articles

img

நச்சுப் பணிக் கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்! - புலப்ரே பாலகிருஷ்ணன்

புனேயில் ஒரு முன்னணி ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீடு திரும்பிய உடனேயே உயிரிழந்தார். அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட உடல், மன சோர்வே காரணம் என  அவரது தாயார் குற்றம் சாட்டினார். நீண்ட  பணி நேரம் மற்றும் காலக்கெடு தொடர்பான அழுத்தங்களால் தங்கள் மகள் பாதிக்கப் பட்டிருந்தார் என பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த சோகச் சம்பவம் வெளியானதும், அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் பலர் அங்குள்ள பாதகமான பணிச்சூழல் குறித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிட்டனர். ஆனால் முரண்பாடாக, அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் இணையதளத்தில் “சிறந்த பணிச் சூழலை உருவாக்குவோம்” என்ற வாசகம் காணப்படுகிறது.

அமெரிக்க நிறுவனங்களின் நச்சுக் கலாச்சாரம்

இந்த நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது. ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் தங்களின் தாய்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. 2000-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன், பல முதலாளிகளுடன் இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி வந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை சந்திக்க போட்டியிட்டனர். உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. இவை விற்பனை, கணக்கியல் மற்றும் ஆலோ சனைப் பணிகளில் கடுமையான இலக்குகளை யும், காலக்கெடுக்களையும் நிர்ணயித்து, அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகளையே பின்பற்று கின்றன.

வரலாற்றுப் பின்னணி

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவின் செல்வாக்கு பெருகியது. அதன் பொருளாதார வலிமையும், பணிக் கலாச்சாரமும் உயர்ந்தவை என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணக்கியல் நடைமுறைகள் முதல் அன்றாட பணிகள் வரை அமெரிக்க முறையே சிறந்தது என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியது. மேக்ஸ் வெபரின் பார்வை ஜெர்மானிய சமூகவியலாளர் மேக்ஸ் வெபர், வடக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தின் சீர்திருத்தம் எவ்வாறு பணிக் கலாச்சாரத்தை மாற்றியது என்பதை விளக்குகிறார். புரோட்டஸ்ட ண்ட் பிரிவினர் பொருளாதார லாபத்திற்கான செயல்பாடுகளை ஆதரித்தனர். இது ஆரம்ப கால முதலாளித்துவத்தின் அடித்தளமாக அமைந்தது. வேலை நேரமும் உற்பத்தித்திறனும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 2023ம் ஆண்டு தரவுப்படி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா 12-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, சிங்கப்பூர், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவை விட முன்னிலையில் உள்ளன. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த நாடுகளில் (சிங்கப்பூரைத் தவிர) ஒரு வருடத்தில் ஒரு நாள் வேலை செய்யும் நேரம் அமெரிக்காவை விட குறைவாகவே உள்ளது. எனினும் அவர்களின் வருமானம் அதிகம்.

காரல் மார்க்ஸின் எச்சரிக்கை

150 ஆண்டுகளுக்கு முன்பே காரல் மார்க்ஸ், வேலை நேரத்தின் நீளம் முதலாளித்துவத்தின் லாபத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணி என்று சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களின் உழைப்பில் ஒரு பகுதி மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது, மீதி முதலாளிகளின் லாபமாக மாறுகிறது என்றார். எனவே முதலாளிகள் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கின்றனர். அல்லது  உற்பத்தியை அதிகரிக்க அவர்கள் இன்னும் வேக மாக பணியாற்ற வேண்டும் என நிர்பந்தம் அளிக்கின்றனர். மிக மிக குறுகிய காலக் கெடுவுக்குள் அதிகமான உழைப்பை பெற ஊழியர்களை  மிரட்டுவது  தான் புனே நிறுவனத்தில் நடந்துள்ளது. அந்நிய முதலீட்டின் சீதனம்! இந்த நச்சு கலாச்சாரம்தான் அந்நிய முதலீடு இந்தியாவிற்கு அளித்த சீதனம். இது, 1991லிருந்து அமலாகும் நவீன தாராளமய மாக்கலின் விளைவாகும். இந்தியா அவர்களின் வருகையால் பயனடைந்து இருந்தாலும் அதைவிட அதிகம் லாபம் அடைந்தது பன்னாட்டு முதலாளிகள் தான் என்பது தெளிவாகிறது .

நான்கு பெரு நிறுவனங்கள்

2017- 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் இந்தியாவில் 305 மெகா திட்டங்கள் நான்கு பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஒரு ஆதாரப்பூர்வ செய்தி கூறுகிறது. அந்த நான்கு நிறுவனங்களும் கொழுத்த லாபங்களை ஈட்டி இருக்கின்றன.இந்த திட்டங்களை‌ நிறைவேற்ற இந்தியர்களிடம் நிபுணத்துவம் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. 

தொழிலாளர்  நல சட்டங்களை மதித்திடுக!

இந்தியாவில் செயலாற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வேலை நேரம் மற்றும் நடைமுறைகளை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும். தற்கொலைக்கு தூண்டிவிடும் மன  அழுத்தங்களை உருவாக்கும் பணி நிலைமை கள் கைவிடப்பட வேண்டும். உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக 24 மணி நேரமும் ஷிப்ட்கள் இயங்க வேண்டியது  அவசியம் என்றா லும் கூட இந்தியாவின் தொழிலாளர் நல சட்ட  திட்டங்களுக்கு உட்பட்டு அதற்கு தகுந்த வழி முறைகளை கடைபிடிக்க வேண்டும். கட்டுரையாளர் : கௌரவ வருகைப் பேராசிரியர், மேம்பாட்டு ஆய்வு மையம்,  திருவனந்தபுரம் தி இந்து (31/10/24)  தமிழில் சுருக்கம்: கடலூர் சுகுமாரன்