articles

img

தூக்குமேடை தியாகி பாலு தனித்துவமிக்க துருவ நட்சத்திரம்

தூக்குமேடை தியாகி பாலு தனித்துவமிக்க துருவ நட்சத்திரம்

மதுரை, இந்திய வரலாற்றில் தொன்மையும் பண்பாடும் கலாச்சாரமும் போற்றி பாது காத்து வருகின்ற நகரமாகும். பீகாரின் பாடலிபுத்திரம் என்ற பாட்னாவும், தமிழகத்தின் மதுரையும் தான் பழமையான நகரங்கள் என்பது வர லாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட ஒன்று. இந்திய அரசியல் வரலாற்றில்  பொது வுடமை இயக்கத்தின் வளர்ச்சியில், மக்கள் செல்  வாக்குள்ள நகரங்களில் மதுரை முன்னணியான  நகரமாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு எந்தவொரு முடிவு எடுத்தாலும் அதனை உடனடியாக நிறைவேற்றும் வல்லமை கொண்ட நகரம் மதுரை. இது கம்யூனிஸ்டுகளின் தியாக பூமி. இந்தத் தியாக வரலாற்றில் எண்ணற்ற தியாகிகள்  இருப்பினும் தனது அளப்பரிய நெஞ்  சுரமிக்க தியாகத்தால் தோழர் பாலு ஒரு தனித்து வமிக்க துருவநட்சத்திரமாகத் திகழ்கிறார். தோழர் பாலுவின் மொத்த ஆயுள் சுமார் 31 ஆண்டுகள் தான். பிறந்த தேதி சரியாகத் தெரிய வில்லை. அன்றைக்கு இன்றுபோல் ஏற்பாடு இல்லை. பாலுவின் குடும்பம் 1930-இல் மதுரைக்கு குடி பெயர்கிறது. அப்பொழுது பாலுவுக்கு 10 வய திருக்கும் என்று தோழர் ஐமாபா பதிவு செய்துள்ளார். மதுரை வெற்றிலைப் பேட்டையில் தினசரி கூலி 4 அணாவிற்கு வேலை செய்த பாலு பின்னர்  அன்றைய மதுரை ஹார்வி மில் அரையாள் கூலி யாக (சிறுவர்கள், பெண்கள் முழு வேலை செய்தாலும் அரையாள் கூலி வழங்கி உழைப்  பைச் சுரண்டியது) வேலைக்குச் சேர்ந்தார். மில்லில் நடைபெற்ற கூலி உயர்வுப் போராட் டம், வேலை அளவு கூடுதலை எதிர்த்து தொழி லாளர்கள் போராடினார். இதைச் சகிக்காத ஹார்வி மில் நிர்வாகம் ஏராளமான தொழிலா ளர்களை டிஸ்மிஸ் செய்தது. சுயமரியாதை மிக்க  பாலு தானாகவே முன் வந்து வேலையிலிருந்து நின்று கொண்டார்.

