articles

எதிர்காலத்திற்கான நம்பிக்கை எதில் இருக்கிறது...? (4 ஆம் பக்கத் தொடர்ச்சி)

4 ஆம் பக்கத் தொடர்ச்சி

73 மில்லியன் லிட்டர் ரசாயன விஷத்தை நாடெங்கிலும் தெளித்தது. அந்த காலத்தில் மிக பயங்கரமான ரசாயன ஆயுதமாக கருதப்பட்ட ‘ஏஜெண்ட் ஆரஞ்ச்’ என்பது, வியட்நாமின் விவசாயப் பெருவெளி எங்கும் ஸ்பிரே கருவியால் தெளிக்கப்பட்டது. இந்த யுத்தம் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது மட்டுமல்ல, சோசலிச வியட்நாமை ஒரு பயங்கரமான துயரத்தின் பிடியில் சிக்கச் செய்தது: பல பத்தாயிரக்கணக்கான வியட்நாமின் குழந்தைகள் மூளை அழற்சி நோயோடு முதுகுத்தண்டு பாதிப்புகளோடு இன்னபிற குறைபாடுகளோடு பிறந்தன; லட்சக்கணக்கான ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் விஷம் தோய்ந்தவையாக மாற்றப்பட்டன. மருத்துவரீதியாகவும், விவசாய ரீதியாகவும் வியட்நாமின் மீது ஏவப்பட்ட இந்த பேரழிவு கிட்டத்தட்ட அந்நாட்டின் ஐந்து தலைமுறைகளை கடுமையாக பாதித்தது. இன்னும் பல தலைமுறைகளுக்கு பாதிப்பு வீச்சு நீடித்துக் கொண்டிருக்கிறது. வியட்நாமின் சோசலிஸ்ட்டுகள் ஒரு பாடப்புத்தகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சோசலிசத்தை தங்களது நாட்டில் கட்டமைக்க முடியவில்லை; ஆனால் தங்களது நாட்டின் மீது ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட எண்ணற்ற கொடுமைகளையும், துயரங்களையும் எதிர்கொண்டு சோசலிசத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அவர்களது சோசலிசப் பாதையானது முற்றிலும் படுபயங்கரமான எதார்த்த நிலைமையை எதிர்கொண்டே பயணப்பட்டிருக்கிறது. அவர்களது சொந்த வரலாறு மற்றும் எதார்த்த நிலைமையின் அடிப்படையில் சோசலிசம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சிறு சிறு பிரசுரங்கள் வாயிலாக...
காலனியாதிக்க உலகில் இருந்த பல மார்க்சிஸ்ட்டுகள் மார்க்சையே படித்திருக்காதவர்கள். அவர்கள் அந்த காலகட்டத்தில் எளிதாக கிடைக்கப் பெற்ற சிறு பிரசுரங்கள் மூலம் மார்க்சியத்தைப் பற்றி படித்து அறிந்து கொண்டார்கள். லெனினைப் பற்றியும் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள். புத்தகங்கள் மிகவும் விலை அதிகமாக இருந்தன. கடல் கடந்து அவை  கிடைப்பதும் கடினமாக இருந்தது. கியூபாவின் போராளி கர்லோஸ் பலினோ (1848 - 1926) மற்றும் தென்னாப்பிரிக்காவின் போராளி ஜோஷி பால்மர் (1903-1979) போன்றவர்கள் மிக மிக வறிய, எழுத்தறிவற்ற குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் தோழர் மார்க்சின் அரசியல் பொருளாதார விமர்சனக் கருத்துக்கள் உருவான அறிவுஜீவி பாரம்பரியத்தின் வாய்ப்புகளைப் பெற இயலாதவர்கள். ஆனால் அவர்கள் மார்க்சியத்தின் சாராம்சத்தை தங்களது போராட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டார்கள். வாசித்து அறிந்ததன் மூலமாகவும் தங்களது சொந்த அனுபவங்கள் மூலமாகவும் புரிந்து கொண்டார்கள். தங்களது நாட்டிற்கு பொருத்தமான முறையில் அதை எப்படி அமலாக்குவது என்று கோட்பாடுகளை கட்டமைத்தார்கள். 

எதிர்காலத்திற்கான நம்பிக்கை
இன்றைக்கு நமது இயக்கங்களுக்கு உறுதிப்பாடுடன் கூடிய தொடர் வாசிப்பு ஒரு தூண் போல இருக்கிறது. ஒரு சிறந்த எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான நமது நம்பிக்கைகள் அந்த வாசிப்பில்தான் அமைந்திருக்கின்றன. இந்த நோக்கத்திற்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சிவப்பு புத்தக தினம் கொண்டாடுகிறோம். கடந்தாண்டு கம்யூனிஸ்ட் அறிக்கையின் 172 ஆம் ஆண்டையொட்டி பெருவாரியான பொது வெளிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிவப்பு புத்தக தினத்தை கொண்டாடினார்கள். 1848 பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை அன்றைய தினம் பரவலாக வாசித்தார்கள். இந்தாண்டு, பெருந்தொற்று அபாயம் தொடர்ந்து நீடிக்கும் வகையில், சிவப்பு புத்தக வாசிப்புப் பேரியக்கம் உலகின் பல்வேறு இடங்களில் ஆன்லைன் வாயிலாக நடைபெறவிருக்கிறது. நீங்கள் உங்கள் பகுதிகளில் சிவப்பு புத்தக தின நிகழ்வுகளை நடத்துங்கள். நமது பதிப்பாளர்களிடம் (தமிழகத்தில் பாரதி புத்தகாலயம்) கம்யூனிஸ்ட் அறிக்கை உள்ளிட்ட சிவப்பு புத்தகங்களை கேட்டு பெறுங்கள். நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகே பொதுவெளியில் நிகழ்ச்சி எதுவும் நடைபெற வாய்ப்பு இல்லையென்றால் சமூக ஊடகங்கள் வாயிலாக நடைபெறும் சிவப்பு புத்தக தின வாசிப்பு இயக்கத்தில் அவசியம் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான சிவப்பு புத்தகங்கள் உங்கள் போராட்டங்களை விளக்குபவை. 

ஹோ சி மின் என்றால் ‘ஒளியின் வட்டம்’ என்று பொருள். அந்த மாமனிதர் எப்போதும் ஒரு கையில் லக்கி ஸ்டிரைக் சிகரெட்டுடனும் மறு கையில் ஒரு புத்தகத்துடனும் காணப்படுவார். அவர் வாசிப்பதை நேசித்தார். விவாதிப்பதை ஊக்கப்படுத்தினார். வாசிப்பும் விவாதமும் இயற்கையின் இயங்கியலை புரிந்து கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அவருக்கு உதவியது. சிவப்புப் புத்தகம் உங்களுக்கு அருகில் காத்திருக்கிறது. சிவப்புப் புத்தகத்தை கையில் எடுங்கள்.

தமிழில் :  எஸ்.பி.ராஜேந்திரன்