இந்திய நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து வந்திருந்தாலும், இந்தஆண்டு கேரளம், மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களின் முக்கியத்துவம் என்னவென்றால் இந்த மாநிலங்களில் இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற அணிகள் வெற்றி பெறுவது நாட்டின் ஒட்டுமொத்த இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் பங்காற்றும் என்பதுதான்.
இதற்கு இணையாக, நமக்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல முக்கியமான தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறுகின்றன.சோவியத் யூனியனின் பின்னடைவிற்குப் பின்னர், உலகமெங்கிலும் பெருமுதலாளித்துவத்தின் எழுச்சிக்கு உதவும் வகையில், புதிய தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் நாசகர விளைவுகளைச் சந்தித்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் 1990-களின் இறுதியில் முழுமையான புரட்சிகள் இல்லையென்றாலும் இடதுசாரிகளின் முன்னெடுப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
1990 பத்தாண்டின் இறுதியும் 2000 பத்தாண்டின் துவக்கமும் லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் வெற்றிக்காலமாக இருந்தன. 1999-ஆம் ஆண்டு, பெரும்பான்மையோருக்கு உத்வேகமளிக்கும் வகையில் சோஷலிசமும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் கலந்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த வெனிசுலாவின் தீப்பொறியாக ஹியுகோ சாவேஸ் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 2002-ஆம் ஆண்டு, இடதுசாரி தொழிலாளர்கள் கட்சியின் ஸ்தாபகரான லூயிஸ் இனேசியோ லூலா டி சில்வாவை பிரேசில் தேர்ந்தெடுத்தது. அர்ஜெண்டினாவில் இடது சார்புடைய நெஸ்டர் கிச்னர் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா ஆகியோர் தலைமைப் பொறுப்புக்கு வந்தனர். 2005-இல் ஈவோ மொரேல்ஸ் பொலிவியாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டிலேயே ஈக்வடாரின் ஜனாதிபதியாக ரஃபேல் கோரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பேரெழுச்சியாக வந்த தலைமை மாற்றத்துடன் பெரும்பாலும் புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக1980-களிலும், 1990-களிலும் மேலெழுந்த சோஷலிச ஆதரவு, அமெரிக்க எதிர்ப்பலையானது இளஞ்சிவப்பு அலை எனப் பெயர் சூட்டப்பட்டது.
வெனிசுலா..
1999-இல் வெனிசுலா ஜனாதிபதியாக ஹியுகோ சாவேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து துவங்கிய “பொலிவாரியன் இளஞ்சிவப்பு அலை”- யானது, சமீபத்திய ஆண்டுகளில் பல நாடுகளில் இடதுசாரிகளிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய வலதுசாரி அரசாங்கங்களின் பின்னால் திரும்பியது. நாட்டுக்கு நாடு வேறுபடும் இந்த வலதுசாரி திருப்பத்திற்கான காரணங்கள் குறித்த ஆய்வு விரிவானது. அவற்றில் அமெரிக்காவின் பங்கு பிரதானமானது. ஆனால் பொதுவாக இளஞ்சிவப்பு அலையின் பின்னடைவானது மோசமாக நிர்வகிக்கப்பட்ட பொருளாதாரங்களினாலும், ஊழலினாலும் நிர்வாகத்துக்கு எதிரான விளைவே தவிர, இடது செல்வாக்கை எதிர்த்தது அல்ல என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா-ஐரோப்பாவில் துவங்கி உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளும் இதற்குப் பங்காற்றின. வூகான் வைரஸ் என சீனாவை அவதூறாக குற்றம் சுமத்துபவர்கள் உலகப் பொருளாதார நெருக்கடி எனும் வைரசின் துவக்கம் பற்றி மறந்தும் பேசுவதில்லை.
தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் அலை மீண்டும் மேலெழுந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பொலிவியாவில் அமெரிக்காவின் ஆதரவோடு நடைபெற்ற சதித்திட்டத்தின் தோல்வியானது ஒரு மாற்றத்தை உணர்த்துகிறது. தற்போது 2021- இல் நடக்கின்ற லத்தீன் அமெரிக்கநாடுகளின் தேர்தல்களில் இடதுசாரிகளுக்கு சாதகமாகத் திரும்பி அலை வீசுமா ? என்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எழுந்துள்ளது.இந்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கின்ற ஈக்வடார், பெரு, சிலி நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் நெருக்கடியிலும், மக்கள் எதிர்ப்பு இயக்கங்களிலும் இருப்பவை. ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளில் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கு பதிலளிப்பது கடினம். ஏனெனில் அங்கு இறுக்கமான போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கியுள்ள இறுதிக் காலத்தில், ஈக்வடாரில் சுமார் 20% வாக்காளர்களும், பெருவில் சுமார் 28% வாக்காளர்களும் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யவில்லை அல்லது யாருக்கும் வாக்களிக்கப் போவது இல்லை என்று தெரிவித்தனர். இது அவர்கள் மத்தியில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது.
