மேட்டூர் அனல் மின்நிலையம் 1-ல் கொதிகலனுக்கு நிலக்கரியை கொண்டு செல்லும் பாதையில் இணைப்பு கோபுரம்(Juntion tower) 10 ஏ ,10 பி -ல் கடந்த 18.05.2021 அன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.மிகமோசமான இந்த தீ விபத்து காரணமாக 330 மீட்டர் கன்வேயர் பெல்ட், அதைச் சுழலச் செய்யும் உருளைகள் (Idlers)அதனுடைய பிளாட்பாரம், ஸ்டாண்டுகள், எச்.டி.கேபிள்கள், மேற்கூரைகள் உள்ளிட்ட சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒட்டு மொத்த கட்டமைப்பும் எரிந்து நாசமாகியுள்ளது.
இதுபோன்ற தீ விபத்து இதே கோபுரத்தில் கடந்த 10.05.2021-ல் நடந்தது. அப்போது ஒட்டு மொத்த கட்டமைப்பும் எரிந்து நாசமானதால் மறுகட்டமைப்பு செய்ய மட்டுமே சுமார் 20 கோடி ரூபாய்செலவானது மட்டுமன்றி, மறு கட்டமைப்பு முடிந்துமின் உற்பத்தி துவங்கும் வரையில் மின்உற்பத்தி நிறுத்தத்தினால் மட்டுமே சுமார் 4 கோடி ரூபாய்தினமும் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது அதோடு விலைமதிப்பற்ற இரண்டு மனித உயிர்கள்பலியானதை மின்வாரியமோ, மேட்டூர் அனல் மின்நிர்வாகமோ மறந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போது ஏற்பட்ட இழப்பு சுமார் 80 கோடி ரூபாய். மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய இந்ததீ விபத்திலிருந்து மின் வாரியம் படிப்பினையைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை. அதன் காரணமாகத்தான் ஏற்கனவே ஏற்பட்ட அதே கட்டமைப்பில் மீண்டும் அதே போன்ற தீ விபத்து. தற்போது கட்டமைப்பு சீரமைத்தல் மற்றும் மின் உற்பத்தி பாதிப்புஎன்று சுமார் 80 கோடி ரூபாய் வாரியத்திற்கு இழப்புஏற்படும் என்று கூறப்படுகிறது.
அனல்மின் நிலையங்களின் நிலை
அனல்மின் நிலையங்களில் மின்வாரியம், களப்பணியாளர் பதவிகள் பெயரளவிற்கு மட்டும் மிகமிக சொற்ப எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டும்,அனல் மின் நிலைய பராமரிப்பு பணிகள் அனைத்தையும் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து மேற்கொண்டு வந்தது. அதன்படிநான்கு அனல் மின் நிலையங்களிலும் சுமார்12,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கண்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், உழைப்பு வழங்கல் என்றும் துறையில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்றும் பயன்படுத்தப்பட்டு வந்ததால் பராமரிப்புப் பணிகள் வாரிய அதிகாரிகளின் மேற்பார்வையில் சரியான வழிகாட்டுதலில்ஒப்பந்த தொழிலாளர்கள் திறமையாக செயலாற்றி வந்தார்கள். அதன் காரணமாக அந்த காலகட்டத்தில் 4 அனல் மின்நிலையங்களில் பராமரிப்புபணிகள் மிகமிக சிறப்பாக இருந்தது. அனல் மின்நிலையங்களும் தனது இலக்கை கடந்து உற்பத்தியும் செய்து அதற்கான பரிசுகளையும், வெகுமதியும் பெற்று வந்தன.
நாளடைவில் அரசும், வாரியமும் கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்குமின்சார கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டு,அதிக விலைகொடுத்து மின்சாரத்தை கொள்முதல்செய்து வந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற தவறான முடிவுக்கு வந்தது.அதன் காரணமாக அனல் மின் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, உற்பத்தி குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், NPC (National productivity committe)என்னும் தேசிய உற்பத்தி திறனாய்வு குழு என்ற தனியார் நிறுவனத்திடம் ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை கேட்டுப் பெற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது வாரியம்.
