articles

img

இந்திய - சீன உறவுகளை இயல்பாக்கிட மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடை முறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டினை (LAC-Line of Actual Control)யொட்டி  நடைபெற்றுவரும் ரோந்து ஏற்பாடுகள் தொடர்பாக (patrolling arrangements) ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டி ருப்பதாக அக்டோபர் 21 அன்று இந்திய அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை இயல்பாக்கிட இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு வரவேற்கத் தக்க வளர்ச்சிப்போக்காகும்.  2020இல் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை மோதல் கள் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவுகள் சீர்கேடடையத் தொடங்கின. இந்த  மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முழு யுத்தமாக மாற இட்டுச்சென்றுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திட இரு நாடுகளுமே நடவடிக்கைகள் மேற்கொண்டன. 2020இலிருந்து, இரு நாட்டின் ராணுவம் மற்றும் தூதரக நிலையில் 31 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இரு நாட்டின் ராணுவ  கமாண்டர்களும் (Corps commanders) ராணுவ அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்திய அதே சமயத்தில், இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான கலந்தாலோசனை மற்றும் ஒருங்கி ணைப்புக்கான நிர்வாக எந்திரத்தின் (Working Mechanism for Consultation and Coordination (WMCC) கீழ் இராஜதந்திர அளவிலான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

அமைதியான உறவின் முக்கியத்துவம்

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் சுமூக நிலையை மீட்டெடுப்பதன் அவசியத்தை உணர்ந்த அரசியல் தலைமையின் தலையீட்டால் பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ‘இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஓர் உறுதியான மற்றும் அமைதியான உறவுகள் நீடிக்க வேண்டியது நம் இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் மற்றும் உலகத்திற்குமே மிக முக்கியம் என்று பிரதமர் மோடி இந்தியாவின் நிலைப்பாட்டை ஏப்ரலில் நடை பெற்ற கூட்டத்தின்போது பிரதிபலித்தார். இந்திய வெளி யுறவுத்  துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர், வாங் யியை இருமுறை சந்தித்துள்ளார். செப்டம்பரில், பிரிக்ஸ் மாநாடும், தேசியப் பாது காப்பு ஆலோசகர்கள் மாநாடும் ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற சமயத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், வாங் யியைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடர்பான கலந்தாலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான நிர்வாக எந்திரத்தின் கூட்டங்கள் இரு முறை நடை பெற்றுள்ளன.  எனவே, ஜெய்சங்கர் கூறியிருப்பதைப்போல, இப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது, இரு நாடுகளும் மேற்கொண்ட மிகவும் பொறுமையான மற்றும் மிகவும் விடாமுயற்சியுடன் கூடிய இராஜதந்திரத்தின் விளைபொருளாகும். இதுவே நாடுகளுக்கு இடையே ஏற்படும் பூசல்களைத் தீர்ப்பதற்கான சரியான பாதையாகும். இந்த இராஜதந்திர முயற்சிகள் அனைத்தும் ரஷ்யாவின் கசான் நகரில்  ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடை பெற்றுவரும் சமயத்தில் அதனூடே பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜீஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்புக்கு வழி வகுத்தது. 2020ஆம் ஆண்டு எல்லை யில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருநாட்டுத்தலை வர்களும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறை என்பதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்த வும், மீண்டும் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுத்திட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

முதன்மை இறக்குமதி ஆதாரம்

இந்திய முதலாளித்துவம் எதிர்கொண்டுவரும் பொருளாதாரப் பிரச்சனைகள், அதனை சீனாவுடன் வணிகம் செய்யும் திறனை எளிதாக்கிட இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளித்துவந்தது. இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் சுமார் 56.29 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை இறக்குமதி செய்யக் கூடிய அளவிற்கு இந்தியாவின் முதன்மையான இறக்குமதி ஆதாரமாக சீனா உருவெடுத்துள்ளது.  உலகமயமாக்கப்பட்ட பொருளாதார உலக ஒழுங்கில், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்பது அதிக  அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வாக னங்கள், ஸ்மார்ட்போன்கள், சூரிய ஒளி மூலம் மின்சா ரம் உற்பத்தி செய்திடும் சோலார் பேனல்கள், மருந்து கள் முதலானவை உற்பத்தி செய்திடும் ஓர் உற்பத்தி மையமாக (manufacturing hub) மாற்றுவதற்கு இந்திய அரசாங்கத்தால் அடையாளம் காணப் பட்டுள்ளது. இந்தத் தொழில்களில் பெரும்பாலான வற்றை மேற்கொண்டிட சீனாவுடனான பொருளாதார உறவுகளை மீட்டெடுக்க வேண்டும். அரசாங்கமும், தனியாரும் இணைந்து கூட்டுத் துறைகள் மூலம் உற்பத்தித் துறையில் சீன முதலீடு களை ஏற்பது தொடர்பாக தற்போது இருந்து வரும் எதிர்மறை நிலைப்பாடு மாற வேண்டும்.  2023இல் இந்திய நிறுவனம் ஒன்றுடன் கூட்டுத்துறை மூல மாக மின் வாகனங்களை உற்பத்தி செய்திடும் சீனா வின் மாபெரும் நிறுவனமான பிஒய்டி (BYD), ஒரு பில்லியன் டாலர் முதலீட்டுடன் முன்வந்தபோது அது நிராகரிக்கப்பட்டதானது ஒரு குறுகிய பார்வையுடன் கூடிய செயல்பாடேயாகும். மின் வாகனங்களை உற் பத்தி செய்திடும் தொழிற்சாலையை அமைத்திருந் தோமானால் அது சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை இந்தியாவில் பயன்படுத்து வதற்குப் பெரிய அளவில் உதவி இருக்கும். வேகமாக மாறிவரும் புவி-அரசியல் சூழல் காரண மாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை இயல்பாக்க வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டி ருக்கிறது. உக்ரைனில் நடைபெற்று வரும் யுத்தமும், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்திடும் நடவடிக்கைக ளும் மேற்கு ஆசியாவில் பொருள்களை விநியோகம்  செய்வதிலும், வர்த்தக மார்க்கங்களைப் பயன் படுத்துவதிலும் நாடுகளுக்கிடையே உறவுகளை மேம்படுத்திக்கொள்வதிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

