“அரிது அரிது, மானிடராய்
பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி
பிறத்தல் அரிது”
என்று அவ்வை மூதாட்டியின் தனிப்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அவ்வையார் வாழ்ந்த காலத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தகைய சமூக அந்தஸ்து கிடைக்கப் பெற்றது, அவர்கள் அனுபவித்த வலிகள், வேதனைகள் இவற்றை கண்ணுற்றுத்தான் அவர் இவ்வாறு ‘கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது’ என்று குறிப்பிட்டிருக்கக் கூடும். மாறாக, மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ‘சிறப்பிற்குரி யது அல்ல’ என்று குறிப்பிட்டிருக்க இயலாது. கூன், குருடு, செவிடு, பேடு என்பது அப்போதைய வழக்கு மொழியே ஆகும். ஆனால், தற்போது இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதே தண்டனைக்குரிய குற்றமாகும். மாறாக முதுகு தண்டு பாதித்தவர், பார்வைத் திறன் அற்றவர், கேட்கும் திறன் அற்றவர், மூன்றாம் பாலினத்த வர் என்று குறிப்பிடுவதோடு நடக்க இயலாதவர், தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றியவர், மனநிலை பாதித்தவர் போன்ற கண்ணியமிக்க வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உருவாக்கம்
ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு காரணிகளால் மாற்றுத்திறனாளிகள் உருவாக் கப்படுகின்றனர். அரசுகள் கடைப்பிடிக்கக் கூடிய மோசமான கொள்கைகளே பெருமளவில் மாற்றுத்திறனாளிகள் உருவாகவும் காரணமாய் இருக்கிறது. அண்டை நாடுகளுடன் நல்லி ணக்கத்தைப் பேணாது திட்டமிட்டு ஏற்படுத் தப்படுகின்ற போரினால் பெருமளவில் மாற்றுத் திறனாளிகள் உருவாகின்றனர். மேலும் குடி மக்களுக்கான போதிய ஊட்டச்சத்தின்மை, இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளின் கலவையாக மாறியுள்ள உணவுப் பொருட்கள், சுகாதாரச் சீர்கேடு, சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு, போலி மருந்து மாத்திரைகளின் கட்டுப்பாடற்ற புழக்கம், தவறான பரிந்துரைகள், விபத்துகள் இவையெல்லாமே இன்று மாற்றுத்திறனாளிகள் பெரிதும் உருவாகக் காரணிகளாக அமைந் துள்ளன. எனவே, இதற்கான பெரும் பொறுப்பும் அரசுகளையே சாரும்.
மனுவாத சமூகப் பார்வை
மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய கடந்த காலப் பார்வை மிகவும் பிற்போக்கானது. குறிப்பாக, இந்தியாவில் ‘மனுவாதம்’ மாற்றுத் திறனாளிகளை மிக மிக இழிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மாற்றுத்திறனாளிகள் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்களின் முன்னோர் கள் செய்த கர்ம பலன்களின் படிதான் இவர்கள் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கின்றனர் அல்லது உருவாகின்றனர் என்றும் கூறுகிறது. அதோடு மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களோடு புழங்கக் கூடாது என்றும், வீட்டிலும் கூட அவர்களை தனியாக வைத்துதான் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்யக் கூடாது என்றும் அவர்களுக்கு சொத்தில் பங்கு அளிக்கக் கூடாது என்றும் மனுவாதம் குறிப்பிடு கிறது. அதன் தாக்கம் இந்திய சமூகத்தில் தற்போது வரை மேலோங்கி இருந்தவண்ணம் உள்ளது. உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரியான ஹிட்லர் 1940களில் ஜெர்மனியில் நிலவிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க T-4 என்ற ஒரு கொடிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் தன் சொந்த குடிமக்களாகிய முதி யோர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர் என உழைத்து வாழ இயலாத அனைவரையும் வாழத் தகுதியற்றவர்களாக அறிவித்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட இயலாத அப்பாவி மக்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்து வைத்து கொன்றான். அப்படி 1941-1945க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கொன்று குவித்தான்.
