articles

img

தடுப்பூசிக்கு விலை வைத்து இளைஞர் உயிர் பறிக்கும் மோடி அரசு... மக்களின் உயிர்காக்கக்கோரி நாளை தேசம் முழுவதும் வாலிபர் சங்கம் போராட்டம்....

இந்திய மக்கள் ஒவ்வொரு வரும் கொரோனா பேரிடர் காலத்திற்கு எதிராக  கடும் போராட்டத்தை மருத்துவ  ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நடத்தி வருகின்றனர்.முதல் அலை ஏற்படுத்திய சேதாரத்தையே  தாங்கமுடியாத சூழலில், இன்னும்மேலும் கடுமையான நெருக்கடியை தற்போது இரண்டாவது அலை உருவாக்கியிருக்கிறது.

பொது மருத்துவம் என்பது அவசர நிலை நெருக்கடியாக மாறி இருக்கிறது. இந்த நேரத்தில் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள்வதற்கும் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் அதற்கு கீழ் செயல்படக்கூடிய நிர்வாகத்திற்கும் உள்ளது. இதனை அரசும் நிர்வாகமும்தவிர வேறு யாராலும் நிறைவேற்ற முடியாது.இந்திய மக்கள் தொகை தற்சமயம் சுமார் 140 கோடியாகும்.இதில் 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை இதில் சரிபாதி ஆகும். இந்த சரிபாதியான  இளம் தலைமுறைக்கு தடுப்பூசி கிடைக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி தருவது என அறிவித்துள்ளது.ஆனால் 18 வயதில் இருந்து 44 வயது வரைக்குமான பிரிவினருக்கு தடுப்பூசி குறித்த விரிவான அறிவிப்புகளை இன்னும் வெளியிட மறுத்து வருகிறது மத்திய அரசு.நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து அம்மை, காலரா, போலியோ உள்ளிட்ட பல்வேறுதடுப்பூசிகளையும், மருந்துகளையும் இலவசமாக தருவதே மக்கள் நல அரசாங்கத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது.

இலவச தடுப்பூசி கிடைப்பதில் கார்ப்பரேட்டுகளால் தடை 
ஆனால், கார்ப்பரேட் உலகமயம்  நிறைவேற்றும் புதிய தாராளமயமாக்கல் கொள்கையால் தற்சமயம் உருவாக்கி உள்ள லாப வேட்டை அனைவருக்கும் தடுப்பூசி என்பதில் தடையை உருவாக்கி இருக்கிறது.ஏற்கனவே வேலை இழப்பு, சம்பள இழப்பு, வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் தடுப்பூசியில் அரசின் புறக்கணிப்பால் மேலும் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளனர்.மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.முக்கியமாக தொழிலாளர் பங்களிப்பு விகிதம், வேலைவாய்ப்பு விகிதம், வேலையின்மை விகிதம் பற்றிய பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 41.2 சதமாக இருந்தது .தற்சமயம் ஏப்ரல் மாதத்தில் அது 40.2 சதவீதமாக குறைந்துள்ளது வேலை செய்வதற்கு தயாராக இருந்தும் வேலை இல்லாத நிலைமையின் காரணமாக தொழிலாளர்கள் சந்தையில் தன்னுடைய பங்களிப்பை செலுத்த முடியாத நெருக்கடி என்பது தீவிரமடைந்து வருகிறது. இது வேலையின்மையின் விகிதத்திலும் வருமானத்திலும் பிரதிபலிக்கிறது.

சராசரியாக மார்ச் மாதம் வேலையின்மையின் விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. தற்சமயம் ஏப்ரல் மாதத்தில் இது 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, நகர்ப்புறங்களில் வேலையின்மையின் விகிதம் 9.2 சதவீதமாக உயர்ந்து நிற்கிறது. இதுவரை எப்போதும்இல்லாத மோசமான நகர்புற வேலையின்மையின்  நிலையாகும்.தற்சமயம் இந்தியாவில் 4.4 கோடி பேர் வேலை செய்வதற்கு தயாராக  இருந்தும் வேலை இல்லாத நிலைமை நீடிக்கிறது. இதில் சரி பாதிக்கும் மேற்பட்டவர்கள் 29 வயதுக்குகீழானவர்கள் ஆவர். இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் இருந்துகொண்டிருக்கக் கூடிய நிலையில் தடுப்பூசிஎன்பது வியாபார பொருளாக மாற்றப்படுகிறது.

ராணுவத்திற்கு அதிகம்  செலவிடும் அரசு
உலகம் முழுவதும் ராணுவத்திற்கு செலவு செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாமூன்றாவது இடம் வகிக்கிறது. அமெரிக்காவும் சீனாவும் முதல் இரண்டு இடங்களை வகித்து வருகின்றன.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த 2020ஆம் ஆண்டில் 2.9 சதவீதம் ராணுவத்திற்காக ஒதுக்கியுள்ளது. அரசு மேற்கொள்ளக்கூடிய செலவினங்களில் 9.7 சதவீதம் ராணுவத்திற்காக செலவிடப்படுகிறது.ஆனால் அதேவேளை நாட்டின் மிகப்பெரும் படையாக இருக்கும் இளைஞர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க மறுக்கிறது அரசு. 