காவல்துறையில் சேர்ந்த பாலு

இதன் பின்னர்தான் பிரிட்டிஷ் ஆட்சியில் காவல்துறை பணியில் சேர்ந்தார். அப்போது காவல் துறையில் சேர ஒரே தகுதி ஆஜானு பாகுவான தோற்றம்தான். அந்தத் தோற்றத் தில் கம்பீரமான வாலிபனான பாலு காவல் துறைக்கு தேர்வாகி காவல்துறை வாகன ஓட்டு னராகி ஏட்டு எனும் அந்தஸ்து பெற்றார். ஹார்வி மில் தொழிலாளியாகப் பணி யாற்றிய காலத்தில் மில் நிர்வாகத்தின் உழைப் புச் சுரண்டல்; தொழிலாளர்களை அடிமை போல்  நடத்துவது போன்ற அக்கிரமங்களை கண்டு  மெல்ல மெல்ல பொதுவுடமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார். வர்க்கக் குணத்தையும், போர்க் குணத்தையும் நெஞ்சில் ஏற்றிக் கொண்  டார். இதனால் காவல்துறை பணி என்பது அவ ரது மனதில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்த வில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் காவல்  துறை பணியென்பது சமூகத்தில் மரியாதைக் குரிய ஒன்று.  காவல்துறையில் தனது சக காவலர்களுடன்  தோழமை உணர்வுடன் நடந்து கொண்டார். இதன் மூலம் ஏராளமான காவலர்களை நண்பர்  களாகப் பெற்றார். தென் மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா  போராட்டத்தை அடக்கச் சென்ற காவல்துறை யினரிடம் போராடும் விவசாயிகளிடமும், கம்யூ னிஸ்ட்களிடமும் இணக்கமாக நடந்து கொள்  ளும்படி பேசுமளவுக்குத் துணிவு பெற்றிருந்தார். அத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியோடும் இடை யறாத தொடர்பு வைத்திருந்தார். கட்சி தடை  செய்யப்பட்டு கட்சியினர் அடி உதை, சித்ர வதை, கொலை எனப் பல்வேறு அடக்குமுறை களுக்கு ஆளாகியிருந்த சூழலில் ஒரு காவல்துறை ஊழியர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பது “கத்தி முனையில் நடப்பதற்கு சமம்”  என்றால் மிகையாகாது. இந்நேரத்தில்தான் மாரியும், மணவாளனும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இதன் மூலம் கம்யூனிஸ்டுகள் என்றாலே பொது மக்கள் பயந்தோடும் ஒரு சூழலை உருவாக்கிக் கொண்  டிருந்தது காவல்துறை.

செண்பகம் சேர்வை கொலை வழக்கு

இச்சூழலால் காவல் துறையின் உளவுப் பிரிவைச் சேர்ந்த செண்பகம் சேர்வை என்பவ ரின் கொலை வழக்கில் பழிவாங்கத் தனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம்  என்ற முறையில் தோழர்கள் பாலு, மருதை, மொட்டையன், டேவிட் ராஜாமணி, ஜோஸப், வீரய்யா என்ற 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தது.  மதுரை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது.  இதனை எதிர்த்து 6 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில் தோழர் பாலு வுக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதியா னது. இதர தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தோழர் பாலுவின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன் கவர்னருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், இருவரும் மனுவை  நிராகரித்துவிட்டனர். அதிலும் மாநிலக் கவர்னராக இருந்த பவ நகர் மஹாராஜா என்பவர் மனுவை நிராக ரித்தது மட்டுமல்ல; 2 நாட்களில் தூக்குத் தண்ட னையை நிறைவேற்ற வேண்டுமென உத்தரவும்  போட்டார்.

தனிமைச் சிறைக் கொட்டடியில்...

உயர்நீதிமன்றம் பாலுவுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்தவுடனேயே மதுரை சிறையில் 8 x 8 அறையில் தனிமைக் கொட்டடி யில் அடைக்கப்பட் டார். பாலுவோ  இதை யெல்லாம் கண்டு கலங்க வில்லை. தேக்கு மரத்தேகம் கொண்ட பாலுவிடம் கரையான் என்ற  பயம் எப்படிப் பற்ற முடியும்? கவர்னரின் உத்தரவுப்படி 1951, பிப்ரவரி 22 அதிகாலை 4 மணிக்கு தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். உடலைக் கூட யாருக்கும் தெரி யாமல் ரகசியமாகக் கொண்டு போய் இன்று மதுரையில் விமானநிலையம் அமைந்துள்ள இடத்தினருகில் எரித்து, எலும்புகளை திசைக் கொன்றாக வீசிச் சென்றனர். கருணையற்ற ஒரு அரசாங்கத்தின் பகை உணர்ச்சியை, ஒரு போர்க்குணம் மிக்கவனின் மன உறுதி எப்படி எடுத்துக் கொள்கிறது என் பதை நாம் அறிந்து கொள்ளலாம். பாலு தூக்கு கயிற்றுக்குப் போவதற்கு 2நாட்கள் முன்பிருந்து கட்சியினர் , உறவினர்கள்,  பொதுமக்கள்  அவரைப் பார்க்க அனுமதிக்கப்  பட்டனர். பார்க்கப் போனவர்களெல்லாம் கலங்கி, கதறி அழ; தோழர் பாலு எந்தச் சலனமு மற்றவராக அவர்களுடன் பேசினார். இதில் அவரது தாயார், மனைவி, இரண்டரை  வயது குழந்தை சரோஜினியும் அடங்குவர்.