சமூக நிலைமை
உலக மக்கள்தொகையில் 15 விழுக்காடு பேர் இன்று மாற்றுத்திறனாளிகளாக உள்ளதா கவும் அதுவே 2025களில் 25 விழுக்காடாக அதி கரிக்கக் கூடும் என்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான ஐ.நா.சிறப்பு மாநாடு (UNCRPD) ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தி யாவிலும் சுமார் 12 விழுக்காடு பேர் மாற்றுத்திற னாளிகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்களுள் பெரும்பாலானோரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவே உள்ளனர். இவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசுகள் குறிப்பாக, ஒன்றிய அரசு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஏராளமான மாற்றுத்திற னாளிகள் இன்று பசி, பட்டினிக்கு உள்ளாகி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் வாழ்ந்து வரும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவுவதற்காக ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்ட ‘இந்திரா காந்தி தேசிய ஊன முற்றோர் ஓய்வூதிய திட்டம்’ மூலம் வழங்கப்படு கிற உதவித் தொகை தொடர்ந்து 12 ஆண்டுக ளாக சிறிதும் உயர்த்தப்படாமல் வெறும் 300 ரூபாய் மட்டுமே மாதமொன்றுக்கு வழங்கப் படுகிறது. அதுவும் மொத்த மாற்றுத்திறனாளி களுள் வெறும் 3.8 விழுக்காடு பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை கிடைக்கிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குறைந்த பட்ச தேவையான மருந்து, மாத்திரைகளை கூட வாங்க இயலாமல் அவதிப்படுகின்றனர்.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுள் 36 விழுக்காடு பேர் மட்டும் ஏதேனும் ஒரு வேலை செய்பவர்களாக உள்ள னர். அவ்வாறு வேலை செய்பவர்களிலும் 90 விழுக்காடு பேர் அத்தக்கூலி வேலை பார்ப்ப வர்களாகவே உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கல்வி பெறுவதில் கூட பெரும் பின்னடைவு காணப்படுகிறது. 5 வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளில் நான்கில் மூன்று பேர் எந்த கல்வி நிறுவனத்துக்கும் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.சிறப்பு மாநாடு
2006 டிசம்பர் 13இல் ஐ.நா சபையானது உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் நிலைமைகளைப் பற்றி ஆராய ஒரு சிறப்பு மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் முன் மொழியப்பட்ட வரைவுத் தீர்மானம் 2007 மார்ச் 30இல் இந்தியா உட்பட உலகில் உள்ள 159 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கையெழுத்தானது. இந்த ‘பன்னாட்டு ஊன முற்றோர் உரிமைகள் சாசனம் - யுஎன்சி ஆர்பிடி (UNCRPD)’ என்பது ஊனமுற்ற மக்க ளின் மதிப்பையும், உரிமைகளையும் பாது காக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளால் உரு வாக்கப்பட்ட ஒரு அனைத்துலக மனித உரிமை கள் ஒப்பந்தம் ஆகும். அதன்படி ஊனமுற்றோர் மனித உரிமைகளை அனுபவிப்பதை முன்னெ டுத்துப் பாதுகாத்து உறுதி செய்வதுடன், அவர்கள் சட்டத்தின் கீழ் சமமான நிலையை பெறு வதை உறுதி செய்வதும், இந்த ஒப்பந்தத்தோடு தொடர்புடைய எல்லா தரப்பினரது கடமையு மாகும். மேலும், ஊனமுற்றோர், சமுதாயத்தில் மனித உரிமைகளோடு கூடிய முழுமையான உறுப்பினராக கருதப்படுவதற்கும், உரிய மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதற்கும், அவர்களை அனுதாபத்துக்கு உரியவர்களாகப் பார்ப்பதை தவிர்ப்பதற்கும் இந்த சாசனம் ஒரு ஊக்கியாகக் காணப்படுகிறது.
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016
2007 ஐ.நா. சிறப்பு மாநாட்டு சாசனத்தை ஏற்றுக் கொண்டு ஏழாவது நாடாக கையெ ழுத்திட்ட இந்திய ஒன்றிய அரசு அந்த சாசனத் தின்படி மாற்றுத்திறனாளிகளின் உரிமைக ளுக்கான ஒரு புதிய சட்டம் கொண்டு வருவ தற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள வில்லை. எனவே, 2010 ஏப்ரல் 20 அன்று ‘ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை - (NPRD)’ சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கான ஒரு புதிய சட்டம் நாடாளு மன்றத்தில் உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி புதுதில்லி நாடாளுமன்றம் முன் சுமார் ஆறா யிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் கலந்து கொண்ட ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் விளைவாக போராட்டப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உடனடி யாக புதிய சட்டம் கொண்டு வருவதாக உறுதி கூறி யும், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நாடாளுமன்ற வீதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திற னாளிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே 2016 டிசம்பர் 2இல் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சமத்துவம் பாகுபாடற்ற தன்மை
