articles

img

புரட்சிகர அரசியலின் வித்தகர் தோழர் லெனின்! - வே.தூயவன்

மாமேதை லெனினை கற்றுக் கொள்ளாமல் நாம் இன்றைய சமகாலத்தைப் புரிந்து கொள்ளவோ, அதற்கு ஏற்ற நடைமுறையை செயல்படுத்தவோ முடியாது.  இருபதாம் நூற்றாண்டு புரட்சிகளின் நூற்றாண்டு என்று சொன்னார் லெனின். அவர் சொன்னதற்கு ஏற்ப சோவியத் ரஷ்யாவைத் தொடர்ந்து மக்கள் சீனம், கியூபா, வியட்நாம், வடகொரியா ஆகிய நாடுகள் சோசலிசப் பாதையில் அணி வகுத்தன. அதேபோல் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க காலனி நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன. மாமேதை லெனின் சொன்னது 100 சதவிகிதம் உண்மை என்பதைக் காலம் நிரூபித்தது. எப்படி இது சாத்தியமானது? வல்லமை மிகுந்த மார்க்சியத் தத்துவத்தை உயிர்த்துடிப்புடன் உள்வாங்கி அதை லெனின் தனது சமகாலத்தில் உயிரோட்டமாக நடைமுறைப்படுத்தினார். காரல் மார்க்சின் வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு அதை அவர் பிசகாமல் பின்பற்றவில்லை. மாறாக புரட்சிகர நடைமுறைக்கான தத்துவம் என்ற முறையில், மார்க்சியத்தை, அதன் சாரத்தை அன்றாட நடைமுறை அரசியலுடன் உயிரோட்டமாக இணைத்தார் என்பதில் தான் லெனினின் சிறப்பு அடங்கியிருக்கிறது. வெற்றிகரமான சோவியத் ரஷ்யப் புரட்சிக்கு பின்பாக, நிரூபிக்கப்பட்ட, செல்வாக்குப் பெற்ற லெனினை இப்போது  நாம் மணக்கண்ணில் காட்சிப்படுத்திப் பார்க்கிறோம்.

விடாப்பிடியான போராட்டம்

ஆனால் பல்கலைக்கழக மாணவராக இருந்து புரட்சித் தலைவராக மாறிய லெனினின் வாழ்க்கை வரலாற்றை கற்றுணர்ந்தால், மார்க்சியத்தை, தொழிலாளி வர்க்க அரசியலை அவர் வாழ்ந்த சூழலில் பொருத்தி நடைமுறைப்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்தை அறிந்து கொள்ள முடியும். அந்தக் காலத்தில் எந்த ஏற்ற இறக்கம் இல்லாத, ஒரே மாதிரியான, சமச்சீரான அரசியல் பயணமாக அவரது புரட்சிகர போராட்டப் பயணம் இருக்கவில்லை. அவர் எப்போதும் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி வந்தார்.  ஒட்டுமொத்த அரசியல் சூழலிலும், ஆளும் முதலாளித்துவ மற்றும் மிதவாத ஜனநாயக அரசியல் சக்திகளுடனும், தொழிலாளி வர்க்க மற்றும் பல்வேறு விதமான கண்ணோட்டங்களைக் கொண்ட புரட்சிகர குழுக்களுடனும் அவர் தொடர்ச்சியான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை நடத்தி வந்தார். இந்தப் போராட்டத்தின் ஊடாக அவரது இடம் என்பது ஒரு சமயம் ஒட்டுமொத்த அரசியலின் மையமானதாக இருக்கும், பிரிதொரு சமயம் அவர் அந்த ஒட்டுமொத்த அரசியல் சூழலில் இருந்தும் வெளியேற்றப்பட்டவராக, தனித்த நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருந்தார் என்பதைக் காண முடியும். லெனினுக்கு அரசியலில் அவர் வகித்த இடம் குறித்தோ, அப்போதைக்கு அப்போது அவருக்கு கிடைத்த செல்வாக்கின் எழுச்சி அல்லது வீழ்ச்சி பற்றியோ கவலை இல்லை. ஒரு வர்க்கம் என்ற முறையில் தொழிலாளி வர்க்கம், வர்க்க உணர்வு பெற்று, அமைப்பாக எழுச்சி பெறுவது என்பதற்கு அவர் எடுக்கும் நிலைபாடு பொருத்தமாக இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் லெனினின் அளவுகோலாக இருந்தது. அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக உருவானது தான் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் (போல்ஸ்விக்) கட்சி. 