ஈக்வடார்...
ஈக்வடார் நாட்டில், பிப்ரவரி 7 அன்று நடைபெற்றமுதல் கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற இரண்டுமுதன்மை வேட்பாளர்களுக்கு இடையேயான ஜனாதிபதிக்கான தேர்தல், ஏப்ரல் 11- ஞாயிறன்று நடைபெற்றது. முந்தைய இடதுசாரி ஜனாதிபதி ரஃபேல் கோரியாவின் அமைச்சரவையில் இருந்தவரும், தற்போது யூனியன்ஆஃப் ஹோப் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவருமான ஆண்ட்ரெஸ் ஆராஸுக்கு ஈக்வடார் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரிகளும், உழைப்பாளி வர்க்கக் குழுக்களும் பலமான ஆதரவை அளித்துள்ளன. எதிர்த்தரப்பில் சமுதாய கிறிஸ்தவ கட்சி கூட்டணியின் சார்பில்குவில்லெர்மோ லஸ்ஸோ போட்டியிடுகிறார். ஐ.எம்.எஃப்என்கின்ற சர்வதேச நிதிநிறுவனத்தால் வளர்க்கப்படுகின்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளை லஸ்ஸோ வலுவாக ஆதரிப்பதோடு, கருத்தடைக்கு எதிரான அமைப்பையும் நடத்தி வருகிறார். மாறாக, ஆட்சிக் காலம் முடிவடைந்தலெனின் மொரேனோ தலைமையிலான வலதுசாரி நிர்வாகத்தால் ஈக்வடார் நாட்டின் மீது திணிக்கப்பட்ட சர்வதேச நிதிக் கழகத்தின் புதிய பொருளாதார ஒப்பந்தத்தை நீக்கி விடுவதாக ஆராஸ் உறுதியளித்துள்ளார். தேர்தல் தினத்துக்கு முந்தைய வாரத்தில் லஸ்ஸோவைக் காட்டிலும் ஆராஸ் சிறிய அளவில் முன்னேற்றத்தில் உள்ளார். ஈக்வடாரில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற எதிர்ப்புஇயக்கங்களின் விளைவாக பிப்ரவரி 7 அன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில், இடதுசாரிக்கட்சிகளுக்கு ஆதரவு உருவாகியிருந்தது. முந்தைய இடதுசாரி ஜனாதிபதி ரஃபேல் கோரியா உறுதியான சர்வாதிகாரியாக இருந்ததாக விமர்சனம் இருந்தது. தற்போது புதிதாக அதிக ஜனநாயகத் தன்மையுடனும், சுற்றுச்சூழல் நட்புமுகத்துடனும் வளர்ந்துள்ள இடதுசாரிகள், பிற்போக்கு பசகுடிக் கட்சி, இடதுஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டாம், மூன்றாம் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி காங்கிரசில் அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். ரஃபேல் கோரியாவின் கட்சியே மிகப்பெரியது. பழமைவாத வலதுசாரிக் கட்சிகள் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.
பிப்ரவரி தேர்தல்களுக்குப் பிறகு, ஈக்வடாரின் மூன்று பிரதான சக்திகள் – ரஃபேல் கோரியா, இடதுசாரிகளில் அவரது போட்டியாளர்கள் மற்றும் வலதுசாரிகள் – மூன்றுபகுதியினரும் சட்டசபையில் ஆரோக்கியமான முறையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் மோதுகின்ற இரண்டு வேட்பாளர்களும் ரஃபேல் கோரியாவின் ஆதரவாளர்களாலும், வலதுசாரிகளாலும் ஆதரவைப் பெற்றுள்ளனர். புதிய இடதுசாரிகளிடமிருந்து வாக்குகளை இழுப்பதற்காக, உறுதிமிக்க வாக்காளர்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது, ஈக்வடாரின் புதிய அரசியல் களத்தில் இடதுசாரி செல்வாக்கு வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது.ஒருபகுதி வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டுக்களை வெற்றிடமாகச் செலுத்த நினைக்கின்றனர். இது, புதியஜனாதிபதிக்கு சற்று இயல்பான எதிர்ப்பைக் காட்டுகிறது. மக்களின் குறைகளைக் கேட்பதற்கான தேவையைக் காட்டும் வகையில் ஈக்வடாரில் ஒரு புதிய அரசியல் வரைபடத்தை மக்களின் கருத்துக்கள் உருவாக்கியுள்ளன.