பிரிக்ஸில் இணைய விரும்பும் சவூதி அரேபியா, ஈரான்

அமெரிக்கா என்னும் கூடையில்  அனைத்து நாடு களும் தங்கள் முட்டைகளை வைப்பதனால் ஏற்படும் நச்சு விளைவுகளைத் தற்போது பல நாடுகள் உணர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் ‘பிரிக்ஸ்’ போன்ற நாடுகளின் கூட்டணி முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற கூட்டணிகளில் தங்கள் நாடுகளையும் இணைத்துக்கொள்ள பல நாடு கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மேற்கு ஆசியாவில் மிகவும் வல்லமை பொருந்திய நாடுகளாக விளங்கும் சவூதி அரேபியாவும், ஈரானும் இதில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள புவி-அரசியல் மாற்றங்கள் காரணமாக, இந்தக் குழுவில் இந்தியா தனித்து இருக்க முடியாது. 2020இல் எல்லை மோதல்கள் ஏற்பட்டபின்னர், இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடனான தன் உறவு களை மேலும் வலுப்படுத்திக் கொண்டது. இந்தியா- சீனா சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பான நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு உட்பட பல்வேறு பாதுகாப்பு  ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத் திட்டுள்ளது. நமது இமாலய எல்லையில் துருப்புக்க ளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 31 ஆயுதம் தாங்கிய கார்டியன் டிரோன்களை இந்தியா வாங்குவ தற்கு 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஒப்பந்தம் இதில் அடங்கும். அமெரிக்காவின் தலை மையில் ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட நான்கு நாடுகளைக் கொண்ட (குவாட்) கூட்டணியில் இந்தியாவும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது. 

ஆர்கனைசர் ஏட்டின் கருத்து

மேலும், 2024 செப்டம்பர் 22 தேதியிட்ட ஆர்எஸ் எஸ்-இன் ஏடான தி ஆர்கனைசர், அமெரிக்கா,  ஆப்கானிஸ்தானத்திலிருந்து வெளியேறியிருப்பதை யும், அதன் கொள்கை நிலைப்பாடுகளின் நம்பகத் தன்மையின்மையையும் சுட்டிக்காட்டி, இந்தப் பின்னணியில் இந்திய அரசாங்கம் சீனாவுடன் உறவு களை இயல்பாக்கிக் கொள்வது விவேகமானதாக அமைந்திடும் என்று கூறியிருக்கிறது. இந்தியாவும் சீனாவும் 3,400 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஒரு நீண்ட எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இதில் மிகப் பல இடங்களில் எல்லைகள் முறையாகப் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தாவா நீண்டகாலத்திற்கு நீடித்துக் கொண்டிருப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும்.   இந்திய-சீன எல்லையில் நிலவும் பூசல்களுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைப் புதுப்பிப்பது தான் இப்போதைய தேவை. 1993ஆம் ஆண்டு எல்லை அமைதி மற்றும் அமைதி ஒப்பந்தம் மற்றும் 2013  எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகி யவை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் மோடி அரசாங்கம் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளையும் மற்றும் மக்களி டையேயும் பரிமாற்ற உறவுகளையும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அவற்றின் மூலம் உற்பத்தித் துறையில் முதலீடுகளைப் பெற கவனம் செலுத்திட வேண்டும். இவை நம் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்களை மேம்படுத்திட வழிவகுத்திடும்.  

அக்டோபர் 23, 2024,  
தமிழில் : ச.வீரமணி