கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகு திக்கும் பாலக்காடு மற்றும் சேலக்கரா சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்கள் நடந்தன. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெல்வார் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்டதே. சேலக்கரா தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தக்கவைத்துக்கொள்ள பாலக் காடு தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) தக்கவைத்துக் கொண்டது என்பதுதான் பொதுவான ஊடக செய்திகள். ஆனால் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நடை பெற்ற பிரச்சாரமும் யுடிஎப்-பின் அணுகுமுறையும் ஆழமாகவும் கவலையுடனும் கவனிக்கத்தக்கது ஆகும்.
பாஜகவின் பின்னடைவு
2024 நாடாளுமன்ற தேர்தல்களில் திருச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி பெற்ற வெற்றி யும் சில தொகுதிகளில் பாஜக பெற்ற வாக்குகளும் கேரள அரசியல் குறித்து பல கனவுகளை சங் பரி வாரத்தினரிடம் உருவாக்கியது. இந்த இடைத்தேர்த லில் குறைந்தபட்சம் பாலக்காடு தொகுதியில் வெல்வோம் என கனவு கண்டனர். ஏனெனில் அந்த மாவட்டத்தில் பாஜக வலுவாக உள்ளது. எனினும் பாஜக தோல்வியை சந்தித்தது மட்டுமல்ல; வாக்கு களும் குறைந்துள்ளன. இதனை கீழ்கண்ட விவரங் கள் தெளிவுபடுத்துகின்றன: எல்டிஎப் மற்றும் யுடிஎப் வாக்குகள் அதிகரித்த அதே நேரத்தில் பாஜக வாக்குகள் சரிந்துள்ளன. தேர்தல் அரசியலில் பாஜகவின் அரசியல் திட்டம் என்பது இரு முரண்பாடுகளை அடிப்படையாக கொண்டது. ஒரு முரண்பாடு ஒட்டு மொத்த இந்துக்களுக்கும் முஸ்லிம்கள் எதிரிகள் எனும் கருத்தாக்கத்தை உருவாக்குவது. சில மாநிலங்களில் சூழலுக்கு ஏற்றவாறு கிறிஸ்தவர்களை இந்துக்களின் எதிரிகளாக கட்டமைப்பது. இந்துத்துவா கருத்தியல் உருவாக்கும் இந்த மதப்பிளவுவாதம் அடிப்படையான ஒன்று. ஆனால் இது மட்டுமே பாஜகவுக்கு வெற்றியை தேடித் தருவது இல்லை. எனவே மற்றொரு முரண்பாட்டையும் அது சூழ்ச்சிகரமாக உருவாக்குகிறது. அது பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள முரண்பாடை கூர்மையாக்குவது ஆகும். உத்தரப்பிரதேசத்தில் மக்கள் தொகையில் 7%ஆக உள்ள யாதவ சமூகத்துக்கு எதிராக 33% ஆக உள்ள ஏனைய பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அனை வரையும் அணி திரட்டுவது. அதே போல 12% ஆக உள்ள ஜாதவ் பட்டியலின மக்களுக்கு எதிராக 8%ஆக உள்ள ஏனைய தலித் பிரிவை திரட்டுவது. இதே திசைவழியில் ஹரியானாவில் ஜாட் சமூகத்துக்கு எதிராக மற்ற சமூகங்களை அணி திரட்டுவது. முற் படுத்தப்பட்ட சாதியினரின் மிகப்பெரும்பான் மையான வாக்குகளை நிலை நிறுத்திக் கொண்டு இத்தகைய சாதிய அணி திரட்டல்களை பிற்படுத்தப் பட்ட மற்றும் தலித் பிரிவினரிடையே திட்டமிட்டு குயுக்தி யுடன் கையாண்டதால் பாஜகவுக்கு வெற்றிகள் கிடைத்தன.