பெருநாட்டில்...
பெருவில் நேர் எதிர் நிலைமைகள் உள்ளன. நவம்பர்2020-இல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஜனாதிபதியை நீக்கி விட்டு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சட்டசபையில் மையம் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக வந்தவரையும் மக்கள் எதிர்ப்பு ராஜினாமா செய்ய வைத்தது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் பரந்து விரிந்த ஆதரவைப் பெற முட்டி மோத வேண்டியிருந்தது. உண்மையில், உச்சத்தில் உள்ள ஐந்து வேட்பாளர்களில் எவரும் சுமார் 12%-க்கு அதிகமான வாக்காளர்களின் ஆதரவை கடைசியாக வெளியிடப்பட்ட இரண்டு தேர்தல் முடிவுகளிலும் பெறவில்லை. தற்போது உள்ள 9 கட்சிகளுக்கு மேலாக 12 கட்சிகளாக தீவிரமாக ஏற்பட்டுள்ள உடைப்பை தேர்தல்கள் சுட்டிக் காட்டுகின்றன. 1990-2000-த்தில் அல்பெர்ட்டோ ஃப்யுஜிமோரி ஆட்சியிலிருந்தே பெரு நாடு பலஹீனமான அரசியல் கட்சிகளால் சிக்கல்களுக்கு ஆளாகியிருந்தது. இந்த தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல. மிக கவனமான புதிய ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் பெரும் நிர்வாகச் சவால்களைச் சந்திப்பார்.பெரு நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, ஏப்ரல் 11- கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் இடதுசாரி தொழிற்சங்கவாதியான பெட்ரோ கேஸ்டிலோ வியத்தகும் முன்னேற்றம் பெற்றுள்ளார். அவரது பிரதான போட்டியாளராக உள்ள கெய்கோ ஃப்யுஜிமோரி, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிறை சென்ற முன்னாள் அதிபரின் மகள் என்பதோடு அவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் இருந்தவர்.
பெட்ரோ கேஸ்டிலோ ஓர் ஆசிரியர். ஊதியப் பிரச்சனைபோராட்டங்களில் தலைமை தாங்கியவர். வென்றால் ஆசிரியரின் ஊதியத்தைத்தான் பெறுவேன் என்று அறிவித்தவர், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். முக்கியமாக சுரங்கங்கள், எண்ணெய்வளம், நீர்மின் உற்பத்தி, எரிவாயு ஆகிய முக்கியதுறைகள் அரசுத்துறைகளாக மாற்றப்படும் என உறுதியளித்துள்ளார். கெய்கோ ஃப்யுஜிமோரி, பொருளாதார மீட்சியை முன் நிறுத்துவதோடு பெரு நாட்டை கியூபா போலவும் வெனிசுலா போலவும் இடதுசாரி நாடாக அனுமதிக்க மாட்டேன் என கூறியவர். பெரு நாட்டில்தான் பெருந்தொற்றினால் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரம் 11% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 22 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பொருளாதாரத்தையும், பெருந்தொற்றைக் கையாள்வதையும் வாக்காளர்கள் முக்கியமாகக் கருதுகிறார்கள்.
96% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பெட்ரோ 19%-மும், கெய்கோ 13% -மும் வாக்குகள் பெற்றுள்ளனர். அறுதிப் பெரும்பான்மையை இருவருமே எட்டவில்லை என்றாலும் 18 போட்டியாளர்களை முதற்கட்டத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜூன் 6-ஆம் தேதியன்று இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி வேட்பாளர்களின் பெருங்கூட்டத்துக்கு நடுவில், பெரு நாட்டின் இரண்டு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளான பெருவியன் கம்யூனிஸ்ட் கட்சியும், பெரு சிவப்புத் தாய்நாடு கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளிட்ட இடதுசாரிகளின் பெரும்பான்மைப் பகுதி, ”பெருவுக்காக ஒன்றுபடும் கூட்டணி”யின் சார்பில் வெரோனிகா மெண்டோசாவை ஆதரிக்கிறது. ஏற்கனவே 2016-இல் நடைபெற்ற பெரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மெண்டோசா, தொன்மையான, ஏழை கிராமப்புற ஜனத்திரளின் வலுவான ஆதரவைப் பெற்றவராவார். மிதமான சோஷலிசக் கொள்கைகளை உடையவர் என்ற விமர்சனமும் உண்டு: அதே சமயம் வலதுசாரி வேட்பாளர்களில் பலரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்ற சாதகமான அம்சமும் மெண்டோசாவுக்கு உள்ளது.பொருளாதார கண்ணோட்டத்தின்படி, ஈக்வடார் மற்றும் பெரு ஆகிய இரண்டு நாடுகளுமே பெருந்தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்சி பெற வேண்டிய காலத்தில் எந்த வகை சமூகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்பதே முக்கியப் பிரச்சனையாகும்.
