articles

img

கல்வியும் ஆளும் வர்க்கமும் - சீத்தாராம் யெச்சூரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது. 

இந்தக் கட்டுரை 1985-இல்  எழுதப்பட்டது. இன்று மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் தத்துவார்த்த சாராம்சம் எப்படிப்பட்டது என்பதை விளக்கிட இப்போதும் இக்கட்டுரை (The Marxist Volume: 03, No. 4 October-December, 1985, Education & The Ruling Classes, Sitaram Yechury) பொருந்துகிறது. இந்திய கல்வி வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் விரிவாக ஆய்வு செய்கிறார் மகத்தான மார்க்சிய அறிஞரும், சிபிஐ(எம்) மறைந்த பொதுச் செயலாளருமான சீத்தாராம் யெச்சூரி.

புதிய கல்விக் கொள்கை (1985) குறித்த விவாதம்  ஒரு முக்கியமான கேள்வியை நம் முன் எழுப்புகிறது. வரலாற்றின் ஒவ்வொரு காலகட் டத்திலும், வெவ்வேறு சமூக அமைப்புகளின் கீழ் வழங்கப்படும் கல்வியின் அளவையும் வகையையும்  தீர்மானிக்கும் காரணிகள் எவை? மனித நாகரிக வர லாறு காட்டுவது என்னவென்றால், எல்லா கால கட்டங்களிலும் எல்லா சமூக அமைப்புகளிலும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளே தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்துள்ளது.

வர்க்க சமூகத்தில் கருத்தியல் ஆதிக்கம்

மார்க்சும் ஏங்கெல்சும் கூறியது போல: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது, சமூகத்தின் ஆளும் பொருள் சக்தியாக இருக்கும் வர்க்கமே அதன் ஆளும் கருத்தியல் சக்தியாகவும் இருக்கிறது. பொருள் உற்பத்தி சாதனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வர்க்கம், அதன் விளை வாக மன உற்பத்தி சாதனங்களையும் கட்டுப்படுத்துகிறது.”

வரலாற்று வளர்ச்சியில் கல்வி

முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களில், கல்வி முற்றிலும் ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே உரியதாக இருந்தது. பொருள் உற்பத்தி மற்றும் அறிவு உற்பத்தி பிரிவினையின் காரணமாக, சமூக  விவகாரங்களை நடத்தவும் உற்பத்தி நடவடிக்கை களை திட்டமிடவும் ஓய்வு நேரம் கொண்டவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. கிரேக்க கல்வி நிறு வனங்களும், இந்திய குருகுல முறையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். ஏகலைவன் கதை காட்டுவது என்னவென்றால், கல்வி ஆளும் வர்க்கத்திற்கு சொந்த மானது மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கம் கல்வி பெறுவது தடை செய்யப்பட்டது என்பதும் ஆகும்.

முதலாளித்துவ காலத்தில் கல்வியின் விரிவாக்கம்

முதலாளித்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியுடன் இந்த கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக, முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களுக்கு எழுத்தறிவு, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவை கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் கல்வியின் வர்க்க நோக்கம் நீக்கப்பட வில்லை. வர்க்க சமூகம் உள்ளவரை இது தொடர்கிறது. தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளின் கல்வி வளர்ச்சி ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படும் தேவையான அளவிற்கு மட்டுமே தொழிலாளர் வர்க்கத்திற்கு கல்வி வழங்கப்படுகிறது.

பிரிட்டிஷ் காலத்தில் கல்வி

பிரிட்டனில், 19ஆம் நூற்றாண்டின் திருப்பத்தில் கல்வியின் முக்கிய விவாதம் - ‘கீழ்த்தட்டு மக்க ளுக்கான’ கல்வியின் பரவலாக்கம் பற்றியதாக இருந்தது.  இதில் மதத்தின் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தியது. கடவுள் பயம் கொண்ட, சட்டத்திற்கு கட்டுப்படும், கடின உழைப்பாளி பணியாளர்களை உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. மேல்தட்டு வர்க்கத்தின் கல்விக்கூடங்களான தனியார் பள்ளிகள் மற்றும் மொழிப்பாடப் பள்ளிகளில் மன பண்பாட்டு வளர்ச்சியும் குணநலன் உருவாக்கமும் முக்கிய நோக்கங்களாக இருந்தன.”

சுதந்திர இந்தியாவில்  கல்வி வளர்ச்சி

இந்தியாவில் அதிகார மாற்றத்திற்குப் பின், 1947 ஜனவரியில் மத்திய கல்வி ஆலோசனைக் குழு (CABE) இரண்டு ஆணையங்களை அமைக்க முடிவு செய்தது - ஒன்று பல்கலைக்கழக கல்விக்காக, மற்றொன்று இடைநிலைக் கல்விக்காக. சுதந்திர இந்தியாவின் தேவைகள் வேறுபட்டவை என்பதால் கல்வி அமைப்பு முறையில் மாற்றம் தேவை என உணர்ந்தனர். விடுதலைப் போராட்டத்தின் போது மக்களுக்கு கல்வித்துறையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் இந்த முடிவு வந்தது. 14 வயது வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி குறித்து அரசியல் நிர்ணய சபையில்  விவாதிக்கப்பட்டது. இது பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றது. 1960க்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை வழங்குவது, அதற்கேற்ப உயர்கல்வியில் தேவையான மாற்றங்களை செய்வது என்பதே திட்டமிடப்பட்டிருந்தது.