பலலட்சக்கணக்கான ரூபாய்களை செலவுசெய்து என்பிசி-யிடமிருந்து பெற்ற ஆலோசனையின்படி, ஊழியர்களை குறைக்க வாரியம்முடிவுசெய்த போதும் அனல் மின் நிலையங்களைசிறப்பாக பராமரித்து இயக்க கூடுதல் ஊழியர்கள்தேவை என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் வாரியத்திடம் முறையிட்டு அனுமதி பெற்று தேவையான எண்ணிக்கைகளில் அனுபவமிக்க ஊழியர்களை கொண்டு பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. அனல் மின் நிலையங்கள் சிறப்பாகவும், விபத்துகள் இன்றியும் செயல்பட்டு வந்தன. அவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களும் நிரந்தரம் செய்யப்பட்ட பிறகு பணிமூப்பு,இறப்பு, பதவிஉயர்வு, ஊர்மாறுதல் என்ற காரணங்களால் வெகுவாக குறைந்த நிலையில் அனல்மின் நிலையங்களின் பராமரிப்புப் பணி ஊழியர்கள் இல்லாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது.
ஒப்பந்தப்பணிகள்
அரசின், வாரியத்தின் தவறான மின்கொள்முதல் கொள்கை காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அனல் மின் நிலையங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தும் அப்பணிகளை செய்திட‘ஒப்பந்தப் பணிகள்’ (Works Contract) என்ற புதிய வடிவத்தில் ஒப்பந்தம் விட்டு பராமரிப்புப் பணிகளை செய்வது என்ற தவறான முடிவுகளை எடுத்தது வாரியம். ‘Works Contract’ என்ற முறையில் நிர்வாகத்தில் உள்ள அனுபவமிக்க எவர்ஒருவரும் ஒப்பந்ததாரிடமோ, ஒப்பந்த தொழிலாளர்களிடமோ அனல் மின் நிலைய பராமரிப்பு குறித்து வழிகாட்டவோ, மேற்பார்வையிடவோ முடியாத நிலை. ஒப்பந்தப் பணிகள் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் போட்டி காரணமாக மிகவும்குறைந்த எஸ்டிமேட் தொகைக்கு ஒப்பந்தம் எடுத்து;அப்பணிக்கு தேவையான எண்ணிக்கையில் ஊழியர்களை கொண்டு பணி மேற்கொள்வதற்கு மாறாக, மிகமிக குறைந்த எண்ணிக்கைகளில் ஊழியர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இந்த நிலைமை அனல் மின் நிலைய அதிகாரிகளுக்கும் தெரியும் என்றாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் தான் அவர்கள்இருக்கின்றார்கள்.
தூசு நிறைந்த நிலக்கரி
போதாத குறைக்கு தற்போது அனல் மின்நிலையத்திற்கு பெறப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு நிலக்கரியில் அதிக அளவு கலோரியும் அதிக அளவு தூசும் நிறைந்ததாக உள்ளது. அதன்காரணமாக கன்வேயர்பெல்ட் மூலம் நிலக்கரியினை கொதிகலனுக்கு கொண்டு சேர்க்கும்போது நிலக்கரியின் தூசுகள் கன்வேயர்பெல்ட் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தளங்களிலேயே படர்ந்து அதை அப்புறப்படுத்திட ஊழியர்கள் இல்லாததால் நாளடைவில் வெப்பம் காரணமாக சூடுபிடித்து எரிய ஆரம்பித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும் தற்போது அனல்மின் நிலைய மின் உற்பத்தி தேவைப்படுவதால் அதிக அளவுநிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் கொதிகலனுக்கு கொண்டு செல்லும் பணியானது இரவுபகல் என்றில்லாமல் ஓயாமல் கன்வேயர் பெல்ட்கள்இயக்கப்படுவதால், பெல்ட்டை சுழற்றச் செய்யும் உருளைகள் சரியாக பராமரிக்கப்படாமல் தொடர்ச்சியாக இயக்கப்படுவதால் உருளைகள் சுழலச் சுழல தீப்பொறி ஏற்பட்டு நடைபாதை தளத்தில் படர்ந்திருக்கும் கரித்துகள்களில் தீப்பொறிபட்டு கரிஎரிந்து அதன்மூலம் மின்சார கேபிள்களும்,கன்வேயர் பெல்ட்டும் எரிந்திருக்க வாய்ப்புண்டு.
