articles

img

புரமோத் தாஸ்குப்தா புரட்சியின் புயல்

தனது இளைய சகாக்களான பிமன்பாசு, சுபாஷ் சக்கரவர்த்தி,  ஷியாமள் சக்கரவர்த்தி, புத்ததேவ் ஆகியோருடன்...

1960களில் முசாபர் அகமதுவுடன்...

கொல்கத்தாவில் ஒரு பேரணியில்...

கல்கத்தாவில் முசாபர் அகமது பவன்  திறப்பு விழாவில்

மேற்கு வங்கத்தின் மண்ணில் புரட்சியின் விதையாக விழுந்த புரமோத் தாஸ்குப்தா, 1910-ல் வங்க தேசத்தின் பரித்பூர் மாவட்டத்தில் குன்வார்பூர் கிராமத்தில் பிறந்தார். சமூக சேவையை வாழ்வின் நோக்கமாகக் கொண்ட மருத்துவர் மதிலால் தாஸ்குப்தாவின் மகனாக பிறந்த அவர், தந்தையின் சேவை மனப்பான்மையை பரம்பரை சொத்தாகப் பெற்றார்.
இளம் வயதிலேயே நாட்டு விடுதலை வேட்கை அவரை ஆட்கொண்டது. கல்லூரியில் படிக்கும்போதே வங்காளத்தின் புரட்சிகர இயக்கமான அனுசீலன் சமிதியில் இணைந்தார். புரட்சி எண்ணங்கள் அவரை கல்லூரிப் படிப்பிலிருந்து தொழிற்கல்வி நோக்கி இட்டுச் சென்றன.

1929-ல் மச்சுவா பஜார் வெடிகுண்டு வழக்கில் தோழர்கள் கைதானபோது, அவர்களை காப்பாற்ற நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். சுபாஷ் சந்திர போஸிடம் கூட சென்று உதவி கேட்டார். ஆனால் ஆங்கிலேய ஆட்சியோ அவரையும் சிறைக்கு அழைத்துச் சென்றது. பெர்ஹாம்பூர், பக்சார், தியோலி என சிறைகள் மாறின. ஆனால் தியோலி சிறையில் அவர் வாழ்வை மாற்றிய மார்க்சிய நூல்கள் காத்திருந்தன.
எட்டு ஆண்டுகள் நீண்ட சிறை வாசத்திற்குப் பின் 1937-ல் விடுதலையான அவர், கல்கத்தாவில் முசாபர் அகமது, அப்துல் ஹலீம் ஆகியோரை சந்தித்தார். அவர்களின் வழிகாட்டுதலில் கல்கத்தா துறைமுகத் தொழிலாளர்களிடையே பணியாற்றி, விரைவில் கட்சியின் கல்கத்தா மாவட்டச் செயலாளரானார்.

1939-ல் இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். மீண்டும் சிறை! விடுதலைக்குப் பின் கட்சிக்காக அச்சகம் அமைத்து ‘ஸ்வாதிநதா’ பத்திரிகையை துவக்கினார். நேஷனல் புக் ஏஜென்சி மூலம் புரட்சிகர இலக்கியங்களை வெளியிட்டார்.

1948-ல் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவு வாழ்க்கை. 1962-ல் மேற்குவங்கமாநிலச் செயலாளரானார். இந்திய-சீன போரின்போது மீண்டும் சிறை! 1964-ல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது, அதன் தலைமைக்குழு உறுப்பினரானார்.

உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். 1967-ல் ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கி, வங்க அரசியலில் புதிய அத்தியாயம் எழுதினார். 1977-ல் காங்கிரசை வீழ்த்தி, வங்கத்தில் இடதுசாரி ஆட்சியை நிலைநாட்டினார்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர், 1982-ல் சிகிச்சைக்காக சீனா சென்றார். நவம்பர் 28-ல் அங்கேயே உயிர் நீத்தார். சீன விமானத்தில் கல்கத்தா வந்த அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாவீரர். அனுசீலன் சமிதியின் புரட்சிகர இளைஞனாக துவங்கி, மார்க்சிய-லெனினிய சிந்தனையாளராக உயர்ந்து, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வலிமையான தூணாக விளங்கிய பெருந்தகை. நாட்டின் விடுதலைக்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் இடைவிடாது போராடிய அவரது வாழ்க்கை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.