கல்வி ஆணையங்களின் வர்க்க நோக்கம்

முதலில் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் (1948) டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் “இந்திய பல்கலைக்கழக கல்வி குறித்து அறிக்கை அளித்து, மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கங்களை பரிந்துரைக்க” அமைக்கப்பட்டது.இந்த ஆணையம் தனது விரிவான அறிக்கையில் பின்வரும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள கல்வி  முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டது: - பொருளாதார சுதந்திரத்தை அடைதல்; பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ; சாதி, மத, பணக்கார-ஏழை வேறுபாடுகளை களைந்து உண்மை யான ஜனநாயகத்தை நிலைநாட்டுதல்; பண்பாட்டு மேம்பாடு ஆகியவையே அந்த சவால்கள். வர்க்க அடிப்படையில் பார்க்கும்போது, அரசியல்  சுதந்திரத்தை பொருளாதார சுதந்திரமாக மாற்றுவது என்பது இந்திய ஆளும் வர்க்கம் தேர்ந்தெடுத்த முத லாளித்துவ வளர்ச்சிப் பாதையை துரிதப்படுத்துவ தாகும். பொருளாதார சுதந்திரம் என்பது பிரச்சார ரீதியாக பொது மக்களின் வளத்தை அதிகரிப்பதாக காட்டப்பட்டது. ஆகவே இந்த ஆணையத்தின் அடிப்படைப் பணி ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப: 1. பொருளாதார சுதந்திரத்தை அடைய கல்வி முறையை மாற்றியமைத்தல் 2. பயனுள்ள ஜனநாயகத்தை உருவாக்க கல்வியை பயன்படுத்துதல் - என்பதாக இருந்தது. முதலாளித்துவ வளர்ச்சிக்கான கல்வி ஆணையத்தின் அறிக்கை நமது அரசியல மைப்பின் ஐந்து அடிப்படை கொள்கைகளான ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி உயர்கல்வி யை மறுசீரமைக்க விவாதித்தது.  நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான கருத்தியல் அமைப்பாக கல்வி முறையை மாற்றி யமைப்பதே அறிக்கையின் நோக்கமாக இருந்தது. பொருளாதார சுதந்திரம் குறித்து, “தொழில்நுட்ப வல்லுநர்களின் அவசர தேவை” என அறிக்கை குறிப்பிட்டது. “நாடு முழுவதும் இத்தகைய தொழில்கள் மற்றும் திறன்களுக்கு அவசர தேவை உள்ளது. இது தொழில்நுட்ப பணியாளர்களாக பணியாற்ற பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும். புதிதாக தொடங்கப்படும் பல நவீன தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன்மிக்க தொழிலாளர்களின் தொடர் வரத்தை உறுதி செய்யும்” என அறிக்கை உறுதிப்படுத்தியது

இடைநிலைக் கல்வி ஆணையம் 

1952 செப்டம்பரில் டாக்டர் லட்சுமணசாமி முத லியார் தலைமையில் இடைநிலைக் கல்வி ஆணை யம் அமைக்கப்பட்டது. 1953இல் முதல் நாடாளு மன்றத்தில் 1953ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் தேவைகளை பிரதிபலிக்கும் வகையில், “இந்தியாவின் மிக அவசரமான பிரச்சனை களில் ஒன்று - ஒருவேளை மிக அவசரமான பிரச்சனை - உற்பத்தித் திறனை மேம்படுத்தி தேசிய செல்வத்தை அதிகரித்து, அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக உயர்த்துவது” என அறிக்கை குறிப்பிடுகிறது. தொழில்நுட்ப கல்வியின் முக்கியத்துவம் அந்த அறிக்கை மேலும் “முக்கிய தேவைகளை” வரையறுத்தது: - உருவாகி வரும் ஜனநாயக சமூக ஒழுங்கில் படைப்பாற்றலுடன் பங்கேற்க மாணவர்களின் குணநலன்களை வளர்த்தல்;  - நாட்டின் பொருளாதார செழிப்பை உருவாக்க அவர்களின் நடைமுறை மற்றும் தொழில்சார் திறமையை மேம்படுத்துதல்; - கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆர்வங்களை வளர்த்தல். குறிப்பிடத்தக்க விதமாக, பரிந்துரைகள் முதல் இரண்டு தேவைகளையே வலியுறுத்தின. அவற்றிலும் இரண்டாவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது: “இந்த அணுகுமுறையுடன் (உழைப்பின் கண்ணியம்), தொழில்நுட்ப திறன் மற்றும் செயல்திறனை கல்வியின் அனைத்து நிலைகளிலும் மேம்படுத்த வேண்டியது அவசியம். தொழில் மற்றும்  தொழில்நுட்ப முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்த பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்களை உருவாக்க வேண்டும். கடந்த காலத்தில் நமது கல்வி கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை வேலைகளில் இருந்து விலகியும் இருந்ததால், படித்த வர்க்கத்தினர் நாட்டின் தேசிய வளங்களை மேம்படுத்துவதிலும், தேசிய செல்வத்தை பெருக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யத் தவறிவிட்டனர். இது இப்போது மாற வேண்டும்...”

