மோடியின் அமெரிக்கப் பயணம் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி இருக்கிறது. அதாவது, இந்தியா, அமெரிக்காவுடனான கேந்திர மற்றும் ராணுவ உறவில் மேலும் நெருக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது. “இரண்டு ஜனநாயகங்களுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தம்” என்று பீற்றிக்கொண்டு, அதன் விவ ரங்களைப் பகிர்ந்தபோதிலும், உண்மையில் சீனாவை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு, இந்தியா வைத் தன்னுடைய உறுதியான கூட்டாளியாக வைத்துக் கொள்ள வேண்டிய தேவையின் காரணமாகவே அது இத்தகைய கட்டாய நிலைக்கு வந்திருக்கிறது.
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் 2002இல் ஆய்வு செய்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்தியா, சீனாவை எதிர்க்கும் ஒரு சக்தியாகக் கணித்து, அதன் அடிப்படையிலேயே அமெரிக்கா, இந்தியாவுடன் அணுகுமுறையை மேற்கொள்ளத் தொடங்கியது. அமெரிக்கா, கடந்த சில ஆண்டுகளாக சீனாவைக் கட்டுப்படுத்தி, தனிமைப் படுத்திட மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் விரும்பத் தக்க விளைவுகளைத் தர வில்லை என்ற நிலை யிலேயே, இப்போது வாஷிங்டனில் அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் நரேந்திர மோடிக்கு அரசு விருந்து மற்றும் இரண்டாவது முறையாக அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு முதலியவை அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவை இந்தியப் பெருங்கடல் பிராந்தி யத்தில் மையமான ஒன்றாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் கேந்திரமான நபராகவும் இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், ஜேக் சல்லிவன் (Jake Sullivan) இந்தியாவிற்கு வந்தது உட்பட பிரதமரின் பயணத்திற்கான தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. பின்னர் இருதரப்பிலும் இறுதிக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவக் கூட்டணியாகும் குவாட்
இந்தக் கூட்டறிக்கையில் நான்கு நாடுகளின் (QUAD) கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அது கூட்டறிக்கையில் முதல் பத்தி யிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராணுவ உற்பத்தி யிலும் மற்றும் உயர் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறியிருப்பதன்மூலம் நான்கு நாடுகளின் கூட்டணி என்பது ஒரு ராணுவக் கூட்டணியாகவே மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியாவைத் தன்னுடைய கேந்திர ராணுவக் கூட்டணிக்கு இழுப்பதற்காக மேற்கொண்ட முதல் பெரிய அளவிலான நடவடிக்கை 2005இல் ராணுவம் அல்லாத அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்ததாகும். ராணுவம் அல்லாத அணுசக்தி ஒப்பந்தம் என்பது இந்தியாவை இழுப்பதற்கான ஓர் ஆசை வார்த்தையேயாகும். இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றையும் உள்ளடக்கி இருந்தது. அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முன்னோடியாக இந்த ஒப்பந்தம் 2005 ஜூனில் கையெழுத்தானது. இடதுசாரிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இதில் கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களை அமல்படுத்துவது தடைபட்டது. எனவே, இப்போது கடந்த சில ஆண்டுகளாக, மோடி அரசாங்கத்தின் கீழ்தான் இரு நாடுகளின் ஆயுதப் படையினருக்கும் இடையே இவற்றை மேற்கொள்வதற் காக நான்கு அடிப்படை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.
