மோடி அரசு கொண்டுவந்துள்ள திரைப்படமாக்கல் சட்டத்திருத்தமானது திரைப்படக்கலை மீதான கொலை முயற்சியே என்று தமுஎகச நடத்திய கருத்தரங்கில் இயக்குநர்கள், திரைக்கலைஞர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். ஒன்றிய பாஜக அரசு திரைப்படமாக்கல் சட்டம்-1952ல் மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த முன்வரைவை வெளியிட்டிருப்பதும், அதில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) சான்றிதழ் வழங்கி ஒரு படம் வெளியான பிறகு எந்தவொரு தனிமனிதர் அல்லது அமைப்பிடமிருந்து புகார் வருமானால் சான்றிதழைத் திரும்பப்பெற அரசு ஆணையிட அதிகாரமளிக்கும் விதி சேர்க்கப்பட்டிருப்பதும் தெரிந்ததே. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு படத்திற்குமான சான்றிதழ் மறுஆய்வு செய்யப்படுவதையும் கட்டாயமாக்குகிற இந்தச் சட்டத்திருத்த முன்வரைவுக்கு நாடு முழுவதும் திரைக்கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் புதனன்று (ஜூலை 7)) திரைப்படச் சட்டத்திருத்த எதிர்ப்புக் கருத்தரங்கத்தை நடத்தியது. மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் ஒருங்கிணைத்தார். இதில் பங்கேற்ற கலைஞர்கள், எழுத்தாளர்களின் உரைகளிலிருந்து:
இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன்
“கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் திரைப்படக்கலை மீதான கொலை முயற்சி போல தணிக்கைச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது, மதச்சார்பின்மை உள்ளிட்டஅரசமைப்புச் சட்டத்தின் முற்போக்கான கூறுகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய படங்களை முடக்குவதற்குத் தற்போதைய தணிக்கைச் சான்று முறை அனுமதிக்காது என்பதாலேயே இப்படியொரு முயற்சி செய்யப்படுகிறது.திரைப்படச் சான்று வாரியம் மேலும் மேலும் தாராளமானதாக உருவாக வேண்டுமேயன்றி, அது ஒரு “சூப்பர் எடிட்டர்” போல மாற்றப்படக்கூடாது. ஏற்கெனவே சான்றிதழ்அளிக்கப்பட்ட படங்களை மறு தணிக்கைக்கு உட்படுத்தும்விதி மிக மோசமானது. அரசியலாக இதன் அர்த்தம், முந்தையஆட்சிகளின்போது சான்றளிக்கப்பட்டுத் திரையிட அனுமதிக்கப்பட்ட, ஆர்எஸ்எஸ் நோக்கங்களுக்கு ஒத்துவராத படங்கள் மீது கைவைக்கப்படும் என்பதே.வாரியம் எந்தவொரு படத்திற்கும் அனைவரும் பார்க்கத்தக்கது, குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களோடு பார்க்கத்தக்கது, வயதுவந்தோர் மட்டும் பார்க்கத்தக்கது என்று சான்றளிக்கலாம், ஆனால், காட்சிகளை வெட்டக்கூடாது. இந்தச் சட்டத்திருத்தம், நீதிபதிகள் கட்டுப்படுத்தப்பட்டாலன்றி, நீதிமன்றங்களில் நிற்குமா என்று தெரியவில்லை.என்னைப் போல் ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு இருக்கிற சுதந்திரம், வணிகம் சார்ந்து கதைப்படங்கள் எடுக்கிறவர்களுக்கு இல்லைதான். அவர்கள் துணிச்சலோடு இதை எதிர்க்க வேண்டும்.அதேவேளையில் திரைப்படப் படைப்பாளிகள் தங்கள் கருத்துகளைக் கொண்டுசெல்ல வேறு வேறு புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
திரைக்கலைக்கு எதிரான கும்பல் வன்முறைக்கு வழி
திரைப்பட இயக்குநரும் சென்னை மண்டல தணிக்கைவாரிய முன்னாள் தலைமை அலுவலருமான ஞானராஜசேகரன் பேச்சு
ஒரு படத்திற்குச் சான்றளிப்பதற்கான வழிகாட்டல் நெறிகள் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.அந்த நெறிகள் மீறப்படாமல் காட்சிகள் இருக்கின்றனவா என்றுகவனித்துத்தான் வாரியம் சான்றிதழ் அளிக்கிறது. வாரியத்தில் திரைப்படக் கலை சார்ந்த பல வல்லுநர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய முடிவில் தலையிடுவதற்கில்லை என இதற்கு முன் பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன.
