தோழர் மைதிலியின் தாத்தா ஆங்கிலேயர் ஆட்சியின் போது காக்கிநாடாவில் சால்ட் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். மைதிலியின் தந்தை சிவராமன் சென்னை மாநகராட்சியில் தலைமை கட்டுமானப் (சிவில்) பொறியாளர். 1939 ஆம் ஆண்டு பிறந்த மைதிலி, பள்ளிக் கல்வியை முடித்து மாநிலக் கல்லூரியில் அரசியல் விஞ்ஞான பட்டப்படிப்பை (பி.ஏ. ஹானர்ஸ்) தேர்ந்தெடுத்தார். முதல் வகுப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் தில்லியில் அமைந்த இந்தியன் ஸ்கூல் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் நிறுவனத்தில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ படித்தார். கல்வி உதவிபெற்றுஅமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக் கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் முதுகலைபட்டம் பெற்றார். படிப்பு முடித்த பிறகு நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையில் ஓராண்டு வேலைசெய்தார். 1966 ஆம் ஆண்டு ஐ.நா., மன்றத்தில் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருக்கின்ற போது கியூபா சென்று வந்தார்.
அவர் அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்து பரவலாக எழுச்சி மிக்க இயக்கம் நடந்தது. இந்த இயக்கம் மைதிலியின் சிந்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு உருவானது.
மேலும், அமெரிக்காவில் அக்காலத்தில் திகழ்ந்த சிவில் உரிமைகளுக்கான இயக்கமும் அவரைக் கவர்ந்தது. அமெரிக்காவிலிருந்த போது ‘இந்து’ என்.ராம் அவர்களையும் சந்தித்திருக்கிறார். என்.ராம் அவர்களும் அமெரிக்காவில் நடைபெற்ற போர் எதிர்ப்பு இயக்கத்தால் தான் ஈர்க்கப்பட்டதாக கூறியிருக்கிறார். நேரடியாக களப்பணியில் ஈடுபட விரும்பிய மைதிலி ஐ.நா. பணியை விட்டு விலகி இந்தியாவிற்கு திரும்பினார். மக்கள் இயக்கத்தில் பங்குபெற வேண்டுமென்ற நோக்கத்தோடு மைதிலி, பூதான இயக்கத் தலைவர் வினோபா பாவேவைச் சந்தித்தார். தன்னுள்இருந்த இடதுசாரி சிந்தனைக்கு ஏற்ற தீர்வை அவரால் அங்கு பெறமுடியவில்லை.
சென்னைக்குத் திரும்பிய அவர், வெண்மணியில் கோரப் படுகொலை நடந்த ஒரு வாரத்திற்குள் அங்கும், அருகாமையில் உள்ளசில கிராமங்களுக்கும் சென்று ஆய்வு செய்திருக்கிறார். வெண்மணி கொடுமை குறித்து சிறு நூல் ஒன்றை எழுதியும் வெளியிட்டார். சென்னையில் என்.ராம், ப.சிதம்பரம் இவர்களோடு சேர்ந்து ‘ரேடிகல் ரிவ்யூ’என்ற இதழைத் தொடங்கினார். மீண்டும் வெண்மணி செல்வதற்காக ஆலோசனை பெற தோழர் வி.பி.சிந்தனை சந்தித்தார். அந்த சந்திப்பு அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தான் மட்டுமல்ல, என்.ராம் அவர்களையும் அழைத்துச் சென்று வி.பி.சிந்தனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் மைதிலி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தனக்கு தொடர்பு கிடைத்திட வழிவகுத்தது மைதிலிதான் என என்.ராம் குறிப்பிட்டிருக்கிறார்.
வி.பி.சிந்தனோடும், மார்க்சிஸ்ட் கட்சியோடும் ஏற்பட்ட தொடர்புக்கு பிறகு நேரடியாக தோழர் மைதிலி களப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அக்காலத்தில் சென்னையில் நடைபெற்ற சிம்சன், மெட்டல்பாக்ஸ், அசோக் லேலண்ட், டேப்ளட்ஸ் இந்தியா, எம்.ஆர்.எப் போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்ட கூட்டங்களில் கலந்து கொண்டுபேசியிருக்கிறார்.மேலும் தோழர்.மைதிலி மெட்டல் பாக்ஸ், யூனியன் கார்பைட் ஆகிய தொழிற்சங்கங்களின் துணைத் தலைவராகவும் டேப்ளட்ஸ் இந்தியா நிறுவன தொழிற்சங்கத்தில் தலைவராகவும் பொறுப்பேற்று தொழிற்சங்க பணி செய்தார். டேப்ளட்ஸ் இந்தியாவில் வேலை செய்த 400 தொழிலாளர்களில் பெரும்பான்மை யானவர்கள் பெண்கள்.