மாற்றுத்திறனாளிகளின் ஓரளவு கண்ணிய மான வாழ்வுக்காக இந்த புதிய சட்டம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. இப்புதிய சட்டத் தின்படி 21 வகையான உடல் குறைபாடு அல்லது பாதிப்பு உடையோர் மாற்றுத்திறனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். புதிய சட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு சமத்துவம் மற்றும் பாகு பாடற்றத் தன்மையை வழங்குகிறது. கொடுமை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களிலி ருந்தும், மாற்றுத்திறனாளிகளை தவறாகப் பயன்படுத்துதல், வன்முறை, சுரண்டுதல் ஆகிய வற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிதியம் - சிறப்பு நீதிமன்றங்கள் - மாற்றுத்திறனாளி களுக்கு எதிரான குற்றங்கள், அவற்றிற்கான தண்டனைகள் - உள்ளடக்கிய கல்வி - வேலை வாய்ப்பில் பாகுபாடின்மை - சம வாய்ப்புக் கொள்கை - சமூக பாதுகாப்பு - குறைதீர் அதிகா ரிகளை நியமிப்பது - கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு - தனியார் துறையில் இட ஒதுக்கீடு - மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு திட்டங்கள் - சிறப்பு வேலைவாய்ப்பு அலு வலகம் மற்றும் எளிதில் அணுகத்தக்க தடை யற்ற சூழல் உள்ளிட்ட பல உரிமைகள் இந்த புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசின் அலட்சியம்
ஆனால் இவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனில் அதற்கான தனி நிதியம் உரு வாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இதுபற்றி கிஞ்சிற்றும் கவலைப் படவில்லை. மாறாக, மாற்றுத்திறனாளிகள் திட்டங்களுக்காக 2022-23 பட்ஜெட்டில் 240 கோடி ரூபாய் ஒதுக்கியபோது, தற்போது 2023 - 24 பட்ஜெட்டில் 90 கோடி ரூபாயை வெட்டி குறைத்து வெறும் 150 கோடியையே ஒதுக்கி உள்ளது. மேலும், புதிய சட்டம் இயற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகளுக் கான அணுகத்தக்க தடையற்ற சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் வலியுறுத்தியுள்ள போதிலும் சட்டம் இயற்றப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதற்கான எந்தவித முயற்சியையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதற்காக அவர்களை ‘திவ்யாங்’ (தெய்வப் பிறவிகள்) என பாசாங்கு செய்த பிரதமர் மோடி, மாற்றுத்திறனாளிகளின் உடலின் ஒரு அங்கமாக திகழக் கூடிய செயற்கை கை, செயற்கை கால் போன்ற உதவி உபகர ணங்களுக்குக் கூட ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது கொடுமையிலும் கொடுமை. எனவேதான், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு மாற்றுத்திறனாளிகளின் பின்வரும் முக்கிய கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றிட வலியுறுத்தி ஜூலை 10இல் நாடாளுமன்றம் அருகில் உள்ள ஜந்தர் மந்தரில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. ‘ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை - NPRD’ சார்பில் நடைபெறும் இந்த தர்ணா போராட்டத்தில் ‘தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் - TARATDAC’ சார்பில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தர்ணா போராட்ட கோரிக்கைகள்
* நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக உதவித்தொகை வழங்கிடு!
* இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் உதவித் தொகையை ரூ.5000/- மாக உயர்த்தி வழங்கிடு! அதனை ஒவ்வொரு மாநில வரவு - செலவு குறியீட்டுடன் இணைத்திடு !
* 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் உள்ளஅனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிடு!
* 100 நாள் வேலைத் திட்டத்தை வலுப்படுத்தி, இத்திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை அட்டை வழங்கிடு!
* மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 150 நாள் வேலை வழங்குவதோடு ஊதியத்தையும் உயர்த்தி வழங்கிடு!
* வருகை பதிவேடுக்கான என்எம்எம்எஸ் (NMMS) செயலியை ரத்து செய்! ஆதாரை இணைக்காதே!
* நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பத்தினரையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இணைத்து அவர்கள் அனைவருக்கும் ஏஏஒய் (AAY) குடும்ப அட்டையும், 35 கிலோ உணவுத் தானியமும் வழங்கிடு!
* மாற்றுத்திறனாளிகள் அனைத்து உரிமைகளையும், உதவிகளையும் ஒரே சான்றிதழ் மூலம் பெறுவதற்கு அவர்களுக்கு நாடு முழுவதும் செல்லத்தக்க தேசிய பல்நோக்கு அடையாள அட்டை (UDID) -யை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வந்திடு!
* அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது இருப்பிடம் அருகே முகாம் நடத்தி UDID அட்டை வழங்கிடு!
* மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்திட ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்து!
* அனைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்வதோடு, அனைத்து திட்டங்களிலும் மாற்றுத்திறன் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிடு!
* இரயில்வேயில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரே மாதிரியான பயணக் கட்டண சலுகை வழங்கிட உத்தரவிடு!
* பல்நோக்கு அடையாளச் சான்று (UDID)-ஐ இரயில்வே துறையை ஏற்கச் செய்திடு!
* நடைமேடைகள், இரயில் பெட்டிகள் அனைத்தையும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகத் தகுந்த முறையில் மாற்றிடு!
* இரயில்வேயை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்து!
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்