தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்திற்கும் ஓர் சிறப்பு உண்டு. 1929 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. இது தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியினைச் செய்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்விலும் ஓர் பிரச்சனை நடந்து கொண்டுள்ளது. தேர்வாணையம் 100% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை என்பது கால்நடை உதவி மருத்துவர்கள் தேர்வில் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் 1097 பேருக்கு 6.2.2021 அன்று ஒதுக்கீட்டு ஆணைவழங்கப்பட்டும் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்ட பின் நியமன ஆணை வழங்க முடியாமல் அரசு இருப்பதும், அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமனம் வழங்கக் கேட்டு சென்னையில் 29.7.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதும் இதுவே முதல் முறையாக இருக்கும்.
கால்நடை துறையில் நடப்பது என்ன?
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அதன் நிர்வாக சீர்கேட்டைஇந்த ஒரு துறையை ஆய்வு செய்வதன் மூலம் அறிய முடியும். 2012ஆம் ஆண்டு 847 கால்நடை உதவி மருத்துவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்நியமனம் செய்ய அரசு ஆணையிட்டது. நியமன நடைமுறையில் 747 பேர் தேர்வாகி, 636 பேர் பணியேற்றார்கள் (சுமார் 550 பேர் தான் ) என்று கூறப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகம், தனது பெயரையும் பரிந்துரைக்கக் கோரி பெண் ஒருவர் மதுரையில் நீதி கேட்டார்.
வேலை வாய்ப்பு அலுவலகம் மட்டுமல்லாமல் செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்திருக்க வேண்டும், அதைத் தான் அரசியல் சாசனம் 14, 16 ன் படி அனைவருக்கும் சம வாய்ப்பாக கருத முடியும் என்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டும்தேர்வு செய்யப்பட்ட 636 மருத்துவர்களின் நியமனம் செல்லாது என்றும் 6.9.2012 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசும்,தற்காலிக மருத்துவர்களும் மேல்முறையீடு செய்துள்ளனர். நியமனமே செல்லாது என்ற நிலையில் அரசு,அவர்களை சிறப்பு தேர்வு மூலம் நிரந்தரம் செய்ய அரசாணை எண் 104 நாள் 20.5.2014 ஐ வெளியிட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்கிலும் 22.1.2016 அன்று இத்தீர்ப்பை உறுதி செய்ததுடன் , சிறப்பு தேர்வு நடத்தவெளியிட்ட அரசாணை 104 ஐ யும் ரத்து செய்து விட்டது.இதனால் தற்காலிக கால்நடை மருத்துவர்களும், அரசும் உச்ச நீதிமன்றத்தில் 2016 ல் மேல் முறையீடு செய்து தற்போதைய நிலை தொடரலாம் எனும் தீர்ப்பால் 636 மருத்துவர்கள் நிரந்தர ஊதியத்தில் பணிபுரிகிறார்கள். மேலும், 2018ஆம் ஆண்டு ரூ.40,000ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 818 கால்நடை உதவி மருத்துவர்களை அரசு நியமனம் செய்தது. ஒவ்வொரு ஆண்டும் பணி முறிவு செய்து மறு நியமனம் வருகிறார்கள். 25.8.2021 அன்று இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சம வேலைக்கு சமஊதியம் அதிமுக அரசு வழங்கவில்லை. தற்போதைய அரசு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது தொகுப்பூதிய மருத்துவர்கள் கோரிக்கையாகும்.