இந்தக் கூட்டறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற கூட்டு ராணுவப் பயிற்சிகள், இந்தியக் கப்பல் தளங்களில் அமெரிக்க கடற்படை யின் கப்பல்களை பராமரிப்பதற்கும், பழுதுபார்ப் பதற்குமான மையங்களை உருவாக்குதல், இரு ராணுவ அமைப்புகளிலும் இரு நாடுகளின் தொடர்பு அதிகாரிகளையும் நியமித்தல் போன்ற ராணுவம் தொடர்பான உறவுமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக் கிறது. இவை அனைத்துமே, அமெரிக்க ராஜீய வல்லுநர்கள் கூறுவது போன்று, “ஒருவிதமான கூட்டணி” (“sort alliance”) மட்டத்திற்கு சென்றிருக் கின்றன. அதாவது, நேட்டோ ஒப்பந்தத்தில் உள்ள 5 ஆவது பிரிவு கூறுவது போன்று ஒரு நாட்டின்மீது இன்னொரு நாடு போர் தொடுத்தால் மற்ற நாடுகளின் மீதும் போர்தொடுத்ததுபோலாகும் என்கிற ஷரத்தைத் தவிர ராணுவக் கூட்டணிக்குத் தேவையான மற்ற அனைத்து அம்சங்களும் இந்த இந்தோ-அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
தொழில்நுட்பப் பகிர்வு - வாயால் வடை சுடுதல்
உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்து வதிலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு நல்கப்படும் என்று வெகுவாகவே உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. “நம் கூட்டுநட்பினை ஆழ மாக்குவதில் தொழில்நுட்பம் குறிப்பிட்ட பங்கினைச் செலுத்திடும்” என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது. விண்வெளி தொழில்நுட்பம் முதல் குவாண்டம் ஆராய்ச்சி வரை, முக்கியமான கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு பகுதிகள் குறித்தும் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இவற்றை நுணுகி ஆராய்ந்தோமானால், உண்மையில் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை என்பதைக் காண முடியும். ‘வாயால் வடை சுடுவது’ என்பதைத் தவிர இதில் வேறெதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் ஒத்துழைப்பை நல்குவதைப் பொறுத்தவரையில், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இந்துஸ்தான் எலெக்ட்ரிக் அண்டு ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, எம்கே-2 இலகுரக ஏர்கிராப்ட் எம்கே-2விற்கான, எஃப்-414 ஜெட் என்ஜின்களை இணைந்து உற்பத்தி செய்திட, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும் இதன்மூலம் அமெரிக்க ஜெட் என்ஜின் தொழில்நுட்பம் பெரிய அளவிற்கு இந்தியாவிற்கு மாற்றப்படும் என்று கூறுவதெல்லாம் திசைதிருப்பும் வேலையேயாகும். எச்ஏஎல் நிறுவனத்தில் ஜெட் என்ஜின்களைச் சேர்ப்பது என்பது மிகவும் குறைந்த அளவில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதேயாகும். மிகப் பெரிய அளவில் மிகவும் முக்கியமான தொழில்நுட்பங்கள் எதையும் அவர்கள் அளித்திடாமல் தங்கள் வசமே வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களை வேட்டையாடும் ட்ரோன்கள்
இதில் அமெரிக்காவின் நோக்கம் இரு வகை யானது. ஒன்று, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். ஏனெனில் இப்போது ரஷ்யாதான் அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு அளிக்கும் நாடாக மாறி இருக்கிறது. எனவே இதனை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். இரண்டாவதாக, நான்கு நாடுகள் கூட்டணியில் சேர்ந்துள்ள இந்தியாவின் ராணுவத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் மற்றும் பரஸ்பரம் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்திட வேண்டும் என்பதுமாகும். அதனால்தான் அமெரிக்கா, இந்தியாவை சுமார் 3 பில்லியன் டாலர்கள் (27 ஆயிரம் கோடியே 9 ஆயிரத்து 76 லட்சத்து 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) மதிப்புள்ள எம்கியு-9பி கார்டியன் ஆயுத ட்ரோன்களை வாங்கிடவேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது. மனிதர்களை வேட்டையாடும் இத்தகைய ட்ரோன்கள் அமெரிக்காவினால் ஆப்கானிஸ்தானத்தில் பயன்படுத்தப்பட்டன. இது மிகவும் அதிக விலையுள்ளவையாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்புப் பணி களுக்காக இத்தகைய ட்ரோன்களை இந்தியா வாங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
இந்தியாவின் செலவினத்தை இவ்வாறு இழுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, இப்போது குஜராத்தில் ‘செமிகண்டக்டர் யூனிட்’ ஒன்றை அமெ ரிக்க மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் முதலீட்டில் நிறுவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