இஸ்லாம்- கிறித்துவ முரண்பாடுகள்
இத்தகைய ஒரு முரண்பாட்டை கேரளாவில் செயல்படுத்துவதில் பாஜக வெற்றிபெற முடிய வில்லை. ஏனெனில் கேரளாவின் மக்கள் தொகை சுமார் 50% இந்துக்களையும் 25% கிறிஸ்தவர்களையும் 25% முஸ்லிம்களையும் கொண்டுள்ளது. எல்டிஎப் மற்றும் யுடிஎப் என இரு கூட்டணிகளுடன் போட்டி போட்டு இந்துத்துவா கருத்தியலின் அடிப்படையில் இந்துக்களின் வாக்குகளை ஓரளவு வாங்கும் பாஜக ஒரு கட்டத்துக்கு மேல் இந்துக்களிடையே வாக்கு களை கூடுதலாக பெற இயலவில்லை. எனவே வாக்கு வங்கியில் முன்னேற வேண்டுமானால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெற்றாக வேண்டும். நாடு முழுதும் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான மூர்க்கத்தனமான தாக்குதல் காரணமாக முஸ்லிம்களிடம் வாக்கு வங்கியை உருவாக்க பாஜகவால் இயலவில்லை. எனவே அவர்கள் முன் உள்ள ஒரே வழி கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெற முயல்வதுதான்! எனவே கேரளாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்த வர்களுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்க கடுமையான முயற்சிகளை பாஜக மேற்கொள்கிறது. உலகின் சில பகுதிகளில் நிலவும் முஸ்லிம்-கிறிஸ்தவ முரண்பாடுகள் பற்றி மிகைப்படுத்தி பிரச்சாரம் செய் கிறது. இந்துக்களுக்கு மட்டுமல்ல; கிறிஸ்தவர்க ளுக்கும் முஸ்லிம்கள் எதிரிகள்தான் எனும் கருத்தாக் கத்தை உருவாக்குகிறது. பாஜகவின் குடியுரிமை சட்டத்தில் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் உரிமை கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படவில்லை என்பது நினை வில் கொள்ளத்தக்கது. முஸ்லிம்களிடமிருந்து, இந்தி யாவின் இன்னொரு முக்கிய சிறுபான்மை பிரிவான கிறிஸ்தவர்களை பிரிக்கும் சூழ்ச்சி இது. இலங்கை யில் தேவாலயங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பிரதமர் மோடி அங்கு சென்று தேவாலயங்களை பார்வை யிட்டது என்பதும் இந்த உத்தியின் ஒரு பகுதிதான்! கிறிஸ்தவர்களை குறிப்பாக ஒரு சில உள்பிரிவினரை பிரச்சாரம் மூலமும் நிதி உதவி தடுக்கப்படும் எனும் மிரட்டல் மூலமும் தன் பக்கம் இழுக்க பாஜக முயல்கி றது. பாஜகவின் முயற்சிகள் சிறிதளவு பலனை தந்துள்ளது என்றே தெரிகிறது. நாடு முழுதும் கிறிஸ்த வர்களுக்கு எதிராகவும் நடக்கும் தாக்குதல்களுக்கு பின்னரும் பாஜக கேரளாவில் கிறிஸ்தவர்களின் வாக்கு களை சிறிதளவாவது பெற முடிந்தது என்பது கவலை தரக்கூடியது. எனினும் கேரளாவின் மத ஒற்றுமையை பெருமளவு சங் பரிவாரத்தால் சிதைக்க இயலவில்லை. இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜகவின் வாக்கு சரிவு அதனை வெளிப்படுத்துகின்றன. எனவே கேரளா தேர்தல் முடிவுகள் சொல்லும் ஒரு முக்கிய செய்தி பாஜகவின் கனவுகளுக்கு கிடைத்துள்ள பின்னடைவு என்பதுதான். எனினும் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் பாஜகவை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதையும்எல்டிஎப் உணர்ந்துள்ளது.
யுடிஎப்-பின் தகர்ந்த கனவு
பாஜகவை போலவே காங்கிரஸ் தலைமை யிலான யுடிஎப்-புக்கும் ஒரு கனவு இருந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் 20இல் 18 தொகுதிகளை வென்ற பின்னர் ஏற்கெனவே தனது அரசாங்கம் கேரளா வில் அமைந்துவிட்டது எனும் பிரமையில் யுடிஎப் இருந்தது. அதனை வலுப்படுத்தும் வகையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமையும் என யுடிஎப் எதிர்பார்த்தது. பினராயி விஜயன் அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்துவிட்டது எனவும் மாநில அரசாங்கத்து க்கு எதிராக கடும் அதிருப்தி மக்களிடையே உள்ளது எனவும் யுடிஎப் கணக்கு போட்டது. தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை மைய மாக வைத்து எல்டிஎப் பிரச்சாரம் செய்தது. அந்த திட்டங்களில் எந்த குறையையும் யுடிஎப் கண்டு பிடிக்க இயலவில்லை. எனவே யுடிஎப் பொய் பிரச்சா ரத்தில் ஈடுபட்டது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எல்டிஎப் அரசாங்கத்துக்கு எதிரான தீர்ப்பாக அமை யும் எனவும் 2026இல் தனது ஆட்சி அமைப்பதற்கு கட்டி யம் கூறும் எனவும் யுடிஎப் மனப்பால் குடித்தது. சேலக்கரா தொகுதியில் எல்டிஎப் தோற்றால் அது பினராயி விஜயன் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என பொருள் எனவும் தனக்கு அது மிகப்பெரிய வெற்றி எனவும் யுடிஎப் கனவு கண்டது. காங்கிரசின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அதனை பகிரங்கமாகவும் அறி வித்தார். எனினும் சேலக்கரா தொகுதியில் எல்டிஎப் வெற்றி பெற்றது மட்டுமல்ல வாக்குகளும் அதிக ரித்தன. 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் சேலக்கரா சட்டமன்ற தொகுதியில் 60,368 வாக்குகளை எல்டிஎப் பெற்றது. இடைத்தேர்தலில் 64,259 வாக்குகளை பெற்றது. சுமார் 4000 வாக்குகள் 5 மாதங்களுக்கு இடையே நடந்த தேர்தலில் அதிகரித்துள்ளன. அதே போல 2021 எல்டிஎப் அலை அடித்த பொழுது பாலக்காடு தொகுதியில் பெற்ற வாக்குகளைவிட இப்பொழுது கூடுதலான வாக்குகள் எல்டிஎப் பெற்றுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் சொல்லும் முக்கிய செய்தி என்னவெனில் பினராயி விஜயன் அரசாங்கம் மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதுதான்! 2019 நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை எதிர் கொண்டு 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றது போல 2024 பின்னடைவை பின்னுக்குத் தள்ளி 2026 தேர்தல்க ளிலும் எல்டிஎப் வெல்லும் என்பதும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்டிஎப் செய்யும் என்பதிலும் ஐயமில்லை.
