போரில் கொண்டாட எதுவும் இல்லை
போர் முனை ஒரு அருவருப்பான இடம். இரைச்சலும், தூசியும் நிறைந்த இடம்; இரத்தத்தின் மொழி சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்; இளைஞர்கள் நிறைந்த இடம், அவர்கள் பெரும்பாலும் பயத்தில் இருப்பார்கள், அந்தப் பயத்திலிருந்தே கொல்லவோ கொல்லப்படவோ தேவையான அட்ரினலின் சுரப்ப தற்கு அனுமதிக்கிறார்கள். போதுமான அட்ரின லினை அவர்கள் சுரக்காவிட்டால், கேப்டகான் (ஆம் பெட்டமைன் மற்றும் தியோஃபிலின் கலவை) போன்ற போதைப்பொருள்களை உட்கொண்டு தங்கள் பதற்றத்தையும் பயத்தையும் மழுங்கடிக்கிறார்கள். போருக்கு அனுப்பப்படும் இந்த பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடமை அல்லது தேசபக்தி காரணமாக துப்பாக்கிகளைச் சுடுவ தில்லை, அவர்களுடைய துப்பாக்கிகள் பெரும்பாலும் பயத்தின் காரணமாகவே சுடப்படுகின்றன. ஆனால், போர் பெரிய அளவில் இயந்திரமயமாகும் போது, — ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தொலை தூரத்திலிருந்து வெடிக்கும்போது—பொத்தான்களை அழுத்தும் மனிதர்கள் — மரணத்தின் பொறியாளர்க ளுக்குப் பதிலாக இயந்திரங்களின் பொறியாளர்க ளாக துண்டிக்கப்பட்ட ஒருவித அறிவியல் உணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் தொலைக்காட்சித் திரைகளில் மனி தர்களைப் பார்க்கவில்லை, வெப்பக் குறிகளையும் இலக்குகளின் பெயர்களையும் பார்க்கிறார்கள்; ஆபத்தான வீடியோ கேம்கள், அவற்றின் மறுபக்கத் தில் இரைச்சலும், தூசியும், இரத்தமும் நிறைந்த ஒரு சாதாரண போர் முனை இருக்கிறது.
முந்தைய கால போர்கள் போலில்லை
இருபத்தியோராம் நூற்றாண்டின் போர்கள் முந்தைய காலப் போர்களைப் போல இல்லை. அப்போது, போர்முனைதான் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைகளுக்கு இடையே முக்கிய தொடர்புப் புள்ளியாக இருந்தது. இப்போது, ஒரு போர்முனை இருந்தாலும் (உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ளது போல), பின்புறத்தில் வான்வழி குண்டுவீச்சுகள் நடக்கின்றன. ஏனென்றால், கண்டறியப்படாமல் தடுக்கப்படாத ஏவுகணைகள் போரிடும் நாடுகளின் உட்பகுதிகளுக்குள் ஊடுருவ முடியும். போரானது அணுசக்தி பரிமாற்றத்தை நோக்கிச் சென்றால்—பழைய தற்காப்பு நுட்பங்கள் பயனற்றவையாக இருக்கின்றன. 1950களில் அமெரிக்கா வெளியிட்ட கையேடுகள், அணு ஆயுத தாக்குதலின் போது மாண வர்கள் தங்கள் மேசைகளுக்கு அடியில் மறைந்து கொள்ளும்படி கூறின. அப்போதே அவை அபத்தமாக இருந்தன. இப்போதும் கேலிக்குரி யதாகவே இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக காசாவில் நாம் பார்த்து வருவதைப் போல—அணு ஆயுதங்கள் மட்டுமல்ல, வழக்கமான ஆயுதங்களின் பயங்கரமான தாக்குதல்களிலிருந்து கூட ஒருவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 500 பவுண்டு குண்டுகள் இஸ்ரேலிய விமானங்களிலிருந்து வீசப்பட்டு, லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் மடிந்துவிட்டார்கள், அண்டைப் பகுதிகள் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. இராக்கின் ஃபலுஜா மற்றும் ரமாடியில், அமெரிக்கா மிகப் பெரிய குண்டுகளை மட்டும் வீசவில்லை, குறைந்த அளவு யுரேனியம் பூசப்பட்ட குண்டுகளை வீசியது. அணு ஆயுதத்திற்கும் வழக்கமான ஆயுதங்களுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் சொல்லாடலாக மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் இந்தக் குண்டு கள் வெடித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும் பிறவிக் குறைபாடுகள் இருந்திடும்.
