   இந்த வெற்றிக்காக உங்களையும், மக்களையும் வாழ்த்துகிறபோது, சமுதாயத்தை பாதிக்கும் பல  சக்திகள் இன்னமும் வலுவாக உள்ளன என்பதை  எச்சரிப்பதும் அவசியம். பாஜகவையும் அதன் கூட்டாளி களையும் தோற்கடித்த தமிழக அரசு, மக்களின் உரிமை களை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள்  நம்புகிறோம். மேலும் ஒரு புரட்சிகர இயக்கம் என்ற முறையில் நாம் தொழிலாளி வர்க்கத்தின் உரிமை களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க தொடர்ந்து உறுதியோடு போராடுவோம்.  

இடது ஜனநாயக முன்னணி அரசை வீழ்த்த முயலும் தீயசக்திகள்

கேரள மாநிலத்தை  சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி செய்கிறது. அந்த  அரசு இடதுசாரிகளையும், இடதுசாரி அல்லாத கட்சி களையும் உள்ளடக்கியதாகும்.  இந்தியாவில் இடதுசாரிகளும்,  கம்யூனிஸ்டுகளும் தலைமை தாங்குகிற ஒரே அரசாகவும்  அது உள்ளது. நாம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளோம்.  ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசு மீது தாக்குதல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், பிற சக்திகளும் நம் நாட்டிலுள்ள ஒரே இடதுசாரி அரசை தாக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக திட்டத்திற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன. இதுதான் 1957 ஆம்  ஆண்டு அமைந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமை யிலான அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பு கேரளாவில் பிற்போக்கு சக்திகளுக்கு உதவி செய்தது. அவர்கள்  முன்னெடுத்த இழிவான இயக்கம் இஎம்எஸ் அரசை சீர்குலைத்தன. இப்போதும் பிற்போக்கு சக்திகள் கேரள மாநிலத்தில் ஒரு கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள். நாம் இவர்களை எதிர்கொண்டுதான் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்தில் நாம் ஒரு அரிய சாதனையைப் படைக்கவும் முயற்சி செய்கிறோம். அது என்ன?  

வறுமையை முற்றாக ஒழிக்க முயற்சி

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் தீவிரமான வறுமையை எதிர்கொள்கிறோம். ஆனால், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி  அரசு வறுமையை அகற்றுவதற்காக செயல்திற னுடன் பணியாற்றி வருகிறது. வறுமையை முழுமை யாக அகற்ற முயல்கிறது. மேலும், அடுத்த சில  ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை எட்ட முயற்சிக் கிறது. நிச்சயமாக மாநிலத்தில் கடுமையான வறுமையை ஒழித்த அரசு, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு என்ற அங்கீகாரத்தைப் பெறும். இந்த எதார்த்த நிலையையும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசின் வரலாற்றுப் பணிகள் மற்றும் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் கேரள எல்டிஎப் அரசுக்கு தங்கள் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வழங்க வேண்டும். இடதுசாரிகளையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றி ணைத்து பாஜகவுக்கு எதிரான ஒரு உண்மையான மாற்றை உருவாக்க முடியும். பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடவும், அந்த சக்திகளை  தனிமைப் படுத்தவும்,  அந்த சக்திகளின் தீய திட்டங்களையும் மக்களிடம் அம்பலப்படுத்தவும் நாம் இன்னும் தீவிர மாகச் செயல்பட வேண்டியுள்ளது. இதற்கான தெளி வான செயல் திட்டங்களை நமது மாநாடு உருவாக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.   இவ்வாறு எம்.ஏ. பேபி பேசினார்.  அவரது ஆங்கில உரையை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.