பொலிவியா...
பொலிவியாவில் ஒன்பது துறைகளில் நான்கில் நடைபெறும் ஆளுநர் தேர்தல்களில் ஒரு விரிவான சித்திரம் பிரதிபலிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ஈவோமொரேல்சின் சோஷலிசத்துக்கான இயக்கம் நாட்டின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக தற்போதும் உள்ளது. ஆனால், 2019-இல் பொலிவியாவில் அரசியல் நெருக்கடிக்குமுன்பாக நடைபெற்ற இத்தகைய உள்ளூர் தேர்தல்களில் அக்கட்சிக்கு வாக்கு சதவீதத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈக்வடாரைப் போலவே கடந்த சில மாதங்களில் பொலிவியா தேர்தல் அமைப்பின் மூலம் மக்கள் குறைகளை ஒருமுகப்படுத்துவது பொலிவியாவில் பெரும்பாலும்சாத்தியமானது. கட்சிக்கு இடதும் வலதுமான எதிர்ப்புகள் மார்ச் 7 அன்று நடைபெற்ற மண்டல தேர்தல்களில் கணிசமான லாபம் சந்தித்தன. 2019 நெருக்கடியின்போது நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இது காட்டுகிறது. ஆனால், ஒருமுகப்படுவதையும், வேலையின்மையையும், அதிகரிக்கும் பெருந்தொற்று நோயையும் பொலிவியா, ஈக்வடார், பெரு ஆகிய மூன்று நாடுகளுமே சந்திக்கின்றன. இந்த நிலைமை மீண்டும் ஒரு போராட்டத்தைத் தூண்டக்கூடும் – குறிப்பாக ஊரடங்குகள் விலக்கப்படத் துவங்கும்போது.
சிலி நாட்டில் ஜனாதிபதி செபாஸ்டியன் பினரா தலைமையிலான வலதுசாரி அரசாங்கம் தனது செல்வாக்கை பெருமளவு இழந்துள்ளது. எனவே நவம்பர் 21 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஒரு துவக்கம் கிடைத்தது. சிலி நாட்டின் தலைநகரமான சாண்டியாகோவின் புற நகர் பகுதியான ரிகொலேட்டாவின் கம்யூனிஸ்ட் மேயரான டேனியல் ஜேடு, ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய தேர்தல்களில் முன்னேற்றம் காட்டியுள்ளார். மார்ச் துவக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் ஏனைய வேட்பாளர்களைக் காட்டிலும் அதிகமாக 17.9% வாக்குகள் பெற்றுள்ளார். பெரும்பகுதி வலதுசாரி, நடுநிலை வேட்பாளர்களோடு மேலும் பல இடதுசாரிகளும் களத்தில் உள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவின் ஏனைய பகுதிகளை எடுத்துக் கொண்டால், ஏப்ரல் 25 அன்று ஹைதியில் அரசியலமைப்புச் சட்ட ரீதியான வாக்கெடுப்பும், செப்டம்பர் 19 அன்று ஹைதியில் ஜனாதிபதி மற்றும் சட்டசபைக்கான தேர்தலும், ஜூன் 6 அன்று மெக்சிகோ பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலும், செயிண்ட் லூசியாவில் சட்டமன்ற தேர்தலும், அக்டோபர் 24 அன்று அர்ஜெண்டினாவில் சட்டமன்ற தேர்தலும், நவம்பர் 7 அன்று நிகரகுவாவில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலும், நவம்பர் 28 அன்று ஹோண்டுராசில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுகின்றன. வர்க்கப் புரட்சிகளின் வரலாற்றில், முதற்கட்ட புரட்சியின்பின்னடைவின் முடிவில் தோழர் லெனின் கூறிய விளக்கத்தை நினைவு கூர்வோம் : “புரட்சிகள் முடியலாம். மனிதர்கள் மடியலாம். சித்தாந்தங்கள் நீடித்து வாழும்.” லத்தீன் அமெரிக்காவுக்காகவும் நம்பிக்கையுடன் காத்திருப்போம் !
கட்டுரையாளர்: ப.இந்திரா, சிஐடியு தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்