இன்றைய சமூக ஊடகங்களின் மூலம், யார் வேண்டுமானாலும் ஒரு படம் தன்னுடைய சமூகத்தைப் புண்படுத்திவிட்டதாகப் பரப்ப முடியும், புகார் செய்ய முடியும்.அப்போது, அந்தப் படத்திற்கு அளிக்கப்பட்ட சான்றிதழைத் திரும்பப்பெற்று மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசின் அமைச்சகம் ஆணையிடும். அந்த நிலையில் வாரியம் அந்தப் படத்திற்கு முதலில் அளிக்கப்பட்ட சான்று சரியானதுதான் என்று முடிவெடுக்கலாம், அல்லது சில காட்சிகளை நீக்க ஆணையிடலாம், அல்லது படத்திற்கு அனுமதி மறுக்கலாம். இப்படியொரு அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வது அநியாயமானது.வாரியத்தை மேலும் வலுப்படுத்தலாம், மேலும் பொருத்தமானவர்களை தணிக்கைக் குழுக்களில் இணைக்கலாம்.ஆனால் இப்படிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவது திரைக்கலைக்கு எதிரான கும்பல் வன்முறைக்குத்தான் இட்டுச் செல்லும்.
அச்சத்தை ஏற்படுத்தி படைப்பாற்றலை அழிக்கும்
இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா பேசுகையில்,
திரைப்படமாக்கல் சட்டத்திருத்தத்தைத் தனியாகப் பார்க்க முடியாது.தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும். ஒருபடைப்பாளி தன்னைத் தானே தணிக்கை செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவார்.நீதிமன்ற நீதிபதி அல்ல, அரசாங்க அதிகாரி ஒருவர் இவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்.இது படைப்பாற்றலை அழித்துவிடும்.பிரச்சனை வேண்டாம் என்கிற அச்சத்தை ஏற்படுத்திவிடும்.யார் வேண்டுமானாலும் வன்மமான முறையில் நிர்ப்பந்தம் கொண்டுவருவதை சட்டப்பூர்வமானதாக்குகிற இந்த ஏற்பாடு, மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதற்கென்றே திட்டமிட்ட முறையில் கொண்டுவரப்படுகிறது.
திரைத்தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பேசுகையில்,
இது கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, வியாபாரச் சுதந்திரத்திற்கும் எதிரானது.பொதுவாகவே ஒரு தயாரிப்பாளர் தனது படத்திற்குத் தடையில்லாமல் அனைவரும் பார்க்கத்தக்கது என்ற “யு” சான்றிதழ் கிடைக்க வேண்டுமென்றுதணிக்கைக்குழுவிடம் பேரம் பேசத்தயாராக இருப்பார். இயக்குநரோ எந்தச் சான்றிதழ் தரப்பட்டாலும் தனது கருத்தையும் கதையையும் வலுவாகச் சொல்ல குறிப்பிட்ட காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றாக வேண்டும் என்று விரும்புவார். இப்போது,படம் வெளியான பிறகும் மறு ஆய்வு செய்யப்படும் என்பதுநிலைமையை மிக மோசமாக்கிவிடும்.குறிப்பிட்ட வகைப்படங்களுக்கென்று பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடுதான் படம் எடுக்கிறோம்.இனி சமரசங்களோடுதான் படம் வரும்என்கிறபோது அந்த பார்வையாளர்களின் ஆதரவை இழந்துவிடுவோம்.மாறுதலான பட முயற்சியே இல்லாமல் போய்விடும்.இது படத்துறையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான, பல்வேறு துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையிழக்கிற அபாயத்தையும் ஏற்படுத்திவிடும்.படைப்பாக்கம், வணிகம் ஆகிய இரண்டிலுமே திரைக்கலை நலிந்துபோய்விடும்.
தயாரிப்பாளர்கள் தலை மேல் தொங்குகிற கத்தி
தயாரிப்பாளரும் புளூ ஓசியன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன இயக்குநருமான தனஞ்செயன் பேசுகையில்,
தயாரிப்பாளர்கள் தலை மேல் எப்போதும் தொங்குகிற கத்தியாக புதிய சட்டம் இருக்கும்.அது, எதற்காக மாறுபட்ட படங்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.சர்ச்சையைக் கிளப்புவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதால் இது ஒரு துன்புறுத்தலுக்கு இட்டுச் செல்லும்.வயது வாரியான சான்றிதழ் என்பதில் கூட, திரையரங்கில் வயதுச் சான்றிதழ் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.இதுஎண்ணற்ற நடைமுறைச் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும்.படப்பிடிப்பு என்பதையே ஒன்றிய அதிகாரத்தின் கீழ்கொண்டுவருகிற ஏற்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.இந்தச்சட்டத்திருத்தத்தை விலக்கிக்கொள்ளக் கோரும் மின்னஞ்சல்கள் ஆயிரக்கணக்கில் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இனிமேல் அசுரன், கர்ணன் போல படங்கள் எப்படி வரும்?