வாரியமே முழுப்பொறுப்பு
ஆனால் மேற்சொன்ன முறையில் தீப்பிடித்திருந்தாலும் அதற்கான முழுபொறுப்பும் வாரியம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். தரமான உருளைகள், கன்வேயர்பெல்ட், நிலக்கரி போன்றவைகளுக்கு பதிலாக தரமற்ற உதிரிபாகங்கள், கன்வேயர்பெல்ட், நிலக்கரியினை தருவித்து கொடுத்ததால்தான் தீவிபத்து ஏற்பட்டது என்பது உண்மையென விளங்கும்.அல்லது உதிரிபாகங்கள், கன்வேயர்பெல்ட் மற்றும் நிலக்கரி உள்ளிட்டவை தரமாக இருந்திருக்குமானால், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தரமான அளவில், குறிப்பிட்ட கால அளவுஇடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், தினமும் பராமரிப்பு ஊழியர்களால், வாரிய அதிகாரிகளால் மேற் பார்வை செய்யப்படவில்லை என்பதாலும்தான் தீவிபத்து ஏற்பட்டு இருக்கும் என்ற உண்மை விளங்கும்.
அல்லது பத்திரிகை செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளது போல ஒப்பந்தம் கிடைக்கவேண்டும் என்றோ அல்லது ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றோ நாசவேலை காரணமாகவோ தீப்பிடித்திருக்க வேண்டும்.எது எப்படியோ இரண்டு முறையும் ஒரேபகுதியில் தீப்பிடித்ததை எதிர்பாராமல் நடந்தவிபத்துகள் என்று எளிதில் கடந்து போய்விட முடியாது. காரணம், தீப் பிடித்தாலும் உடனடியாக ஒரு காகிதத் துண்டு நொடியில் எரிந்து சாம்பலாவது போல கன்வேயர் பெல்ட் முழுவதும் எரிந்துசாம்பல் ஆகாது. அதேபோல தான் உயரழுத்த மின்சார கேபிள்களும், கடந்த முறை ஏற்பட்ட தீ விபத்தின்போது 10 ஏ மற்றும் 10 பி-யில் மட்டுமே கன்வேயர் பெல்ட் மற்றும் மின்சார கேபிள்கள் எரிந்து, அதனால் கோபுரத்தின் இரும்பு தூள்கள்மற்றும் தளத்தின் இரும்புதூள்கள் அனைத்தும் வலுவிழந்து சாய்ந்தது.
தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஏ மற்றும் 10 பி மட்டுமல்ல; அதை கடந்து ஜேடி- 2 மற்றும்9ஏ ,9 பி வரை தீ பரவி கன்வேயர் பெல்ட் மற்றும்மின்சார கேபிள்கள் எரிந்து, அதனால் 10 ஏ மற்றும்10 பி கன்வேயர் பாதையில் மேற்தளத்தில் இரும்புதூள்கள் மட்டும் வலுவிழந்து வளைந்து போனது.
எச்சரிக்கைமணி ஒலிக்காதது ஏன்?
ஒரு முனையில் தீப் பிடித்து மறுமுனைக்கு தீ பரவும் வரையில் தீ எச்சரிக்கை கருவிகள் (Fire Alarm system) எச்சரிக்கை மணி ஒலிக்காதது எப்படி?