தடுப்பூசிக்கு எவ்வளவு நிதி தேவை?
நாடு முழுவதும் இருக்கக்கூடிய 18 வயதுக்கு மேற்பட்ட 98 கோடி பேருக்கு அதிகபட்சமாக தடுப்பூசி இரண்டு கட்டமாக போடுவதற்கு 200 கோடி மருந்து குப்பிகள் தேவைப்படுகிறது. தற்சமயம் மத்திய அரசு ஒரு குப்பி 150  ரூபாய்க்கு வாங்குகிறது. அதிகபட்சமாக 1200 ரூபாய்க்கு விற்கப் போவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு வாங்கும் விலைக்கு 200 கோடி மருந்து குப்பிகளை வாங்குவதற்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் கோடி ரூபாய்தேவைப்படும் .இதில் அரசு ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணத்தை ஒதுக்குவதாக கடும் நெருக்கடிக்கு பிறகு அறிவித்துள்ளது.

மீதமுள்ள 18 வயதிலிருந்து 44 வயது வரைக்குமான 70 கோடி பேருக்கு இரண்டு கட்டமாக மருந்து குப்பிகளில் மருந்துகள் வழங்குவதற்கு 140 கோடி டோஸ்கள் தேவைப்படும்.இதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீத பணத்தை ஒதுக்கினால் போது மானது.இவ்வளவு பெரிய நெருக்கடியை நாடு சந்தித்து கொண்டிருக்கக்கூடிய தருணத்தில் 0 .7 சதம் ஒதுக்குவது பெரியகாரியமல்ல.

துன்ப துயரங்களுக்கு மத்தியில்...
இன்றைக்கு பொருளாதார ரீதியாக மக்கள் இதுவரை இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மாதச் சம்பளக்காரர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் ஓராண்டு காலத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பேர் குறைந்துள்ளனர். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்ஊருக்கு திரும்பிய பின்பு 86 சதவீதம் பேருக்குவருமான இழப்பு என்பது ஏற்பட்டுள்ளது. இதில் 36 சதவீதம் பேருக்கு வேலை இல்லாத நிலைமை என்பது நீடித்து வருகிறது. முறைசாரா தொழிலாளர்களாகவும், விவசாயத் துறையிலும்,சேவைத் துறையிலும், கட்டுமானத் துறையிலும், விநியோக மற்றும் விற்பனை துறையிலும், என மிக குறைவான வருமானத்திலேயே பெரும்பகுதி இளைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

பணத்திற்கு எங்கே போவது...

1. மத்திய அரசு தன்னிடம் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தடுப்பூசியை தயாரிக்கும்போது விலையை குறைத்திட முடியும். அரசுக்கு சொந்தமான 7 பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும் இதனால் லாப நோக்கம் இன்றி மக்கள் நலனுக்காக உரியமுறையில் இவற்றை பயன்படுத்த முடியும். தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, குன்னூர், இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள காசோலி உள்ளிட்டநிறுவனங்களிலும், இன்னும் வாய்ப்புள்ள பல்வேறு அரசு பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக தடுப்பூசி உற்பத்தியை வேகமாகவும், தரமாகவும் தயாரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

2. நாடு மோசமான நிலையில் இருக்கும்போது கடந்த காலத்தில் வசூலிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரியை மோடி அரசாங்கம் 30சதவீதத்தி லிருந்து 22 சதவீதமாக குறைத்தது.    கார்ப்பரேட்டுகளுக்கு வரியை கூடுதலாக விதிக்கலாம் என்றாலும் குறைத்த கார்ப்பரேட்வரி  விகிதத்தையாவது மீண்டும் உயர்த்துவதன் மூலமாக அரசிற்கு வருமானத்தை உருவாக்கலாம்.

3. கார்ப்பரேட்டுகளுக்கான சமூக பொறுப்பின் அடிப்படையிலான நிதியினை பெற்று தடுப்பூசியை அனைவருக்கும் தரலாம்.

4. கடந்த காலங்களில் ஜிஎஸ்டி மூலமாக வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு தராத தொகையின் மூலமாக ஈடுகட்ட முடியும்.

5. கொரோனா பேரிடரின் முதல் அலை வந்த போது வசூலித்த பிரதமர் பாதுகாப்பு நிதி குறித்து முழுமையான விவரங்களை வெளியிட்டு முன்னுரிமை அடிப்படையில் செலவழிப்பதன் மூலமாக இப்பணியை மேற்கொள்ளலாம்.

தற்சமயம் பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ள நிதிகளை முறையாக பயன்படுத்துவதன் மூலமாகவும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனை அராஜகமாக மறுத்து  வருகிறது மோடி அரசு.
இந்நிலையில்தான் வருகிற ஏப்ரல் 30  அன்று பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசிவழங்க வேண்டும் என்றும் லாபநோக்கை கைவிட்டு மக்கள் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும்  வசதிபடைத்தவன் வாழ்வான் என்ற விதி ஒழியட்டும் என்ற முழக்கங்களை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தேசம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வரக்கூடிய இளம் தலைமுறையை மோடி அரசாங்கம் புறக்கணிப்பது என்பதுஇந்த தேசத்தின் எதிர்காலத்தை அழிப்பது என்று பொருளாகும்.

கட்டுரையாளர் : எஸ்.பாலா, மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்