சரியான நேரத்தில்  சரியான நிலைபாடு

அதுவே 1917 அக்டோபர் ரஷ்ய சோசலிசப் புரட்சியின் உந்து சக்தியாக இருந்தது. புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை லெனின் பிரதிநிதித்துவப்படுத்திய போல்ஸ்விக் பிரிவு, அன்றைய மைய அரசியலில் தனித்து விடப்பட்டு ஒதுக்கப்பட்டதாகக் காணப்பட்டது. ஆனால் லெனின் தலைமையில் போல்ஸ்விக் கட்சி மேற்கொண்ட அப்போதைய அரசியல் உத்தி, நிலைபாடு, மிக விரைவில் ரஷ்ய மக்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, போல்ஸ்விக் கட்சியை புரட்சி அலையின் தலைமை நிலைக்குக் கொண்டு வந்தது. சரியான நேரத்தில், எடுத்த சரியான நிலைபாடு உலக வரலாற்றில், முதலாவது சோசலிச புரட்சியின் வெற்றியை சாத்தியமாக்கியது. நிறுவனமயம் ஆக்கப்பட்ட முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையில், தொழிலாளி வர்க்கத்தின் நலனை பிரதிபலிப்பதற்கான வேலையைச் செய்து கொண்டிருந்த அதேசமயம், அந்த முதலாளித்துவ அரசியல் நிறுவன முறையைத் தகர்ப்பதற்கான வேலையையும் அவர் செய்தார். தொழிலாளி வர்க்க விடுதலைக்கான சாத்தியங்களை கண்டடைவதே லெனினிற்கு நோக்கமாக இருந்தது. எனவே பழகிய முறைக்குள் மட்டும் அவர் கட்டுண்டு இருக்கவில்லை. புதிய, புதிய சாத்தியங்கள் குறித்து அவர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் அவர் சமகாலத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற மார்க்சிய அறிஞர்கள், தலைவர்களை விமர்சிக்கவும், தேவைப்படும் போது முரண்படவும் செய்தார். நிலவக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப, பழகிய பாதையில் கவனமாக நடக்க வேண்டும், முடிந்த அளவுக்கு மட்டும் செயல்பட வேண்டும் என்று அனுபவ வாதம் பேசியவர்களிடம், மார்க்சியத்தின் உயிராக இருந்த இயங்கியல் அடிப்படையில் புரட்சிகர அரசியலை முன்வைத்து, தொழிலாளி வர்க்கத்தை எழுச்சி கொள்ளச் செய்து, புரட்சிகர நடைமுறையைச் செயல்படுத்தியவர் லெனின்.

சாத்தியங்களின் வாய்ப்புகள்...

லெனின் மறைந்து இன்றுடன் 101 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. உலக வரலாற்றில் வேறு எவரையும் விட மிகத் தீர்மானகரமான மாற்றத்தை ஏற்படுத்திய மாமேதை அவர். அவர் காலத்தில் முதலாளித்துவம், நிதி மூலதனத்தின் ஆதிக்கமாக, ஏகாதிபத்தியமாக மாறியதை அவதானித்து, சோசலிசப் புரட்சியை நடத்தினார். நூற்றாண்டு கண்ட ஏகாதிபத்தியம், இன்று வெறிபிடித்த பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஆதிக்கமாக நோய் முற்றிய கிழப்பருவம் எய்தியிருக்கிறது.  உலகெங்கும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வறுமை, பசி, பட்டினி, தொடர்ச்சியான யுத்தங்கள் என சிக்கலில் சிக்கி இருக்கிறது. ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க வக்கற்ற ஆளும் வர்க்கங்கள், மென்மேலும் உலக மக்கள் வாழ்வை நெருக்கடி படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ அமைப்பே உருவாக்கிய ஜனநாயக நிறுவனங்களை, ஜனநாயக உரிமைகளைப் பறித்து கொண்டிருக்கின்றன. போர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. மாற்றம் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதாகத் தோன்றும் இந்தக் காலம், மாற்றத்திற்கான எண்ணற்ற சாத்தியங்களின் வாய்ப்புகளை திறக்கக் கூடியதாகவும் இருக்கிறது. மாமேதை லெனினைக் கற்றால், மறுபடி, மறுபடி கற்றுணர்ந்தால் நமக்கு புது சக்தி பிறக்கும். 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை உத்வேகத்துடன் நடத்துவதற்கு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களை அணி திரட்டுவதற்கு, விடுதலைக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புது வழி கிடைக்கும்.  வாழ்க லெனினியம்! ஓங்குக புரட்சி!

இன்று (ஜன. 21) மாமேதை லெனின் 101 ஆவது நினைவு தினம்