articles

img

செம்படைத் தளபதி.... என்.சங்கரய்யா....

இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர்களில் என்.சங்கரய்யா அவர்களும் ஒருவர். விடுதலைப்போராட்ட வீரராக, தலைமறைவு கால புரட்சிக்காரராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக, இடதுசாரிச் சிந்தனையாளராக நம் மனக்கண் முன் விரியும் உன்னதமனிதர். தோழர் என்ற சொல் லுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.தன்வாழ்வின் முக்கியமான கால கட்டங்களை மக்கள்நலம் சார்ந்த போராட்டங்களால் சிறையில் செலவிட்டவர்.

இவர் வாழும் சமகாலத் தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கான பெருமை. அவருடன் பல தளங்களில் ஒன்றாக பயணித்து இருப்பது எனக்கு கிடைத்த நற்பேறு. தமது அரசியல் வாழ்க்கையில் தன் பிள்ளை, பேரப்பிள்ளைகள் உட்பட நூற்றுக்கணக்கான வர்களுக்கு சீர்திருத்த சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்த சிந்தனையாளர். ஜனசக்தி தத்துவ மாதஇதழின் பொறுப்பாசிரியராகவும், தீக்கதிர் இதழின் ஆசிரியராகவும் செவ்வனே இதழியல் பணி செய்தவர். அரசியலில் பல வெற்றி தோல்விகளை சந்தித்திருந்தாலும் தமது ஆளுமையால் எல்லாதலைவர்களையும் தன்பால் ஈர்த்த சிறந்த தலைவர்.

1998-இல் கோவையில் நடந்த முஸ்லிம் விரோதகலவரங்களை கட்டுப்படுத் தும் நோக்கில் சமூக நல்லிணக்க பேரணியை முன் நின்று நடத்திய உன்னத மனிதர். பாசிசச் சிந்தனை வாதிகளுக்கு தமது களப் பணிகளால் பதிலடி கொடுத்த செம்படைத் தளபதி. கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டாலும் இளகிய மனம் கொண்ட பண் பாளர். முதலாளித்துவம் தீவிரமாகச் செயல்படும் போது சமூகநீதி பாதிக்கப்படும் என்ற உயர் சிந்தனையால் களமாடிக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கண்ட அவரது வாழ்க்கைப் பயணம் மேலும்செழுமையும் வலிமையும் பெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

கட்டுரையாளர் : பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ,. தலைவர், மனிதநேய மக்கள் கட்சி...