முதலீடு இந்தியப் பயணம் : அமெரிக்காவுக்கு லாபம்
செமிகண்டக்டர்கள் உற்பத்திக்காக மைக்ரான் நிறுவனம் வெறும் 825 மில்லியன் அமெரிக்க டாலர்களே செலவு செய்திடும். இதன் மொத்த செலவினம் 2.75 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் 50 விழுக்காட்டுத் தொகையை ஒன்றிய அரசாங்கம் மானியமாக வழங்கிடும். இவ்வாறு மானியமாக அளிக்கப்படும் தொகையே 11 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். மீதம் உள்ள தொகையில் 20 விழுக்காட்டுத் தொகையை குஜராத் மாநில அர சாங்கம் அளித்திடும். அதாவது, அமெரிக்க நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக நாட்டின் பொதுப் பணம் இவ்வாறு செலவு செய்யப்பட இருக்கிறது. இவ்வாறெல்லாம் அமெரிக்காவின் கட்டளை களுக்குக் கட்டுப்பட்டு இந்தியா இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவு களை ஆழமான முறையில் மேற்கொண்டு வந்த போதி லும், வர்த்தக ஒப்பந்தங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்ட நாடாக (Trade Agreements Act designated country) இந்தியாவையும் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா வெகுகாலமாகக் கோரிவந்த போதிலும் அதனை ஏற்க அமெரிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
ராணுவ சர்வாதிகாரிகளுடனும் வலதுசாரி எதேச்சதிகாரிகளுடனும்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வரும் பிரச்சனை மற்றும் மதச் சிறுபான்மையினர் உரிமைகள் மறுக்கப்படுதல் போன்றவற்றை எழுப்பி னார் என்று பெரிய அளவில் விவாதம் நடைபெற்று வரு கிறது. அமெரிக்க காங்கிரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 75 பேர், இந்தியாவில் மனித உரிமை கள் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பது குறித்து மோடியுடன் பைடன் விவாதம் நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். பைடன் நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீது அதிக அளவில் உறுதியுடன் இருக்கும் என்றுகூட சிலர் கூறி வந்தார்கள். ஆனாலும் எந்தவொரு அமெரிக்க அரசாங்கமும் ஜனநாயக விழுமியங்களைப் பேண உறுதியுடன் செயல்படும் என்று எதிர்பார்ப்பது மாயை யேயாகும். உண்மையில், அமெரிக்கா எப்போதுமே ராணுவ சர்வாதிகாரிகளுடனும், கம்யூனிஸ்ட்டு களுக்கு எதிரான வலதுசாரி எதேச்சாதிகார ஆட்சி யாளர்களுடனும்தான் கூடிக்குலாவும். ஜோ பைடன் நிர்வாகத்திற்கும், முந்தைய அமெரிக்க அரசாங்கங் களைப்போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நலன்களே முக்கியமாகும்.
நரேந்திர மோடியைப் பொறுத்தவரைக்கும், அமெரிக்க பயணமும் அதன் வெளிப்பாடும் இந்தியா வில் அவருடைய சித்திரத்தை உயர்த்திக்கொள்ள உதவியிருக்கலாம். ஆர்எஸ்எஸ் எப்போதுமே ஓர் ஏகாதிபத்திய ஆதரவு அமைப்பேயாகும். பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் இந்திய ஆளும் வர்க்கங்கள் அமெரிக்காவுடன் போர்த்தந்திர கூட்டணியை ஏற்படுத்திக்கொள்வதில் அச்சாணியாக இருக்கின்றன. இந்தக் கண்ணோட்டம்தாதன் கார்ப்பரேட் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவைகள் இந்தியா, அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதுகூட ஒரு மாபெரும் சாதனை என்று கூறி புளகாங்கிதம் அடைகின்றன. மோடி பயணத்தின் நிகர லாபம் என்னவெனில், இந்தியாவின் கேந்திர சுயாட்சி (strategic autonomy) என்பது மேலும் அரிக்கப்பட்டிருக்கிறது என்பதும், இந்தியாவின் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை மேலும் காயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுமே யாகும். இதன் காரணமாகத்தான் ஏற்கனவே புதுதில்லி யில் வரும் ஜூலையில் அனைத்து நாடுகளும் நேரடி யாகப் பங்கேற்பதாக இருந்த ஷங்காய் ஒத்துழைப்பு ஸ்தாபனத்தின் உச்சி மாநாடு இப்போது இணையம் மூலமாக நடைபெறும் கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.
மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவரும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு, இப்போது மிகவும் வேகமாக அதிகரித்துவரும் பல்துருவக் கோட்பாட்டு உலகத்தில் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான மற்றும் சுயேச்சையான பங்கினை மேலும் பெரிய அளவிற்குக் கட்டுப்படுத்தி, குன்றச் செய்திடும்.
ஜூன் 28, 2023
தமிழில்:ச.வீரமணி