அச்சத்தை விதைக்கவே...
போர், நட்புறவையும், நாகரிகப் பண்புகளையும் அழிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் ஓர் அரசாங்கம் மின்வெட்டுகளை அமல்படுத்த வேண்டியிருக்கிறது. ஜி.பி.எஸ் மற்றும் மேம்பட்ட ரேடார்கள் இருளையும் ஊடுருவிப் பார்க்க முடியும் என்றாலும், மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மின்சா ரம் துண்டிக்கப்படவில்லை, மாறாக பொது மக்களின் இதயங்களில் போர்ச் சூழல் என்கிற ஓர் அச்சத்தை விதைக்கவே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இது போரை வீட்டுமுனை வரைக்கும் கொண்டு வருகிற செயல்; போர்க் கலாச்சாரத்திற்குள், அது விதைக்கும் வெறுப்புக்குள், மக்களை இழுக்கும் செயல். அமெரிக்கா தலைமையேற்ற “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” இந்தப் பய உற்பத்தியின் அடிப்ப டையில் நடத்தப்பட்டது. அல்-காயிதா அமெரிக்கா வின் கன்சாஸ் மாகாணத்தின் ஒரு சிறிய நகரத்தைத் தாக்கும் என்ற அபத்தமான நம்பிக்கை இருந்தபோதி லும், அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்களும் தாங்க ளும் இலக்காகலாம் என்று பயப்பட வேண்டியிருந்தது. போர் ஒரு சமுதாயத்தின் மக்களை ஒன்றிணைக்கு மா? முற்றுகையிடப்பட்ட உணர்வு அவர்களை ஒரு வரையொருவர் நம்ப உதவிடுமா? நீண்ட போர்களில் மக்கள் வாழ்விடங்கள் குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சி யாளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அரிய பொருட்களுக்கான கடுமையான போட்டியும், அண்டை வீட்டார் மீதான பயமும் தேசிய ஒற்றுமை யுணர்வு உருவாவதைவிட அதிகமாக இருந்தது. அதனால்தான் போரின் போது “தேசிய விருப்பம்” அல்லது “தேசிய உணர்வு” பற்றிய பிரச்சாரங்கள் நடக்கின்றன; ஏதோ நல்ல சம்பளம் வாங்கும் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரின் வார்த்தைகளி லிருந்து, நிரூபணங்களே தேவையில்லை என்ற நிலையில், நாம் படித்துணர்ந்து கொள்வதாக இவை சித்தரிக்கப்படுகின்றன.
தேசிய மனநிலையை எப்படி அறிய முடியும்?
