“கொரொனா 2 உண்மையும் புரட்டும்” என ஒரு கட்டுரையை திருவாளர் குருமூர்த்தி அவர்கள் துக்ளக் இதழில் எழுதியுள்ளார். தலைக்கு வெளியேயும் தனக்கு இரண்டாவதாக ஒரு மூளை இருப்பதாக நினைத்துக் கொள்ளும் அவர், அரைகுறையான தரவுகளோடும், வழக்கமான அறிவுரைகளோடும் இக்கட்டுரையை எழுதியுள்ளதோடு, தோல்வியடைந்துள்ள மத்திய அரசை தான் முன்வைத்துள்ள சொத்தையான வாதங்கள் மூலம் காப்பாற்றவும் முனைந்திருக்கிறார்.
தற்போது வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றுக்கான காரணமே, கொரோனா வைரஸ் இருமுறை உருமாற்றம் அடைந்துள்ளதால் தானாம். ஆகவே கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இந்த புதிய வகை கொரொனா மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாம். இந்த வாதத்தை முன்வைத்ததோடு, மாநிலங்களில் பரவல் விகிதத்திற்கான பட்டியலையும் இணைத்திருக்கிறார். சொல்பேச்சு கேட்காத துடுக்கான கொரோனா இது என்பதால் தானோ என்னவோ இம்முறை கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், விளைக்கை அணையுங்கள் என்பதான அருளாசியை இவர்கள் வழங்கவில்லை போலிருக்கிறது. உலகத்தின் பல நாடுகளும் தடுப்பூசி உற்பத்தியை பெருக்கி, மக்களில் பெரும்பாலானோருக்கு அதைச் செலுத்தி கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்க, இவர்களோ 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் இரண்டே இரண்டு தனியார் நிறுவனங்களில் கொஞ்சமாக தடுப்பூசியை தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது தோல்வியை கெட்டிக்காரத்தனமாக மறைத்து விட்டு, கொரொனா 2 வைரசின் ஜாதகத்தை கணித்துதுக் கொண்டிருக்கிறார்கள்.
மழுப்பலான மற்றொரு தகவலையும் சொல்லி, முழு பூசணிக்காயையும் பிடி சோற்றுக்குள் மறைக்கவும் முயல்கிறார் மனிதர். கும்பமேளாவால் வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லையாம். கும்பமேளா கூடுவதற்கு முன்பே அது அதிகரித்து விட்டதாம். அத்தோடு விரைவாக விழாவை முடித்துக் கொள்ளுங்கள் என பிரதமர் ஆலோசனை சொன்னதால் அனைவரும் உடனடியாக திரும்பி விட்டனராம். அடேயப்பா..!. கும்பமேளாவில் கூடினால் அதனால் கொரோனா பரவாதாம். ஆனால் கடந்த ஆண்டு தப்ளிக் ஜமாத் மூலம் தான் நாடு முழுவதும் கொரோனா வேகமெடுத்ததாம். உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?
அடுத்ததாக அவர் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு ஒரு விளக்கமளிக்கிறார் பாருங்கள். விஞ்ஞானிகளே இவரிடம் வந்து குருதட்சணை கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் போலும். அதாவது நோயாளிகள் அனைவருக்குமே ஒரே நேரத்தில் ஆக்சிஜன் தேவைப்பட்டால் இயல்பாகவே பற்றாக்குறை ஏற்படுமாம். மேலும் தனியார் நிறுவனங்களே பெருமளவில் ஆக்சிஜன் உற்பத்தியில் இருப்பதால் தேவைக்கேற்ற உற்பத்தியை அவர்களால் பெருக்க முடியாமலும், மருத்துவமனைகளால் அதை கொள்முதல் செய்ய முடியாமலும் போய், ஆக்சிஜன் விநியோக சங்கிலியில் ஒரு உடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். அதற்கு அரசை பொறுப்பாக்கக் கூடாதாம்.
இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நள்ளிரவு முதல் பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என சொன்ன அறிவாளிக் கூட்டத்திடம் இப்படியான ‘வழவழ’ விளக்கத்தை தானே எதிர்பார்க்க முடியும்.மேலும் தனது அரிய கண்டுபிடிப்பை வெளியிடுகிறார். குருமூர்த்தி கொரோனா தற்போது மிக வேகமாக பரவுவதற்கான காரணம் மக்களின் அஜாக்கிரதைதானாம். பொழுதுபோக்கிற்காகவும், பூங்காக்களிலும், போக்குவரத்தில் பயணிப்பதிலும், வேலைக்கு போவதிலும் நாம் அதிகமாக ஈடுபட்டதால் தான் கொரோனா இரண்டாவது அலை இவ்வளவு வேகமாக பரவுகிறதாம். கொரோனா முதல் அலையின் போது பொதுமுடக்கம் அறிவித்த வேளையில், உலகின் பல நாடுகள் தனது மக்களுக்கு நேரடியான பண உதவி செய்தபோது, ஒன்றுமே செய்யாமல் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருந்த இவர்கள் வேலைக்காக வெளியில் செல்லும் உழைப்பாளி மக்கள் மீது இத்தகைய குற்றம் சுமத்துவது இயல்பானது தானே.
திருவாளர் குருமூர்த்தி அவர்களே, வேலைக்கு போகாமல் பட்டினி கிடந்து செத்துப் போனாலும் கூட கவலை கொள்ளாத ஒரு அரசாங்கத்திடம் மாட்டிக் கொண்டிருப்பதை விடவும் கொரோனாவோடு ஒரு போராட்டத்தை நடத்தி, முடிந்தால் வாழலாம் எனும் மனநிலைக்கு மக்கள் வந்து நீண்ட நாளாகிறது என்பதையேனும் அடுத்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னர் நினைவில் கொள்ளுங்கள்.
கட்டுரையாளர் : ஆர்.பத்ரி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்