ஆளும் வர்க்கத்தின் நலன்கள்

சுதந்திர நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தேவைகளை வெளிப்படையாக வெளிப்படுத்தும் அறிக்கை இது. தொழில்நுட்பப் பள்ளிகள், பாலிடெக்னிக்கு கள், பல்நோக்கு கல்வியை வலுப்படுத்துதல், மத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் என பெரும் தொழில்நுட்ப மனித வளத்தை உருவாக்கும் உள்கட்டமைப்பை பரிந்துரைத்தது. உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்து வரும் சூழலில், நமது நாட்டின் ஆளும் வர்க்கம் மூலதன-தீவிர தொழில்நுட்பத்தை அதிகம் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் வெற்றிகரமாக போட்டியிட வேண்டும் என்பதற்காகவும், ஏற்றுமதியே பொருளாதார நடவடிக்கைகளின் அளவை தீர்மானிக்கும் காலத்தில் தங்களது லாப அளவை பராமரிக்கவும் அதிகரிக்கவும் இது தேவைப்பட்டது. உள்நாட்டு சந்தையை ஏற்கனவே குறுக்கிவிட்ட நிலையில், ஏற்றுமதியை நம்பியிருப்பது ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நீடிக்க அவசியமாகிறது. இதற்கு நவீன அந்நிய தொழில்நுட்பத்தை பெருமள வில் கொண்டுவர வேண்டியுள்ளது. இது வெளிநாட்டு கூட்டு முயற்சிகளை அதிகரிக்கவும், பன்னாட்டு நிறு வனங்களின் சுரண்டலுக்கு நமது பொருளாதாரத்தின் கதவுகளை மேலும் திறக்கவும் வழிவகுக்கிறது.

இரட்டைக் கல்வி அமைப்பு

இந்த சூழலில் மேற்கண்ட ஆணையங்களின் அறிக்கையும், பின்னர்  அரசாங்கம் வெளியிட்ட “கல்வியின் சவால்” என்ற ஆவணமும், ‘அனை வருக்கும் கல்வி’ என்ற அரசியலமைப்பு வழிகாட்டு தலை கைவிடுவதாக அமைந்துள்ளது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்பதற்கு மாறாக, முறைசாரா கல்வி திட்டம் முன் வைக்கப்பட்டது. தொலைக்காட்சி மற்றும் இன்சாட் (INSAT) செயற்கைக் கோள் வழியாக கல்வி வழங்குவது முறையான பள்ளிக் கல்விக்கு மாற்றாக முடியாது. இது வசதி  படைத்தோருக்கு முறையான கல்வியும், ஏழை களுக்கு முறைசாரா கல்வியும் என்ற இரட்டைக் கல்வி அமைப்பை உருவாக்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பள்ளி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியில் பள்ளிகளே இல்லை. மற்ற இடங்களிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், சில மாதிரிப் பள்ளிகள் மட்டுமே ஏற்படுத்துவது கல்வியின் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரித்தது.

உலக வங்கியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப

உயர்கல்வியில் புதிய கல்லூரிகள் தொடங்குவதை நிறுத்துதல், தனியார் மயமாக்கல், கல்விக் கட்டணம் உயர்வு போன்றவை மூலம் உயர்கல்வியை சுருக்க முயற்சிக்கப்படுகிறது. பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புடன் இணைக்காமல் இருப்பதன் மூலம் படித்த வேலையில்லா பட்டாளத்தின் பிரச்சனையை சமாளிக்க முயற்சிக்கின்றனர். கல்வி நிறுவனங்களில் மாணவர் அரசியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த - பல்கலைக்கழக சுயாட்சி பறிக்கப்படுகிறது. காவல்துறை கட்டுப்பாடு அதிகரிக்கப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உலக வங்கியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, வளரும் நாடுகளில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுகின்றன. 21ஆம் நூற்றாண்டுக்கு நாட்டை இட்டுச் செல்வதாக கூறப்படும் இந்த மாற்றங்கள், உண்மையில் கல்வி வாய்ப்புகளை மறுக்கும் ஆளும் வர்க்க நலன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இலவச கட்டாயக் கல்வி, தாய்மொழிக் கல்வி, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கல்வி நிறுவனங்களை தேசியமயமாக்குதல் போன்ற மக்க ளின் கோரிக்கைகளுக்கு எதிராக இந்த மாற்றங்கள் அமைந்துள்ளன. இதற்கு எதிரான ஜனநாயக சக்தி களின் ஒற்றுமையான போராட்டம் தேவைப்படுகிறது.

பட்டங்களை வேலைவாய்ப்புகளில் இருந்து பிரிப்பதன் மூலம், படித்த இளைஞர்களின்  வேலையில்லாத் திண்டாட்டம் என்ற கருத்தாக்கமே இல்லாமல் போகும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.