திரைக்கலைஞர் சத்யராஜ் பேசியதாவது:ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கை, கண்ணோட்டம் என்ற அடிப்படையில்தான், சமூகப் பிரச்சனை பற்றிப் பேசுகிற ஒரு படத்தைப் பற்றி முடிவு செய்வார்கள்.சாத்திரம், சம்பிரதாயம், கலாச்சாரம் என ஏதோவொன்றின் மீது பழிபோட்டு படத்தைத் தடுப்பதற்கு எத்தனையோ காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும்.ஏற்கெனவே தணிக்கை வாரியத்தின் முடிவு ஏற்கத்தக்கதாக இல்லை என்றால், தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மேல் முறையீடு செய்வதற்கு என்று ஒரு தீர்ப்பாயம் இருந்தது. பல காரணங்களைச் சொல்லி அதை இப்போது நீக்கிவிட்டார்கள். இப்போது, இந்தச் சட்டத்திருத்த முன்வரைவால் நடிகர்களுக்குக் கூட பெரிய பிரச்சனை இல்லை. நாங்கள் நடித்துவிட்டுப் போய்விடுவோம்.ஆனால் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் திக் திக்என்று இருக்கும்.முற்போக்கான படங்கள் வராது.அப்புறம்நாலு பாட்டு, நாலு ஃபைட்டு இப்படித்தான் மறுபடியும் படங்கள் வரும்.பிறகு உலக சினிமாவோடு ஒப்பிட்டுக்கொண்டிருக்க முடியுமா? ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட படங்களும் மறு தணிக்கைக்கு உள்ளாகும் என்பதுகவலையைத் தருகிறது. பராசக்தி போன்ற படங்களில் கலைஞர் எழுதியவை போன்ற பல படங்களின் வசனங்களையும், பட்டுக்கோட்டையாரின் பாடல்களையும் கேட்டுத்தான் வசதியான குடும்பத்தில் பிறந்தவனான நான் சமுதாய நிலைமைகளைப் புரிந்துகொண்டேன். இனிமேல் ஒரு அசுரன் போல, ஒரு கர்ணன் போல படங்கள் எப்படி வரும்? கொஞ்சம்சுயநலமாக யோசித்தால் அமைதிப்படை கூட வரமுடியாது போலிருக்கிறதே!அந்தக் கதைகளைக் கேட்கிற தயாரிப்பாளர்களுக்கு எப்படி முதலீடு செய்கிற தைரியம் வரும்?
திரைக்கலையை அழிக்கும் மசோதாவை தடுப்போம்
திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
சினிமாவுக்கான ஒட்டுமொத்த அதிகாரமும் மத்தியில் குவிக்கப்படுகிறது. தமிழகத்தின் சமூக மாறுதல்களில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.மக்களை எளிதில் அரசியல்படுத்தக்கூடிய வல்லமை உள்ளது சினிமா.அந்தக் கலைவடிவத்தைக் கட்டுப்படுத்துகிற ஏற்பாடாக ஏற்கெனவே தணிக்கையமைப்பு இருந்துவருகிறது.இப்போது ஒரு அதிகாரிக்கு அந்தக் கட்டுப்பாட்டு அதிகாரம் தரப்படுகிறது.இப்போதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுவது, காட்சிகள் நீக்கப்படுவது எனபல தடைகளைத் தாண்டிதான் படம் வெளியாகிறது.அதையெல்லாம் தாண்டி வருகிற படத்திற்கும் மறு ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பது அபாயகரமானது.சுதந்திரமான படைப்புகள் வருவதாக நாம் கருதும்அமெரிக்காவில், அதிபர்களின் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மக்களின் மனநிலையைத் தயார்ப்படுத்துகிற படங்கள் தயாரிக்கப்படுவது பற்றிக் கேள்விப்படுகிறோம். அதே போன்ற நிலையை இங்கேயும் ஏற்படுத்துகிற முயற்சிதான் இந்தச் சட்டத்திருத்தம்.ஒன்று அப்படிப்பட்ட படங்கள் அல்லது எதிர்ப்பு வராத படங்கள் எடுக்கிற நிலைமை திரைக்கலையையே அழித்துவிடக்கூடியது.தடுக்கப்பட வேண்டியது.