சிறுபான்மை மதவாதத்தின் ஆதரவை நாடிய யுடிஎப்
பாலக்காடு/ சேலக்கரா ஆகிய சட்டமன்ற தொகுதி களில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக யுடிஎப் ஒரு ஆபத்தான அணுகுமுறையை கைக் கொண்டது. சிறுபான்மை மதவாத அமைப்புகளான எஸ்டிபிஐ மற்றும் ஜமாயத்-இ- இஸ்லாமியின் ஆதர வைப் பெறுவது என்பதுதான் அது! (தங்களுக்கும் கேரளாவின் எஸ்டிபிஐ அமைப்புக்கும் வேறுபாடு உள்ளது என தமிழ்நாடு எஸ்டிபிஐ அமைப்பு கூறு கிறது). கேரளாவில் இந்த இரு அமைப்புகளும் இஸ்லா மிய மக்களை பொது அரசியல் நீரோட்டத்திலிருந்து பிரிக்க முயல்கின்றன. “காவிக்கும் சிவப்புக்கும் எந்த வேறுபாடும் இல்லை” என்பதுதான் இந்த அமைப்புக ளின் முழக்கம் ஆகும். இந்த இடைத்தேர்தல்களில் இந்துமதவாத அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய மதவாத அமைப்புகள் ஆகியவற்றின் ஆதரவை கோர வும் மாட்டோம்; பெறவும் மாட்டோம் என எல்டிஎப் பகிரங்கமாக அறிவித்தது. இதே போல ஒரு அறி விப்பை யுடிஎப்பும் வெளியிட வேண்டும் எனவும் எல்டிஎப் கோரியது. ஆனால் கடைசிவரை யுடிஎப் அத்தகைய அறிவிப்பை வெளியிடவே இல்லை. எனினும் இந்த பிரச்சனையில் விமர்சனத்தை தவிர்க்க எஸ்டிபிஐ பாலக்காடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியது. ஆனால் முழுமையாக யுடிஎப்க்குதான் எஸ்டிபிஐ மற்றும் ஜமாயத்-இ-இஸ்லாமி அமைப்புகள் தேர்தல் வேலை செய்தன. கேரளாவில் மட்டுமல்ல; காஷ்மீரிலும் தோழர் யூசுப் தாரிகாமிக்கு எதிராக ஜமாயத்-இ-இஸ்லாமிதான் வேட்பாளரை களமிறக்கியது. தாரிகாமியை தோற் கடிக்க பாஜகவினர் சிலர் கூட ஜமாயத் அமைப்பை ஆதரித்தனர். அனைத்து மசூதிகள் மற்றும் மதரசாக்க ளில் தாரிகாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இவற்றை மீறித்தான் குல்காம் தொகுதியில் தாரிகாமி வெற்றி பெற்றார். அதே போலவே இஸ்லா மிய மதவாத அமைப்புகள் எல்டிஎப்க்கு எதிராக கடு மையாக பணியாற்றினர். பாலக்காட்டில் காங்கிரஸ் வெற்றி உறுதியானவுடன் நகரம் முழுவதும் மகிழ்ச்சி யுடன் ஊர்வலம் சென்றது யுடிஎப் கட்சியினர் அல்ல! மாறாக எஸ்டிபிஐ-தான்! யுடிஎப் கட்சியினர் எஸ்டிபிஐ ஆதரவை பெறுவது இது முதல்முறை அல்ல. சில உள்ளாட்சி அமைப்புகளில் யுடிஎப் மற்றும் எஸ்டிபிஐ கை கோர்த்து கொண்டு எல்டிஎப் வேட்பா ளர்களை தோற்கடித்த உதாரணங்கள் உண்டு. 2024 நாடாளுமன்ற தேர்தல்களிலும் எஸ்டிபிஐ தனது ஆதரவை யுடிஎப்க்கு தான் என அறிவித்தது. இத்த கைய போக்குகள் இந்துத்துவ சக்திகளை வலுவாக்கும் என்பது மட்டுமல்ல; கேரளாவின் மத ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானது.