நாளை இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்
இலங்கையில் தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலை யகத் தமிழர்கள் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் தேர்தல் பங்களிப்பு 24 சதவீதமாக இருப்பதால் அவர்க ளின் வாக்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனினும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டிலும் ராஜ பக்சேவின் பௌத்த சிங்கள பேரினவாதம் கட்ட விழ்த்து விடப்பட்டமையால், எதிர்பார்த்த தாக்கத்தை சிறுபான்மையினரால் ஏற்படுத்த இயலவில்லை. ஆனால் வருகின்ற தேர்தலில் இனவாதம் முக்கிய பேசுபொருளாக இடம் பெறவில்லை என்பதால் சிறு பான்மையினர் வாக்குகளும் இம்முறை முக்கியத்துவம் பெறும் என நம்பப்படுகிறது.
தமிழ்க் கட்சிகளின் நிலை
வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இதுவரை தமிழ்க் கட்சிகள் சார்ந்தே தங்க ளின் வாக்குகளை செலுத்தி வந்துள்ளனர். கடந்த முறை பல தமிழ்க் கட்சிகள் இணைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2005இல் 22 இடங்களையும் 2015 இல் 16 இடங்களையும் பெற்றுவந்த நிலையில், கடந்த தேர்தலில் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. வாக்கு விகிதமும் 4.62 % இல் இருந்து 2.86 % ஆக குறைந்தது. அத்துடன் தமிழர் கட்சிகள் அண்மைக் காலங்களில் கடுமையான பிளவை சந்தித்து வருகின்றன. இதுவரை இருந்து வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தற்போது பல்வேறு பிரிவுகளாக பிரிந்து போட்டி இடுவதால், தமிழ்க் கட்சிகளுக்கு மிகப் பெரும் சரிவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய தமிழ் தலைமைகள் மீது அதிருப்தி கொண்ட பலரும் சுயேச்சைக் குழுக்களாகப் போட்டி இடுகின்றனர். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்கள் தேர்வாக வேண்டிய நிலை யில், 23 கட்சிகள் மற்றும் 22 சுயேச்சை குழுக்களைச் சார்ந்த 396 பேர் போட்டியிடுவதில் இருந்தே இது வெளிப் படையாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமும் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் தமிழ் மக்களிடையே பலத்த அதிருப்தியை உருவாக்கி உள்ளமை சிங்கள தேசிய கட்சிகளுக்கு சாதகமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை இருந்து வந்த பழைய தலைமைக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முஸ்லிம் மக்கள்
வட கிழக்கில் பாரம்பரிய இஸ்லாமியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாணத்தில் செறிவாக வும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாகவும் வாழ்கின்றனர். இதனால் வடகிழக்கில் தனிக் கட்சிக ளாகவும் மற்ற பகுதிகளில் தேசியக் கட்சிகளின் சின்னங்களிலும் போட்டியிட்டு அதிக உறுப்பி னர்களை பெற்று வருவதைக் காணலாம். மக்கள் தொகையில் 9.2 சதவீதமாக இருந்த போதும் கடந்த தேர்தலில் நாடாளுமன்றத்தில் 20 பிரதிநிதிகளை அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தவிர தனிப் பட்ட இஸ்லாமிய அமைப்புகள் அனுர குமார திஸா நாயக்கவை ஆதரிக்க முன்வந்துள்ள போக்கை யும், சிலர் நேரிடையாக தேசிய மக்கள் சக்தி கூட்டணி யின் சின்னத்தில் போட்டியிடுவதையும் காணலாம்.
மலையகத் தமிழர் நிலை
மலையகத்தைப் பொறுத்த வரையில், ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழி லாளர் காங்கிரஸ், ரணில் விக்கிரமசிங்க சார்ந்தும்; மனோ கணேசன் தலைமையிலான மலையக தமிழர் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாசவை சார்ந்தும் அக்கட்சிகளின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கின் றன. மலையக மக்கள் எப்போதும் தேசியக் கட்சிக ளையே ஆதரித்து வந்துள்ளனர். கடந்த தேர்தலில் 9 மலையகத் தமிழர்கள் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வரிசையில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சின்னத்தில் எழுச்சியுடன் மலைய கத்தில் இருந்து பலரும் போட்டியிடுவதைக் காண லாம். பாரம்பரிய தலைமையை மாற்ற வேண்டும் என்ற ஒரு எழுச்சி, மலையக இளைஞர்கள் மற்றும் மத்திய தர மக்களிடையே அண்மைக் காலங்களில் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. அதன் விளைவாக அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில், மலையக தமிழர் பலரும் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். எனவே இம்முறை அக்கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு மலையகத் தமிழர் பிரதிநிதிகள் செல்வது உறுதி எனவும் தெரிகிறது. வடகிழக்கில் அதிக அளவில் சுயேச்சை குழுக்கள் போட்டி இடுவதால், தமிழ்க் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதைப் போன்ற ஒரு நிலை மலை யகத்திலும் காணப்படுகிறது. உதாரணமாக 8 பிரதி நிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் 187 பேர் போட்டியிடும் நிலையில், 121 பேர் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். இதனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, சிலரின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பணம் படைத்த சில அமைப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு
டி.எஸ். சேனநாயக்கவினால் தொடங்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தொடங்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு வலதுசாரி கட்சிக ளைச் சார்ந்த ஐந்து குடும்பங்கள் தான் இலங் கையை கடந்த 75 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலில் ராஜபக்சே இனவாத அரசியலை முன் வைத்து, தென்னிலங்கை மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட போது, காலிமுகத் திடலில் தொடங்கிய மாபெரும் மக்கள் எழுச்சியில் ஆட்சி மாற்றத்திற்கான விதை போடப்பட்டது. அதன் விளைவாக ஆட்சியில் இருந்த ராஜபக்சேவின் குடும்பம் அகற்றப்பட்டதுடன், நாடெங்கும் மக்கள் மாற்றம் வேண்டி போராடத் தொடங்கினர். அதன் விளைவாகவே, சோஷலிசக் கொள்கை கொண்ட அனுர குமார திஸாநாயக்கவை கடந்த செப்டம்பரில் ஜனாதி பதியாக மக்கள் தேர்ந்தெடுக்கவும் செய்தனர். கடந்த கால ஆட்சியாளர்களை நிராகரிக்கும் மன நிலைக்கு நாட்டு மக்கள் வந்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரும் எழுச்சி அலை நீடிக்கிறது. பழைய தலைவர்கள் வெளியேறி இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துக் கட்சியிலும் வலுத்து வரு கிறது. இதனை நன்கு உணர்ந்த தேசிய மக்கள் சக்தி கூட்டணித் தலைவர் அனுர குமார திஸா நாயக்க, புதியவர்களையும் இளைஞர்களையும் அர வணைத்து, களம் இறக்கி இருப்பதால், தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அக்கட்சிக்கு அதிகம் எனக் கருதப்படுகிறது. கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மோசடிகள் என அனைத்தையும் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க, ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருவது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என்ற இன பேதம் இன்றி, இலங்கையர் என்ற உணர்வுடன் நாட்டை கட்டி எழுப்புவோம் என்ற அவரது அறை கூவல் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபா டின்றி அனைவரையும் கவர்ந்து வருவதால், அனுரவின் வெற்றி உறுதி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நம்பிக்கை விதைக்கும் அனுர
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரில் குறைந்த அளவினரே தம் ஆதரவை தெரிவித்து இருந்த நிலையில் இம்முறை அனுர குமார திஸாநாயக்க அவர்களது கூட்டணியை அதிக அளவில் ஆதரிப்பர் எனத் தெரிகிறது. வட இலங்கையிலும் கூட தமிழ்த் தேசியம் பலவீனம் அடைந்து, தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் மன நிலைக்கு மக்கள் வந்து கொண்டு இருப்பதும் தெரிகிறது. பழமையான தலைமைத்துவத்தை நிராகரிக்கும் சிறுபான்மை மக்கள், அனுரவின் பக்கம் அணி திரள்வர் என நம்பப் படுகிறது. வட இலங்கை ஆளுநராக முன்னாள் மாவட்ட ஆட்சியர் வேதநாயகத்தை நியமித்தது, 34 வருடங்க ளாக இராணுவத்தால் மூடி வைக்கப்பட்டிருந்த பலாலி வீதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டது போன்ற செயல்பாடுகள் அனுர மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. நவம்பர் 10ஆம் தேதி, வன்னி மற்றும் யாழ்ப்பா ணத்தில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இலங்கைத் தமிழ் மக்களுக்கு சாதகமாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். குறிப்பாக மீனவர்களின் மீன் வளம் பாதுகாக்கப்படும், கடந்த காலங்களில் இழந்த காணிகள் படிப்படியாக திரும்ப ஒப்படைக்கப்படும், மாகாண சபை உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும், வட இலங்கை சுற்றுலா உட்பட விவசாய கைத்தொழில் மேம்படுத்தப்படும் என ஆக்கப்பூர்வ மான வாக்குறுதிகளை அவர் வழங்கியது, தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தென் இலங்கை மக்களுக்கு சமமாக அனைத்து உரிமைக ளுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எந்த விதமான பேதமும் பாராது ஆட்சி நடைபெறும் என உறுதி அளித்தமை அதிக கவனம் பெற்றது. இந்நிலை யில் அனுரவின் வெற்றி தெற்கு தொடங்கி, யாழ் வரை நீளும் என கூறப்படுகிறது.
வலதுசாரிகளின் சூழ்ச்சிகள்
இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கட்சிகள் உட்பட சுயேச்சை குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் போட்டி இடுகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கடந்து, வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்ற அரசியலும் இதில் மறைந்திருப்பதாக தெரிகிறது. இதனை நிறை வேற்ற பெருமளவு பணம் செலவிடப்பட்டு வருவ தாகவும் அறியப்படுகிறது. இதுவரை இருந்து வந்த மேட்டுக் குடி, வலது சாரி ஆட்சிகளுக்கு மாற்றாக, ஒரு முழுமையான இடதுசாரி அரசு அமைந்து விடக் கூடாது என்பதில், அண்டை நாடுகள் மட்டுமல்லா மல், வெளிநாட்டு அமைப்புக்களும் இலங்கை நாடாளு மன்றத் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் இவற்றை புறந்தள்ளி இன, மத பேதமின்றி இலங்கை முழுவ தும் மக்கள், ஒரு மாற்றம் அவசியம் தேவை என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். இலங்கை வாக்காளர்களில் 30 சதவீதத்திற்கு மேற் பட்டோர் இளம் வாக்காளர்களாக இருக்கின்றனர். அரசி யல் மாற்றம் வேண்டும் என்ற எழுச்சி அவர்கள் மத்தி யில் மேலோங்கி காணப்படுகிறது. அம்மாற்றத்தை தரக் கூடிய கட்சி தேசிய மக்கள் சக்தி கூட்டணி என்றும், அதனை நிறைவேற்றக் கூடியவர், எளிய குடும்பத்தில் இருந்து வந்த தோழர் அனுர குமார திஸாநாயக்க மட்டுமே என்றும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக, தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.