தேர்வாணையமும்- 1141 மருத்துவர்கள் தேர்வும்
தேர்வாணையம் மூலம் 1141 கால்நடை உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய 18.11.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த 1141 மருத்துவர்கள் தவிர636 காலியிடங்களை உச்ச நீதிமன்ற வழக்கில் உள்ளதற்காலிக மருத்துவர்களுக்காகவே ஒதுக்கி வைத்துள்ளது. 1141 பேரை தேர்வாணையம் மூலமும், 636 பேரை உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நியமனம் செய்யவுள்ளது. அதற்காக தேர்வாணையம் 23.2.2020 அன்றுதேர்வு நடத்தி, சான்றுகள் சரி பார்த்து, 5.2.2021 மற்றும் 6.2.2021 தேதிகளில் நேர்காணல் நடத்தி 1097 பேருக்குஒதுக்கீடு ஆணையும் வழங்கியது. அரசு இவர்களுக்கு நியமனம் வழங்க முடியாத நிலை உள்ளது. ஏன்?
என்ன காரணம்- யார் இந்த 110 பேர்?
2009ஆம் ஆண்டு தேர்வாணையம் ஓர் தேர்வுநடத்தியுள்ளது. அதில் தேர்வாகாமல் காத்திருப்போர்பட்டியலில் சிலர் இருந்துள்ளனர். அவர்களில் சிலர்“முயற்சி” செய்து இயக்குநர் அவர்களின் ந.க.49852/2018M1 நாள் 16.10.2018 உத்தரவு மூலம் தங்களது பணியை வரன்முறை செய்து கொண்டுள்ளனர். இந்த உத்தரவை காட்டி தங்களது பணியையும் வரன்முறை செய்ய கேட்டு 110 பேர் வழக்கு தொடுத்துள்ளனர். நீதிமன்றம் இவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் அலுவலகம் பணி வரன்முறைசெய்யவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடுத்தனர். இதன் தொடர்ச்சி தான் 6.2.2021 அன்றுஒதுக்கீட்டு ஆணை வழங்கிய பிறகு 110 காலியிடங்களை நிரப்பக்கூடாது என்ற வழக்கில் 18.2.2021 அன்று
இடைக்கால தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பால்தேர்வாணையம் தேர்வு செய்த 1097 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க அரசால் முடியவில்லை. அவ்வாறு வழங்கினால் தேர்வாணையத்தால் தேர்வான 110 மருத்துவர்கள் உடனே வேலையை இழப்பர். தேர்வாணையத்தின் வரலாற்றில் தேர்வானவுடன் வேலையிழப்பதும் இதுவே முதல் முறையாகவே இருக்கும்.
வழக்கு... வழக்கு... வழக்கு..
கால்நடை துறையில் உச்ச நீதிமன்ற வழக்கில் உள்ள 636 மருத்துவர்களில் 110 பேர் இந்த வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று அரசு வழக்குரைஞர் வாதிட்டுள்ளார்.ஆக 636 நபர்களுக்கு தற்போது 746 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தவிர தனிப்பட்ட வழக்குகளால் 14 காலியிடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும்பல வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஒரு துறையில், அதுவும் 1141 காலியிடங்களின் , இட ஒதுக்கீட்டில் 56 இடங்களும், 636+110+14=760 வழக்குகளும், தவறுகளும் பிரச்சனைகளும் உள்ளதே, குரூப் 4 தேர்வில் 9882 காலியிடங்களில் எப்படி இருக்கும்என்று விபரங்கள் சேகரித்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
குரூப் 4 தேர்வும் இட ஒதுக்கீடும்
திமுக தலைமையிலான தமிழக அரசு, இளைஞர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளிடம் நேர்மையாக படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும்என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.அதற்கு அரசியல் தலையீட்டை தடுக்க வேண்டும். கடந்த 10ஆண்டுகளில் தேர்வாணையம் நடத்திய அனைத்து தேர்வுகளிலும் குறிப்பாக கால்நடை மருத்துவர், மற்றும் குரூப் 4 தேர்வில் பட்டியலில் குறிப்பிட்டவாறு இட ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்துள்ளதா என்பதை ஓர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். தேர்வாணையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணஅனைவரும் நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமா? அரசு ஓர் கண்காணிப்பு ஏற்பாடு செய்ய வேண்டாமா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுகிறது.
கட்டுரையாளர் :மா.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு). ஈரோடு