ஒரு மோதலின் போது உண்மையான “தேசிய மனநிலை” என்ன என்பதை யார் அறிவார்கள்? மக்கள் தங்கள் மனதை வெளிப்படுத்தவே முதலில் பயப்படும்போது, அல்லது பெரும்பாலானவர்கள் மோதலின் விவரங்களைக் கூட அறியாதபோது, அது எப்படி தெரியும்? உதாரணமாக, இந்தியாவில் ஆங்கிலச் செய்திகளைப் பார்க்கும் பார்வையா ளர்கள் மொத்த மக்கள் தொகையின் மிகச் சிறிய பகுதியே. எனவே, தொகுப்பாளர்களின் மனநிலையை எடுத்துக்கொள்வது என்பது “தேசிய மனநிலை” க்கான குறியீடாக இருக்கவே முடியாது. பெரும்பாலான மக்களுடைய வாழ்க்கையை வரையறுக்கும் நட்புறவையும், நாகரிகப் பண்புக ளையும் வலுவிழக்கச் செய்ய முயற்சி தேவைப்படு கிறது. அதுதான் பிரச்சாரத்தின் வேலையாக இருக்கிறது. போர்ப் பிரச்சாரம் வெறுப்பை உருவாக்கு வதற்காகவே உருவாக்கப்பட்டது. சூடானில் நடந்த போரில் இருபுறமும் ஊடகங்கள் செய்த வேலை களில் இதை உணரலாம். அல்லது ரஷ்யா குறித்து மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கும் தேசிய வாதத்தில் இதைப் பார்க்கலாம்.
சித்தாந்தப் பயங்கரவாதிகளா? சிகரெட், ஆயுத கடத்தல்காரர்களா?
நான் முதல்முறையாக இராக்குக்குச் சென்ற போது, அனுபவம் வாய்ந்த ஒரு போர் நிருபர் என்னிடம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் போர்முனையில் கற்றுக்கொள்ள ஒரு சில விஷயங்களே உள்ளன என்றார். ஒரு நிருபர் போராளிகளை சந்திக்க முடிந்தால் (அவர்களுடைய தளபதிகள் அவர்களை ஊடகங்களி லிருந்து பாதுகாப்பதால் இது எப்போதும் சாத்திய மில்லை), அவர்களின் மனோபலத்தை அளவிட முடியும். மேலும், அதிர்ஷ்டம் இருந்தால், போர்க்களம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறும் பொய்களை அம்பலப்படுத்த முடியும். இது நல்ல ஆலோசனை யாக இருந்தது. சஹேல் என்ற இடத்தில், நைஜீரியா மற்றும் லிபியா விற்கு இடையேயான பாலைவனப் பகுதியில் அல்-காயிதா போராளிகளை சந்தித்தபோது, அவர்கள் உண்மையான சித்தாந்த பயங்கரவாதிகளை விட சிகரெட் மற்றும் ஆயுத கடத்தல்களில் ஈடுபட்ட வர்கள் என்பது எனக்கு தெளிவாகியது. ஆனால், குறைந்தது ஒரு பத்தாண்டுகாலமாக ஆப்பிரிக்கா வின் இந்த பகுதியைக் கிழித்தெறிந்த மோதல்கள் பற்றி இதைவிட அதிகமாக வேறு எதையும் நான் அறிந்துகொள்ளவில்லை. ஒரு போரைப் பற்றிய ஞானம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுத ஒப்பந்தங்கள் செய்யப்படும் இடத்திலும், எல்லைகளுக்கு அப்பால் உயர்குடிகள் தங்களுடைய சொந்த நலனுக்காக பிரச்சனைகளைத் தீர்க்கும் உயர்ந்த அரசியல் விவாதங்களிலும் தான் உச்சபட்சமாகக் கிடைக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் செய்தித் தொ குப்பாளர்கள், பரவலாக பகிரப்படும் ஆனால் யாராலும் உறுதிப்படுத்த முடியாத படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்கள்.