அதிகாரவர்க்கத்தின் பிடிக்குள் திரைக்கலை
இயக்குநர் செழியன் பேசுகையில்,
பெருமளவுக்கு இதுதயாரிப்பாளர்களைத் தொழில் அடிப்படையிலும், இயக்குநர்களைக் கருத்துச் சுதந்திர அடிப்படையிலும் தாக்குகிறது.ஜனநாயக நாட்டில் அந்த ஜனநாயகத்தை வலுப்படுத்துகிற அமைப்பாகத்தான் தணிக்கை வாரியம் செயல்படவேண்டும்.அந்த நம்பிக்கையோடுதான் படங்கள் வாரியத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன.அதைப் புறக்கணித்து, அதிகார வர்க்கத்தின் பிடியில் திரைக்கலையை ஒப்படைக்கிற இந்தச் சட்டத்திருத்தத்தை அரசு கைவிட்டாகவேண்டும்.
திரைப்படங்களுக்கு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தும்
திரைக்கலைஞரும் தமுஎகச துணைத்தலைவருமான ரோகிணி கருத்தரங்கிற்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
தற்போதைய கொரோனா சூழலில் சினிமா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். படப்பிடிப்புகளை எப்படியாவது முடித்துப் படங்களை வெளியிடவேண்டும் என்று எல்லோருமே பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், வெளியான படங்களுக்கான அனுமதியிலிருந்து வாரியம் பின்வாங்கச் செய்வதாக, மேலும் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்துவதாக இந்தச் சட்டத்திருத்தம் வருகிறது.தமிழ் உட்பட இந்திய சினிமாக்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற இயக்குநர்களும் மற்ற கலைஞர்களும் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.சட்டம் நடைமுறைக்கு வருமானால், ஒரு படம் பிரச்சனைக்குஉள்ளாகிறபோது யாரை அணுகுவது, யாரிடம் முறையிடுவதுஎன்ற குழப்பத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்துகிற முயற்சிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு முற்றிலும் நியாயமானது.
ஒருங்கிணைந்த போராட்டம் தேவை
தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில்,
கலைஞர்கள், பண்பாட்டுத்தள செயல்பாட்டாளர்கள், சமூக அக்கறையாளர்கள், ஜனநாயக சக்திகள், ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் சொல்வதையெல்லாம் மக்கள் கேட்க முடியாது, இனி ‘மனதின் குரல்’ மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படுத்தப்படுகிறது.அதை மீறி மக்கள்கேட்க வைக்க வேண்டும் என்பதற்காகவே திரைக்கலைஞர்களோடு சங்கம் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கிறது.
பாசிசத்தை அடையாளம் காட்டும் சட்டத்திருத்தம்
மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் நிறைவுரையாற்றியதாவது:
வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகிற இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வருமானால், காந்திபடத்தைக் கூட மறுதணிக்கைக்கு உட்படுத்த முடியும்.அதில்கோட்ஸே கதாபாத்திரம் வருவதால், அது தங்களைப் புண்படுத்துவதாக யாராவது கிளப்பக்கூடும்.இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்குஅனுப்பியிருக்கிற கடிதம் வலுவானது, மாநில உரிமைகளுக்குமானது.அப்பட்டமான பாசிசத்தை அடையாளம் காட்டுகிற இப்படிப்பட்ட சட்டத்திருத்த முயற்சிகள் நாம் மிக ஆபத்தான காலக்கட்டத்தில் இருப்பதைக் காட்டுகின்றன.எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட சூப்பர் சினிமா தடைச்சட்டத்தை எதிர்க்கத் தயக்கம்நிலவிய சூழலில், அன்று தமுஎகச-தான் சென்னையில் சிறப்பு மாநாடு நடத்தியது, பல கலைஞர்களும் நம்பிக்கையோடு அதில் பங்கேற்றார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று கலங்கியிருந்த நேரத்தில் தமுஎகச செய்திருக்கிறது என்று நெகிழ்ந்து கூறினார்கள்.நிறைவுரையாற்றிய மாநிலத் தலைவர் கே.முத்தையா, “பூனைக்கு மட்டுமல்ல, புலிக்கும் மணி கட்டுவோம்,” என்றார்.அதைச் செய்ய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது.கலைஞர்கள் சமுதாயத்தின் மனசாட்சியாகப் பேசுகிறவர்கள்.அதை ஒழித்துக்கட்ட வருகிற இந்த சட்டத்திருத்தத்தை எதிர்ப்பது ஒரு வரலாற்றுக் கடமை.மக்களோடு இணைந்து இதைப் பின்னுக்குத் தள்ளுவோம், அந்தக் கடமையை ஒருங்கிணைந்து நிறைவேற்றுவோம்.
தொகுப்பு: அ.குமரேசன்