தோழர் ஜி. மணி அவர்கள் சுமார் 5 ஆண்டுகள்நோயை எதிர்த்துப் போராடிக் கொண்டே இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இறுதியில் அவர் ஜூன் 5 இரவு 11.45 மணிக்கு மரணத்தைத் தழுவினார் என்ற அதிர்ச்சிச் செய்தி வந்தது.சுமார் 50 ஆண்டுகள் அவரின் மகத்தான பன்முகத் தன்மையிலான இயக்கப் பணிகள் முடிவடைந்தது. நல்லபோராளி. சிறந்த அமைப்பாளர். அரிய விசயங்களைக் கண்டறிந்து போதிக்கும் ஆசிரியர். மற்றவர்கள் கற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாளமிக்க விசயங்களை எளிய வார்த்தைகளில் சொல்லும் வர்க்கச் சிந்தனையாளர். எளியவாழ்க்கையையும் அமைதியான குணமும் தன் வாழ்வின் நடைமுறையாகக் கொண்டவர் தோழர் ஜி.மணி.
1972ஆம் ஆண்டில் மாணவர் இயக்கத்தின் மூலமாககட்சிக்கு அறிமுகமாகி சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இயக்கப் பணிகளில் கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் தனக்கு தீர்மானிக்கப்பட்ட பணிகளைச் செய்து வந்த தோழர் ஜி.மணி. ஒன்றிய மட்டத்திலிருந்து கட்சி, விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம்,விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற வர்க்க அமைப்பு களின் மாவட்ட, மாநில அமைப்புகளுக்கு தேர்வு செய்யப் பட்டு பன்முகத் தன்மையில் தன்னை வளர்த்துக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து புதிய தோழர்களை செங்கொடி இயக்கத்திற்கு கொண்டுவரும் ஆற்றலுடன் செயல்பட்டவர் தோழர் ஜி.மணி. 40 ஆண்டுகளுக்கும் மேல்அவருடன் நானும் விவசாயத் தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம் என்ற மாநில அமைப்பில் அகில இந்திய கவுன்சிலில் இணைந்து செயல்பட்டுள்ளோம்.
திருவள்ளூர் மாவட்டம் தனி ரெவுன்யூ மாவட்டமாக அரசால் பிரிக்கப்பட்ட போது அதன் முதல் கட்சிச் செயலாளராக இருந்தும் செயல்பட்டார் ஜி.மணி. மாநில வி.ச. அரங்கப்பணிகளுக்காக 2009ஆம் ஆண்டு தோழர் மணிசென்னை மையத்திற்கு வந்தார். அன்றிலிருந்து விவசாய சங்கம், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற இந்த அமைப்புகளின் முன்னணித் தலைவர்களாக இருந்து செயல்பட்டவர் தோழர் மணி. 2010ல் வேலூரில் நடைபெற்ற மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டில்தான் மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் ஜி.வீரய்யன், கே.வரதராசன் போன்ற விவசாய இயக்கத்தின் முன்னணித் தலைவர்களின் அனுபவங்களோடு தன்னுடைய விவசாயத் தொழிலாளர் அரங்கப் பணிகளை தீவிரமாகவும், மிக சிறப்பாகவும் செயல்படுத்தி வந்தார். 2015ல் அவருக்கு முதுகுத் தண்டுவட பிரச்சனைக்காக செய்யப்பட்ட அறுவைசிகிச்சை அவர் வாழ்க்கையையே முடக்கிவிட்டது. அன்று முதல் கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் மரணமடையும் காலம் வரை வைத்திய உதவியுடன் நேரடி கள நடவடிக்கைகளுக்குப் போக முடியாத சூழ்நிலையிலும் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அவ்வளவு பணிகளையும், வேண்டாம் என்று சொல்லிய பொழுதும், அதை விருப்பத்துடன் செய்து வந்தவர். கிராமப்புற மக்களைப் பற்றியும் வாழ்நிலை குறித்தும் அவர்களுக்கான பொருளாதார சிரமங்கள் குறித்தும், வேலைவாய்ப்புகள் கிடைக்காததது குறித்தும், இவை ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் ஆய்வுகள் செய்து அதற்கு சரியான தீர்வு என்ன என்பதைப் பற்றியும் ஆலோசனைகளை அரசுக்கு அறிக்கை மூலம் அனுப்புகிற பணிகளையும் செய்யக்கூடிய ஆற்றல் உள்ள தோழர். இதை தோழர்களுக்கு சொல்லி புரிய வைத்து கள நடவடிக்கையில் இறங்குவதற்கு வழிகாட்டி வந்த தோழர்.
மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2008ல் கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டம்தான் இந்தியாவின் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கென்று பொருளாதாரத்தை மீட்கக்கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய சட்டமாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் எந்தவொரு அரசும் இப்படிப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டுவரவில்லை. இப்படிப்பட்ட ஒரு சட்டம் குறித்து கிராமப்புற ஏழைகளுக்கு விபரங்கள் ஏதும் தெரியவில்லை. அரசுத் தரப்பில் இதற்கு கொடுக்கப்பட்ட சில விளக்கங்கள் போதிய அளவுக்கு கிராமப்புற மக்களுக்கோ இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கோ விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் இந்த சட்ட சலுகைகள் ஏழை மக்களுக்கு கிடைத்திட வேண்டும் என்று போராடுகிற தோழர்களுக்கோ கூட இதைப் பற்றி ஒரு முழுமையான புரிதல் இல்லை.
அந்த நேரத்தில் தோழர் ஜி. மணி, நூறு நாள் வேலைத்திட்டமும் அதை அமல்படுத்தும் விதமும் என்பது குறித்து ஒரு சிறிய பிரசுரத்தை எழுதி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவெளியிட்டார். அந்தப் பிரசுரத்தில் சட்டம் குறித்தும் அதன் நடைமுறை குறித்தும் அவர் கொடுத்த விளக்கங்கள் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் விதத்தில் அமைந்திருந்தது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் வரவேற்பு இருந்தது. ஏராளமான தோழர்களும் அதிகாரிகளும் அந்தப் புத்தகத்தை வாங்கி தாங்கள் புரிந்து கொள்வதற்கு படித்தார்கள். அந்த அளவுக்கு விஷய ஞானத்தோடு அந்தப்புத்தகத்தை தோழர் மணி எழுதியிருந்தார். பின்பு சட்டத்தைவிளக்கி தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டது. வகுப்பு எடுப்பதிலும் முன்னணி ஆசிரியராக இருந்து அவர் தமிழ்நாடு முழுவதும் அந்த வகுப்பை எடுத்து வந்தார். அது களத்தில் இருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது.
அதுபோல் நூறு நாள் வேலைத்திட்டம் சம்பந்தமாக மத்திய அரசோ, மாநில அரசோ எந்த அரசாணையையும் வெளியிட்டாலும் அதை உடனடியாக கணினிகளின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அதிகாரிகளிடம் சென்று பேசியோ வாங்கி அந்த விஷயங்களை உடனுக்குடன் மாவட்டங்களுக்கு சுற்றறிக்கையாக மாற்றி அந்த அரசாணையைப் பற்றிய புரிதலையும், அதில் மாற்று இருந்தால் அதை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி நடவடிக்கையில் ஈடுபடவும் செய்வார்.
அவர் ஓய்வறியா உழைப்பாளி என்பதற்கு ஒரு உதாரணம், 2016க்குப் பின் அவர் நோயுற்று, களங்களுக்குநேரடியாக சென்று செயல்பட முடியாத சூழ்நிலையில், ரயில்களிலோ பேருந்துகளிலோ அவர் எளிதாக பயணம்செய்ய முடியாத நிலை இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தன் யூரின் பையை கையில் சுமந்துகொண்டே விடாப்பிடியாக கமிட்டிக் கூட்டங்களிலும் வகுப்புகளிலும் உணர்வுப்பூர்வமாக கலந்து கொண்டு தன் கருத்துக்களைச் சொல்வார், ஆலோசனைகளை வழங்குவார். நாம் வேண்டாம் என்று எவ்வளவு கேட்டுக் கொண்டாலும் அதில் விடாப்பிடியான தன்மை அவரிடம் இருந்தது.
கடந்த மே மாதம் 10 ஆம் தேதி இணைய வழியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டு கொரோனா காலத்திலும் நமது தோழர்களைப் பாதுகாத்துக் கொண்டு நமது சங்க நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தன்னுடைய கருத்தையும் அதில் தெரிவித்தார். அப்போது, உங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருங்கள் என்று நாங்கள் சொன்னபோது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்னார் தோழர் மணி. ஆனாலும் அவரை கொரோனா பாதிப்பு நம்மிடம் இருந்து பறித்துவிட்டது.
இறுதி மூச்சு வரை ஒரு மனிதன் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக, தான் இருக்கும் ஒரு அமைப்பின் முடிவுகளை அமல்படுத்துவதற்காக எந்தக் கஷ்டத்தையும் எதிர்கொண்டு தன் கடமையே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டார் என்பதற்கு சிறந்த உதாரணம் தோழர் மணி. மரணம் அவர் செயல்பாட்டை முடக்கியிருக்கலாம். அவரின் 50 ஆண்டுகாலப் பணிகள், அதன் மூலம் அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்றைக்கும் செங்கொடி இயக்கத்திற்கு பலம் அளிக்கும்.
தோழர் ஜி.மணியின் புகழ் நீடூழி வாழ்க!
கட்டுரையாளர் : ஏ.லாசர்,மாநிலத் தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்