14.4.1967 ஆம் நாள் சென்னைக் கோட்டையின் முகப்பில் ‘தமிழக அரசு - தலைமைச் செயலகம்’ என்ற பலகை மிளிர்ந்தது. ‘மதராஸ் கவர்மெண்ட்’ என்று இருந்த சொல் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என பொறிக்கப்பட்டது.
‘சத்தியமேவ ஜெயதே’ என்பது அழகிய தமிழில், ‘வாய்மையே வெல்லும்’ என்று பொறிக்கப்பட்டது.
18.7.1967 அன்று தமிழக வரலாற்றில் பொன்னான நாள். தாய்த்தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று தனயன் அண்ணா பெயர் சூட்டிய நாள்!
‘’தமிழ்நாடு என்ற இந்தப் பெயர் நமக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் என்ற முதியவர், பலநாட்கள் உண்ணாவிரதம் இருந்து அணு அணுவாகத் தம்முடைய உயிரைச் சிதைத்துக் கொண்டு அவர்கள் இறந்து பட்டார்கள். அவர்கள் இறந்துபடுவதற்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னதாக நான் அவரிடத்திலே போய்ப் பார்த்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. ‘நாங்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்தைப் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உண்ணாவிரதத்தை விட்டுவிடுங்கள்’ என்று சொன்ன நேரத்தில், ‘ உங்களுக்கு இந்த பெயர் மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க அரசியல் வலிவு இல்லை, ஆகையால் என்னைத் தடுக்காதீர்கள், நான் இறந்துவிடுவதால் ஏதாவது நன்மை ஏற்படுமானால் நான் இறந்துவிடுவதிலே நஷ்டம் ஏதும் இருக்காது’ என்று சொன்னார்.
அந்தப் பெரியவருடைய உறுதியால் அவர் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டு அந்த நாட்களிலே ஒருபேரெழுச்சியை ஏற்படுத்தினார். அவரை இந்த நேரத்திலே நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது. அவருடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்தி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதற்கு இந்த அவைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்றார் முதல்வர் அண்ணா!
அன்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் போயிருந்தால் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம் போல் சென்னப் பிரதேசமாக அடையாளம் அற்று இருந்திருப்போம். நாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மார்தட்டிச் சொல்லும் தகுதியை இழந்திருப்போம். தலைகவிழ்ந்து நின்று இருப்போம்.
இந்த தமிழ்நாடு என்ற பெயர் இன்று சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அது எப்படி ஒரு மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டலாம் என்று மதவாத மங்குணிகள் சிலர் இன்று கொக்கரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு என்ற பெயரைக் காப்பாற்றியாக வேண்டி இருக்கிறது.மத்திய பா.ஜ.க அரசு இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் காரியத்தை நித்தமும் செய்து வருகிறது. அதுதான் இன அடையாளங்களைச் சிதைத்தல். அனைவருக்கும் மத அடையாளங்களைப் பூசுதல்.மத அடையாளங்களைப் பூசுவது என்பது அனைவரையும் வளர்ப்பதற்கு அல்ல. தங்களது உயர் சாதி நலன்களுக்காக அடித்தட்டு மக்களுக்கு மத அடையாளங்களைப் பூசி மடையர்கள் ஆக்குவதற்கு திட்டமிடுகிறார்கள்!இந்த பேராபத்தை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
தமிழை, திருவள்ளுவரை, ஒளவையாரை, பாரதியாரை புகழ்ந்து பேசுவதன் மூலமாக தமிழர்களை மயக்க நினைக்கிறார்கள்.பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஏற்பட்டுள்ள தமிழ்ப்பாசத்தை பார்க்கும் போது புல்லரிக்கிறது. இருவரும் பதவி காலியானதும் தமிழ்நாட்டுக்கு தமிழ்ப்படிக்க வந்துவிடுவார்கள் போல, அந்தளவுக்கு வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்!
‘’அழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே” என்று வருந்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. ‘’பாரதநாட்டின் புராதன மொழி இனிமையான மொழியான தமிழ் மொழியில் பேசமுடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.இப்படி அவர்கள் இருவரும் பேசியதற்கு பாராட்டுச் சொல்லத் தான் வேண்டும். இவ்வளவு தமிழ்ப்பற்றுக் கொண்ட இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்? நன்மைசெய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெடுதல் செய்யாமலாவது இருக்கலாமே?
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையே மூடத் திட்டமிட்ட அரசு தான் பாஜக அரசு. சென்னையில் தனித்து இயங்கிய அந்த நிறுவனத்தை மைசூர் பல்கலைக் கழகத்துடன் இணைக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டது.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று புதியகல்விக் கொள்கையில் இருக்கிறது.2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்குஅப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி ஏதும்திட்டம் இல்லை என்று அன்றும் அமைச்சர் ஜவடேகர் சொன்னார். அதே கொள்கையை இப்போதும் செயல்படுத்த துடிக்கிறார்கள்.
செம்மொழி தமிழ் உயராய்வு மையம் என்ற பெயரில்மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்டு 2008-ஆம் ஆண்டு மே 19 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவனமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது முயற்சியால் செயல்பட்டு வருகிறது.2011 திமுக ஆட்சி முடிவுற்ற நிலையில் இருந்து, அதனை செயல்படாத அமைப்பாக மாற்றிவிட்டார்கள். பத்துஆண்டுகளாக கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படவில்லை.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும். இதில் மத்திய அரசால் மூன்று வகையான விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக அவை தரப்படவில்லை.
2011- 16 வரையிலான ஆண்டுக்கான விருது அறிவிப்பு2017 இல் வெளியானது. 2020 ஏப்ரலிலும் விருது அறிவிப்பு வெளியானது. இதற்கான மனுக்கள் பெறப்பட்டாலும் விருதுகள் வழங்கப்படவில்லை.இதுதான் ‘தமிழ்ப்பற்றாளர்களான’ மோடி, அமித்ஷா ஆட்சியில் தமிழின் நிலைமை.கடந்த ஆண்டு இறுதியில் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்தியப்பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. இப்போது மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்திற்காக தனித்துறைகளை உருவாக்குகிறது. ஆனால், தமிழுக்கு மட்டும் இருக்கும் ஒரேஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நிம்மதியாக இயங்க விடாமல்செய்து வருகிறார்கள்.கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காகரூ.643 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது.இந்த தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 29 மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிபரம்:
2017-18 ஆண்டில் 198 கோடியும், 2018-19 ஆண்டில் 214 கோடியும், 2019 -20 ஆண்டில் 231 கோடியும் சமஸ்கிருத வளர்ச்சிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு 2017-18 ஆண்டில் 10.59 கோடியும், 2018-19 ஆண்டில் 4.65 கோடியும், 2019-20 ஆண்டு 7.7 கோடியும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்ப் பாசமா? நடிப்பா?
மனோன்மணீயம் சுந்தரனார் சொன்னார், ‘உலகவழக்கு அழிந்து ஒழிந்த மொழிக்கு’ எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? ‘அப்படி சிதையா இளமை மொழிக்கு’ எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? இதன் மூலம் தமிழ் பாசம் தெரிகிறதா? நடிப்பு தெரிகிறதா?
உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கும் வாக்காக, தமிழ் மொழியைக் காக்கும் வாக்காக அமையட்டும்!
கட்டுரையாளர் :ப.திருமாவேலன் மூத்த பத்திரிகையாளர்
நன்றி: கலைஞர் செய்திகள்