செங்கொடிக்கு ஜே

பிப்ரவரி 22 காலை 4 மணிக்கு தூக்குக் கொட்டடியை நோக்கி பாலு செல்லும் போது  ஜெயிலே அதிரும் வண்ணம் செங்கொடிக்கு ஜே என்று முழக்கமிட்டார். இலக்கியப் பேரொளி ஜீவா எழுதிய பாடலையும், மதுரை யின் முன்னணி தோழர் எம்.ஆர்.எஸ். மணி எழு திய பாடல்களையும் பாடிக்கொண்டே சென்றார். என்னே ஒரு வீரம், தீரம்! மாவீரன் பகத்சிங்  கின் வாரிசு பாலு என்றால் மிகையாகாது. தோழர் பாலுவைத் தொடர்ந்து மதுரையில் எண்ணற்ற தோழர்களின் உயிர்களை காங்கி ரஸ் அரசு பறித்தது. ஆம். மாரி, மணவாளன், தில்லைவனம், பொதும்பு பொன்னையா, பூந்தோட்டம் சுப்பையா, ஐ.வி.சுப்பையா, ரயில்வே ராமசாமி, வில்லாபுரம் லீலாவதி என்ற  பட்டியல் நீளும்.  அரசின் அடக்கு முறைகள் நீண்ட தைப் போலவே கம்யூனிஸ்ட் கட்சியின் செல் வாக்கும் மதுரை மக்களிடம் நீண்டது. கட்சி மீதிருந்த தடைநீக்கப்பட்டு 1952 பொதுத் தேர்தலில் மதுரை வடக்குச் சட்ட மன்றத் தொகுதியில் தோழர் பி.ராமமூர்த்தி சிறைக்குள்ளிருந்த படியே போட்டியிட்டு வெற்றி பெற்றார். தோழர் கே.டி.கே. தங்க மணி நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு 90  ஆயிரம் வாக்குகள் பெற்றார். இது காங்கிர சாரை மிரளச் செய்தது. கட்சியை வளர்ப்பதில், பொது மக்களுக்கு சேவை செய்வதில் ஹார்வி மில்லில் பணி யாற்றிய கட்சி உறுப்பினர்களும் இதர பகுதி தோழர்களும் அயராது உழைத்தனர். 1953-இல் மதுரையில் கட்சியின் அகில இந்திய  3ஆவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைவர் ஹாரி பாலிட் வந்தி ருந்தார். அவருக்கு வரவேற்பு  அளிக்கவும், பேர ணியில் பங்கு கொள்ளவும் மதுரையின் பிரபல மான கோயில்கள்கூட அலங்கரிக்கப்பட்டு கட்சிக்  கொடிகளோடு பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர்.  அன்று மாநாட்டுத் திடலில் ஏற்றப்பட்ட கட்சிக் கொடிமரம் இன்றளவும் கம்பீரமாக நிற்கி றது. அதே இடத்தில்தான், தோழர் பாலு வாழ்ந்த அரசரடி பகுதியில் அவரது நினைவு தின பொதுக்கூட்டம் உணர்ச்சியுடன், எழுச்சி யுடன் இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வட்டார இளைஞர்கள் முன்  னின்று இக்கூட்டத்தை வருடந்தோறும் நடத்து வது குறிப்பிடத்தக்கது. புரட்சிக்காரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு பாலுவின் தியாகம் ஒரு சிறந்த உதாரணம். வெல்க பாலுவின் தியாகம்!  வெல்க அவரது தீரம்!