பொய்கள், மிகைப்படுத்தலின் தாக்கம்
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடை யேயான பதற்றம் அதிகரித்த போது, சமூக ஊடகங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் வதந்திகளால் பற்றி எரிந்தன. முதலாளித்துவ ஊடகங்களின் செய்தித் தொகுப்பாளர்கள் அந்தப் பொய்ச் செய்திகளை அளவுக்கதிகமாக பரப்பினார்கள். பின்னர் அவர்கள் தங்களுடைய பொய்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று. இத்தகைய மிகைப்படுத்தல்களும் பொய்களும் குடிமக்களுக்கு எந்த தகவலையும் அளித்திடவில்லை, அல்லது நடப்பதைப் பற்றி ஒரு நிதா னமான விவாதத்தில் ஈடுபடவில்லை. ஆனால், அவை சண்டை நிறுத்தப்பட்ட பிறகும் எளிதில் மறையாத ஒரு போர்ப் பண்பாட்டை உருவாக்குகின்றன. இந்தப் பொய்கள் மற்றும் மிகைப்படுத்தல்களின் தாக்கம் ஒரு கலாச்சாரத்தின் ஆன்மாவுக்குள் ஆழமாக ஊடுறுவு கிறது. அமெரிக்காவின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்கிற விளையாட்டுப் புத்தகம், இப்போது பிற அரசாங்கங்களால் எளிதில் பயன்படுத்தப்படு கிறது. எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலையும், தாக்குதலை விசாரிக்க மறுப்பதன் மூலமும், “பயங்கர வாதிகளை உற்பத்திசெய்கிற” மற்றொரு நாட்டிற்கு எதிரான போரின் மூலமும், “துல்லியமான தாக்கு தல்கள்” மூலமும், மற்றும் சர்வதேசச் சட்டத்தை முற்றி லும் புறக்கணிப்பதன் மூலமும் சமாளித்திட முடியும் என்ற சிந்தனையைப் பற்றியதாக இது இருக்கிறது.
புதிய புதிய புற்று வடிவங்களில்...
இந்த விளையாட்டுப் புத்தகம், இப்போது மத்திய ஆசியாவிலிருந்து வடக்கு ஆப்பிரிக்கா வரை, ஆப்கா னிஸ்தானிலிருந்து இராக் வரை, லிபியாவிலிருந்து சிரியா வரை பல நாடுகளையும், சமூகங்களையும் அழிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்களைக் கொல்வதற்காக இந்த நாடுகள் செலவிடும் வரலாற்றுத் தொகை மிகப்பெரிய தாக இருக்கிறது. மேலும், அவர்கள் கொல்லப்பட்ட போதிலும், இந்தக் குழுக்கள் மறைந்துவிடுவதில்லை, வேறு வேறு புற்று வடிவங்களில் உருமாறுகின்றன. அவை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்கள் தற்காலிகமாக அடக்கிவைக்கப்படு கின்றன, பின்னர் மிகவும் அருவருப்பான வடிவத்தில் அவை திரும்பி வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு தோகாவில் (கத்தார்), ஹமாஸின் காலித் மெஷால் கூறினார், மேற்கு ஹமாஸை ஒரு ஆபத்தான சக்தியாக நினைத்தால், ஹமாஸுக்குக் கீழ் வளர்ந்து வரும் இளைஞர்களின் உள்ளத்தில் என்ன பதிந்துள்ளது என்பது பற்றி அவர்க ளுக்கு எந்த கருத்தும் இல்லை என்றார். விடுதலைப் போர் அவர்களுக்கு எந்தவித அர்த்தத்தையும் தராத அளவுக்கு அவர்கள் ஏமாற்றத்தில் வாழ்கிறார்கள். இடிபாடுகளின் கீழ் கசப்புணர்வும், வெறுப்புணர்வும் வளர்கிறது. இது அழிக்கவே முடியாத ஒரு வன்முறை சுழற்சியை உருவாக்குகிறது. அரசியல் உரையாடல் இல்லாதபோது, நிஹிலிசம் (வாழ்க்கையில் எந்தப் பொருளும் இல்லை என்ற நம்பிக்கை) வளர்கிறது. இதைத்தான் இன்றைக்கு உலகம் முழுவதும் நடை பெறும் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல்களில் நாம் காண்கிறோம். நமக்குக் குறுகிய கால குண்டு வீச்சுகள் தேவையில்லை—நீண்ட கால அரசியல் தீர்வுகளே தேவை. போரில் கொண்டாட எதுவும் இல்லை.
தமிழில் : நர்மதா தேவி