ஒரு முனையில் தீப் பிடித்தவுடன், அதனுடையசூடு அல்லது அதனுடைய புகை வந்தவுடன் தீஎச்சரிக்கை கருவிகள் எச்சரிக்கை மணியை ஒலித்திருந்தால், விரைந்து சென்று தீயை அணைத்துக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் 10 ஏ மற்றும் 10 பி -யில் எரிந்து ஜேடி-2 மற்றும் 9ஏ ,9பிவரை தீ பரவியிருந்தது என்றால் தீ எச்சரிக்கை மணி அடித்தும், கண்டுகொள்ளாமல் இருக்கப் பட்டதா? 10 ஏ, 10 பி முதல் 9 ஏ , 9 பி வரை தீ பரவும்வரை எதிர்பார்த்து காத்திருக்கப்பட்டதா? தானியங்கி தண்ணீர் பீய்ச்சியடிக்கும் கருவிகள் இல்லையா? என்ற சந்தேகங்கள் சாமானியனுக்கும்வரும். இதற்கெல்லாம் வாரியம் சொல்லப் போகும் பதில் என்ன?இதுகுறித்து வாரியம் விசாரித்திருக்க வேண்டும். தவறுக்கான அல்லது விபத்திற்கான காரணங்களை கண்டுபிடித்திருக்க வேண்டும். தவறு செய்தவர்களை அல்லது விபத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும். மீண்டும் இதுபோல தவறுகள் விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் இதில் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
செய்ய வேண்டியது என்ன?
இனி இதுபோல நடக்காமல் அனல் மின்நிலையத்தை பாதுகாக்கவும், உற்பத்தியை உறுதிசெய்யவும், செய்ய வேண்டியவை ஏராளம்.
* வேகன் டிப்பளரிலிருந்து கொதிகலனுக்கு நிலக்கரியை கொண்டு செல்ல தற்போது உள்ளஇணைப்பு கோபுரம்( Junction Tower) போலஎதிர்புறத்தில் இன்னுமொரு கோபுரம் நிறுவலாம். அப்படி செய்தால் நிலக்கரி இறக்குவதில் ஏற்படும்சுணக்க கட்டணம் குறைய வாய்ப்பு ஏற்பட்டு வாரியத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.
* அனல்மின் நிலைய பராமரிப்புப் பணிக் கென்று 1.5.1999 -ல் அனுமதிக்கப்பட்ட அளவில் நிரந்தரத் தன்மையுடைய ஊழியர்களை கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
* அரசு முடிவு, கொள்கை முடிவு, உதய் திட்டம்என்றெல்லாம் வாரியம் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு, பராமரிப்புப் பணிகளை ஒப்பந்த முறையில்தான் செய்யமுடியும் என்றால், அனல் மின்நிலையங்களில் 1.5.1999-க்கு முன்பு இருந்ததுபோல உழைப்பு வழங்கல் (Labour Supply) அல்லது துறையால் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (Department engaged contract labour) என்ற முறையில் 01.05.1999-ல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் ஒப்பந்ததொழிலாளர்களை நியமித்து அனல் மின்நிலையஅதிகாரிகளின் மேற்பார்வையில், வழிகாட்டுதலில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
* மின்சார வாரியம் சமீபத்தில் விநியோகப் பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்திட கேங்மேன் பணியாளர்களை தேர்வு செய்தது போல, அனல் மின்நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களையே அனல் மின் நிலைய கேங்மேன் பணியாளர்களாக தேர்வுசெய்து, அனல்மின் நிலைய அதிகாரிகளின் மேற்பார்வையில் பராமரிப்புப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். அல்லது நான்கு அனல் மின்நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்களை கடந்த காலங்களில் சொசைட்டி தொழிலாளர்களாக மாற்றியமைத்து நிர்வாகம் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது போல தற்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அனல் மின் நிலையங்களை பாதுகாத்திட வேண்டும்.
* அனல் மின்நிலைய உற்பத்திக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்களையும் தரமானதாக வழங்கிட வேண்டும்.
* அநியாய விலைக்கு மின்கொள்முதல் என்றதவறான நடைமுறையை கைவிட்டு, தமிழக மின்வாரிய அனல் நிலையங்களை முழுமையாக இயக்கி மின்உற்பத்திக்கு உத்தரவாதம் செய்திடவேண்டும்.
கட்டுரையாளர் : வீ.இளங்கோ, மாநிலதுணைப்பொதுச்செயலாளர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)