‘ரேடிகல் ரிவ்யூ’ ஆங்கில இதழுக்காக தோழர் இ.எம். எஸ். அவர்களிடம் பேட்டி கண்டிருக்கிறார். இத்தகைய பின்னணியில் 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். பிறகு கட்சியின் முழுநேர ஊழியராக ஆனார்.
மைதிலி கம்யூனிஸ்ட்கட்சிக்கு செல்வதை அவர் தந்தை சிவராமன் முற்றாக ஏற்கவில்லை. தாமதமாக வீட்டிற்கு திரும்பினால் அவரது தந்தை சிவராமன் கதவை திறக்கமாட்டார்; சாப்பாடு போடக்கூடாது என்பார். மைதிலியின் தாயார் தான் உதவியாக இருந்தார். தோழர் மைதிலி நடத்திய ரேடிகல் ரிவ்யூ இதழை கடையில் வாங்கி படித்த கருணாகரன் முகவரியைத் தேடி அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தார். ரேடிகல் ரிவ்யூ இதழில் வரும் கட்டுரைகள் முற்போக்காகவும், மார்க்சிய பார்வை கொண்டதாகவும் உள்ளதாக பாராட்டியிருக்கிறார். தோழர். கருணாகரன் ஒரு பொறியாளர். டி.ஐ சைக்கிள் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், கம்பெனியின் வேலை நிமித்தமாக லண்டன் நகரில் 3 ஆண்டுகள் இருந்தார். அப்போது இடதுசாரி சிந்தனையுள்ள இந்திய தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் ஆனார். கம்பெனி நிர்வாகத்திற்கு இது பிடிக்கவில்லை. இப்பின்னணியில் சென்னை திரும்பிய கருணாகரன் மைதிலி சந்திப்பிற்கு பிறகு ‘ரேடிகல் ரிவ்யூ’ இதழுக்காகவும் வேலை செய்தார். மைதிலி, கருணாகரன் இருவருக்கும் மார்க்சிய தத்துவத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையால் நெருக்கமானார்கள். எளிமையான முறையில் அவர்களுடைய திருமணம் 1972 ஆம் ஆண்டு மைதிலி வீட்டிலேயே நடந்தது. இது சாதி மறுப்பு திருமணம் மட்டுமல்ல, எந்தச் சடங்கும் இல்லாத திருமணம். மைதிலியின் கட்சி வாழ்க்கையை விரும்பாத அவரது தந்தை மைதிலி, கருணாகரன் திருமணத்தை ஏற்றுக் கொண்டார். இந்த எளிய மண விழாவில் தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டு அழைப்பில்லாமலேயே பி.ராமமூர்த்தியும் கலந்து கொண்டிருக்கிறார்.
1973 ஆம் ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில அளவில் உருவானது. தோழர். கே.பி.ஜானகியம்மாள் தலைவராக வும், பாப்பா உமாநாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். தோழர்.மைதிலி துணைத் தலைவராக செயல்பட்டார். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் அமைப்பாளராக செயல்பட்டார். கட்சியின் சார்பாகவும், மாதர் சங்கத்தின் சார்பாகவும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார். கட்சி வகுப்பிற்காக பாடக் குறிப்புக்கள் தயாரிக்கப்பட்ட போது, தோழர் மைதிலி ‘பெண் உரிமை ௲ மார்க்சிய பார்வை’ என்ற குறிப்பை தயார் செய்தார். இக்குறிப்பு மாநிலம் முழுவதும் கட்சி வகுப்புகளுக்கு பயன்பட்டு வருகிறது. தோழர் மைதிலி ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாகப்பேசுவார். அவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்,சிந்தனையாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பல ஆண்டு பணியாற்றியவர். தனக்கு தோன்றிய கருத்துக்களை பளிச்சென்று பேசும் பழக்கம் உள்ளவர். தோழர் மைதிலியும் அவரது கணவர் கருணாகரனும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். இவர்களுடைய மகள் கல்பனா தற்போது சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார்.
அவரும் முற்போக்கு சிந்தனையாளர். “அம்மா, அப்பா இருவருமே எந்த தத்துவத்தையும் என் மீது சுமத்தியதில்லை. எப்படி வாழ்க்கை அமைய வேண்டுமென்று நினைத்தார்களோ அப்படி வாழ்ந்து காட்டினார்கள். என் வாழ்க்கையை தீர்மானிப்பது எனது உரிமை மட்டுமல்ல; எனது கடமையும் தான் என்பதை எனக்கு உணர்த்தினார்கள்” என கல்பனா நெகிழ்வோடு கூறினார்.
வண்ணக்கதிரில் வெளியான “களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்” கட்டுரையிலிருந்து...
கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)