1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11. தமிழ்நாடு மாணவர் சம்மேளன முதல் மாநாடு மதுரை தமுக்கம் கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். விடுதலைப் போராட்டக் காலத்தில் மாணவர் படை திரட்டி, சிறை புகுந்த தோழர் என்.சங்கரய்யா மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் மேற்கு வங்க மாணவர் இயக்கத் தலைவர் பிமன்பாசு, கேரள மாணவர் ‘சம்மேளன செயலாளர் விஜயன், கேரள மாணவர் இயக்க முன்னாள் தலைவர் பி.கோவிந்தப்பிள்ளை, தமிழகத்தின் மாணவர் இயக்க முன்னாள் தலைவர் கே.முத்தையா ஆகியோர் பங்கேற்ற எழுச்சிமிகு மாநாடாக அது அமைந்தது.
சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம் மாணவர் சம்மேளனத்தின் முழக்கமாக மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. இதன் மீது காரசார விவாதம் நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த மாணவர்கள் மாற்று கோஷத்தை வைத்தனர். பிரதிநிதிகள் சிலர் இதை ஆதரித்துப் பேசினர். கேரளத்தில் செயல்படும் மாணவர் சம்மேளனம் இதே முழக்கத்துடன் செயல்படுவதையும் நாமும் அதைப் பின்பற்றுவது சரியாக இருக்கும் என்று விவாதத்தில் பங்கேற்ற நான் குறிப்பிட்டேன். விவாதத்திற்கு வெண்கலக்குரலில் தோழர் சங்கரய்யா தொகுப்புரை வழங்கினார். விவாதத்தில் வந்த எனது கருத்தையும் அவர் மேற்கோள் காட்டினார். மாநாடு முன்வைத்த முழக்கத்தை பிரதிநிதிகள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
பொது மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் சங்கரய்யா உரை அருவி போலக் கொட்டும். ஒவ்வொரு சொல்லும் தகவல் களஞ்சியமாக மிளிரும். கேட்போருக்கு எந்த சலிப்பும் தட்டாது. கடலூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் தெலுங்கானா போராட்ட வீரருமான எம்.பசவபுன்னையா பங்கேற்றார். கட்சியின் கோட்பாடுகள், தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அவரது நீண்ட ஆங்கில உரையை தோழர் சங்கரய்யா, குறிப்பு ஏதும் எடுக்காமல் அற்புதமான நினைவாற்றல் மூலம் அழகு தமிழில் கடகடவென மொழியாக்கம் செய்தார்.
தோழர் சங்கரய்யாவின் பன்முகத் தன்மை வாய்ந்த கம்பீரமான உரை தோழர்களுக்கு உற்சாகம் தரும் டானிக் போன்றது. திருச்சியில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் விவாதத்திற்கு தோழர் சங்கரய்யா தொகுப்புரை வழங்கினார். தோழர்கள் அனைவரும் மன நிறைவோடு செல்லுங்கள்; உற்சாகமாகப் பணியாற்றுங்கள் என்று தொகுப்புரையில் மணிமகுடம் வைத்தது போல் கூறினார்.தமிழ்நாட்டிலும் வங்கம் போல், கேரளம் போல், திரிபுரா போல் ஒரு இடதுசாரி திருப்பம், முற்போக்கு ஜனநாயகத் திருப்பம், ஏற்படும் என்பது உறுதியென்று ஒவ்வொரு பொது நிகழ்ச்சிகளிலும் தோழர் சங்கரய்யா குறிப்பிடத் தவறுதில்லை. சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு நீண்ட காலமாகலாம்; இறுதியில் வெல்லப் போவது சோசலிசம் மட்டும் தான் என்று தோழர் ஜோதிபாசு தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார். 21-ஆம் நூற்றாண்டில் மனித குலத்திற்கு தலைமை தாங்கப்போகும் தங்க நிகர் தத்துவம் மார்க்சியம் தான் என்பதை முதலாளித்துவ செய்தி நிறுவனம் பி.பி.சி., அண்மையில் கருத்துத் தெரிவித்தது.
தோழர் சங்கரய்யா, கால வெள்ளத்தில் எதிர் நீச்சலடித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌர்ணமிகளைக் கண்ட புகழ் மிக்க தலைவர். நூறாவது வயதிலும் பொங்கி வரும் பெரு நிலவு போன்ற முகத்துடன் காண்போரை இன்முகத்துடன் வரவேற்பவர். அவரது எளிமை, தூய்மை, நிகரற்ற தோழமை, நிதானம், லட்சியம், உறுதி அனைத்தும் அரசியல் வாழ்வில் உள்ள அனைவரும் கற்கவேண்டிய உன்னத பாடம்.
கட்டுரையாளர் : வி.பரமேசுவரன், முன்னாள் ஆசிரியர், தீக்கதிர்